கரூர் சம்பவத்திற்குப் பிறகு முதன் முறையாக புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறார் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய். தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க.வை தொடர்ந்து கடுமையாகத் தாக்கிவரும் விஜய், புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் -பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியை வறுத்தெடுப்பார் என ஏக எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தனர்.
ஆனால், சப்த நாடியும் ஒடுங்கி அமைதியாக, பா.ஜ.க. ஆட்சி மீது பெரிய அளவில் விமர்சனத்தை வைக்காமல் திரும்பிவிட்டார் விஜய். இதற்கு காரணம், டெல்லியிலிருந்து கொடுக்கப் பட்ட எச்சரிக்கைதான் என்கிறார்கள் மத்திய உளவுத்துறையினர்.
தி.மு.க.வை மட்டுமே தாக்குவது ஏன்? என்கிற விமர்சனங்கள் பொது வெளியில் அதிகரித்து வருவதை விஜய்யின் கவனத்துக்கு வியூக வகுப்பாளர்கள் கொண்டு சென்றபோது, "தி.மு.க. தான் ஆளும் கட்சி; அதனை விமர்சிக்காமல் எதிர்க்கட்சி யையா விமர்சிக்க முடியும்? மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் ஆளும் கட்சிதானே! அதனால் அதனைத் தான் விமர்சிக்க முடியும். தி.மு.க. மீது எத்தகைய விமர்சனங்கள் இருக்கிறதோ, அதே அளவுக்கான விமர்சனம் பா.ஜ.க. மீதும் இருக்கிறது. தி.மு.க. வேறு; பா.ஜ.க. வேறு இல்லை என்பது தான் எனது நிலைப் பாடு'' என்று ஆவேசப்பட்டார் விஜய்.
ஆளும் கட்சியைத்தான் விமர்சிக்க முடியும். தி.மு.க.வும் பா.ஜ.க.வும் தனது அரசியலில் வேறு வேறு இல்லை என்று விஜய் சொல்லிவருவதால், என்.ஆர்.காங்கிரசுடன் இணைந்து புதுச்சேரியில் கூட்டணி ஆட்சியை நடத்தும் பா.ஜ.க.வை கடுமையாகத் தாக்குவார் என எதிர்பார்த்த மக்களுக்கு அல்வா கொடுத்துவிட்டார் விஜய் என்பதுதான் அவரது புதுச்சேரி விசிட் குறித்து அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.
புதுச்சேரியில் பேசிய விஜய், "இங்கே காலம் காலமாக இருக்கும் மாநில அந்தஸ்து விவகாரம், தொழில் வளர்ச்சி இல்லாதது, ஒன்றிய பா.ஜ.க. அரசு நிதி ஒதுக்காதது என பட்டும் படாமல் பேசினாரே தவிர, தமிழகத்தில் தி.மு.க.வை அட்டாக் பண்ணுகிற மாதிரியான ஆவேசப் பேச்சு புதுச்சேரியில் இல்லை. மிகவும் அடக்கி வாசித்தார்.
இதற்கிடையே, தம்மிடம் எழுதிக் கொடுக்கப் பட்ட ஸ்க்ரிப்டில் இருந்ததை கடைசி நேரத்தில் வாசிக்காமல் தவிர்த்துள்ளார் விஜய். குறிப்பாக, பா.ஜ.க. மற்றும் மோடிக்கு எதிராக எழுதிக் கொடுக் கப்பட்டதை வாசிக்காமல் விஜய் கடந்துபோனார் என்கிற சீக்ரெட் தகவலும் நமக்கு கிடைத்துள்ளது.
