நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டிருக்கும் முதலமைச்சர்களுக்கு எதிரான புதிய சட்ட மசோதா, ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் கண்டனங்களுக்கு ஆளாகியிருக்கிறது. மசோதாவை கிழித்தெறிந்து ரகளையில் ஈடுபட்டனர். சர்வாதிகாரத்தின் உச்சமாக இருக்கிறது என்கிற எதிர்க்கட்சிகளின் ஆவேசக் குரல்கள் நாடு முழுவதும் எதிரொலித்தபடி இருக்கிறது. 

அமித்சாவின் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு! 

Advertisment

பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகி யோர் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களின் பதவிக் காலத்தை தானாகவே இழக்க வகைசெய்யும் அரசிய லமைப்பின் 130-வது சட்டத்திருத்த மசோதா, யூனியன் பிரதேசங்களின் நிர்வாக சீர்திருத்த மசோதா, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களை பார்லிமெண்டில் தாக்கல் செய்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா. இதனை அறிமுக நிலையிலேயே கடுமையாக எதிர்த்தனர் எதிர்க்கட்சிகள். 

இதனால் கடும் ரகளைகள், கூச்சல்கள், குழப்பங்கள் என பார்லிமெண்டே பரபரப்பாக இருந்தது. இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப் படுவதற்கு முன்பு பல்வேறு பிரச்சனைகளை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட தால், 3 முறை சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப் பட்டன. அத்தகைய கடும் அமளிகளுக்கு மத்தியில் அரசியலமைப்பின் 130-வது சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் அமித்சா. 

புதிய சட்டத் திருத்த மசோதா என்ன சொல்கிறது? 

ஐந்தாண்டுகள் தண்டனை விதிக்கக்கூடிய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்படும் பிரதமர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் 30 நாட்கள் தொடர்ந்து சிறையில் இருக்க நேரிட்டால், 31-வது நாள் அவர்களின் பதவிகள் பறிபோகும் என மசோதாவில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது, அரசமைப்பு சட்டம் 130-வது பிரிவின் உறுப்பு எண் 75-ஐ திருத்துகிறது இந்த புதிய மசோதா. அப்படி திருத்துவதன் மூலம், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட முதலமைச்சர் 30 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் சிறைக் காவலில் இருந்தாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ, அவருக்குத் தண்டனை விதிக்கப்படாவிட்டாலும் கூட, அவரைப் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரத்தை மாநில ஆளுநருக்கு வழங்குகிறது இந்த மசோதா. மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை நீக்கும் அதிகாரத்தை இந்த மசோதா மூலம் ஆளுநருக்கு வழங்குவது, நாடாளுமன்ற ஜனநாயகத்தை முழுமையாக சிதைத்துவிடுகிற அபாயம் சூழ்ந்துள்ளது. 

Advertisment

sattam1

மசோதாக்கள் கிழிப்பு!
எதிர்க்கட்சிகளின் ருத்ர தாண்டவம்! 

இந்த சட்ட மசோதா அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது; விரோதமானது; சர்வாதிகாரத்தனமானது என்கிற ஆவேசங்கள் எதிர்க்கட்சிகளிடமிருந்து உச்சஸ்தாயில் எழுந்தன. இப்படி ஒரு மசோதாவை அவசரம் அவசரமாக கொண்டு வரவேண்டிய அவசியம் என்ன? எதிர்க் கட்சிகளை ஒடுக்குவதற்காக கொண்டுவரப்படு கிறதா? என்றெல்லாம் குரல் எழுப்பி மசோதாவை கிழித்தெறிந்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ருத்ரதாண்டவம் ஆடினர். இதனால் நாடாளுமன் றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நீங்கள் நேர்மையானவரா?
அமித்ஷா மீது காங்கிரஸ் ஆவேசம்! 

மசோதாவை எதிர்த்துப் பேசிய காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.சி.வேணுகோபால் எம்.பி.,’"நேர்மையுடனும் தூய்மை யுடனும் அரசியல்வாதிகள் இருக்க வேண்டும்; மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் இனிக்க இனிக்க அறிவுரை சொல்கிறீர்கள். அதனை முதலில் நீங்கள் (பா.ஜ.க.) உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் கடைப்பிடித்தீர்களா? குஜராத்தில் உள்துறை அமைச்சராக நீங்கள் (அமித்ஷா) இருந்தீர்கள். அப்போது கடும் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டீர்கள். 

