கூட்டணி என்றாலும் அ.தி. மு.க.வின் ஆட்சிதான். எனது தலைமையில் தான் அமைச்சரவை அமையும். ஆட்சியில் பங்கு கிடையாது என்று வெளிப்படையாகவே பேசிவருகிறார் எடப்பாடி. நெல்லை வந்தபோது அவருக்கு பெருமாள்புரத்திலிருக்கும் தனது பங்களாவில் பா.ஜ.க.வின் மா.த.வான நயினார் நாகேந்திரன் விருந்தளித்தார். அப்போது எடப்பாடியிடம் தேர்தல் மற்றும் தொகுதிப்பங்கீடு பற்றி பேசியபோது பிடிகொடுக்கவில்லையாம். இது நயினாரை உறுத்தியிருக்கிறதாம்.
இதுகுறித்து பா.ஜ.க.வின் அந்த முக்கியப் புள்ளி விரிவாகவே நம்மிடம் பேசினார்.
"ஆக. 17 அன்று நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி, விருதுநகர் உள்ளிட்ட 5 எம்.பி. தொகுதிகளில் அடங்கியுள்ள சட்டமன்றங்களில் பூத் கமிட்டி உறுப்பினர்களின் மண்டல மாநாடு, ஆய்வுக் கூட்டம் நெல்லையில் நடைபெறும் என்று அறிவித்தார் நயினார். அன்றைய தினம் பா.ஜ.க.வின் முக்கியத் தலைவரும் நாகாலாந்து கவர்னருமான இல. கணேசன் காலமானதால் நெல்லை மண்டல மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.
பா.ஜ.க.வின் கூட்டணிக்கு மங்களம் பாடிவிட்டு வெளியேறிய ஓ.பி.எஸ்.ஸின் மரியாதை அரசியல் மட்டத்திலும் அவர் சமூகம்சார்ந்த மக்களிடமும் உயர்ந்திருக்கிறது.
மண்டல பூத் கமிட்டி உறுப்பினர்கள் மாநாட்டை தன்னால் பெரிய அளவில் நடத்தி சாதித்துக் காட்டமுடியும் என்பதையும், பா.ஜ.க. தன்வசம் இருப்பதையும் வெளிப்படுத்திக்கொள்ள பூத் கமிட்டி மாநாட்டிற்கு அமைச்சர் அமித்ஷாவை வரவழைத்தால் தன் சமூகம் சார்ந்தவர்களிடம் தன் செல்வாக்கு உயரும். கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க.விடமும் தொகுதிப் பங்கீடு பற்றி தெம்பாகவே பேசமுடியும் என்பதற்காகவே, ஆக.22 அன்று நெல்லையில் பா.ஜ.க.வின் மண்டல பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் அமித்ஷா கலந்துகொள்கிறார் என்று அறிவிக்கப்பட்டது.
முன்னதாக தமிழக பா.ஜ.க.வின் தலைமை, கட்சியின் நிர்வாகிகளால் வழங்கப்பட்ட பூத் கமிட்டி உறுப்பினர்களின் அறிக்கையை ஆய்வுசெய்வதற்காக ஒரு மாவட்ட அறிக்கை யை அடுத்த மாவட்டத்தின் நிர்வாகிகள் ஆய்வுசெய்யும் வகையிலான கமிட்டியை அமைத்தது. அப்படியான ஆய்வை அந்த மாவட்ட கமிட்டி நடத்தியதில் பூத் ஒன்றிற்கு 10+1 என்ற அளவிலான பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்காமல் ஒவ்வொரு பூத்திலும் இரண்டு பேரே உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.
இந்த ஆய்வின் மூலம் தமிழக அளவில் பா.ஜ.க.விற்கு 70 சதவிகிதம் பூத் கமிட்டிகள் அமைக்கப்படவில்லை. நிர்வாகிகள் அந்த வகையில் பூசிமெழுகியிருக்கிறார்கள். இதையடுத்தே தற்போது தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளின் தரப்பில் 10 பேர் அடங்கிய பூத் கமிட்டி உறுப்பினர்களின் பட்டியல்கள் தலைமைக்குத் தரப்பட்டுள்ளன. அதில்கூட முறையாக உறுப்பினர்களை நியமிக்காமல் தனக்கு வேண்டியவர்களின் பெயர்களைச் சேர்த்து பூத் ஒன்றிற்கு 10 உறுப்பினர்களை நியமித்ததாக நிர்வாகிகள் மறு அறிக்கையை அளித்திருக்கிறார்கள். இந்த விவரம் மா.த. நயினார் நாகேந்திரனுக்கும் தெரிந்ததுதானாம்.