இந்த ரகசிய தகவல்கள் மத்திய உளவுத்துறை யில் உலாவிவருவதை அறிந்து அத்துறை வட்டாரங் களில் விசாரித்தபோது, "ஆளும் கட்சியை விமர்சிப் பதும் தாக்கிப் பேசுவதும்தான் விஜய்யின் கொள்கை என்பதால், அதற்கேற்ப புதுச்சேரியில் பேசவேண்டிய விபரங்களை அவருக்கு எழுதிக் கொடுத்தனர். அதில், என்.ஆர். காங்கிரசின் தலைவரும், புதுவை முதல்வருமான ரெங்கசாமி, விஜய்க்கு நண்பர் என்பதாலும் அவருடன் கூட்டணி வைக்க விஜய் முயற்சித்து வருவதாலும் ரெங்கசாமிக்கு எதிராக எதுவும் எழுதிக் கொடுக்கப்படவில்லை. அதேசமயம், பா.ஜ.க.வுக்கு எதிராக பல விசயங்கள் இருந்தன. குறிப்பாக, ரெங்கசாமியை செயல்படவிடாமல் மத்திய பா.ஜ.க. அரசு எந்த வகையிலெல்லாம் முட்டுக் கட்டை போடுகிறது? ரெங்கசாமியை எப்படி பா.ஜ.க. அடக்கி வைக்கிறது? என்பது உள்ளிட்ட பல்வேறு அரசியல் விவகாரங்களை எழுதித் தந்துள்ளனர். அதையெல்லாம் கட் பண்ணிட்டார் விஜய். அதேபோல, ஒன்றிய பா.ஜ.க. அரசுன்னு சொல்ல முடியுமா? ஒன் றிய பா.ஜ.க. அரசின் ஊழல்களைச் சொல்ல முடியுமா? ஒன்றிய பா.ஜ.க. அரசின் பிரதமர் மோடிஜி எனச் சொல்ல முடியுமா? என்றெல்லாம் நம்மைப் பார்த்துக் கேட்கிறாங்க. சொல்லிட்டா போச்சு. ஒன்றிய பா.ஜ.க. அரசே, ஒன்றிய பா.ஜ.க. அரசே ஒன்றிய பா.ஜ.க. அரசின் பிரதமர் நரேந்திர மோடிஜி என இப்போது சொல்கிறோம். அவர்களை விமர்சிப்பதில் எங்களுக்கு எந்த பயமும் கிடையாது என்று விஜய்க்கு எழுதிக் கொடுக்கப்பட்ட ஸ்க்ரிப்டில் இருந்தது.
ஆனால், பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், இதை அப்படியே கட் பண்ணிட்டார். பேசவே இல்லை. ஓரிரு இடத்தில் மட்டும் ஒன்றிய அரசு எனச் சொன்னாரே தவிர, ஒன்றிய பா.ஜ.க. அரசு என்றோ, நீங்கள்தானே புதுச்சேரி கூட்டணி ஆட்சியில் இருக்கிறீர்கள் என்றோ, நரேந்திர மோடி என்றோ சொல்வதை தவிர்த்துள்ளார் விஜய். பா.ஜ.க. என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவே இல்லை. ஸ்க்ரிப்டில் இருந்தும் அதனை வாசிக்காமல் கடந்துபோனார் விஜய். பா.ஜ.க.வைக் கண்டு அந்தளவுக்கு பயம். டெல்லியிருந்து கொடுக்கப்பட்ட எச்சரிக்கைதான் இதன் பின்னணியில் இருக்கிறது'' ’என்று சொல்கிறது உளவு வட்டாரங்கள்.
மேலும் இதுகுறித்து விசாரித்தபோது, "புதுச் சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்கப்படாததால் இப்போதும் புதுச்சேரியின் நிதி, உள்துறை (காவல்), சட்டம் ஒழுங்கு பாதுகாத்தல் உள்ளிட்ட முக்கிய அதிகாரங்கள் எல்லாம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. கரூர் விவகாரத்தில் சி.பி.ஐ. என்கொயரி நடப்பதால் புதுச்சேரியில் விஜய்யின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதிதரத் தேவையில்லை என மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதனுக்கு உத்தரவு வந்திருக்கிறது. இது ரெங்கசாமி மூலமாக விஜய்க்கு சொல்லப் பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த விஜய், கெஞ்சிக் கூத்தாடியிருக்கிறார்.
இதனையடுத்து, பா.ஜ.க.வையோ, பிரதமரை யோ, உள்துறை அமைச்சரையோ பற்றி பேசக் கூடாது, பேசினால் வேறுமாதிரி ஆக்ஷன் இருக்கும் என எச்சரித்தனர். அதில் பயந்துபோன விஜய், பேச மாட்டேன் என ஒப்புதல் கொடுத்த பிறகே, அவரது பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அதனால்தான், பா.ஜ.க. பெயரைக்கூட தனது பேச்சில் சொல்லப் பயப்பட்டார் விஜய். பா.ஜ.க. பற்றியும் மோடி பற்றியும் ஸ்க்ரிப்டில் இருந்ததை பேசாமல் தவிர்த்துவிட்டு, வழக்கம் போல தி.மு.க.வை விமர்சித்துவிட்டுப் போனார். டெல்லியின் எச்சரிக் கையில் விஜய்க்கு சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது. இந்த எச்சரிக்கை தேர்தல் முடியும்வரை தொடரும்'' என்கிறார்கள் உளவுத்துறையினர்.
அட்டை படம்: AI தொழில்நுட்பம்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/12/amitsha-vijay-2025-12-12-10-42-40.jpg)