மாநில முதல்வராக, மிகப்பெரிய அரசியல் தலைவராக, மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவராக இருந்தாலும், கலைஞர் தன்னை ஒரு பத்திரிகையாளர் என்று கூறிக்கொள்வதையே பெருமையாகக் கருதினார்.
அதற்கு காரணம் இருந்தது. பள்ளிப்பருவத்தில் 12 வயதில் "மாணவநேசன்' என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தி, தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர். அந்தப் பத்திரிகை வழியாக "தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்' என்ற மாணவர் இயக்கத்தை திருவாரூரில் தொடங்கியவர்.
தனது 18-ஆவது வயதில் இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற சமயத்தில் 1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதன்முதலாக "முரசொலி' இதழை துண்டறிக்கையாக வெளியிட்டார். சேரன் என்ற புனைப்பெயரில் எழுதினார். யுத்தம் நடைபெற்ற சமயம் என்பதால் நல்லதாளில் கூட அச்சடிக்க முடியாத நிலை இருந்தது. அது 1944- வரை வெளியாகியது. அதனைக் கொண்டுவர கடும் நெருக்கடிக்கிடையிலும் அயராது உழைத்தார். கலைஞரின் இந்தப் பணியில் அவருடைய நண்பர் தென்னனின் பங்கு முக்கியமானது என்று குறிப்பிட்டிருக்கிறார். முரசொலியில் ஆங்கில ஆண்டுக் கணக்குக்கு இணையாக "பெரியார் ஆண்டு' என்று அறிமுகப்படுத்தினார் கலைஞர். அந்த முரசொலி வார இதழாகி, நாளேடாகி பவளவிழா கண்டது தமிழ் இதழியல் வரலாற்றில் முக்கியமானதாகும்.
"முரசொலி' கலைஞரின் முதல் பிள்ளை. முதல்வர் பொறுப்பு -டெல்லி அரசியல் என பரபரப்பாக இருந்தாலும் முரசொலி அலுவலகப் பணிகளும், உடன்பிறப்புகளுக்கு அவர் எழுதும் கடிதமும் ஓய்ந்ததில்லை. பிழை திருத்துவதில் தொடங்கி, அச்சாகி வரும் முதல் இதழைப் படிப்பதுவரை முழுமையான பத்திரிகையாளராக கலைஞர் இருந்தார்.
"எதிர்க்கட்சியாக இருக்கும்போது முரசொலியை முதலில் படிக்கும் கலைஞர், முதல்வராக இருந்தால் எதிர்க்கட்சிகளின் பத்திரிகையை முதலில் படித்துவிட்டு, அதற்கு முரசொலியில் பதில் எழுத ஆயத்தமாகிவிடுவார்' என்கிறார் முரசொலியின் ஆசிரியர் செல்வம். எல்லா பத்திரிகைகளையும் பருவ இதழ்களையும் படிக்கும் பழக்கமுள்ள கலைஞர், அதிகாலை 4 மணிக்கு எழுந்து, எழுதவேண்டிய செய்திகளுக்கு குறிப்பெடுத்துவிடுவார்.
கடிதம், கேள்வி-பதில், அறிக்கைகள் இவற்றின் வாயிலாக தனது உடன்பிறப்புகளோடும், தமிழ்நாட்டு மக்களோடும் முரசொலி வாயிலாக 75 ஆண்டுகளாக உரையாடியவர் கலைஞர். முரசொலிக்கு நாள் தவறாமல் தலைப்புச் செய்தியைத் தருகிற நிறுவனராக மட்டுமின்றி, ஒரு பத்திரிகையாளர் என்ற வகையில் தனது அறிக்கைகள் மற்ற பத்திரிகைகளுக்கு எப்போது கிடைத்தால் சரியாக இருக்கும் என்பதை அறிந்திருந்தார்.
காட்சி ஊடகம் வந்த பிறகுகூட செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தி எழுதுகிறவர்களின் வேகத்துக்கு ஏற்ப தங்கு தடையின்றி நிதானமாக பதில் அளிப்பதில் கலைஞருக்கு நிகர் அவர்தான் என்று மூத்த பத்திரிகையாளர்கள் கூறுவார்கள்.
பத்திரிகையாளர் சந்திப்பை கலகலப்பாக நடத்தும் தலைவராகவும், சுருக்கமாக பளிச்சென்று பதில் சொல்லுவதிலும்கூட கலைஞரின் ஆற்றல் தனித்துவமானது. நெருக்கடி நிலையை பிரதமர் இந்திரா பிரகடனம் செய்தபோது, கொஞ்சம் கொஞ்சமாக இந்திரா ஹிட்லராகி வருவதை கார்ட்டூனாக போட்டவர் கலைஞர். ஓவியர் செல்லம் வரைந்த அந்த கார்ட்டூனே தி.மு.க. ஆட்சியைக் கலைக்கும் காரணங்களில் ஒன்றாக அமையும் அளவுக்கு வலிமையாக இருந்தது.
அரசியல் களத்தில் முரசொலியை தனது வாளும் கேடயமுமாக பயன்படுத்தினார். அண்ணா எழுதிய காகிதங்களை கழுதை தின்பது போல ஒரு பிரபல நாளிதழ் கார்ட்டூன் வரைந்தபோது, அந்த கார்ட்டூனை அப்படியே எடுத்து முரசொலியில் வெளியிட்டு, கழுதையின் மீது அந்த நாளிதழின் பெயரை எழுதி பதிலடி தந்தவர் கலைஞர். சில நேரங்களில் அவரே கார்ட்டூனும் வரைந்துள்ளார். நெருக்கடிநிலை காலத்தில் தணிக்கையாளர்கள் கண்களுக்குத் திரைபோடும் வகையில், தான் சொல்ல நினைத்ததை, உடன்பிறப்புகளுக்கு போய்ச் சேரவேண்டிய விஷயங்களை திறமையாக எழுதுவார்.
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தி.மு.க. நிர்வாகிகள் குறித்த விவரத்தை தமிழகம் முழுவதும் உள்ள உடன்பிறப்புகளுக்கு தெரிவிக்கவும் வேண்டும், அது தணிக்கை செய்யப்படவும் கூடாது என்பதற்காக, அண்ணா துயிலுமிடத்தில் அஞ்சலி செலுத்த வர இயலாதோர் என்று முரசொலியில் பட்டியலிட்டு, கைதானோர் விவரத்தை வெளியிட்டார் பத்திரிகையாளர் கலைஞர்.
கட்சிப் பத்திரிகையான முரசொலியை ஒரு வெகுஜன இதழுக்கான அம்சங்களுடன், குறிப்பாக அதன் பொங்கல் மலரை தமிழ்ப் பண்பாட்டு இதழாக கொண்டுவந்தவர் கலைஞர். முரசொலியின் முகப்பில் "இன்றைய செய்தி நாளைய வரலாறு' என்ற வாசகத்தை கலைஞர் பயன்படுத்தினார். அந்த வாசகத்துக்கு ஏற்ப இயக்க நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் விதமாக முரசொலியை நடத்தியவர் கலைஞர்.
சக பத்திரிகையாளர்களின் நண்பனாக, அவர்களின் உரிமைகளுக்கு உதவும் தோழனாக, செங்கோலைவிட எழுதுகோலையே அதிகம் நேசித்த மூத்த பத்திரிகையாளர் கலைஞர்.
-கீரன்