Advertisment

அப்போது நீங்கள் நேர்மையை கடைப்பிடித்தீர்களா? உங்கள் நேர்மை எங்கே போனது? குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறை சென்ற உங்களுக்கு இந்த மசோதாவை தாக்கல் செய்ய தார்மீக ரீதியாக உரிமை இல்லை''’என்று அமித்ஷாவை நோக்கி கொந்தளித்தார். இதே ரீதியில் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் பலரும் ஆவேசமாக குரல் எழுப்பினர்.     

sattam2

காங்கிரஸுக்கு அமித்ஷா பதிலடி! 

கே.சி.வேணுகோபாலின் குற்றச் சாட்டுகளில் கண் சிவந்த அமைச்சர் அமித்ஷா, "அந்த வழக்கில் என் மீது புனையப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை; நேர்மை யற்றவை. ஆனாலும், பொறுமையாகவும் கண்ணியமாகவும் பொறுப்புடனும் ஒத்துழைத்தேன். கைது செய்யப்பட்டு என்னை சிறையில் அடைத்தனர். சிறைக்கு செல்லும் முன்பாக எனது அமைச்சர் பதவியை தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்தேன். இந்த வழக்கின் விசாரணை நீண்டகாலம் நடந்தது. இறுதிக்கட்ட விசாரணை முடிந்து நீதிமன்றம் என்னை விடுவிக்கும்வரை எந்த ஒரு பதவியிலும் நான் இருக்கவில்லை; ஏற்கவும் இல்லை. எனது நேர்மையைப் பற்றி நீங்கள் (காங்கிரஸ்)  பேசுகிறீர்கள்''’என்று காட்டமாக ஆவேசப்பட்டார் அமித்ஷா. 

ஆனாலும் அவரது விளக்கத்தை ஏற்கவில்லை என்கிற தொனியில் எதிர்க்கட்சிகளின் முழக்கங்கள் இருந்தன. மசோதாக்களின் நகல்களை கசக்கியும் சுருட்டியும் அமித்ஷாவை நோக்கி வீசி, தங்களின் எதிர்ப்பைக் காட்டினர். இதனால் ஏகத்துக்கும் ரகளை நடந்தது. இதனையடுத்து சபையை ஒத்திவைத்து மீண்டும் மதியம் 3 மணிக்கு சபையை தொடங்கினார் சபாநாயகர் ஓம்பிர்லா. 

அப்போதும் ரகளை அடங் காத நிலையில், எதிர்க்கட்சிகளின்  கூச்சல் அமளிகளுக்கு இடையே 3 சட்ட மசோதாக்களையும் பார்லி மெண்டின் கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைக்கும் தீர்மானத்தை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றினார் அமித்ஷா. 

அரசியலமைப்பின் வலிமையை பாதுக்காக்கவே புதிய சட்டம்! 

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளை சமாளிக்கும் வகையில், மசோதா குறித்து பேசும் மத்திய உள்துறை அமைச்சகம், "கடுமையான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப் படும் பிரதமர், முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய தற்போதைய அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த விதியும் இருக்கவில்லை. மக்களின் நம்பிக்கையைப் பெற்று ஆட்சிப்பதவியில் அமரும் மக்கள் பிரதிநிதிகளின் நடத்தையும் செயல்பாடு களும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். ஆனால், இன்றைய ஜனநாயகத்தில் மக்கள் பிரதிநிதிகளின் நடத்தைகள் அப்படியா இருக்கிறது? கடும் குற்ற வழக்குகளில் ஒரு அமைச்சர் கைது செய்யப்படுகிறபோது மக்களின் நம்பிக்கையை அவர் இழக்க நேரிடும். இதெல்லாம் நடக்காமல் இருக்கத்தான் இந்த புதிய சட்டத்திருத்தம். அரசியலமைப்பின் வலிமையைப் பாதுகாக்கவும், மக்கள் பிரதிநிதிகள் மீதான நம்பிக்கையை நிலைநிறுத்தவும் தான் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது'’என்று விவரிக்கிறது உள்துறை அமைச்சகம். 

