"ஹலோ தலைவரே, ஜக்கி விழாவில் பங்கேற்றதால் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் டோட்டல் இமேஜும் இப்போது டேமேஜ் ஆவதாக பா.ஜ.க.வினரே வருந்துகிறார்கள்.''”

"ஆமாம்பா, பாலியல் புகாரில் சிக்கிய ஒருவர் நடத்தும் விழாவில் கொஞ்சமும் தயக்கமில்லாமல் அமித்ஷா கலந்து கொண்டிருப்பது, அவர் கட்சியினரை சங்கடப்படுத்தாதா?''”

rr

"சரியாச் சொன்னீங்க தலைவரே, பாலியல் புகார் உட்பட பல்வேறு புகார்களில் சிக்கியிருக்கும் ஈஷா மைய ஜக்கி வாசுதேவ் நடத்திய சிவராத்திரி விழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டிருப்பது, இந்திய அளவில் பலத்த எதிர் வினைகளை உருவாக்கியிருக்கிறது. நம் நக்கீரன் அதிரடியாக அம்பலப்படுத்திய, ஜக்கி வாசுதேவ் மீது தொடர்ந்து எழுந்துவரும் பாலியல் குற்றச்சாட்டுகளும், புகார்களும் அண்மைக்காலமாக தேசிய அளவிலான ஊடகங்களில் பெரிதும் எதிரொலித்தன. அதனையொட்டி வடநாட்டு ஊடகங்களில் விவாதங்களும் பெரிய அளவில் நடந்தன. அதனால் வடக்கே உள்ளவர்கள் மத்தியிலும் ஜக்கியின் ஆன்மீக முகமூடிகள் கிழிந்து தொங்க ஆரம்பித் தன. இப்படிப் பட்ட நிலையில் அந்த போலி ஆசாமி ஜக்கி நடத்திய மகா சிவராத்திரி விழாவில், நாட்டின் உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷாவே கலந்து கொண்டி ருப்பது, கடும் விமர்சனங்களை உருவாக்கி வருகிறது. பாலியல் குற்றவாளிகளை பகிரங்கமாக அமித்ஷா ஆதரிக்கலாமா? செக்ஸ் சாமியார் நடத்தும் விழாவில் அமைச்சர் கலந்து கொள்ளலாமா? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி, அவரது இமேஜையும் டேமேஜ் ஆக்கி வருகிறார்கள். மேலும் ஜக்கியால் பாதிக்கப்பட்டவர்களும் தங்களுக்கு அவரால் நேர்ந்த மோசமான அனுபவங்களைக் குறிப்பிட்டு, இந்த விழாவை விமர்சித்திருப்பதும் பெரும் கவன ஈர்ப்பைப் பெற்றிருக் கின்றன.''

"அமித்ஷாவுக்காக அமைக் கப்பட்ட மேடையும் சர்ச்சை யாகியிருக்குதே?''

Advertisment

"ஆமா தலைவரே... ஈஷா மேடையில் அமித்ஷா பேசுவதற்காக வைத்திருந்த போடியத்தில் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ சின்னமான நான்கு சிங்கங்கள் பொறித்த முத்திரை இருந்ததைப் பார்த்து பலரும் அதிர்ச்சியாகியிருக்காங்க. ஈஷா மையம் அரசாங்க நிறுவனமா என்ன? ஒரு தனியார் அமைப்பின் விழா மேடையில் இந்திய அரசின் சின்னத்தை பயன்படுத்தியது சமூக வலைத்தளத்தில் கடுமையா விமர்சிக்கப்பட்டு வருது.''

"அது சரிப்பா, அமித்ஷாவை மையப்படுத்தி மாஜி மந்திரி வேலுமணிக்கும், எடப்பாடிக்கும் இடையில் ஒரு தகராறே நடந்தது என்றும் சொல்கிறார்களே?''”

"உண்மைதாங்க தலைவரே, கோவை வந்த அமித்ஷாவிடம் கட்சிப் பிரமுகர்கள் புடைசூழ, தடபுடலாகச் சென்று, தங்கள் இல்லத் திருமண அழைப்பிதழை வைக்க விரும்பினார் வேலுமணி. இது எடப்பாடிக்கு கடும் எரிச்சலை உண்டாக்க, இது சரியில்லை என்று அவர் தடுத்துவிட்டார். அதோடு, கோவை மாவட்டத்தில் வேலுமணியின் கொட்டத்தை அடக்குவதற்காக அவருக்கு எதிரான கட்சி நிர்வாகிகளைப் பதவிகளில் அமர்த்த, எடப்பாடி ஒரு நிர்வாகிகள் பட்டியலை யும் தயார் செய்தார். இதையறிந்த வேலுமணி கோபத்தோடு போய் எடப்பாடியிடம் சண்டை போட்டிருக்கிறார். இது கடுமையான வாய்த் தகராறாக இருந்தது என்கிறார்கள், அதை நேரில் பார்த்தவர்கள். அதனால் வேலுமணியை விரைவில் கட்சியில் இருந்து எடப்பாடி கட்டம் கட்டலாம் என்கிற எதிர்பார்ப்பும் சிலரிடம் இருக்கிறதாம்.''”

