கோகுல்ராஜ் யுவராஜ் வழக்கில் உங்களுக்கு வாழ்த்துகள் வந்தாலும், அர்ஜுன் சம்பத் போன்றோர், ‘அவர் தீவிரவாதிகளுக்கும், நக்ஸல்களுக்கும் துணை போகிறவர்’ என்று பேசுகிறார்கள். இதுபோல உங்களுக்கு நேரடியாக அச்சுறுத்தல்களும், மிரட்டல்களும் இருக் கின்றனவா?
அவருக்கு முதலில் நக்ஸல்பாரி என்றால் என்னவென்று தெரியாது. ஸ்டான்சாமி (84), இந்த சமூகத்தில் இருக்கக்கூடிய பழங்குடி மக்களுக்காக, விளிம்புநிலை மக்களுக்காக போராடியவரை அர்பன் நக்ஸல் என்றார்கள். அவர் மீது உபா (யூ.ஏ.பி) சட்டம் போடப்பட்டது. இவர் போன்று இன்னும் பலருக்கும் போராடினேன். அதனால், அவர் என்னை அப்படி சொல்கிறார் என்பது புரிந்தது. ஆனால், இந்த நிரூபிக்கப்பட்ட கொலை வழக்கில் அவர் என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை. என்னை நேரடியாக தாக்க முடியாதவர்கள் இவர் களைப் போல் அச்சுறுத்துவார்கள், அது இயல்பு.
நீங்கள் இதை ஆணவக் கொலை என்கிறீர்கள். சிலர் இதில் யுவராஜுக்கு, கோகுல் ராஜ் யார் என்று தெரியாது; அந்தப் பெண்ணை யும் யாரென்று தெரியாது அப்படியிருக்கும் போது எப்படி அவர் இந்தக் கொலையை செய்வார் என்கிறார்களே?
தமிழ்நாட்டில் கண்ணகி -முருகேசன், சங்கர் -கௌசல்யா, திவ்யா -இளவரசன் வழக்கு, இவற் றில் எல்லாம் அந்த சம்பந்தப்பட்ட குடும்பத்தார் இருக்கிறார்கள். இந்த ஜோடிகள் திருமணமாகி வாழ்ந்துகொண்டிருக்கும்போது ஆணவக் கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், இந்த வழக்கில் கோகுல்ராஜுக்கும் அந்தப் பெண்ணுக்கும், யுவராஜுக்கும் எந்த உறவு முறையும் கிடையாது. சாதி மட்டுமே இங்கு முக்கிய காரணம். இதற்கு தொடக்கம், தர்மபுரி இளவரசன் -திவ்யா வழக்கில், ராமதாஸும், காடுவெட்டி குரு போன்றவர்களும் தங்கள் சாதி பெண் மீது யாராவது கை வைத்தால், கையையும் காலையும் வெட்டு என்று சொல்லித்தான் மூன்று கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ராமதாஸ் நாடகக் காதல் என்கிறார். அதேபோல் யுவராஜ், ‘நாடகக் காதலைத் தடுப்பது எப்படி, நம் கவுண்டர் பெண்களைக் காப்பது எப்படி’ என்கிறார்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ், தான் விரும்புகிறவர்களை வழக்கறிஞராக வைத்துகொள்ளலாம் என்று விதி இருக்கிறது. அதன் அடிப்படையில், சித்ரா என்பவர் என்னை அணுகி சிறப்பு வழக்கறிஞராக வர வேண்டுகோள் விடுத்தார். அதுவரை அன்றைய அ.தி.மு.க. அரசு என்னை நியமிக்கவில்லை. ஓ.பி.எஸ். தம்பி ஓ.ராஜா சம்பந்தப்பட்ட காசிநாதர் கோவில் வழக்கிலும் நான் நியமனமாக வேண்டியது, அதிலும் போடவில்லை. இந்த வழக்கிலும், இந்தப் பெண் கேட்டு என்னை சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கும்போது, இந்த வழக்கில் மொத்தம் 39 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு முடிந்துவிட்டன.
தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது. எந்த வடிவத்தில் தீண்டாமை தலை தூக்கினாலும் குற்றம் என்கிறது சட்டம். இவற்றை எல்லாம் தெரியாத ஒரு ஓய்வுபெற்ற பி.பி.ஐ. நியமித்தார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணும் விஷ்ணுபிரியாவின் புலன் விசாரணையில் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். சாட்சி மாறியதற்கு காரணம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தபிறகு பாதுகாப்பு வழங்கவில்லை. விளிம்பு நிலை மக்கள் அவர்கள் கொடுக்கும் வழக்கில் அவர்களின் வறுமையின் காரணமாகவோ, பாதுகாப்பின்மையின் காரணமாகவோ சீக்கிரம் மாறிவிடுவார்கள். விசாரணையின்போது அவ ருக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை. அதனால்தான் அவர் மாறிவிட்டார். ரிமாண்ட் கைதிகளான அவர்கள் 15 பேரும் மாவட்ட நீதிமன்றத்திற்கு வரும்போதே வெளியில் சட்டை தயாராக இருக்கும், அதனை போட்டுக்கொண்டு தோரணையாக இருப்பார்கள். இப்படியிருந்தால் இங்கு நீதி கிடைக்காது என்று உயர் நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி மனு போட்டேன். அவர்கள் மதுரைக்கு மாற்றினார்கள். அங்கு போனால் நீதிபதியே இல்லை. அதன்பிறகு பொறுப்பு நீதிபதிக்கு போனது. இப்படி நான்கு நீதிபதிக்கு மாறிதான் இறுதியாக நீதிபதி சம்பத்குமாரிடம் வந்தது. அதற்கு முன்பிருந்த நீதிபதி முத்துக்குமார் மற்றும் சம்பத்குமார் ஆகியோர்தான் யுவராஜ் கொடுத்த பேட்டிகளை பார்த்துவிட்டு, புதிய தலைமுறை நிறுவனரையும், தினத்தந்தி நிறுவனரையும் விசாரிக்க மனு போடுகிறார்கள். நான் சிறப்பு வழக்கறிஞராக, நிறுவனருக்கும் இதற்கும் தொடர்பில்லை. யுவராஜை பேட்டி கண்டவரை அழைக்க வேண்டும் என்று மனு போட்டு போராடி அனுமதி வாங்குகிறேன். ஆனால், ரங்கராஜ் பாண்டே பணியிலிருந்து விலகிவிட்டதால் வரவில்லை. அதேசமயம் நீதிமன்றத்தில் ஆஜரான தினத்தந்தி டி.வி. தரப்பினர், ‘எங்கள் நிறுவனத்தில் அந்த காட்சிகள் அழிந்துவிட்டது’ என்றார்கள். இதில் புதிய தலைமுறை கார்த்திகைசெல்வன் தைரியமாக வந்து சாட்சி சொன்னார். அதேபோல், 10-10-15ல் கார்த்திகைசெல்வன், டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் தற்கொலை ஏன் என்று விவாதம் நடத்தினார். இதில், யுவராஜ் தானாக வந்து கலந்து கொண்டு பேசினார். அதுதான் இந்த வழக்கில் 50 சதவீதத்தை நிரூபித்தது.
இரண்டுவிதமான சாட்சிகள் உள்ளன. ஒன்று சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி, மற்றொன்று சம்பவத்தைப் பார்த்த சாட்சி பிறழ் சாட்சியாக மாறிவிட்டது. அந்தப் பெண், அவர்கள் அமர்ந்த மலையில் விசாரணை மேற் கொண்ட போது எழுதிக் கொடுத்தது, புலன் விசாரணையில் சொன்னது, இது வெல்லாம் இருந்தாலும், அவர் நீதிமன்றத்தில் பிறழ் சாட்சியாக மாறிவிட்டார்.
அனைத்து கொலைகளிலும், சாட்சி இருக் காது. ஆனால், அதனை எப்படி நிரூபிக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது. அதில், நேரடி சாட்சிகள் இல்லை என்றாலும், அந்தச் சம்பவத்தின் சங்கிலி யில் இருக்கும் நபர்களை உள்ளே கொண்டுவரலாம். மேலும், அந்த சங்கிலியில் இருக்கும் நபர் அதில் அனைத்திலும் இருக்கிறார் என்றால் அவர்தான் குற்றஞ்சாட்டப்பட வேண்டும் என்கிறது. இதற்கு பெயர் சந்தர்ப்ப சூழ்நிலை சாட்சிகள். அப்படி யென்றால், இந்தக் கொலையில் அந்த நபருக்கு நோக்கம் இருக்க வேண்டும். இந்த வழக்கில் யுவராஜுக்கு நோக்கம் இருக்கிறது என நான் தாக்கல் செய்த டாக்குமெண்டில் இருக்கிறது. இந்த சந்தர்ப்ப சூழ்நிலை சாட்சியில் குற்றஞ்சாட்டப்பட்டவரும் கொலை செய்யப்பட்டவரும் ஒன்றாக இருப் பது. இந்த வழக்கில் இவர்கள் ஒன் றாக இருந்தார்கள் என்பதற்கு சி.சி. டி.வி. முக்கிய சாட்சியாக இருந்தது.
நீதியரசர் பி.என்.பிரகாஷின் தீர்ப்பு உள்ளது. தினகரன் நாளிதழ் அலுவலக வழக்கில் முக்கிய பங்கு வகித்தது நக்கீரன். மேலும் நக்கீரன் ஆசிரியர் வந்து சாட்சியும் சொன் னார். அதிலும், சி.சி.டிவி முக்கிய பங்கு வகித்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். அதுபோல் இந்த வழக்கிலும் நிரூபித்துக் காட்டினேன்.
