"டாக்டர் அன்புமணி கட்சிக்கும், எனக்கும் துரோகம் செய்துவிட்டார்'' என சேலம் பொதுக்குழுவில் மருத்துவர் ராமதாஸ் கண்ணீர்மல்கக் கூறியது, தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment

பா.ம.க. (ராமதாஸ் தரப்பு) செயற்குழு, பொதுக்குழு கூட்டம், டிச. 29-ஆம் தேதி சேலத்தில் நடந்தது. மாநில இணை பொதுச்செயலாளர் அருள் எம்.எல்.ஏ., கவுரவத் தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் தலைமையில், நிர்வாகிகள் கூட்ட ஏற்பாடுகளை விரிவாகச் செய்திருந்தனர். 

Advertisment

செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர் அடையாள அட்டை இருந்தால்தான் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும் என கட்டுப்பாடு இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்குக் கூட்டம் வராததால், ஒருகட்டத்தில் கட்சித் தொண்டர்கள் அனைவரையும் கூட்டம் நடந்த அரங்கத்திற்குள் அனுமதித்தனர். 

வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் அரசியல் கட்சிகளுடன் பேசி வெற்றிக் கூட்டணி அமைக்கவும், வேட்பாளர்களை அங்கீகரிக்க படிவம் ஏ, படிவம் பி ஆகியவற்றில் கையெழுத்திடவும் மருத்துவர் ராமதாசுக்கு முழு அதிகாரம் வழங்குவது உள்பட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Advertisment

பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் பொறுப்பிலிருந்து சவுமியா அன்புமணி விடுவிக்கப்பட்டு, அதன் தலைவராக பா.ம.க. செயல் தலைவர் ஸ்ரீகாந்தி நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

"எதைப் பேசுவது, எதை விடுவது என்று எனக்குள் ஒரே குழப்பம். எனக்குள் இருக்கும் ஆதங்கத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒருமணி நேரம் தேவைப்படும்'' என்று ராமதாஸ் கொஞ்சம் இறுக்கமாகவே பேசத் தொடங்கினார்.  

ramdoss1

"தேர்தலில் யாருடன் கூட்டணி? என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறீர்கள். இப்போது அதற்கான நேரம் கனியவில்லை. உரிய நேரத்தில் நல்ல கூட்டணி அமைப்பேன். நான் அமைக்கும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும். வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்றுத்தரப்படும். ஒரு கும்பல் என்னையும், கவுரவத் தலைவரையும் மிகக்கேவலமாகத் தூற்றுகிறார்கள். ஒருநாள் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தேன். என் கனவிலே என் தாயார் வந்தார். "ஏன்பா வருத்தப்படுகிறாய்... என்றார்...' எனக் கூறிய ராமதாஸ், மேற்கொண்டு பேச முடியாமல் கண்ணீர்விட்டு அழுதார். அதைப் பார்த்து அருகில் அமர்ந்திருந்த அருள் எம்.எல்.ஏ.வும் அழுதார். ஜி.கே.மணி, மகள் ஸ்ரீகாந்தி ஆகியோர் அவரின் கைகளைப் பற்றி தேற்றினர். தொண்டர்கள், "அய்யா... அய்யா... நாங்கள் இருக்கிறோம் அழாதீங்க அய்யா'’ என்று ஆசுவாசப்படுத்தினர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