Advertisment

"அது சரிப்பா, கோவை வந்த அமித்ஷாவை சசிகலா ரகசியமாகச் சந்தித்ததாகவும் ஒரு தகவல் அடிபடுகிறதே?''”

"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க.வைக் கைப்பற்றும் முயற்சியில் சசிகலா தீவிரமாகக் களத்தில் இறங்கிவிட்டார். ஈஷா மைய விழாவுக்காக கோவை வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் ரகசியமாகச் சந்தித்து இதுகுறித்து சசிகலா பேசியிருக்கிறார். இந்த சந்திப்பின் போது, சசிகலாவின் முயற்சிகளுக்கு பா.ஜ.க. க்ரீன் சிக்னல் கொடுத்திருக்கிறது என்கிறார்கள். சசிகலாவோடு பா.ஜ.க.விற்கு இத்தனை நாள் இருந்த கோபமெல்லாம், பண விவகாரத்தால் தான். ஜெ’ஆட்சிக் காலத்தில் சட்டவிரோதமாக சசிகலா சேர்த்த சொத்துக் களிலும், பணத்திலும் 50-ல் இருந்து 80 சதவீதத்தை தங்கள் கட்சிக்குக் கேட்டது பா.ஜ.க. அதை சசிகலா கொடுக்க மறுத்ததால்தான் இத்தனை நாளாக இரு தரப்பிற்கும் இடையே ஒரு இறுக்கம் இருந்துவந்தது. மொத்தம் ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களில், கணிசமாக பா.ஜ.க.விடம் சசி ஒப்படைத்து விட்டாராம். இதைத் தொடர்ந்துதான் சசிகலா வுக்கு இப்போது பா.ஜ.க.வின் பச்சைவிளக்கு எரிகிறதாம்.''”

"அப்ப இனி அ.தி.மு.க.வில் சசிகலாவின் ராஜ்யம்தானா?''”

sasi

"அப்படித்தான் சொல்கிறார்கள் தலைவரே. இனி அ.தி.மு.க.வே என் கையில்தான் என்கிறாராம் சசிகலா. மாஜி மந்திரிகளான செங்கோட்டையனும், எஸ்.பி.வேலுமணியும் இரண்டு தளபதிகளாக களத்தில் இறங்க, சசிகலா அ.தி.மு.க.வில் தன் ராஜ்யத்தைத் தொடங்கப் போகிறாராம். இப்போதே சசிகலா, அ.தி.மு.க.வில் யார், யாரை மா.செ.க்களாக நியமிப்பது என பட்டியல் எடுத்துவருகிறாராம்.''”

"நாம் தமிழர் காளியம்மாள் சீமானுக்கு எதிராக களத்தில் குதித்திருக்கிறாரே?''”

r

"நாம் தமிழர் கட்சியில் சீமான் பாணியி லேயே பேசி, தன்னை வளர்த்துக்கொண்ட காளியம்மாள், இடையில் சீமானோடு ஏற்பட்ட ஈகோவில் எரிச்சலிலேயே இருந்தார். அவர் பா.ஜ.க. வில் இருந்து வந்த ரஞ்சனா நாச்சியாரோடும், நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் இருந்த ஒருவரோடும் சேர்ந்து நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக ஆண்டு விழாவில், போய் ஐக்கியமாகத் திட்டமிட் டாராம். ரஞ்சனா நாச்சியார் திட்டமிட்டது போலவே ஆதவ் அர்ஜுன் ரூட்டில் போய் சேர்ந்துவிட்டார். இதற்கிடையே காளியம்மாள், ஆதவ் அர்ஜுனின் அலுவலகத்திற்குச் சென்று, த.வெ.க.வில் சேர கட்சியில் மாநில அளவில் பதவி, எம்.எல்.ஏ. சீட், ஆட்சி அமைக்கும்போது அமைச் சர் பதவி என அவருக்கு ஆதவ் அர்ஜுன் உத்தர வாதம் கொடுத்தாராம். ஆனால், ஆண்டுவிழா நேரத்தில் காளியம்மாள் தங்கள் கட்சியில் சேர்ந்தால், அவரே பெரும் பேசுபொருளாகிவிடு வார் என்று கருதிய நடிகர் விஜய், கடைசி நேரத்தில் கொஞ்சம் பொறுங்கள் என்று சொல்லிவிட்டாராம். அதற்கு முன்பு, காளியம்மாள் தி.மு.க.வில் சேரவும், எம்.பி. சீட் டிமாண்டோடு அமைச்சர் ஒருவரிடம் பேசிவந்தாராம்.''”

"நடிகர் விஜய் கட்சியின் ஆண்டு விழாவால், அவர்கள் கட்சியிலேயிலே புகைச்சல் என்கிறார் களே?''”