கருப்பு மசோதா! சர்வாதிகாரத்தின் உச்சம்! - ஸ்டாலின் காட்டம்! 

இதற்கிடையே, அமித்ஷாவின் இந்த புதிய சட்ட மசோதாவை கருப்பு மசோதா என மிக அழுத்தமாக விமர்சித்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், "அரசியலமைப்பின் 130-வது சட்டத் திருத்த மசோதா ஒரு சீர்திருத்தம் அல்ல ; இது ஒரு கருப்பு மசோதா. இந்த நாள் ஒரு கருப்பு நாள்! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்கள் உள்ளிட்டவர்களின் பதவி நீக்கம், விசாரணையே தேவையில்லை என்பதெல்லாம் சர்வாதிகாரப் போக்கு. 

வளர்ந்துவரும் சர்வாதிகாரி கள் தங்களின் போக்கினை இப்படித்தான் துவக்குவார்கள். அந்த சர்வாதிகாரத்தில் இந்தியா வையும் மூழ்கடிக்க முயற்சிக் கின்றனர். வாக்குகள் திருட்டு, உரிமைக் குரல்களை நசுக்கு வது, மாநில அரசுகளை ஒடுக்குவது  போன்றவை எல்லாம் சர்வாதிகாரத்தின் தொடக்கம்தான். வாக்குத் திருட்டு விவகாரத்தைத் திசை திருப்பவே இப்படி ஒரு கருப்பு மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்திருக்கிறது. 

பிரதமருக்குக் கீழான சர்வாதிகார நாடாக இந்தியாவை மாற்றவே, அரசியலமைப்பு சட்டத்தையும், அதன் அடித்தளத்தையும்  களங்கப்படுத்தவே மசோதாவை கொண்டு வருகின்றனர். பா.ஜ.க.வின் சதித்திட்டத்தை இந்த மசோதா அம்பலப்படுத்தியிருக்கிறது. தங்களின் அரசியல் எதிரிகள் மீது பொய் வழக்குகளைப் போட்டு அவர்களை சிறையிலடைத்து பதவியை பறிப்பதும், நீதிமன்ற விசாரணையே இல்லாமல் இருக்கச் செய்வதும் ஜனநாயகத்துக்கு விரோத மானது; எதிரானது. இப்படி சர்வாதிகாரத்துடன் கொண்டுவரப்பட்ட, ஜனநாயகத்தின் ஆணி வேரையே அசைத்துப் பார்க்கிற இந்த மசோதாவை வன்மையாகக் கண்டிக்கிறேன்''” என்கிறார் காட்டமாக.

மசோதாவை எதிர்த்து பாரத் பந்த்! ஸ்டாலினை வலியுறுத்தும் திருமா! 

தி.மு.க. கூட்டணி கட்சிகளும் மசோதாவை கடுமையாக எதிர்த்து வருகின்றன. இது குறித்துப்பேசும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், "தனக்குப் பிடிக்காத அரசுகளை 356-வது பிரிவை பயன்படுத்தி கலைத்து வந்தது மத்திய அரசு. உச்சநீதிமன்றத்தின் கடுமையான தீர்ப்புக்குப் பிறகு அந்த பிரிவை பயன்படுத்துவது கட்டுப்படுத்தப்பட்டது. இப்போது திருத்தப்பட்ட புதிய மசோதா, அதைவிட மோசம். 

காவல்துறையிலுள்ள ஒரு உதவி ஆய்வாளர் நினைத்தாலே முதலமைச்சரையே பதவியிலிருந்து தூக்கிவிட இந்த சட்டம் வழிவகுக்கிறது. அந்த வகையில், அமலாக்கத் துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் நினைத்தாலே முதல்வரை மாற்றலாம் என்கிற அளவுக்கு அதிகாரத்தைத் தருவது பேராபத்து. மோடி அரசு அறிமுகப்படுத்தியுள்ள இந்த மசோதாக்கள், அரசியலமைப்புச் சட்டத்தை அழித்தொழிக்கும் முயற்சி. அதனால், இந்த மசோதாக்களை முறியடிக்க அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து அறப் போராட்டங்களையும், மற்ற மாநிலங்களும் வெகுண்டெழும் வகையில் முழு அடைப்பு (பந்த்) போராட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் முன்னெடுக்க வேண்டும்''’என்று வலியுறுத்தியுள்ளார்.