தொடர்ந்து பேசிய ராமதாஸ்... "ஒரு பையன் என்னைக் கொல்ல வேண்டும் என்று ஒரு பதிவு போடுகிறான். உடனடியாக அந்தப் பையனை அழைத்து அவனுக்கு பொறுப்பைக் கொடுக்கிறான் என்றேன். அதற்கு என் தாயார், நான் என்னப்பா பண்ண முடியும்? நீ அப்படி வளர்த்திருக்கிறாய் என்றார். ஆமாம், நான் சரியாக வளர்க்கவில்லை. அவன் என் மார்பிலும் முதுகிலும் ஈட்டியால் குத்துகிறான். ஒரு தகப்பன், தன் பிள்ளைக்கு என்ன செய்வானோ அதைவிட அதிகமாகச் செய்துள்ளேன். ஒரு குறையும் வைக்கவில்லை. ஆனாலும் அவன், நான் எப்பொழுது.... எப்பொழுது... எப்பொழுது... (சில நொடிகள் பேச முடியாமல் நா தழுதழுத்தது) ஒரு ஆண்டிற்கு முன்னால், சென்னையில் ஒரு குடும்பத்தில் சொத்துத் தகராறில் தகப்பனை மகனே, 20, 30 துண்டுகளாக வெட்டி சாக்கில் கட்டி ஆற்றில் போட்டுவிட்ட சம்பவம் நடந்தது. அப்படி செய்திருந்தாலும் கூட நான் போய்ச் சேர்ந் திருப்பேன். ஆனால் செல் லாத பசங்களை வைத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் என்னை அவமானப் படுத்துகிறான். இப்போது என் னை நேரடியாகத் தாக்க ஆரம் பித்துவிட்டான். 

ramdoss2

இப்போது நடக்கின்ற செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தைப் பார்க்கும்போது 95 சதவீத பாட்டாளி மக்கள் என் பின்னாலேதான் நிற்கிறார்கள் என்பது தெரிகிறது. அன்புமணி பின்னால் 5 சதவீதம் பேர் கூட இல்லை. வரும் தேர்தல், அவருக்கு சரியான பதிலைக் கொடுக்கும். இந்த தேர்தலிலே நல்ல கூட்டணி அமைப்பேன். நல்ல கூட்டணி வெற்றியைத் தரும். இந்த மக்கள் என்னை எப்போதும் கைவிட்டதில்லை. என்னைப் போல் ஒரு தகப்பன் உலகத்திலே யாராவது இருக்கானா? ஆனால் நீ... இதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை. (குரல் கம்மியது) அவருடைய செயல்பாடு அப்படி இருக்கிறது. 

எந்தப் பதவிக்கும் ஆசைப்படாதவன் நான். நான் ஆசைப்பட்டிருந்தால் இந்தியாவின் எந்தப் பதவியையும் பெற்றிருப்பேன். அன்று செய்த சத்தியத்தை இன்றுவரை காப்பாற்றிவருகிறேன். அந்த சத்தியத்தால்தான் உன்னை 36 வயதிலேயே மத்திய அமைச்சராக்கினேன். ராஜ்யசபா எம்.பி.யாக்கி அழகு பார்த்தேன். ஒரு தகப்பனாக என்னென்ன செய்யணுமோ அதை எல்லாம் செய்தேன். ஆனால் கட்சியின் அங்கீகாரம், மாம்பழ சின்னத்தை முடக்கி அன்புமணி துரோகம் செய்துவிட்டான். 

வரும் தேர்தலில், மிகப்பெரிய வெற்றியைத் தருவதற்கு நீங்கள் எல்லோரும் அயராது பாடுபட வேண்டும். மாவட்டச் செயலாளர்களின் கருத்து களின் அடிப்படையில் மிகப்பெரிய கூட்டணி அமைப்பேன். அந்தக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைத் தரும்'' என்றார் மருத்துவர் ராமதாஸ். 

ramdoss3

பின்பு பேசவந்த ஸ்ரீகாந்தி, அன்புமணியை விளாசித் தள்ளினார். "நெஞ்சில் அரவணைத்து வளர்த்த மகனே முதுகில் குத்தியதை நினைத்து வருத்தத்தில் இருக்கிறார் அய்யா. கோட் சூட் போட்டு சுற்றும் அன்புமணிக்கு அதைக் கொடுத் தது யார்? (இப்படி அவர் கேட்ட போது அரங்கில் இருந்த மொத்த கூட்டமும் அரங்கம் அதிரும் அள விற்கு, "டாக்டர் அய்யா... டாக்டர் அய்யா...' என்று முழங்கினர்). 

