முன்னாள் பா.ம.க. எம்.எல்.ஏ. ரவிராஜ், பா.ம.க.வின் சீனியர்களில் முக்கியமானவர். வன்னியர் சங்கமாக இருந்த காலத்திலிருந்தே இணைந்து செயல்பட்டவர். அன்புமணி யோடான முரண்பாட்டால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பா.ம.க.வில் தற்போது நிலவும் குழப்பங்கள் குறித்து அவரிடம் கேட்டபோது, "பா.ம.க.விலிருந்து நானாக வெளியேறவில்லை, அன்புமணியால் தான் வெளியேற்றப்பட்டேன். 1980களில், டாக்டர் ராமதாஸ் அய்யாவின் 'ஊருக்கு 25 இளைஞர்களை தாருங்கள், தமிழக அரசியலை மாற்றிக் காட்டுகிறேன். வன்னியர் களுக்கான இட ஒதுக்கீட்டை பெற்றுத் தருகிறேன்' என்ற கொள்கையால் ஈர்க்கப்பட்டு, வன்னியர் சங்கத்திலும், பா.ம.க.விலும் கடந்த 42 ஆண்டுகளாக உழைத்திருக்கிறேன். தற்போது அய்யாவின் பேச்சை மதிக்காமல் பா.ஜ.க. வுடன் கூட்டணி வைத்ததால் விமர்சனம் செய்கிறேன்.
டாக்டர் ராமதாஸ், வயது மூப்பின் காரண மாக சில பொறுப்பு களை அன்புமணி யிடம் ஒப்படைத்தார். அதிலிருந்து அன்பு மணி ஓர் சர்வாதிகாரி போல செயல்படத் தொடங்கினார். கட்சி யின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட சீனியர்கள் ஒதுக்கப் பட்டனர். அதில் நானும் ஒருவன். இவரது செயல்பாடு அய்யாவுக்கு பிடிக்கவில்லை. அதேபோல கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்த லில் அன்புமணியால் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததும் ராமதாஸுக்கு பிடிக்கவில்லை.
அதனால் கிருஷ்ணகிரிக்கு தேர்தல் பிரச்சாரத் துக்கு வந்த மோடியை மருத்துவர் ராமதாஸ் சந்திக்க மறுக்க, அந்த கோபத்தில் அன்புமணிக்கு அமைச்சர் பதவியை மோடி வழங்கவில்லை. தற்போது தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க ராமதாஸ் விரும்பினார். தி.மு.க. க்ரீன் சிக்னல் தராததால் அ.தி.மு.க.வுடன் வலுவான கூட்டணியை அமைக்க ராமதாஸும், சீனியர்களும் விரும்பினார்கள். ஆனால் சுயநலத்துக்காக பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்த அன்புமணியை அடிமட்டத் தொண்டர்களுக்குக்கூட பிடிக்கவில்லை. வன்னியர்களின் வாக்குவங்கியையே அடகுவைத்துவிட்டார்.
எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில், ஐயா தலைமையில் 7 நாட்கள் தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் எம்.ஜி.ஆரே. அழைத்துப்பேசியது வரலாறு. இன்றைய முதல்வரை மூன்றுமுறை சந்தித்த அன்புமணி, என்ன கிழித்து விட்டார்? அவருக்கு ராஜ்ய சபா எம்.பி. பதவி போதை மட்டுமே! இதே போக்கு பா.ம.க.வில் தொடர்ந்தால் தேய்பிறை தான். பொதுக்குழுவே கூட்டணி முடிவை ஐயாவின் விருப்பத்துக்கு விட்டபின்னும், அவரை மீறிச் செயல்படுவதை யாரும் விரும்பவில்லை. இதன் காரணமாகத்தான் அன்புமணி அழைத்திருந்த தேர்தல் ஆலோசனைக் கூட்டத்துக்கு ராமதாஸ் வராமல் கூட்டமும் தள்ளிவைக்கப்பட்டது. பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்காவிட் டால் அன்புமணி மீதுள்ள வழக்கின் மீது ஒன்றிய அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்து விடுமோ என்ற பயத்துடன் அன்புமணி செயல்பட்டு வருகிறார். மொத்தத்தில் வன்னியர்களின் வாக்குகளை அடகு வைக்கும் வேலையே அரங்கேறி வருகிறது'' என்று குமுறினார் ரவிராஜ்.