"ஹலோ தலைவரே, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரபரப்பான மூவ்களை அனைத்து அரசியல் கட்சிகளிடமும் பார்க்க முடிகிறது.''”
"ஆமாம்பா, தமிழக காங்கிரஸ் கமிட்டிக்குக் கூட புதிய தலைவரை அறிவித் திருக்கிறார்களே!''”
"உண்மைதாங்க தலைவரே,தமிழக காங்கிரஸின் தலைவரை மாற்றவேண்டும் என்ற கோஷம் அந்தக் கட்சியில் ரொம்ப நாட்களாகவே கேட்டுக்கொண்டிருந்தது. ஆனாலும், இப்போதுதான், தலைவராக இருந்த கே.எஸ். அழகிரியை மாற்றிவிட்டு, அவருக்கு பதில் செல்வப்பெருந்தகையை தலைவராக நியமித்திருக்கிறது காங்கிரஸின் டெல்லி மேலிடம். செல்வப்பெருந்தகை சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக இருந்ததால், அந்த பதவியை உடனடியாக ராஜினாமா செய்திருக்கிறார். அந்த இடத்தில் இப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் நியமனம் செய்யப் பட்டிருக்கிறார். சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங் கோவன் நியமிக்கப் படுவார் என அவரது ஆதர வாளர்கள் ஆர்வமாக எதிர்பார்த்தனர். ஆனால், அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் ராஜேஷ் குமாருக்கு அந்த பதவி தரப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.''”
"கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டதற்கு காரணம்னு பல விசயங்கள் சொல்லப்படுகிறதே?''”
"தமிழக காங்கிரஸ் தலைவராக அழகிரி நியமிக்கப்பட்டதில் இருந்தே அவருக்கு எதிரான புகார்கள் அங்கே புகைய ஆரம்பித்துவிட்டன. அவரை மாற்றவேண்டும் என்று கட்சியின் முன்னாள் தலைவர்கள் பலமுறை டெல்லிக்கு படையெடுத்த சம்பவங்களும் அரங்கேறின. மாவட்ட தலைவர்கள் நியமன விவகாரத்திலும் இவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் குவிந்திருந்தன. எதற்கும் அசைந்துகொடுக்காமல் இருந்த காங்கிரஸ் மேலிடம், சமீப நாட்களாக மனம் மாறியது. இதைத் தொடர்ந்து அழகிரியை மாற்றப்போகிறார்கள் என்ற செய்தி டெல்லியிலிருந்து அரசல்புரசலாக வரத்தொடங்கியது. இதையறிந்த அழகிரி, தேர்தல் முடியும் வரையாவது என்னை மாற்றாதீர்கள் என ராகுலுக்கும், கட்சியின் தேசியத் தலைவரான கார்கேவுக்கும் கோரிக்கை வைத்தார். அவர்களும் தேர்தல் வரை விட்டுப்பிடிக்கலாம் என்றுதான் நினைத்திருந்தார்களாம்.''”
"பிறகு எதனால், இந்த அதிரடி மாற்றம்?''”
"இந்த நிலையில், கடந்த 1ஆம் தேதி காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் அஜோய்குமார் முன்னிலையில் காணொளி வாயிலாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, அழகிரிக்கும் எம்.பி. ஜோதிமணிக்கும் இடையே உரசல் அரங்கேறியது. அப்போது ஜோதிமணியை தரக்குறைவாகவும், கடுமையாகவும் அழகிரி விமர்சித்தார். அதை அப்போதே நக்கீரன் முழுமையாக வெளியிட்டது. இதுகுறித்து ராகுலிடம் முறையிட்ட ஜோதிமணி, கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை டெல்லியில் நேரில் சந்தித்தும் புகார் வாசித்தார். இதை ரசிக்காத கட்சியின் டெல்லி மேலிடம், இனியும் அழகிரியை தலைவர் பதவியிலேயே விட்டுவைத்தால் தமிழக காங்கிரஸில் சூறாவளிகள் அதிகமாகலாம் என்று கருதிதான் அதிரடியாக அவர் பதவியைப் பறித்திருக்கிறதாம். அழகிரி நீக்கப்பட்டதை அவரது எதிர் கோஷ்டியினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார்களாம்.''”