தம்பி அன்புமணி  செய்தது பச்சைத் துரோகம். மீண்டும் வாருங் கள் மக்களிடம் செல்வோம் என்று அய்யா பேசியதற்கு அவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று சொல்கிறார்கள். ஆம். அய்யாவுக்கு மக்கள்நல பைத்தியம் பிடித்துள்ளது. பா.ம.க.வைப் பிடித்திருந்த பீடை ஓடிவிட்டது. துரோகிகள், சுயநல வாதிகள் சென்றுவிட்டனர். தற் போது அய்யாவுடன் உண்மையான விசுவாசிகள் மட்டுமே இருக்கிறார்கள். இனிமேல்தான் அய்யாவின் ஆட்டத்தைப் பார்க்கப்போகிறீர்கள். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும். அந்த ஆட்சியில் பங்கு வேண்டும். டாக்டர் அய்யாவுக்கு யாருடன் கூட்டணி, யாருக்கு சீட்டு என்பது தெரியும். இனி குறுக்கே பேசுவதற்கு யாரும் இல்லை. குறைந்தபட்சம் 25 எம்.எல்.ஏ.க்களுடன் டாக்டர் அய்யா சட்டமன்றத்திற்குள் நுழைவார். மாம்பழச் சின்னம் நம் கைக்கு வரும். தம்பி அன்புமணிக்கு அதிகாரம் வேண்டுமென்றால் தனியாக கட்சி ஆரம்பித்துப் போகட்டும். இது அய்யாவின் கோட்டை. 

எங்களைப் பார்த்து தி.மு.க.வின் கைக் கூலி என்கிறார் தம்பி அன்புமணி. உண்மை யில் அன்புமணியும், அவருடன் இருப்பவர் களும்தான் ஆர்.எஸ்.எஸ்.ஸின் அடிமைகள்'' என்று தெறிக்கவிட்டார் ஸ்ரீகாந்தி. அவர் பேசி முடித்ததும் அருள் எம்.எல்.ஏ. கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். 

ramdoss4

கவுரவத் தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், "ரத்தம் சிந்தி உருவாக்கப்பட்ட இந்த இயக்கம் சூழ்ச்சியால் பறிக்கப் படுவதாக டாக்டர் ராமதாஸ் வேதனைப் பட்டார். பதவி சுகத் தோடு இருப்பவர்கள் அன்புமணியுடன் சென்று விட்டனர். பா.ம.க.வை அன்பு மணியால் ஒருபோதும் அபகரிக்கமுடியாது. அவருடைய தூண்டுதலின் பேரில் சிலர் அவதூறாகப் பேசு கின்றனர். அன்புமணி செய்தது துரோ கம். அரசியலை ஓரம்கட்டிவிட்டு வேறு வேலை பார்க்கட்டும்'' என்றார். 

அருள் எம்.எல்.ஏ. கூறுகையில், "டாக்டர் அய்யா, அரை நூற்றாண்டு காலம் தன் வாழ்வை இந்த மக்க ளுக்காக அர்ப்பணித்து போராளியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரை இந்த மூன்று ஆண்டுகளில் படுத்தியபாடு நியாயமா? தர்மமா? டாக்டர் அய்யாவுக்கு மட்டுமின்றி ஒவ்வொரு அப்பா, அம்மாவுக் கும் வயிறு எரிகிறது'' என்றார்.    

கூட்டணி குறித்த அறிவிப்பு வரும் என்ற எதிர்பார்ப்போடு வந்திருந்த நிர்வாகிகள், அது தொடர்பான அறிவிப்பு இல்லாததால் சற்று ஏமாற்றமடைந்தனர். அதேநேரம், அன்புமணி தரப்பு பா.ம.க.வினர் இந்தக் கூட்டத்தால் கடும் அதிருப்தி யடைந்துள்ளனர்.