.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. ஐக்கியமானதை தி.மு.க. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி களும் கடுமையாக விமர் சிக்கின்றன. அ.தி.மு.க.வை பா.ம.க. தேர்வு செய்ததில் காங்கிர சின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி அப்-செட்டானார் என்கிற தகவல் பரவிவரும் நிலையில், தமிழக காங்கிரசின் செயல்தலைவர்களில் ஒருவரும் டாக்டர் அன்புமணியின் மைத்துனருமான டாக்டர் விஷ்ணுபிரசாத் ஒரு நிகழ்வில் வெளிப்படையாகவே பா.ம.க.வின் கூட்டணி நிலைப்பாட்டை விமர்சித்தார். அவரிடம் நக்கீரன் முன்வைத்த கேள்விகள்...

தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளிடத்திலும் கூட்டணி பேரத்தை நடத்திய பா.ம.க., அ.தி.மு.க.வை தேர்ந்தெடுத்ததில் காங்கிரஸுக்கு அதிருப்தி என்கிறார்களே?

vishnuprasadவிஷ்ணுபிரசாத்: "தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு பா.ம.க. வந்தால் நல்லது' என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சி இதற்கான எந்த முயற்சியும் எடுக்க வில்லை. பா.ம.க.விடம் தி.மு.க. பேசியதா என்பதும் எங்களுக்குத் தெரியாது. அதேசமயம், பா.ம.க.வின் இரண்டாம்நிலை தலைவர்கள் தொடங்கி அக்கட்சியின் தொண்டர்களிடம் ’தி.மு.க. கூட்டணியை டாக்டர் அய்யா தேர்வு செய்யவேண்டும்’ என்கிற விருப்பம் இருந்ததை நாங்கள் அறிவோம். அதற்கு எதிராக அ.தி.மு.க.வை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இதில் எங்களுக்கு எந்த அதிருப்தியும் கிடையாது.

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்திருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

Advertisment

விஷ்ணுபிரசாத்: "திராவிட கட்சிகளுடன் இனி எக்காலத்திலும் கூட்டணி இல்லை. அக்கட்சிகளுடன் கூட்டணி வைப்பவர்கள் மானம் கெட்டவர்கள்' என பெரியவர் டாக்டர் ராமதாஸும், அவரது மகன் அன்புமணியும் சொன்னார்கள். மேலும் பா.ஜ.க., அ.தி.மு.க. கட்சிகளை மிகக்கேவலமான தடித்த வார்த்தைகளில் அர்ச்சித்தார்கள். எடப்பாடியையும் அவரது அமைச்சரவை சகாக்களையும் மிக அருவருப்பான வார்த்தைகளில் தாக்கிய அன்புமணி, "டயர் நக்கிகள்' என கொச்சைப்படுத்தியிருக்கிறார். எடப்பாடி அரசின் ஊழல்களுக்கான பட்டியலை கவர்னரிடம் கொடுத்து ஆட்சியை கலைக்குமாறு வலியுறுத்தியவர் அன்புமணி. பெரியவர் ராமதாஸையும் வன்னியர் சங்க தலைவராக இருந்த காடுவெட்டி குருவையும் சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தியவர் ஜெயலலிதா. இவைகளை யெல்லாம் மறந்துவிட்டு இன்றைக்கு அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத் திருப்பதை அவர்களது பாணியிலேயே சொல்லவேண்டு மாயின்... வெட்கம் கெட்டவர்கள்.

அ.தி.மு.க. மீது டாக்டர் ராமதாஸுக்கு ஏற்பட்ட திடீர் பாசத்துக்கான காரணங்கள் என்னவாக இருக்க முடியும்?

