"வேலியில் போகும் ஓணானை எடுத்து மடியில் கட்டிக் கொண்டு குத்துதே, குடையுதே என்றானாம்' என்ற பழமொழியைத்தான் தற்போது தமிழக பா.ஜ.க. சீனியர்கள் பலரும் உச்சரிக்கிறார்கள். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் லாபி தான் இந்த புலம்பலுக்குக் காரணம். கர்நாடகாவில் ஐ.பி.எஸ்.ஸாக பணியாற்றியவரை, தமிழக பா.ஜ.க.வுக்கு தலைவர் போஸ்டிங்குக்காக இழுத்துவந்தது, இங்குள்ள சீனியர்களை அவமானப்படுத்துவதாக இருந்தது. கே.டி.ராகவன், பொன்னார், இல.கணேசன், வானதி சீனிவாசன், தமிழிசை போன்றவர்களுக்கு பா.ஜ.க. தலைமையின் இந்த செயல் பிடிக்கவெ இல்லையென்றாலும், அவர்களுக்கிடையேயான இந்துத்வா கொள்கை, அதை எதிர்த்துக் கேட்க முடியாமல் செய்தது.
தமிழிசையின் கனிவான அணுகுமுறை
தமிழக பா.ஜ.க.வில், இல.கணேசனின் பொறுப்புக் காலத்திலிருந்து, தமிழிசை சவுந்தர்ராஜன் தலைவராக இருந்த காலம் வரை மிகவும் கடினமான காலகட்ட மாக இருந்தது. திராவிட மண்ணில், காங்கிரஸ் மீதும் பற்றுள்ள மண்ணில், இந்துத்வா முகமான பா.ஜ.க.வை... பிராமண முகம் கொண்ட பா.ஜ.க.வை... சாமானிய மக்களுக்கான கட்சியாக அடையாளப்படுத்த ரொம்பவே சிரமப்பட்டார்கள். வட இந்தியாவில் மோடி அலை எழுந்தபோதும் தமிழத்தில் சின்ன அதிர்வு கூட இல்லாமலிருந்தது.
1998ஆம் ஆண்டில், கோவை குண்டுவெடிப்பு பயங்கரத்துக்குப் பின்புதான் தமிழக பா.ஜ.க.வின் வளர்ச்சியில் ஏறுமுகம் ஏற்பட்டது. வாஜ்பாய் மீது கொஞ்சம் ஈர்ப்பு வந்தது. அதன் பின்னர், தமிழிசை சவுந்தர்ராஜன் தமிழக பா.ஜ.க.வின் தலைவராக வந்தபின், சாமானிய மக்களும்கூட பா.ஜ.க.வில் சேர்வது குறித்து ஆர்வம் காட்டினார்கள். அதற்கு, தமிழிசை சவுந்தர்ராஜனின் பம்பரம் போன்ற உழைப்பும், எளிய அணுகுமுறையுமே காரணமாக இருந்தது. "தமிழகத்தில் தாமரை மலரும்' என்ற கோஷத்தை ஆயிரக்கணக்கான முறை உச்சரித்து உச்சரித்தே பா.ஜ.க. மீதான பார்வையை உண்டாக்கினார். குறிப்பாக, தென் மாவட்டங்களில், நாடார் சமுதாய வாக்குகளைக் கணிசமாகக் கவர்ந்தார். கொள்கைப்பிடிப்பில் தீவிரமாக இருந்தபோதிலும், மாற்றுக் கட்சித் தலைவர்களை மதிக்கத் தவறவில்லை. பத்திரிகையாளர் களையும் நன்முறையில் மதித்தார்.
