தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஆளுநர் ரவி தமிழக அரசிடம் மோதல் போக்கையே கையாண்டுவந்தார். தான் நேரடியாக தலையிடக் கூடிய இடம் உயர்கல்வித் துறையின் கீழிருக்கும் பல்கலைக்கழகங்கள் மட்டும்தான் என்பதால், பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்கிற அடிப் படையில் உயர் கல்வித்துறையில், குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் மூக்கை நுழைத்து பல்வேறு ஊழல்களுக்கு அவர் துணைபுரிந்து வந்தது தற்போது வெட்ட வெளிச்சமாகிவருகிறது.
தமிழ்நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டவுடன் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பொறுப்பேற்ற வேல்ராஜ், அன்றுமுதல் ஆளுநரின் நேரடி ஊழியர் போல்தான் செயல்பட்டுவந்தார். நியமனங்கள், செயல்திட்டங்கள் என அனைத்தும் ஆளுநர் யாருக்கு தர வேண்டும் என்று தெரிவிக் கிறாரோ, அவர்களை திருப்தி படுத்தும் வகையிலேயே செயல்படுவது என்று, தமிழக அரசுக்கு எதிரான செயல்பாடுகளைக் கொண்டிருந்தார் துணைவேந்தர் வேல்ராஜ்.
இப்படி பனிப்போர் உச்சத்திலிருந்த நிலையில், அப்போதைய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் பரிந்துரையில் ரவிக்குமார் என்பவரை பொறுப்புப் பதி வாளராக நியமித்து உத்தரவிட்டது தமிழக அரசு. இதனைத் தொடர்ந்து வேல்ராஜ் தனது நண்பரான இளையபெருமாள் என்பவரை பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத் துறையின் தலைவராக நியமித்தார். இதன்பிறகுதான் ஒரே ஆசிரியர் பல கல்லூரிகளில் பணியாற்றியது, போலியாக ஆவணங்கள் கொடுத்து தனியார் கல்லூரி கள் அங்கீகாரம் பெற்ற சம்பவம் வெளியேவந்தது.
பிராக்சி ஆசிரியர்கள் எனப்படும் தற்காலிகப் பேராசிரியர்களின் பிரச்சினை யை அறப்போர் இயக்கம் கையிலெடுக்க, வேல்ராஜின் செயல்பாடுகள் விமர்சனத் திற்கு உள்ளாகின. குறிப்பாக பத்து கல்லூரிகளில் இதுபோன்ற பேராசிரி யர்கள் இருப்பதை அறப்போர் இயக்கம் ஆதாரத்துடன் வெளியிட்டது.
இந்த அங்கீ காரம் சம்பந்தமாக வரும் விண்ணப் பங்களை ஆய்வு செய்து அண்ணா பல்கலைக்கழக குழுவினரை அனுப்பி கள ஆய்வும் மேற்கொண்டு, அவர்களின் விண்ணப்பங்களை ஒப்பீடுசெய்து அங்கீகாரம் வழங்குவதற்கு பேராசிரியர் இளையபெருமாளே பொறுப்பு. ஆனால் இளையபெருமாளோ, இதுபோன்ற விண்ணப்பங்களை ஆய்வுசெய்து துணைவேந்தர் பார்வைக்கு அனுப்பிவைப்பார். அவர் இறுதி அனுமதியளிப்பதுதான் இங்குள்ள நடைமுறை. அந்த நடைமுறையில் சாதகமாக செயல்படாத பொறுப்புப் பதிவாளர் ரவிக்குமாரை மாற்றிவிட்டு பிரகாஷ் என்பரை வேல்ராஜ் பொறுப்புப் பதிவாளராக நியமனம் செய்தார்.