பூத் கமிட்டி உறுப்பினர்கள் என்றவகையில் தற்போது நடத்தப்படுகிற 5 எம்.பி. தொகுதிகளின் மண்டல மாநாட்டில் தலா 10 உறுப்பினர்கள் வீதம் 85,000 பூத் கமிட்டி உறுப் பினர்கள் நியமிக்கப்படவேண்டும். மேற்படி தொகுதிகளில் முறையான பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப்படாமல் போனதால் நிலைமையை சமாளிக்க வேன் செலவு, தலைக்கு 200 என்ற வகையில் அந்தந்தப் பகுதிகளிலிருந்து ஆட்களை அழைத்துக்கொண்டு வந்து காட்டப்பட்டிருக்கிறது. இந்தவகையில் அ.தி.மு.க.வினரும் அழைத்து வரப்பட்டிருக் கிறார்களாம். இந்தக் கூட்டத்திற்கு லட்சம் பேர் வருவார்கள் என்று பா.ஜ.க. தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் அரங்கில் போடப்பட்டதோ மொத்தம் 14,000 சேர்கள்தான். அதிலும்கூட சில காலியாக இருக்க 13,500 சேர்கள்தான் நிரம்பியுள்ளன''’என்றார் அந்த நிர்வாகி.
ஆக. 22-அன்று நெல்லையின் தச்சநல்லூரில் நடந்த பா.ஜ.க.வின் தென்மண்டல பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆய்வுக் கூட்ட மாநாட்டுக்கு வருகை தந்த அமித்ஷாவுக்கு எதிர்ப்பாக, நெல்லை மாநகர மாவட்ட காங்கிரசின் சார்பில் திருட்டு வாக்குகள் மூலம் வெற்றிபெற்ற ஒன்றிய அரசைக் கண்டித்து கருப்புச் சட்டை அணிந்தும், கருப்பு பலூன்களைப் பறக்கவிடவும் ஏற்பாடுகள் நடந்திருக்கிறது. இந்த விவரம் மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து நெல்லை மாநகர காவல் ஆணையருக்கு பறந்திருக்கிறது. இதையடுத்து பாளை வ.உ.சி மைதானம் அருகேயுள்ள நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டி யனை போலீசார், வீட்டுக்காவல் சிறையில் வைத்துள்ளார்கள். மாலை யில் அமித்ஷாவின் மண்டல கமிட்டி ஆய்வுக் கூட்டம் முடிந்தபிறகே போலீசார் வாபஸ் பெறப்பட்டார்கள்.
ஆய்வுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் அமித்ஷா, "பா.ஜ.க. அரசு தமிழகத்தின் மீது அதிக பற்றும் பாசமும் கொண்டிருக்கிறது. அப்துல் கலாமை ஜனாதிபதியாக்கியது பா.ஜ.க. ஆட்சியில்தான். சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாகப் போகிறார். தமிழகத்தில் அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணியின் ஆட்சி அமையவுள்ளது. கடந்த தேர்தலில் பா.ஜ.க. 18 சதவிகிதமும் அ.தி.மு.க. 21 சதவிகிதம் என்றளவில் வாக்குகளை வாங்கியது. இரண்டும் இணைந்தால் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சியமைக்கும்'' என்று அழுத்தமாகவே பேசினார்.
நயினார் வீட்டில் அமித்ஷா வுக்கு தேநீர் விருந்து நடைபெற்றது. இதில் எல்.முருகன், வானதி உள்ளிட்ட சீனியர்களை நயினார் அழைக்க வில்லையாம். டென்ஷனான அமித் ஷா, நயினாரை மிகவும் கடிந்து கொண்டாராம்.
பூத் கமிட்டி மண்டல மாநாடு என்ற வகையில் அமைச்சர் அமித்ஷா விற்கு சீன் காட்டியிருக்கிறது தமிழக பா.ஜ.க.
-பி.சிவன்
படங்கள்: ப.இராம்குமார்