புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சி எனும் பெயரில் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ்சார்லஸ் மார்டின், கட்சி ஆரம்பித்த 20 நாட்களிலேயே கட்சியை நடத்த முடியாமல் திண்டாடிக் கொண்டிருக் கிறார். இந்த நிலையில், மத்திய அமைச்சர் அமித்சாவை சந்தித்துள்ளார் லாட்டரி அதிபர் மார்ட்டின்.
தனது பெயரின் முதல் எழுத்துக்களை வைத்து ஜே.சி.எம். எனும் பெயரில் மக்கள் மன்றத்தை நடத்தி வருபவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். மக்களைச் சுரண்டி லாட்டரி பிசினஸில் கொழுத்த பணத்தை வைத்து இந்த மக்கள் மன்றத்தை நடத்திவந்த சார்லஸ், தமிழகத்தில் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததைப் பார்த்து, புதுச்சேரியில் நானும் கட்சி ஆரம்பிப்பேன் என சொல்லி வந்தார்.
அவரை சுற்றியிருக்கும் கூட்டத்திடம், இன்றைக்கு நான் ஜே.சி.எம்., நாளைக்கு பாண்டிச் சேரி சி.எம். என்று சொல்லி புளகாங்கிதம் அடைந்துவந்த சார்லஸ், கடந்த 14-ந் தேதி லட்சிய ஜனநாயக கட்சி எனும் பெயரில் அரசியல் கட்சியைத் துவக்கினார். ஆனால், தனது அரசியல் கடையை நடத்த முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து விசாரித்தபோது ஏகத்துக்கும் சுவாரஸ்ய சம்பவங் கள் புதுச்சேரி அரசியலில் கொட்டிக் கிடக்கிறது. பா.ஜ.க. -என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அமைச்சராக இருந்து வருகிறார் ஜான்குமார். இவருக்கு முதலமைச்சராக வேண்டும் என்று பெருங்கனவு. புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் தனி நபர்களின் செல்வாக்கை வைத்தே பெரும்பாலும் வெற்றி, தோல்வி நிகழ்கிறது. அதனால்தான் புதுச்சேரியில் சுயேட்சைகள் கணிசமான எண்ணிக்கையில் வெற்றிபெறுகிறார்கள்.
இந்த சூழலில், காங்கிரஸ், என்.ஆர்.காங் கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளில் ஓரங்கட்டப் பட்ட பிரமுகர்களில் வெற்றி வாய்ப்புள்ளவர்களை களத்தில் இறக்கி, 10 இடங்களை ஜெயித்து விட்டாலே போதும், நம்மை தவிர்த்து யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்கிற திட்டத்தில், மார்டின் மகன் சார்லஸிடம் தனிக்கட்சி துவக்கும் விதையை போட்டார் அமைச்சர் ஜான்குமார். இதில் மயங்கிய சார்லஸ், ஒரு கட்டத்தில் முதலமைச்சர் கனவு காணத் தொடங்கிவிட்டார்.
இது குறித்து நம்மிடம் பேசிய புதுச்சேரி தி.மு.க.வினர், "முதலமைச்சர் கனவு காண்பது மட்டுமல்ல, புதுச்சேரியின் அடுத்த முதலமைச்சர் நான்தான் என சபதம் எடுத்துக் கொண்ட சார்லஸ், அரசியல் பிரமுகர்களை தம் பக்கம் இழுக்கும் வேலையை ஆரம்பித்தார். முதலில், சுயேட்சை எம்.எல்.ஏ.க்களான அங்காளன், சிவசங்கரன் ஆகியோரை வளைத்தார். இதனையடுத்து, காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகளில் ஓரங்கட்டப்பட்ட, முடங்கிக் கிடக்கிற ஆட்களை இழுக்கும் வேலை நடந்தது. இதன் பின்னணியில் ஜான்குமார் இயங்கினார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/02/martinlotter1-2026-01-02-11-55-39.jpg)