"செல்வப்பெருந்தகைக்கு எதன் அடிப்படையில் மாநில காங்கிரஸ் தலைவர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது?''”
"காங்கிரசின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் செல்வப் பெருந்தகை, பட்டியலினத்தை சேர்ந்தவர். அதனால் அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தைத் தரவேண்டும் என்ற அடிப்படையில் அவருக்கு இந்தப்பதவி வழங்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். குறிப்பாக, ராகுல்காந்திக்கு நெருக்கமாக இருக்கும் பட்டியலினத்தைச் சேர்ந்த ராஜு என்கிற அதிகாரியும், செல்வப்பெருந்தகையும் நீண்டகால நண்பர்களாம். கார்கேவும் பட்டியலினத்தவர்தான். ஒருமுறை கார்கேவை மரியாதை நிமித்தம் சந்தித்த செல்வப்பெருந்தகை, தலித் பிரதிநிதித்துவம் காங்கிரசில் இல்லாமல் இருக்கிறது. உங்கள் பீரியடில் என்னை தலைவராக்கி னால் காங்கிரசுக்குப் புத்துணர்ச்சிக் கிடைக்கும் என்கிற ரீதியில் பேச, சாதியை வைத்து சாதகம் தேடாதீர்கள் என அப்போது எரிச் சலானாராம் கார்கே. ஆனாலும், தன் முயற்சியை செல்வப் பெருந்தகை கைவிடவில்லை.''”
"ம்...''”
"ஜூம் மீட்டிங் களேபரங்கள் நடந்ததும், அழகிரியை மாற்றவிருக்கிறார்கள் என்பதை அறிந்ததும் அந்த ராஜு மூலம் சீரியசாக காய்களை நகர்த்தியிருக்கிறார் செல்வப்பெருந்தகை. இப்போது சாதி ரீதியிலான அழுத்தம் கை கொடுக்க, பதவிக்காக நடந்த சடுகுடுவில் அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று விரிவாக சொல்கிறது காங்கிரஸ் வட்டாரம். அதே சமயம், செல்வப்பெருந்தகை நியமனத்திற்கும் இப்போது காங்கிரஸில் பலமாக எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இவர் மீது கடந்த காலங்களில் சில வில்லங்கமான கிரிமினல் ரெக்கார்டுகள் இருக்கின்றன. அதையெல்லாம் எடுத்து, காங்கிரசின் மேலிடத்துக்கு அனுப்பி வைத்து, இப்படிப்பட்டவருக்கா தலைவர் பதவி என குமுறிவருகிறார்கள் எதிர்கோஷ்டியினர். குறிப்பாக, தலைவர் பதவியில் இவரை நியமிப்பதற்கு முன்பு, அவரின் கடந்த கால ரெக்கார்டுகளை எல்லாம் தேசியத் தலைமை பரிசீலித்திருக்க வேண்டும். அப்படி பரிசீலிக் காததால்தான், இப்படியொரு நியமனம் நடந் திருக்கிறது என்றும் அவர்கள் ஆதங்கப் பெருமூச்சு விடுகிறார் கள்.''”
"சரிப்பா, தலைவர் பதவி கிடைக்காத அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி பா.ஜ.க.வுக்குத் தூதுவிட்டிருப்பதாகச் சொல் கிறார்களே?''”
"கடந்த 2 வாரங்களாக தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை எனக்குக் கொடுங்கள் என்று டெல்லியிடம் முட்டி மோதி வந்தார் எம்.எல்.ஏ.வான விஜயதாரணி. ஆனால் அதற்கு சாதகமான பதில் அவருக்குக் கிடைக்கவில்லை. அடுத்ததாக, கட்சியின் பெண் சீனியரான எனக்கு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் பதவியையாவது கொடுங்கள் என்ற கோரிக்கை யையும் வைத்தார். இதற்கும் காங்கிரஸ் மேலிடம் இசைவு தெரிவிக்கவில்லை. இந்த நிலை யில்தான், காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியடைந்த விஜய தாரணியை பாஜக தரப்பு இழுக்க முயற்சிப்பதாக செய்தி கள் பரவின. இதுகுறித்து நாம் விசாரித்தபோது, விஜயதாரணி,
தனக்கு கன்னியாகுமரி தொகுதியில் எம்.பி. சீட் வழங்கினால், பா.ஜ.க.வில் சேரத் தயாராக இருப்பதாகவும், ஒருவேளை தேர்த லில் தோற்றுப் போனால் தன்னை ராஜ்யசபா எம்.பி.யாக ஆக்க வேண்டும் என்றும் பா.ஜ.க. தரப்பிடம் கோரிக்கை வைத்திருக் கிறாராம். இது தொடர்பாக அவர், பா.ஜ.க.வின் தமிழக பொறுப் பாளர் அரவிந்த்மேனனையும் முக்கிய பிரமுகர் ஒருவர் மூலமாக சந்தித்திருக்கிறார் என்கிறார்கள்.''”
