சிறுமி ராஜலட்சுமி படுகொலை செய்யப்பட்டு பதினைந்து நாட்கள் கடந்தும்கூட, துண்டாகக் கிடக்கும் அவரது தலை அனைவரின் மனசாட்சியையும் உலுக்கிக் கொண்டிருக்கிறது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகிலுள்ள தளவாய்ப்பட்டியைச் சேர்ந்த தலித் சமூகத்தவரான சாமிவேல்-சின்னப்பொண்ணு தம்பதியின் கடைசி மகள் ராஜலட்சுமி (14). இவரை அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்கிற தினேஷ்குமார் கடந்த அக். 22-ஆம் தேதி இரவு தலையைத் துண்டித்து படுகொலை செய்தார். இந்த விவகாரத்தில் தினேஷ்குமார் மீது கொலை, ஆபாசமாக பேசுதல், வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்து 25-ஆம் தேதி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர் ஆத்தூர் போலீசார்.
இதற்கிடையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தீண்டாமை தடுப்பு விழிப்புணர்வு இயக்கம் மற்றும் எவிடென்ஸ் உள்ளிட்ட கட்சிகளும், அமைப்புகளும் இந்த விவகாரத்தை சாதியம் மற்றும் பாலியல் இச்சை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் கொண்டுசென்றதால், தினேஷ்குமார் மீது போக்ஸோ மற்றும் குண்டாஸ் பிரிவுகள் பதியப்பட்டன.
நவம்பர் 5-ஆம் தேதி சேலத்தில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் தலைமையில், சிறுமி ராஜலட்சுமி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. அதில் பேசிய திருமாவளவன், ""முதல்வர், தன் சொந்த மாவட்டத்தில் நடந்த கொடூர கொலை பற்றி மவுனம் காப்பது கண்ட னத்துக்குரியது''’என கடுமையாகச் சாடியதோடு, ""பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், இழப்பீடாக ரூ.1 கோடியும் வழங்க வேண்டும்''’என்றும் வலியுறுத்தினார். கையோடு, கட்சியினரிடம் வசூல் செய்த ரூ.2 லட்சத்தை சிறுமியின் குடும்பத்தினரிடம் வழங்கிவிட்டுக் கிளம்பினார்.
நவம்பர் 7-ஆம் தேதியன்று சிறுமியின் கிராமத்திற்கு நாம் சென்றபோது, தினேஷ் குமாரின் வீட்டிற்குச் செல்வதற்கான தடம், முள்வேலியால் மூடப்பட்டிருந்தது. சிறுமியின் உடலிலிருந்து ரத்தம் பீய்ச்சி யடித்து அடங்கிய இடத்தில் செங்கற்களால் கட்டம்கட்டி மலர்கள் தூவப்பட்டிருந்தன.
சிறுமியின் பெற்றோரிடம் பேசியபோது, ""எங்க புள் ளைக்கு நடந்தமாதிரி வேற யாருக்காச்சும் நடக்கறதுக்குள்ள தினேசுக்கு தூக்குத்தண்டனை கொடுக்கணும். அவனுக்கெல்லாம் ஜாமீன் கேட்டு எந்த வக்கீலாவது வாதாடினா, அவனுங்க வீட்ல புள்ளைங்களே இல்லேனுதான் அர்த்தம். எடப்பாடியோட சொந்த மாவட்டத்துல இப்படியொரு கொலை நடந்திருக்கு. இங்க உயிரு போச்சுன்னு நினைச் சாரா இல்ல... மயிருனு நினைச்சாரா...?'' எனக்கேட்டு வெதும்பி அழுகின்றனர்.