விஷ்ணுபிரசாத்: தேர்தல் என்றாலே அரசியல் பேரம் என்பதாகிவிட்டது. அந்த கலாச்சாரத்தை நிலைநிறுத்துகிறது பா.ம.க. நோட்டுகளை வீசி ஓட்டுகளைப் பெறுவதற்கு திருமங்கலம் ஃபார்முலா என சொல்வதுண்டு. இப்போது, நோட்டுகளை வீசி கூட்டணிகள் உருவாவ தால் "பா.ம.க. ஃபார்முலா' என சொல்லத் தோன்றுகிறது. இந்த ஃபார்முலாதான் அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணியின் பின்னணியில் இருக்கிறது. கூட்டணி விவகாரத்தில் மெரிட் என்கிற தகுதியை ராமதாஸும் அன்புமணி யும் இழந்துவிட்டனர். அதனால் ஃபேமண்ட் கோட்டாவில் கூட்டணியை உறுதி செய் துள்ளனர். மேலும், சட்ட அங்கீகாரம் பெற்றுள்ள வன்னியர் பொதுச் சொத்து நல வாரி யத்தை முடக்கு வதும் பா.ம.க.வின் திட்டம். இது வும், பண பேரங்களும் மட்டுமே அ.தி.மு.க. பாசத்துக் கான காரணங்களாக இருக்கின்றன.

Advertisment

தமிழக மக்கள் நலன் சார்ந்த 10 கோரிக் கைகளை முன்னிறுத்தியே இந்தக் கூட்டணிக்கு சம்ம தித்ததாக டாக்டர் ராமதாஸ் கூறுவது ஆரோக்கியமானது தானே?

விஷ்ணுபிரசாத்: ராமதாஸ்தான் கோரிக்கை வைத்திருக்கிறார். அதனை எடப்பாடி ஏற்றுக்கொண்டதாக தெரிய வில்லை. கோரிக்கை என்பதெல்லாம் வெறும் கண் துடைப்பு. பொதுவாக, கொள்கை சார்ந்து கூட்டணிகள் அமைவதில்லைதான். ஆனாலும், குறைந்தபட்ச நேர்மையாவது கூட்டணி விசயத்தில் இருக்க வேண்டாமா? பத்து கோரிக்கைகளை சொன்ன பா.ம.க., பேரம் பேசிய 11-வது கோரிக்கையையும் வெளிப்படுத்தியிருந்தால் ஆரோக் கியமானதாக இருந்திருக்கும். நிழல் பட்ஜெட் போட்டவர்கள் கூட்டணிக்காக நிஜ பட்ஜெட் போட்டு சாதித்துள்ளனர்.

"அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. கூட்டணிதான் வலிமையானது' என்றும், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி பலகீனமானது' என்றும் எதிரொலிக்கும் விமர்சனங்கள் குறித்து?

விஷ்ணுபிரசாத்: எடப்பாடி அரசுக்கு எதிராக பல ஆயிரம் கோடி ஊழல் பட்டியலை வாசித்தது பா.ம.க. "நிர்வாகத் திறமையில்லாத அடிமை எண்ணம் கொண்ட பினாமி அரசு' என வர்ணித்தவர் அன்புமணி. எடப்பாடி மற்றும் அவரது அமைச்சர்களுக்கு எதிராக ரெய்டுகள், வழக்குகள் என நடத்தி சித்ரவதை செய்தது பா.ஜ.க. "தமிழகத்தில் ஊழல் கட்சிகளோடு கூட்டணி வைக்கமாட்டோம்' என சொன்னவர் அமித்ஷா. இப்படிச் சொன்னவர்கள் எல்லோரும் சேர்ந்தால் எப்படி வலிமையாக முடியும்? தவிர, வன்னியர் சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதியை மீறியதால் அச்சமூகத்தினரின் நம்பிக்கையையும் இழந்து நிற்கிறது பா.ம.க. அதனால், அ.தி.மு.க. தலைமையில் உருவான கூட்டணி பொருந்தா கூட்டணி. இதனை மக்கள் அங்கீகரிக்க மாட்டார்கள். தேர்தல் களத்தில் வலிமையானது தி.மு.க.-காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிதான். அதனை தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும்.

-சந்திப்பு: இரா.இளையசெல்வன்