தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதி விவசாயக் கூலித்தொழிலாளர்கள் நகரின் நான்கு கி.மீ. தொலைவில் உள்ள மேற்குப் பகுதியின் மலையடிவாரத்தில் கல்துண்டு ஆற்றை ஒட்டிய இசக்கி, பீர்முகமது ஆகியோருக்குச் சொந்தமான எலுமிச்சைத் தோட்டத்தில் எலுமிச்சை பறிப்பதற்காக, ஆகஸ்ட் 8ஆம் தேதி அதிகாலையில் சென்றிருக்கிறார்கள். அவர்கள் எலுமிச்சை பறித்துக்கொண்டிருந்தபோது திடீரென்று ஆக்ரோஷமாகக் கத்தியபடி பாய்ந்து வந்தக் கரடிக் கூட்டம், விவசாயத் தொழிலாளர்களை விரட்டத் தொடங்கியிருக்கிறது. கரடிக் கூட்டத்திடமிருந்து உயிர் தப்பிக்க அலறிச் சிதறி ஓடியபோதும், விரட்டி விரட்டி நகத்தால் கீறியும், கூர்மையான பற்களால் கடித்துக் குதறியுமிருக்கின்றன. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்துத் தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் கம்புகளோடு ஓடிவந்து கரடிக் கூட்டத்தை விரட்டியிருக்கிறார்கள்.
கரடிக் கூட்டத்தின் தாக்குதலில், புளியங்குடியைச் சேர்ந்த தொழிலாளர்களான சேகம்மாள், ராமலட்சுமி மற்றும் அம்பிகா உள்ளிட்ட 3 பெண் தொழிலாளர்கள் பலத்த காயத்தோடு மயங்கிச்சரிய, சிகிச்சைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். இதில், தலை, கழுத்து மற்றும் மார்புப் பகுதியில் படுகாயமடைந்த சேகம்மாள், மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். இதுகுறித்து தகவலறிந்த புளியங்குடி டி.எஸ்.பி. மீனாட்சி சுந்தரம், வனத்துறை அலுவலர் ஆறுமுகம், புளியங்குடி இன்ஸ்பெக்டர் சியாம்சுந்தர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர், சிகிச்சையிலிருந்த வர்களிடம் நடந்தவைகளை விசாரித்திருக்கிறார்கள்.
படுகாயமடைந்தவர்களின் உறவினர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டி, கொல்லம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கரடியைக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஏற்கெனவே காட்டெருமை, காட்டுப் பன்றிகள், மிளா போன்ற வன மிருகங்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதை நாங்கள் வனத்துறை அதிகாரிகளிடம் புகாரளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனக்கூறி சாலை மறியல் செய்தவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். முதற்கட்டமாக வன அலுவலர் ஆறுமுகம் மூலம் இழப்பீடாக பாதிக்கப்பட்ட மூவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. கரடியைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்று அதிகாரிகள் உறுதியளித்ததால் சாலை மறியல் கைவிடப்பட்டது.
சிகிச்சையிலிருந்த அம்பிகா மற்றும் ராமலட்சுமியை சந்தித்தபோது, வலியிலும் வேதனையிலும் பேசினார்கள். ""குடும்பச் சூழ்நில, வயத்துப்பாடு, பிள்ளைகளுக்காக நாங்க வேலைக்குப் போனாத்தான் பாடு கழியும். இதுல ஒரு நாளைக்கு 300 ரூவாதான் கூலியாயிருக்கும். அதுக்காக 8 கி.மீ. தூரம் நடந்துபோக வேண்டி யிருக்கும். அன்னைக்கு காலைல எலுமிச்சை பறிப்புக்குப் போன நாங்க வேலைய ஆரம்பிச்சு அரை மணி நேரம் தான் இருக்கும். எலுமிச்சை மூடு புதர்லருந்து வந்த கரடிங்க, 5 கிட்ட இருக்கும்யா. எங்கள விரட்டி சுத்திக்கிச்சு. எங்கள நகத்தால கீறியும், பல்லால கடிச்சும் வச்சதுல கதறிக்கிட்டே மயங்கிட்டோம். பக்கத்து தோட்டத்துல வேலை செஞ்சவங்க பதறிப் போய் ஓடியாந்து கரடிக் கூட்டத்த விரட்டுனதால நாங்க தப்பிக்க முடிஞ்சதுய்யா'' என்றார்கள் பீதியுடன்.
இது இப்படியிருக்க, புளியங்குடியை அடுத்துள்ள அடவி நயினார் அணைப் பகுதியிலிருக்கும் வடகரை, இலத்தூர், குத்துக்கல் வலசை பகுதியின் விவசாய நிலங் களில் புகுந்த யானைக்கூட்டம், மிளா போன்றவை, வாழைகள் உள்ளிட்ட விளைச்சல் பயிர் களை நாசம் செய்தநிலை யில், தற்போது அங்கே சிறுத் தை நடமாட் டம் இருப் பதையறிந்த அப்பகுதி விவசாயிகள், வனத்துறையினருக்கு தகவல் குடுக்க, அதனை உறுதி செய்த வனத்துறையோ, சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மக்களோ, விவசாயிகளோ அந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டாமென்று தண்டோரா போட்டிருக்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்க துணைத்தலைவரான திருக்குறுங்குடியின் பெரும்படையார், ""சிவகிரி, புளியங்குடி பகுதி தொடங்கி நாங்குநேரி, திருக்குறுங்குடி வரை ஆயிரக்கணக்கான விவசாயிகள் பணப்பயிரிட்டு வருகின்றனர். தரையிறங்கும் வன விலங்குகளால் விளைநிலங்கள் நாசமாக்கப்பட்டதால் ஒவ்வொரு விவசாயிக்கும் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருகின்றது. இந்த நஷ்டங்களையும், வேதனை களையும் மாதந்தோறும் கலெக்டர் தலைமையில் நடக்கும் விவசாயிகளின் குறைதீர் கூட்டத்தில் வனத்துறை உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளிடமும் புகாரளித்து வருகிறோம். ஆனால் நடவடிக்கைதான் இல்லை'' என்றார் வேதனையோடு.
இந்நிலையில்... 11ஆம் தேதி வால்பாறை அருகே வேவர்லி எஸ்டேட்டில் வட மாநில தொழிலாளியின் 8 வயது மகனை கரடி தாக்கியதால் மரணமடைந்தான்.
விவசாயிகளின் பணப்பயிர்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதுகாப்பளிக்க வேண்டியது அதிகாரிகளின் கடமையல்லவா?