இதற்கு ஆட்சிமன்றக் குழுவில் எதிர்ப்பு கிளம்பியபோதும் அந்த எதிர்ப்பையும் மீறி பிரகாஷ் நியமனம் நடைபெற்றது. இது முறைகேடான விசயம் என்றும், சட்டத்திற்குப் புறம்பாக இவ்வாறு செய்யமுடியாது என்றும் ஆட்சிமன்றக் கூட்டத்தில் முழுமையாக எதிர்ப்பு தெரிவித்த ஆட்சிமன்ற உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினருமான பரந்தாமன், எந்தவித காரணமும் இல்லாமல் ரவிக்குமார் நீக்கத்தை ஏற்கமுடியாது. இந்த ஆணையை ரத்து செய்யவேண்டும், முறையாக ஒப்புதல்பெறாமல் புதிய பதிவாளராக பிரகாஷை நியமிக்கமுடியாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/23/annauniversity1-2025-10-23-17-55-23.jpg)
இதற்கிடையில், இதுபோலுள்ள பிராக்சி பேராசிரியர்களைக் கண்டுபிடிக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு. மத்திய அரசின் அகில இந்திய தொழில் நுட்பக்கழகம் இந்தியா முழுவதும் இதுபோன்ற பிரச்சினைகள் இருப்பதால் அதனை சரிசெய்ய ஆதார் எண்ணுடன், புதிய அடையாள எண்ணை பேராசிரியர்களுக்கு வழங்கிவருகிறது. தற்போதைய இந்த புதிய நடைமுறையால் இந்த சிக்கல்கள் தீரும் என்று நம்புகின்றனர் தனியார் கல்லூரியைச் சார்ந்த பொறுப்பாளர்கள்.
இந்நிலையில், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்கத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர்கள் வழக்கு பதிவுசெய்து முதற்கட்ட விசாரணை துவங்கியுள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் முறைகேடுகளில் முக்கிய பங்காற்றிய வேல்ராஜ் சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டார். ஆனால், ஆளுநர் ரவியோ இந்த பணிநீக்கத்தை ஏற்காமல் ரத்துசெய்துள்ளார்.
அதேபோல், மத்தியிலிருக்கும் சிலரின் ஆசியுடன் தற்போது நாகலாந்தில் இருக்கும் என்.ஐ.டி.யில் இயக்குனராக பணியாற்றிவருகிறார் வேல்ராஜின் நண்பரான இளையபெருமாள். இளையபெருமாளை அந்த பதவியிலிருந்து நீக்கவும், இந்த அனைத்து பிரச்சினைக்கும் காரணகர்த்தாவாக இருந்தது இளைய பெருமாள்தான் என்பதால் அவர்மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்துள்ளது தமிழக அரசு.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/23/annauniversity2-2025-10-23-17-55-37.jpg)
தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அறப்போர் இயக்கத்தினர், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சூழலில், பிராக்ஸி பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக எழுந்த ஊழல் குற்றச்சாட்டில் வேல்ராஜ் உட்பட 11 பேருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது "இதுபோன்ற ஒரு சம்பவம் எதிர்காலத்தில் நடைபெறவேகூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஆகவே, டி.வி.ஏ.சி. விசா ரணை வளையத்திற்குள் இருக்கும் வேல்ராஜ், இளையபெருமாள், எம். சித்ரா, சிலோ எலிசபெத், ஜி. ரவிக்குமார், ஜே. பிரகாஷ், கிரிதேவ், மார்ஷல் ஆண்டனி, வி. மாலதி, பிரகதீஸ்வரன், சிலாஸ் சற்குணம் ஆகிய 11 பேரையும் அவர்கள் அடிஷனலாக பார்த்துவந்த பதவியிலிருந்து நீக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு தற்போது உத்தரவிட்டுள்ளது. மேலும், இப்பிரச்சனையில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உதவ ஆட்சிமன்றக் குழு தயாராக உள்ளது'' என்றார் எம்.எல்.ஏ. பரந்தாமன்.
விரைவில் புதிய துணைவேந்தரையோ அல்லது சிறப்பு அதிகாரியையோ நியமித்து, பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தவறினால்... சீரழியப்போவது மாணவர்களின் எதிர்காலம் மட்டுமல்ல, இந்திய அளவில் புகழ்பெற்றிருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தரமும்தான்.
-ஸ்ரீ வர்மா
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/23/annauniversity-2025-10-23-17-55-10.jpg)