இதற்காக நடந்த பேச்சுவார்த்தையில், "உங்களை நம்பி எப்படி எங்களின் அரசியல் வாழ்க்கையை தீர்மானிப்பது? எங்கள் கட்சியில் இன்றைக்கு நாங்கள் ஓரங்கட்டப்பட்டிருக்கலாம். ஆனா, நாளைக்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பு வராமலா போகும்?' என சார்லஸிடம் கேள்வி யெழுப்பியிருக்கிறார்கள். அதற்கு சார்லஸ், "என்னை நம்புங்கள்; உங்களுக்கு எதிர்காலம் உண்டு' எனச்சொல்ல, "உங்களை நம்பி வரவேண்டுமானால், எங்களுக்கு 15 கோடி ரூபாய் கொடுங்கள்; தேர்தல் செலவுகளுக்கு தனியாக தந்துவிட வேண்டும். இதற்கு ஓ.கே. எனில் உங்களை நம்பி வருகிறோம்' என சொல்ல, "அதை எலெக்ஷன் நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம். இப்போதைக்கு மாதம் 3 லட்சம் தர்றேன். அதை வெச்சு உங்க தொகுதியில தேர்தல் வேலையை பாருங்க' என 10 நபர்களிடம் தனித்தனியாகச் சொல்லியிருக்கிறார். அவர்களும் "ஓ.கே.' எனச் சொல்ல, கடந்த 3 மாதங்களாக இந்தத்தொகை கொடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில்தான், தனது மக்கள் மன்றமான ஜே.சி.எம். பெயரை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முயற்சித்தார் சார்லஸ். ஆனால், ஒரு நபரின் பெயர் கட்சியின் பெயராக இருப்பதால் அதை பதிவுசெய்ய மறுத்துவிட்டது தேர்தல் ஆணையம். இதனால் லட்சிய ஜனநாயக கட்சி எனும் பெயரில் கடந்த 14-ஆம் தேதி கட்சியை ஆரம்பித்தார் சார்லஸ். இது தேர்தல் ஆணை யத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டதா? என தெரியவில்லை. ஐ.ஜே.க. கட்சியிலிருந்து பிரிந்துபோன ஒருவர், ல.ஜ.க. எனும் பெயரில் ஒரு கட்சியை பதிவு செய்திருப்பதாக அறிந்து அவரிடம் பேசி அதனை வாங்கிவிட்டார் சார்லஸ். ஆனால், இந்த லட்சிய ஜனநாயக கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்றதாகத் தெரியவில்லை.
இப்படிப்பட்ட சூழலில்தான், சார்லஸையும் ஜான்குமாரையும் நம்பி வந்தவர்கள், ஏற்கனவே பேசியபடி 15 கோடியை தந்தால் மட்டுமே அடுத்த வேலையைப் பார்ப்போம் என வலியுறுத்த, "தேர்தல் வேலையை இப்போ பாருங்க; மத்ததை அப்புறம் பேசிக்கலாம்; நான் எங்கே ஓடிப் போகப்போறேன்?' என்று மயக்கும் வார்த்தைகளில் பேச, அதை ஏற்க மறுத்து, "இனி உங்களை நம்பி வரமாட்டோம்' என விலகி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஜான்குமாரை சந்தித்தும் அவர்கள் முறையிட, "எனக்கும் சார்லஸுக்குமே டேர்ம் சரியில்லை. நான் சொல்றதை எதையும் அவர் கேட்கமாட்டேங்கிறார். சார்லஸை நம்புறதும் நம்பாததும் உங்களுடைய சாய்ஸ். நம்புங்கள்னு நான் சொல்லமாட்டேன். எனக்கு எதுவும் தெரியாது. நீங்க ஏமாந்து போனீங் கன்னா,…என்னை வந்து எதுவும் கேட்கக்கூடாது' என ஜான்குமார் கைவிரிக்க... சார்லஸை நம்பிய ஆட்க ளெல்லாம், சார்லஸை நம்பிக்கைத் துரோகின்னு விமர்சித்து அவரைவிட்டு விலகி ஓடுகிறார்கள். நம்பிக்கைக்கும் நம்பகத் தன்மைக்கும் உரிய நபராக சார்லஸ் இருக்கவில்லை. இதனால், தம்மைவிட்டு எல்லோரும் ஓடுவதைப் பார்த்து, கட்சியைத் தொடர்ந்து நடத்துவதா? இல்லை, கடையை மூடி விடுவதா? என்கிற குழப்பத் தில் இருக்கிறார் சார்லஸ்'' ’என்று விவரிக்கிறார்கள் தி.மு.க.வினர். இதற்கிடையே, நடிகர் விஜய்யின் த.வெ.கவுடன் கூட்டணி வைக்க முயற்சித்திருக்கிறார் சார்லஸ். இவரின் மைத்துனர் ஆதவ்அர்ஜுனா, த.வெ.க.வில் முக்கிய பொறுப்பில் இருப்பதால், சார்லஸை, விஜய் உள்பட யாருமே திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. ஆதவ்வுக்கும், சார்லஸுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் என்பதால், விஜய்யை சந்திக்க சார்லஸ் எடுத்த எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. மேலும், தான் சார்ந்த மதரீதியாகவும், "புதுச்சேரியில் த.வெ.க.வின் செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன்' என்றும் விஜய்யின் நெருக்கமான நபருக்கு சார்லஸ் தகவல் அனுப்பியிருக்கிறார். ஆனாலும், நோ ரெஸ்பான்ஸ்! இதனால் வெறுத்துப்போன சார்லஸ், அரசியல் கடையை சாத்திடலாமா? என தன்னை சந்திக்க வருபவர்களிடம் புலம்பிக்கொண்டிருக்கிறாராம்.
