தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரம் பைபாஸ் சாலையில் வன்னியர் சங்கம் சார்பில் சோழமண்டல சமய சமுதாய நல்லிணக்க மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு வன்னியர் சங்கத் தலைவர் பு.த.அருள்மொழி தலைமை தாங்கினார். டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
வன்னியர் சங்க தலைவர் பு.த.அருள்மொழி தலைமை உரையை துவங்கும்போதே, மைக்கை வாங்கி இடைமறித்த மருத்துவர் ராமதாஸ், “"அனைவருக்கும் வணக்கம் என்று சுருக்கமாக சொன்னால் போதும்''’எனச் சொன்னதும், பேச வந்ததையே மறந்துபோனவரானார் அருள்மொழி. அவரைத் தொடர்ந்து பேசவந்த அகில இந்திய முக்குலத்துப் பாசறை தலைவர் சிற்றரசு, மாநாட்டில் பேசுவதற்காக பக்கம் பக்கமாக கவிதைகளை எழுதிக் கொண்டுவந்திருந்தார். "தாயே தமிழே வணக்கம், தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும், அமிழ்தே நீ இல்லையென்றால் அத்தனையும் என் வாயில் கசக்கும், புளிக்கும்''’என பேசத் துவங்கும்போது, மீண்டும் மைக்கைப் பிடித்த மருத்துவர் ராமதாஸ், “"எல்லாரும் கேளுங்க, அனைவருக்கும் வணக்கம் சொன்னா போதும்,’ ஒரு நிமிடம்தான் பேசணும்'' எனக்கூற ஒவ்வொரு தலைவர்களும் தயாரித்து வந்த கருத்துக்களை எப்படி பேசுவது என்று தெரியாமல் விழிபிதுங்கி நெளியத் தொடங்கினர்.
சுருக்கமாகப் பேசிய மன்னார்குடி ராமானுஜர் ஜீயரோ, "நாம நல்ல காரியங்களுக்குப் போனால் மஞ்சள் குங்குமம் இருக்கும். அதுபோல நம் நாட்டுக்கு இன்று காவியும், மஞ்சளும் தேவை. அது தமிழ்நாட்டில் சேர்ந்திருக்கிறது''’என்று பா.ஜ.க., பா.ம.க. கூட்டணி உறவை கூறி முடித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய கும்பகோணம் தூய மரியன்னை லூர்துசாமியோ, “"அமெரிக்காவி லிருந்து இந்தியர்களை விலங்கை மாட்டி கூட்டம் கூட்டமாக இழுத்து வந்துவிடுகின்றார்கள். இது இந்திய நாட்டிற்கு அவமானம் இல்லையா, அதில் ஒரு தமிழர்கூட இல்லை என்பதுதான் நமக்கான ஆறுதல், பெருமை. அந்த அளவுக்கு படித்திருக் கின்றவர்களின் மாநிலமாக தமிழகம் இருக்கிறது. ஆகவே இங்குள்ள மக்கள் இன்னும் படிக்க வேண்டும்''” என்று தன்னையே அறியாமல் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியையும் திராவிட ஆட்சிகளின் பெருமைகளையும், பா.ஜ.க. அரசின் இயலாமையையும் கூறிமுடித்தார்.
மாநாட்டில் பேசிய அன்புமணி ராமதாஸ், “"தமிழகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி அனைத்துத் தரப்பினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும். ஆனால் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாதிவாரிக் கணக் கெடுப்பு நடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று தவறான தகவலைத் தெரிவிக்கிறார். சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலே நம் முடைய வேட்பாளர் இங்கு போட்டி யிட்டார். ஆனால் அவரை தோற் கடித்துவிட்டு சென்னையிலிருந்து யார் என்று தெரியாத, இந்த தொகுதிக்கும் மக்களுக்கும் சம்பந்தமில்லாத, எங்கிருந்தோ வந்த அந்த வேட் பாளரை மூன்று லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்கிறீர்கள். உங்களுக்கு என்னதான் நாங்கள் செய்யணும்?''’என்று கூறி மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதாவை சீண்டினார்.