ரவுடிகள் ராஜ்ஜியம்
அவருக்குப்பின் எல்.முருகன் தலைவராக வந்ததுமே தமிழக பா.ஜ.க.வில் சீனியர்களை ஓரங்கட்டும் படலமும், குற்றச்செயல்களில் தொடர்புடையவர்களை கட்சிக்குள் இழுக்கும் செயல்பாடுகளும் தொடங்கியது. குற்ற வழக்குகளில் போலீசாரால் தேடப்படும் குற்றவாளிகள், பா.ஜ.க.வில் எதாவது பதவியை வாங்கிக்கொண்டு, காவல்துறைக்கே போக்குக் காட்டினார்கள். பா.ஜ.க.வின் தலைமையகமான கமலாலயத்தில், ரவுடி லிஸ்ட்டில் இருப்பவர்கள் குவிந்திருப்பது போன்ற படங்கள் பகிரப்பட்டு, சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதோடு, அவர் நடத்திய வேல் யாத்திரை, வேல் பூஜை போன்ற காமெடிகளில், சீனியர்களைப் புறக்கணித்ததோடு, சரியாகத் திட்டமிடாமல் ஆன்மீக அரசியல் வேடம் அம்பலப்பட்டுப் போனது.
அண்ணாமலையின் ஆட்டம்
அவருக்குப்பின் தலைமைப் பொறுப்புக்கு வந்த அண்ணாமலை, பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பு போல, தனது அப்பாய்ன்ட்மென்ட்டை விமர்சனம் செய்த ஆர்.எஸ்.எஸ். சீனியர் களையும், கட்சியின் சீனியர் நிர்வாகிகளையும் ஓரங்கட்டும் வேலையில் இறங்கி னார். அதோடு, கட்சி யின் சீனியர் களைத் திட்டமிட்டு இழிவுபடுத்தியும், மாட்டிவிட்டும் ஆஃப் செய்யும் வேலைகளிலும் இறங்கினார். முதல் பலிகடாவாக கே.டி.ராகவன் ஆபாச வீடியோவில் சிக்கினார். அந்த வீடியோவைக்கூட வெளியிடுமுன் அண்ணாமலையோடு தான் பேச்சுவார்த்தை நடந் தது. எனினும் அதனை வெளியிட வைத்து கே.டி. ராகவனை பழிதீர்த்ததாக பேச்சு எழுந்தது. மேலும் சில சீனியர்கள் வீடியோவில் சிக்கியதாகக் கூறப்பட்டாலும், மேலிடத்திடம் ரிப்போர்ட் போனதால் அதற்குமேல் வீடியோ வெளியாகாமல் தடுக்கப்பட்டதுடன், வீடியோவை வெளி யிட்ட "மதன் டைரி' மதன் ரவிச் சந்திரன் மொத்த மாக ஆஃப் செய் யப்பட்டார்.
அடுத்ததாக, எல்.முருகனோடு முட்டிக்கொண்ட அண்ணாமலை, அவரோடு இணைந்து நிகழ்ச்சி களில் பங்கேற் பதைத் தவிர்த்தார். அதற்கு பதிலடியாக எல்.முருகன், செஸ் ஒலிம்பியாட்டில் அண்ணாமலையை ஓரங்கட்டினார். இந் நிலையில், எல்.முருகனுக்கு ஆதரவாகவும், அண்ணா மலைக்கு எதிராகவும் காயத்ரி ரகுராம் ட்விட்டரில் தீவிரமாக இயங்க, அவரது கட்சிப்பதவியைப் பறித்தார் அண்ணா மலை. பின்னர், மேலிடத்தின் செல்வாக்கால் தனக்கான பதவியைப் பெற்றார் காயத்ரி ரகுராம். அதன்பின்னர், அண்ணாமலையின் ஆதரவாளர் களான அமர் பிரசாத் ரெட்டி, பா.ஜ.க. தொழிற்பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார், சூர்யா சிவா போன்றவர்களை வைத்து காயத்ரி ரகுராமை கார்னர் பண்ணும் வேலையை ட்விட்டரில் செய்துவந்தார் அண்ணாமலை. காயத்ரி ரகுராமுக்கு அண்ணாமலை ஆதர வாளர்களோடு மோதுவதே முழுநேர வேலையாகிப்போனது. தனக்கென ஒரு ரசிகர்கள் குழுமத்தையும் மறைமுகமாக அண்ணாமலை நடத்திவந்தார். அதன்மூலம் தனக்கு எதிரானவர்களை ஓரங்கட்டுவ தோடு, தன்னை தனிப்பெரும் தலைவராகக் கட்டமைத்தார்.
