கடந்த வாரம் சென்னையில் நடந்த பா.ஜ.க.வின் சிந்தனை ஆய்வுக் கூட்டம் குறித்து கடந்த நக்கீரன் இதழில் எழுதியிருந்தோம். அதன் தொடர்ச்சி...
அந்தக் கூட்டத்தில் தேசிய அமைப்புச் செய லாளர் பி.எல்.சந்தோஷுக் கும், கராத்தே தியாகராஜ னுக்கும் காரசார விவாதம் நடந்து, பின்னர் பாராட் டிலும் முடிந்திருக்கிறது.
கூட்டத்தில் பேசிய கராத்தே தியாகராஜன், "சிலம்ப விளையாட்டுக்கான அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்துவிட்டது. தமிழக அரசு அங்கீகாரம் கொடுத்திருக்கிறது. அங்கீகாரம் ரத்து செய்திருப்பதைக் கவனித்து அதை நீக்கவேண்டும். தமிழகத்தில் காமராஜர் ஒரு ஐகான். அவரது நினைவிடத்துக்கு ஒருமுறை கூட சோனியாவோ, ராகுலோ வந்ததில்லை. அடுத்தமுறை தமிழகத்துக்கு மோடிஜி வரும்போது காமராஜர் நினைவிடத்துக்கு வரவேண்டும். அரசியல் ரீதியாக இது தாக்கத்தை ஏற்படுத்தும். இன்றைக்கு தி.மு.க., ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் செலவாக 20 கோடியை கொண்டுபோய் சேர்த்துவிட்டது''”என்று பேசியபோது, குறுக்கிட்ட பி.எல்.சந்தோஷ், "தியாகராஜன், நீங்க உட்காருங்க, அவரிடமிருந்து மைக்கை வாங்குங்க'” என்று கோபமாகச் சொன்னார்.
உடனே உட்கார்ந்த கராத்தே தியாகராஜன் ஒரே செகண்டில் மீண்டும் எழுந்து, "நான் என்ன தப்பாக சொல்லிவிட்டேன் சார்? தேர்தல் அரசியலில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை நாம் ஆலோசிக்கக்கூடாதா? அப்புறம் எதற்கு இந்த கூட்டம்? நீங்க பேசுவது சரியில்லை; நியாயமில்லை சார்''” என்று சொல்லிவிட்டு அமர்ந்தார். மொத்த கூட்டமும் கப்-சிப்பானது. பி.எல்.சந்தோசையே எதிர்த்துப் பேசிய கராத்தே தியாகராஜனின் செயலை அதிர்ச்சியுடனும் ஆச்சரியமாகவும் கவனித்தனர் பா.ஜ.க. நிர்வாகிகள்.
டீ பிரேக் விடப்பட்டது. டீ பிரேக் என்றாலும் அங்கு டீ வைக்கப்படவில்லை. சூப் வைக்கப்பட்டிருந்தது. அப்போது முக்கிய நிர்வாகிகள் பலரும் கராத்தே தியாகராஜனிடம் வந்து கைகுலுக்கி பாராட்டினர். சரத்குமார், அவரை கட்டிப்பிடித்து சூப்பர் என்றார். அப்போது தியாகராஜனின் தோளைத் தட்டி அவரை தனியாக அழைத்துச் சென்றார் பி.எல்.சந்தோஷ். முக்கிய நிர்வாகிகள் சிலரும் அவருடன் சென்றனர். சூப் சாப்பிட்டபடியே, "தப்பா நினைச்சுக்காதீங்க தியாகராஜன், ரொம்ப நேரம் பேசிட்டீங்களேன்னுதான் உட்காரச் சொன்னேன்''’என்று சமாதானப்படுத்தினார்.
கராத்தே தியாகராஜனைப் பற்றி சந்தோஷ் விசாரித்திருக்கிறார். அப்போது, "ஃபீல்டில் அவர் ஸ்ட்ராங்க் வொர்க்கர். தேர்தல் அரசியலில் என்ன நடக்கிறதுங்கிறது நிறைய அவருக்குத் தெரியும். எல்லா இடத்திலும் சோர்ஸ் வைத்திருப்பவர். அரசியலிலும், தேர்தல் களத்திலும் ஏக அனுபவம் உள்ளவர்' என்று பி.எல்.சந்தோஷிடம் சொல்லியிருக்கிறார்கள். இதையடுத்து, கராத்தே தியாகராஜனை சமாதானப்படுத்தியிருக்கிறார் சந்தோஷ்.
இந்த நிலையில் கூட்டத்தின் அனைத்து அமர்வுகளும் முடிந்து, இறுதியில் பேசிய பி.எல்.சந்தோஷ், ’"இன்னைக்கு காலையில எனக்கும், தியாகராஜனுக்கும் வாக்குவாதமாயிடுச்சு. ஜனநாயகமாக நாம் கட்சி நடத்துகிறோம். அதனால் இந்த மாதிரி வாக்குவாதம் சரியானதுதான். தேர்தல் அரசியல் பற்றி வெளிப்படையாக தியாகராஜன் நிறைய பேசினார். மூத்த நிர்வாகி அவர். அவர் மாதிரி ஆர்கியூமெண்ட் பண்ணணும்... அவருக்கு பாராட்டுகள்'' என்று பாராட்டிப் பேசினார்.
-இளையர்