இறுதியாகப் பேசிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், "தமிழகத்திலுள்ள 364 சாதிகளும் முன்னேறினால்தான் தமிழகம் வளரும். ஏற்றத்தாழ்வுகளை களைய சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தவேண்டும். தமிழகத்தில் மூன்று முறை சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வாய்ப்பு கிடைத்தும் சிலரின் சதியால் அது நடைபெறவில்லை. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு, அதற்கு அன்புமணி முதல்வராக வேண்டும்''’என்றார்.
மாநாட்டில் பேசிய அன்புமணி ராமதாசின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த மயிலாடுதுறை எம்.பி. சுதா, "அன்புமணி ராமதாஸ் பேசும்போது நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு, அதையெல் லாம் பேசுவதை விட்டுவிட்டு தேவையில்லாமல் என்னைப்பற்றி, இந்த தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத சென்னையிலிருந்து யாரோ ஒருவர் எங்கிருந்தோ வந்தார் என்றும், தெரியாமல் வாக்களித்து வெற்றபெறச் செய்தீர்கள் என்றும் பேசியது, தொடர்ந்து சமுதாய மக்களால் தோற்கடிக்கப்படுகின்ற உங்கள் விரக்தியையும் வயிற்றெரிச்சலையும் காட்டுகிறது. ஒரு பெண்ணென்றும் பாராமல் பொதுவெளியில் நக்கல் நையாண்டித்தனமாக பேசியதன் மூலம் நீங்கள் யார், நீங்கள் பெண்களை எந்த அளவிற்கு மதிக்கிறீர்கள் என்பதை அனைவரும் அறிவார்கள். அதுதான் உங்களது பண்பும்கூட.
சென்னையில் பிறந்து வளர்ந்த உங்கள் மனைவி சௌமியா அன்புமணி மற்றும் நீங்கள் தர்மபுரியில் நிற்கலாம். சென்னையில் வசித்து இன்று மயிலாடுதுறையில் நிரந்தரமாகக் குடியேறிய நான் மயிலாடுதுறையில் தேர்தலில் நின்று வெற்றிபெற்றால் குற்றமா? காங்கிரஸ் கட்சியில் 20 ஆண்டுகள் கடுமையாக உழைத்து எவ்வித பின்புலமும் இல்லாமல் பணியாற்றி வருகிறேன். அப்படி அன்புமணி ராமதாஸாகிய நீங்க, மத்திய அமைச்சர் ஆவதற்கு முன்பு ஏழை வன்னியர் சமூக மக்களின் நலனுக்காக எங்காவது பேசியது உண்டா, போராடியது உண்டா, சிறை சென்றதுண்டா? வன்னிய மக்கள் நலனுக்காக பாடுபட்டு தனது சொத்தை இழந்து பல வழக்குகளை எதிர்கொண்டு சிறைசென்ற பல வன்னிய அறிவார்ந்த பெருமக்கள் பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்தும் மருத்துவர் ராமதாசின் மகன் என்ற ஒரு தகுதியைத் தவிர வேறு எந்த தகுதியும் இல்லாத நீங்கள் கொல்லைப்புறம் வழியாக மத்திய அமைச்சரானவர்தானே!
இந்தியாவில் 150 ஆண்டுகள் பெருமை வாய்ந்த பல்லாயிரக்கணக்கான வழக்கறிஞர் களைக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதா என்றால் அனைத்து வழக்கறி ஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும் நன்றாகத் தெரியும். இப்படி மக்களுக்காக களத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நிற்கும் என்னை யாரோ ஒருவர் எந்த ஊர் என்று தெரியவில்லை என்று, அன்புமணி ஆகிய நீங்கள் பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறீர் கள் என்றால் ஒரு கட்சியை வழிநடத்தும் தலை மைப் பண்பை தாங்கள் பெறவில்லை என்பதைத்தான் காட்டுகிறது''’என கடுமையாக பதிவு போட்டிருக்கிறார்