அவமானப்பட்ட இல.கணேசன்
மூத்த பா.ஜ.க. தலைவரான இல.கணே சன், கவர்னர் என்ற பொறுப்பில் இருந்த போதும், அவர் வீட்டு விசேசத்துக்கு அண்ணாமலை செல்லாமல் புறக் கணித்ததோடு, அவருக்கு எதிராகவும் கருத்து கூறி அவமானப் படுத்தினார். மிகமிகச் சிறிய கட்சியாக இருந்த பா.ஜ.க.வை, தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் அளவுக்கு வளர்ச்சியடைய வைத்ததில் இல.கணேசன் போன்ற மூத்த தலைவர்களின் பங்கு பெரிது. அதற்கேற்ப, கலைஞர், ஜெயலலிதா எனத் தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் களோடு மிகுந்த நட்போடு செயல்பட்டவர். அப்படிப்பட்டவரை, அவரது கட்சியின் புதிய இளந்தலைவரே இப்படி அவமானப்படுத்தியது, சீனியர் தலைவர்கள் பலரையும் உள்ளுக்குள் குமுற வைத்துள்ளது. தி.மு.க.விலிருந்து பா.ஜ.க.வுக்கு சென்ற வி.பி.துரைசாமி, அண்ணாமலையின் ஆதரவாளர்களால் மேடையிலேயே அவமானப் படுத்தப்பட்டார். தி.மு.க.விலிருந்து விலகி பா.ஜ.க.வுக்குச் சென்ற கு.க.செல்வம், பா.ஜ.க.வில் எதிர்பார்த்த மரியாதை கிடைக்காததால் மீண்டும் தி.மு.க.வுக்கே திரும்பினார். குஷ்புவின் வளர்ச்சியை மட்டுப்படுத்த, அவரையும் ஓரங்கட்டுகிறார் அண்ணாமலை. குஷ்புவை தி.மு.க. நிர்வாகி இழிவுபடுத்திப் பேசியதற்கு எதிராக அண்ணாமலை கூட்டிய ஆர்ப்பாட்டத்திற்கு குஷ்புவுக்கே அழைப்பு விடவில்லை!
இல.கணேசன், தமிழிசை போன்ற தலைவர்கள், செய்தியாளர்களை கண்ணியமாக நடத்திய சூழல், அண்ணாமலையால் முற்றிலும் சிதைக்கப்பட்டது. செய்தியாளர்களை குரங்கு என்று அவமானப்படுத்தியது, 1000 வேணுமா? 2000 வேணுமா? என அவமானப்படுத்தியது அண்ணாமலையின் மோசமான அரசியலுக்கு உதாரணங்கள்.
அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் கேசவவிநாயகமும் பெரிய முட்டுக் கட்டையாக இருந்தார். என்னதான் அண்ணாமலை தலைவரென்றாலும், கேசவ விநாயகத்தை மீறிச் செயல்பட முடி யாத அண்ணாமலை, அவரை அசிங்கப்படுத்தத் திட்டமிட்டு, சூர்யா சிவாவை வைத்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தார். பா.ஜ.க. சிறு பான்மைப்பிரிவு நிர்வாகியான டெய்சி சரணோடு சூர்யா சிவாவை ஆபாசச் சண்டை செய்யவைத்த அண்ணாமலை, அதன்மூலம் கேசவவிநாயகத் தையும் டேமேஜ் செய்தார். அந்த சண்டையை வைத்து நக்கீரன் ஆடியோவைப் பகிர்ந்த காயத்ரி ரகுராமை, ஆறுமாத காலத்துக்கு கல்தா கொடுக்க வைத்தார் அண்ணாமலை. சூர்யா சிவாவை ஒப்புக்கு தள்ளிவைத்தார். ஆக, அண்ணாமலையின் ஆட்டத்தால் இப்போது கேசவ விநாயகமும் அதிர்ச்சியிலிருக்கிறார். இப்படியாக, தமிழக காங்கிரஸ் கட்சிக்கு சற்றும் குறைவில்லாமல் கோஷ்டிச் சண்டைகளை உருவாக்கிவரும் அண்ணாமலையால் கடுப்பான சீனியர்கள், அண்ணாமலையின் ஆட்டத்துக்கு முடிவுகட்டு:ம கவுன்ட் டவுன் தொடங்கிவிட்ட தாகத் தங்களுக்குள் ஆறுதல் சொல்லிவருகிறார்கள்.