மருத்துவ படிப்பிற்கான தகுதித் தேர்வாக ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட ‘நீட்’ தேர்வு, தமிழகத்தில் ஏற்படுத்திய பதட்டம் என்பது அரியலூர் அனிதாவில் ஆரம்பித்து பல்வேறு உயிர்களை காவு வாங்கியது. தேர்வு பயத்தாலும், தேர்வு எழுதி அதில் வெற்றி காண முடியாமலும் மாணவிகளும், மாணவர்களும் தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டனர்.
ஒட்டுமொத்தமாகவே தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் நீட் தேர்வு வேண்டாம் என்று எதிர்த்து நின்றபோதும் ஒன்றிய அரசு அதற்கு செவிசாய்த்தபாடில்லை. நீட் தேர்வால் இங்கே அரசியல் நடந்துகொண்டிருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், நீட் தேர்விற்கான கோச்சிங் சென்டர்கள் புற்றீசல் போல் முளைத்து விட்டது. அதில் லட்சக்கணக்கில் பணத்தை கொட்டி படித்து தேர்வு எழுதி, மருத்துவ படிப்பிற்கு தங்களை தயார்படுத்திக் கொண்டு வருவதும் மற்றொரு புறம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
நீட் தேர்வின் கோர முகத்தையும், அதன் வழியாக போகிற உயிர்களுக்கு நீதி வேண்டியும்,இந்த தேர்வை நிறுத்தியே ஆக வேண்டும் என்ற நியாயத்தையும், ஏழை எளிய மாணவர்கள் எந்த அளவு பாதிக்கப்படுகிறார்கள். நீட் தேர்வு அவசியமா? அதனால் நடக்கும் குளறுபடிகளால் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுகிறது? என்ற மையக்கருத்தை எடுத்துரைப்பதாக வந்திருக்கிறது “அஞ்சாமை’’ திரைப்படம்.
படம் முழுக்க நீட் தேர்வு என்பதை தகுதித் தேர்வு என்றே சொல்ல வேண்டிய நிலையில் தான் படைப்பாளிகளுக்கே நெருக்கடி உருவாகியிருக்கிறது போல, அதனால் தகுதித்தேர்வு என்றே சொல்கிறார்கள். இந்த தகுதித்தேர்வால் மாணவர்கள் மனதளவிலும், உடல் அளவிலும் அடைகிற உளவியல் சிக்கலுக்கு நிகரானது அவர்களது பெற்றோர் அடைகிற சிக்கல்கள். பொருளாதார ரீதியில் பின் தங்கிய கிராமத்திலிருக்கிற ஒரு மாணவன் டாக்டராக ஆசைப்பட்டால் அவனது குடும்பமே அடைகிற துன்பத்தையும், அப்பா அடைகிற துயரத்தையும் ஆவணப்படப் பாணியில்லாமல் உணர்வுகளோடு பின்னி நமக்கு காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் நீட் போன்ற தகுதித்தேர்வுக்கு தமிழ்நாட்டில் மற்றும் ஏன் இவ்வளவு எதிர்ப்பு இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலாகவும், அதேசமயம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அதில் இருக்கும் குளறுபடிகளால் எந்த அளவு இன்னல்கள் ஏற்படுகிறது என்ற உண்மையையும் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி இருப்பது போன்ற நிதர்சனத்தை மிக யதார்த்தமாக காட்டி இருக்கிறார் அறிமுக இயக்குநர் சுப்புராமன்.
படத்தில் வசனங்களின் வழியே அதிகார வர்க்கத்திற்கு தொடர்ச்சியாக கொட்டு வைக்கிறார் இயக்குநர். குறிப்பாக “சிலம்பம் கத்துட்டு வந்து கத்தி சண்ட போன சொன்னா எப்டி?’’ , “தகுதித் தேர்வுதான் முடிவென்றால், எதற்கு பள்ளிப் படிப்பு’’ , ரயிலில் எதற்கு ரிசர்வேஷன், அன்ரிசர்வேஷன், ஏசி என பாகுபாடு? தகுதித் தேர்வை போல எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியான சீட்டை ஒதுக்க வேண்டியது தானே போன்ற வசனங்கள்’’ மக்களின் பலநாள் ஆதங்கத்தையும், கோவத்தையும் இயக்குநர் வசனத்தின் வழியே வெளிக்கொண்டு வருவதாக இருக்கிறது.
அறிமுக ஒளிப்பதிவாளர் கார்த்திக் ஒளிப்பதிவில் கிராமம் மற்றும் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பிரத்தியேகமாக காட்சி அமைப்புகளுக்கென்று மெனக்கிடாமல் கதையின் ஓட்டத்தோடு கேமரா பயணித்திருப்பதே இந்த படத்தை பார்க்கும் பார்வையாளர்களுக்கு கதையினை கொண்டு சேர்க்கிறது.
திரைப்படத்தின் சுவாரசியத் தன்மைக்காக பாடல், சண்டைக்காட்சிகள் என்று எதுவுமில்லாமலும், அதே சமயம் தமிழ்நாட்டு மாணவர் வடமாநிலத்திற்குச் சென்று தேர்வு எழுத நேரும் போது ஏற்படுகிற சிக்கலையும், கடைசி நேர பதட்டத்தையும் காட்சி அமைப்புகளின் வழியே இயக்குநர் நமக்கு கடத்துகிறார், தேர்வு மையத்தினுள் மாணவர்கள் பரிசோதிக்கப்பட்டு உள்ளே அனுப்பும் மனிதநேயமற்ற உளவியல் தாக்குதலையும் காட்சிப்படுத்தி பரிதாபப்பட வைக்கிறார்.
அரசியலமைப்பு சட்டத்தின் வழியே இந்த தேர்வினை நிறுத்துவதற்கான சட்ட போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனாலும் தேர்வு நிறுத்தம் குறித்த எந்த முன்னேற்றமும் இல்லாமல் தேர்வும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதைத்தான் திரைப்படத்திலும் காட்டியிருக்கிறார்கள். ஆனால் நிஜத்தில் நடக்காதது திரையில் நடந்திருந்திருந்தால் கொஞ்சம் தைரியமூட்டியிருக்கும், அது நடக்காத படத்தின் கிளைமேக்ஸ் மட்டும் ஏமாற்றமே.
பெற்றோர்களின் ஆசையும், மாணவர்களின் மருத்துவ கனவு சிதையாமல் இருக்க இந்த தகுதித் தேர்வான நீட் அரசியலாக்கப்படாமல் நிறுத்தப்பட வேண்டும் என்பதே கோரிக்கையும் வேண்டுதலாகும்.