இந்த நிலையில், 10 நாட்களுக்கு முன்பு டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளார் லாட்டரி அதிபரும் சார்லஸின் தந்தையுமான மார்ட்டின். பா.ஜ.க.வில் தேவையில்லாத குழப்பத்தை சார்லஸ் உருவாக்கிவருவதாக மத்திய உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டின் அடிப்படையில் மார்ட்டினை, அமித்சா வரவழைத்ததாகச் சொல்லப்படுகிறது.
அந்த சந்திப்பில், "புதுச்சேரியில உங்க பையன் என்ன பண்ணிக்கிட்டிருக்கார்? பணம் கொட்டிக் கிடந்தால் என்னவெல்லாம் செய்வாரோ? ஏதோ ஒரு பெயரில உங்க பையன் ஒரு அமைப்பை ஆரம்பிச்சிருக்கிறா ராம். அதை கலைச்சுட்டு ஒழுங்கா உங்க ளுக்கு ஒத்தாசையா இருக்கச் சொல்லுங்க. அடுத்து, தமிழ்நாட்டுல என்.டி.ஏ. கூட்டணிக்கு எதிராக நடிகர் விஜய்யை உங்க மருமகன்தான் (ஆதவ் அர்ஜுனா) தூண்டி விட்டுக்கிட்டிருக்கிறார். அவரிடம் பேசி, நடிகர் விஜய்யை என்.டி.ஏ. கூட்டணிக்கு கொண்டுவர முயற்சியை நீங்க எடுங்கள். இந்த ரெண்டு அசைன்மெண்டையும் சீரியஸாக கவனியுங்கள்'' என்று மார்ட்டினிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாம்.
இந்த வலியுறுத்தலை எதிர்கொண்ட லாட்டரி மார்ட்டின் மகனும் சரி, மருமகனும் சரி… ரெண்டு பேருமே என் பேச்சை கேட்க மாட்டானுங்க. நான் என்னத்தை சொல்லி அவர்களை வழிக்குக் கொண்டு வருவதுன்னு தெரியலையே என அமித்ஷா விடம் சொல்ல, "உங்களையும் உங்கள் பிசினஸையும் சுத்தி என்ன நடக்குதுன்னு எங்களுக்குத் தெரியும். முயற்சி பண்ணுங்கள்... எல்லாம் சரியா வரும்' என எச்சரிக்கை செய்யும் தொனியில் பேசி மார்ட்டினை, அமித்ஷா அனுப்பிவைத்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்டை எப்படி நிறைவேற்றலாம்ங் கிற ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் லாட்டரி மார்ட்டின்''’ என்கின்றன உளவுத்துறை வட்டாரங்கள்.
_____________
இறுதி சுற்று!
ரசிகர்களைச் சந்தித்த ரஜினி!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/02/martinlotter2-2026-01-02-11-55-51.jpg)
2026 புத்தாண்டு தினத்தில் தனது வீட்டுக்கு வந்த ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்துக் கூறியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினி காந்தின் தீவிர ரசிகர்கள் புத்தாண்டு, தீபாவளி, பொங்கலின்போது அவரது வீட்டுக்கு வருவது வழக்கம். அப்படி வரும்போது, வீட்டிலிருந்தால் நடிகர் ரஜினிகாந்த் அவர்களைச் சந்தித்து உற்சாகப்படுத்துவார். இல்லாத பட்சத்தில் ரஜினியின் மனைவி அவர்களைச் சந்தித்து, அவர் வீட்டில் இல்லாததை தெரிவித்து வழியனுப்பி வைப்பார். அதேபோன்று 2026 புத்தாண்டன்று ரஜினிக்கு வாழ்த்துத் தெரிவிக்க அவரது போயஸ்கார்டன் தோட்டம் முன்பு ரசிகர்கள் திரண்டிருந்தனர். இதையடுத்து வெள்ளை நிற வேட்டி சட்டையில் வெளியில் வந்த நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து கையசைத்துவிட்டு வீட்டுக்குள் சென்றார். ரசிகர்களும் ரஜினிக்கு நன்றியும் வாழ்த்தும் தெரிவித்துவிட்டு திரும்பினர்.
-கீரன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/02/martinlotter-2026-01-02-11-55-17.jpg)