சிறுமி கொலை பற்றி தினேஷ்குமாரின் மனைவி சாரதாவிடம் முன்பு விசாரிக்கையில், தினேஷ்குமார் பித்துப் பிடித்த நிலையில் இருந்ததாகவும், அவரை சீலியம்பட்டி சாமியாடியான பசுமாட்டுக்காரன் தாத்தா, மலையம்பட்டி மாரிமுத்து ஆகியோரிடம் கூட்டிச்சென்று குறி கேட்டதாகவும் கூறியிருந்தார். இதனை, அக்.31-நவ.02 தேதியிட்ட நக்கீரன் இதழில் குறிப்பிட்டிருந் தோம். இந்தத் தகவல்கள் உண்மைதானா? என்பதையறிய, சீலியம்பட்டி சென்றோம். வெற்று உடம்பும், சடைமுடியு மாக 75 வயதுமிக்க பசுமாட்டுக்காரன் இருந்தார். அவரிடம் கேட்கையில், “""தேதி சரியா தெரியல, பாடமுத்தி முனி வந்தி ருக்கேன்... சுடுகாட்டுல படுத்திருந்தேன்... காட்டேரி வந்திருக்கேன்னுலாம் சொன்னான். என்ன கேட்டாலும் முள்ளு மரத்த அண்ணாந்து பாத்துட்டே இருந்தான். திடீர்னு குவார்ட்டரும் சேவலும் கேட்டான். அதையெல்லாம் வாங்கிட்டு வாங்கன்னு அனுப்புனேன்''’என்றார்.
இதையடுத்து மலையம்பட்டி மாரிமுத்துவைச் சந்தித்தோம். “""தினேஷ் குமாருக்கு குறிகேட்டு அவரது மனைவி, மாமியார் இரண்டு வயது ஆண்குழந்தை யுடன் வந்திருந்தனர்''’என சொல்லிய படியே, திடீரென அருள் வந்ததுபோல் ஆடத் தொடங்கினார். “""உங்க மூணு பேருக்கும் கெரகம் புடிச்சிருக்கு. இன்னும் அஞ்சாறு நாளைக்குள்ள உங்க வீட்டுக்கு மேற்கு திசையில ஒரு உசுரு போவும். அதுவரைக்கும் உன் புருஷன பத்திரமாக பாத்துக்கணும். அதுக்கப்புறம் எல்லாம் சரியாகிடும்''’என்று அவர்களுக்குச் சொன்ன அருள்வாக்கை நம்மிடமும் சொன்னார்.
மேலும், தினேஷ்குமாரை ஆத்தூரில் உள்ள குழந்தைகள் மனநல மருத்துவர் நவநீதகிருஷ்ணனிடம் கூட்டிச்சென்றதாக சாரதா சொல்லியிருந்தார். அதுபற்றி விசாரிக்கச் சென்றபோது, அவர் ராஜபாளையம் சென்றிருப்பதாக கிளினிக் ஊழியர் கூறிவிட்டனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தினேஷ்குமார், பத்து நாட்களுக்கு மேலாகியும் யாருடனும் பேசாமல், தனக்குத்தானே பேசிக் கொள்வதாக சிறைத்துறை தரப்பு கூறுகிறது.
தினேஷ்குமாரின் குடும்பத்தினருடன் நாற்பது ஆண்டுகளாக சிறுமியின் பெற்றோர் நட்புடன் பழகி வந்துள்ளனர். தினேஷ்குமாரின் தோட்டத்து தொட்டியில்தான் அவர்கள் தினமும் தண்ணீர் எடுத்து பயன்படுத்தியுள்ளனர்.
சிறுமியின் தந்தை சொல்லும் நாளில், தினேஷ்குமார் ஆத்தூரில் இல்லை. அதற்கு மறுநாள்தான் வீடு திரும்பியிருக்கிறார். அதன்பின்னர் நடந்ததை போலீஸின் நேர்மையான விசாரணையில் கொண்டுவர முடியும்.
அதேசமயம், தினேஷ்குமாரின் மனைவி சாரதா, சகோதரர் சசிகுமாரிடம் காவல்துறை பெயரளவுக்குக் கூட விசாரிக்க வில்லை என்ற தகவல் அதிர்ச்சி கிளப்புகிறது.
திட்டமிட்டு மறைக்கும் முயற்சிகள் நீடித்தால் அது அரசியல் ரீதியாகவும் சாதிப் பகையாகவும் மாறி அமைதியை சீர்குலைக்கும். முதல்வர் தன் சொந்த மாவட்டத்தில் நடந்த அநியாயப் படு கொலை வழக்கில் யாரைக் காப்பாற்ற முயல்கிறார் என்ற சந்தேகக் கேள்விக்குப் பதில் இல்லை.
-இளையராஜா