"தி.மு.க. கூட்டணியில், ம.தி.மு.க. சார்பில் வைகோவின் புதல் வரான துரை வைகோ களமிறங்குவதாக செய்திகள் வருகிறதே?''”
"ஆமாங்க தலைவரே, தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.விற்கு ஒரு தொகுதி என்பது முடிவாகி இருக்கிறது. அது திருச்சியா? விருதுநகரா? என்பதுதான் இன்னும் முடிவாகவில்லை. இந்தமுறை ம.தி.மு.க. சார்பில் துரை வைகோ களமிறங்க இருக்கிறாராம். திருச்சியில் சிட்டிங் காங்கிரஸ் எம்.பி.யான திருநாவுக்கரசர் மீது தொகுதியில் கடும் அதிருப்தி இருப்பதால், இந்தத் தொகுதி தங்களுக்கு உரிய பலன் தருமா? என்கிற சந்தேகம் ம.தி.மு.க.வினருக்கு இருக்கிறதாம். அதனால், வைகோவுக்கு செல்வாக்குள்ள விருது நகரையே எங்களுக்குக் கொடுங்கள் என்று அறிவாலயத்திடம் கேட்டு வருகிறார்களாம். அதேபோல் அறிவாலயம் அறிவுறுத்து வதுபோல் உதயசூரியனில் நிற்காமல், தங்கள் சின்னத்திலேயே நிற்க விரும்புவதாகவும் தி.மு.க.விடம் ம.தி.மு.க. தரப்பு வலியுறுத்தி வருகிறதாம்.''”
"மூன்றாவது முறையாகவும் எடப்பாடியிடம் ஜி.கே.வாசனை பா.ஜ.க. தூது அனுப்பியிருக்கிறதே?''”
"எப்படியாவது அ.தி.மு.க.வை தங்கள் பக்கம் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற துடிப்பில் இருக்கும், பா.ஜ.க., ஏற்கனவே இரண்டுமுறை ஜி.கே.வாசனை எடப்பாடியிடம் அனுப்பிவைத்தது. ஆனால் எடப்பாடியோ, எங்கள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று சொல்லிவிட்டார். அ.தி.மு.க. இல்லாமல் தமிழகத்தில் களம் கண்டால், பைசாவுக்குக் கூட தேறமாட்டோம் என்று நினைக்கும் பா.ஜ.க., இரண்டு நாட்களுக்கு முன்பு, மூன்றாவது முறையாகவும் ’விடாது கருப்பு’ என்பது போல், ‘வாசனை அனுப்பிவைத்தது. அப்போது எடப்பாடியிடம் பேசிய வாசன், டெல்லி கொடுத்த சில ஆஃபர்கள் பற்றி விவரித்து ஆசை காட்டியதோடு, நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி புதுப்பிக்கப்பட்டால், 2026 சட்டமன்றத் தேர்தலில், கூட்டணியின் முதல்வர் எடப்பாடிதான் என பா.ஜ.க. அறிவிக் கும் என்றும் சொல் லியிருக்கிறார். இருந் தும் எடப்பாடி அசைந்து கொடுக்க வில்லை. அவரது இந்த நிலைப்பாடு பற்றி அறிந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எடப்பாடி மீது ஏகத்துக்கும் கோபத்தில் இருக் கிறாராம். இதன் விளைவை எடப்பாடி கூடிய விரைவில் சந்திப்பார் என்று சற்று மிரட்ட லாகவே சொல்கிறது பா.ஜ.க. தரப்பு.''”
"தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையத்தில் சலசலப்பு கேட்குதே?''”
"தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையமான பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தலைவராக ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை நியமித்து தமிழக அரசு ஃபைலை அனுப்பியபோது, அதை கவர்னர் ஏற்காமல் திருப்பியனுப்பினார். இந்த நிலையில் சைலேந்திரபாபு மீது விதவிதமான புகார்கள் ஏகத்துக்கும் கிளம்பியதால், அவரது நியமன ஃபைலை மீண்டும் அரசு வலியுறுத்தாமல் விட்டுவிட்டது. இந்த நிலையில் இந்த பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்கு அண்மையில் சரவணகுமார் உள்ளிட்ட 4 உறுப்பினர்கள் நியமனம் செய்யப் பட்டிருக்கிறார்கள். இப்போது இந்த சரவண குமார் குறித்த சர்ச்சைகள் பெரிதாகக் கிளம்பி வருகின்றன. பா.ஜ.க.வைச் சேர்ந்த இவர், ஐ.ஆர்.எஸ். அதிகாரியாகவும் இருக்கிறார். மேலும் இவர் சட்டப் படிப்பு படித்ததாகவும் கூற, ஐ.ஆர்.எஸ். அதிகாரியாக இருந்துகொண்டே இவர் எப்படி சட்டம் படித்தார்? இவர் ஒரு போலி நபர் என்று, பாஸ்கர் மதுரம் என்ற வழக்கறிஞர் இவர் மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். இதற் கிடையே இவர் ஐ.ஏ.எஸ். அகாடமி ஒன்றையும் நடத்தி வருகிறாராம். இதுவும் அவரைச் சுற்றி கேள்விக்குறியை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படி சர்ச்சைகள் சுழன்றடிக்கும் சரவணகுமார், கவர்னர் ரவியின் கோட்டாவில் நியமிக்கப்பட் டிருப்பாரோ? என அதிகாரிகள் தரப்பிலேயே சந்தேகம் கிளம்புகிறார்கள்.''”
"தமிழக அரசின் செய்தித்துறையை லஞ்ச ஒழிப்புத்துறை அதிர வைத்திருக்கிறதே?''”
"தமிழக செய்தித் துறையின் சார்பில் தமிழ கம் முழுவதும் தனியார் பொருட்காட்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது. அப்படி அனுமதிக்கப் பட்ட பொருட்காட்சிக ளில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் சென்றன. இந்த புகார்களை உறுதி செய்துகொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், ஒரு மாதத்துக்கு முன்பு கோட்டைக்குள் திடீரென்று நுழைந்த னர். செய்தித்துறையைச் சேர்ந்த இருவரை அதிரடியாகக் கைது செய்தனர். இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில், கடந்த வாரம், மீண்டும் கோட்டைக்கு வந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், தனியார் பொருட்காட்சிகளை அனுமதித்தது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அள்ளிச் சென்றிருக்கிறார்கள். மேலும் செய்தித்துறையை சேர்ந்த அதிகாரிகள் பலருக்கும் சம்மன் அனுப்பி அவர்களை வரவழைத்து விசாரித்ததோடு, ஓய்வுபெற்ற துறை அதிகாரிகள் சிலருக்கும் சம்மன் அனுப்பி யிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து மேலும் கைது நடவடிக்கைகள் அரங்கேறும் எனக்கூறி, செய்தித்துறையை அதிரவைத்திருக்கிற தாம் லஞ்ச ஒழிப்புத்துறை.''”
"நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், ஒன்றிய அமைச்சரான எல்.முருகன் மீது சொந்தக் கட்சியினரே சர்ச்சைகள் கிளப்பி வருகின்ற னர். முருகன், சொந்த பந்தங்களுக்குக் கூட உதவாதவர் என்றும், தலித் பிரதிநிதித்துவ அடிப்படையில் அமைச்சரான அவரால், அவரது சமூகத்தினருக்கும்கூட எந்தவித பயனும் இல்லை என்றும் குற்றச் சாட்டை வைப்பவர்கள், அவர் தன்னை ஒரு இந்துத்துவா ஆகக் காட்டிக் கொண்டாலும் அவர் ஒரு கிறிஸ்தவர் என்றும் புகைச் சல் குண்டுகளை வீசி வருகின்ற னர்.''’