பொதுவா ஒரு வழக்கில் மாஜிஸ்திரேட் முன் வாக்குமூலம் கொடுத்துவிட்டு பிறகு பிறழ் சாட்சியாக மாறினால் அவர்கள் தண்டிக்கப் படுவார்களா?
கண்டிப்பாக வாய்ப்பிருக்கிறது. 2002ஆம் ஆண்டு மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, கோத்ரா கலவரம் நடந்தது. அதில், ஜவர்லால் ஷேக் எனும் பெண் தன் கண் முன்னே தன் குடும்பம் கொல்லப்படுவதை கண்டு புகார் கொடுத்தவர், நீதிமன்றத்தில் வந்து எனக்கு தெரியாது என்கிறார். பிறகு அந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு போகிறது. அங்கே, இந்த வழக்கில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் புகார்தாரருடன் வந்து பேசவைத்தார்கள். மேலும், இந்த வழக்கு முறையாக நடத்தப்படவில்லை என்று வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி மும்பையில் வழக்கு நடக்கிறது. அங்கேயும் அந்தப் பெண் மாற் றிச் சொல்கிறார். அந்த வழக்கில் அத்தனை பேரும் தண்டிக்கப்பட்டார்கள். நான் இந்த வழக்கு ஆவணங் களை எல்லாம் வைத்துக்கொண்டேன். இந்த (கோகுல்ராஜ்) வழக்கில் அந்த பெண் மாஜிஸ் திரேட் முன்பு அனைத்தையும் தெளிவாக சொல்லி யிருக்கிறார். ஆனால், நீதிமன்றத்தில் வந்து பாதுகாப் பின்மை காரணமாக பிறழ்ந்துவிட்டார். தற்போது அந்தப் பெண் மீது நாமக்கல்லில் வழக்கு உள்ளது.
இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள் ளது. மகனை இழந்த தாய், குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை வேண்டும் என்கிறார். நீங்கள் வாதாடி அதிகபட்ச தண்டனை கேட்டு, தீர்ப்பு வந்துவிட்டது. பொதுவாக சாதி ஆணவக் கொலைகளில் தண்டனைதான் தீர்வா அல்லது வேறு என்ன தீர்வு?
நம் சட்டத்தில் அதிகபட்ச தண்டனை என் பது ஆயுள் தண்டனை மற்றும் தூக்குத் தண்டனை யாக உள்ளது. தூக்குத் தண்டனை அரிதிலும் அரிதான வழக்கில் வழங்கப்படும். உச்சநீதிமன்றம் ஆணவக் கொலை அரிதிலும் அரி தான வழக்கு என தீர்ப்பு அளித்துள் ளது. அதிகபட்ச தண்டனை வழங்கும் போது குற்றவாளியையும் பாதிக்கப் பட்டவரைக் கேட்பார்கள். அப்படி கோகுல்ராஜின் தாயைக் கேட்கும் போது, ‘என் மகனை ஒன்பது மணி நேரம் மிக கொடுமைப்படுத்தி கொலை செய்துள்ளனர். அதனால், தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றார்.
நான் அனைத்து தீர்ப்பையும் மேற்கோள் காட்டி, இதற்கு தூக்குத் தண்டனை என்றுதான் இருக்கிறது. ஆனால், யுவராஜ் என்பவன் மரணிப்பது முக்கியமல்ல. இன்னொரு யுவராஜ் உருவாகக் கூடாது என்பதுதான் முக்கியம். அவன் சிறையினுள் இருந்து அவன் வாழ்நாளிலேயே இந்த சமூகம் திருந்தி இருப்பதைக் காணவேண்டும். அதனால், யுவராஜுக்கு வாழ்நாள் ஆயுள் தண்ட னை வேண்டும் என்றேன். அதனை உள்வாங்கிக் கொண்டு நீதிபதி, யுவராஜுக்கு இறுதி மூச்சு வரை மூன்று ஆயுள்தண்டனை வழங்கினார். இந்த வன் கொடுமை வழக்கில் கருணை மனு போட முடி யாது. ஒரு மனிதனைத் திருத்தவே சிறைச்சாலை இருக்கிறது. அவனைக் கொல்லக் கிடையாது.
ஆணவக் கொலைக்கு தண்டனை மட்டுமே தீர்வாக இருக்காது அல்லவா. அதற்கு என்ன செய்வது?
சமத்துவமற்ற சமூகத்தில் சமத்துவம் உருவாக வேண்டும்.
-சந்திப்பு: வே.ராஜவேல்
தொகுப்பு: அறிவழகன்