"விஜய்யின் இரண்டாம் ஆண்டு விழா ஏற்பாடுகளை செய்தவர் ஆதவ் அர்ஜுன்தானாம். அவர்தான், பிரபல அரசியல் வியூக அமைப்பாள ரான பிரசாந்த் கிஷோரையும் அழைத்து வந்தா ராம். விழா நடந்த ஓட்டலில் நடந்த விருந்துக்கே பெரிய அளவில் செலவு செய்திருக்கிறார்கள். அங்கே ஒரு தட்டுக்கு ரூபாய் 2 ஆயிரம் வரை செலவானதாம். பிரசாந்த் கிஷோர் வந்ததில் விஜய் பூரித்துப்போயிருக்கிறாராம். இப்படி விஜய் மகிழ்ந்து நெகிழ்ந்து போகிற அளவிற்கு த.வெ.க.வின் இரண்டாம் ஆண்டுவிழாவை பிரமாண்டமாக நடத்தி, அவர் மனதில் பெரிய அளவிற்கு ஆதவ் இடம்பெற்றுவிட்டதால், இத்தனை நாளாக விஜய் அருகிலேயே இருந்து அவரது அரசியலுக்கு களம் அமைத்துக்கொடுத்த புஸ்ஸி ஆனந்தும், வியூக அமைப்பாளர் ஜான் ஆரோக்கிய சாமியும் ஆதவ் அர்ஜுன் மீது வெறுப்பிலும் கடும் அதிருப்தியிலும் இருக்கிறார்களாம். இது கட்சிக்குள் பெரும் மோதலாக வெடிக்கலாம் என்கிறார்கள் அங்குள்ள நிர்வாகிகள்.''”

"அ.தி.மு.க.வில் எடப்பாடித் தரப்புக்கும் செங்கோட்டையன் தரப்புக்கும் உரசல் அதிகரித்திருக்கிறதே?''”

"அ.தி.மு.க.வில் எடப்பாடி நடத்திவரும் ஒன்மேன் ஷோவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்த ஆரம்பித்தார் செங்கோட்டையன். இதனால் அ.தி.மு.க.வில் சலசலப்பும் அங்கே உட்கட்சி மோதலும் வெடித்தது. இந்த நிலையில், செங்கோட்டையனிடம் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டிருந்தார் எடப்பாடி. ஆனால், அவர் பேச்சை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. குறிப்பாக, எடப்பாடி சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி கூட எடப்பாடியின் இந்த உத்தரவை மதித்ததாகத் தெரியவில்லை. கடந்த 24ஆம் தேதி ஜெய லலிதாவின் பிறந்தநாள் விழாவை எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க. கொண்டாடிய போது, அதை செங்கோட்டையன் புறக்கணித்துவிட்டார். அவர் வராததால் விழாவுக்குத் தங்கமணியும் வரவில்லை.''

"அதே நேரம்’கோவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் வீட்டில் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை 26ஆம் தேதி ரெய்டு நடத்தியது. இந்த சம்பவம் கோவையையே பரபரப்பாக்கியது. உடனே, செங்கோட்டையன் தலைமையில், எஸ்.பி.வேலுமணி, பொள் ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க. வி.ஐ.பி.க்கள் பலரும் அர்ஜுனனுக்கு ஆதரவாக அவர் வீட்டின்முன் குவிந்தனர். அப்போது, செங்கோட்டையனும் வேலுமணியும் சுவாரஸ்ய மாக சிரித்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். இதேபோல் மற்ற அ.தி.மு.க. நிர்வாகிகளும் சீனியர்களும் செங்கோட்டையனிடம் சகஜ மாக உரையாடியபடியே இருந்தார்கள். இப்படி செங்கோட்டையனிடம் வேலுமணி உள்ளிட்டோர் கூடிக் குலாவி உரை யாடிக் கொண்டிருந்ததை சிலர் எடப்பாடியிடம் லைவ் ரிலே செய்ய, ஏகத்துக்கும் அப்செட்டாகிவிட்டாராம் எடப் பாடி.மேலும் செங்கோட்டையன் கட்சியின் சீனியர்கள் பலரிடமும் கிசுகிசுப்பாக ரகசியம் பேசிய தகவலும் எடப்பாடியை தகிக்க வைத்திருக் கிறதாம்.''

"சென்னையில் மெஹா நில மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது அமைச்சர் மூர்த்தி அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறாரே?''”

"ஆமாங்க தலைவரே, பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியின் பெயரைப் பயன்படுத்தி, அம்பத்தூர் பகுதியில் ஏ.ஐ. என்கிற ஆர்ட்டிபீஷி யல் இண்டலிஜென்ஸ் நிறுவனம், பர்ச்சேஸ் செய்ய இருந்த நிலத்தின் மதிப்பைக் குறைத்துக் காட்ட முயன்ற மாவட்ட பதிவுத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தன் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, இந்த செயல் நடப்பதை அறிந்த அமைச்சர் மூர்த்தியே, நேரடியாகக் களமிறங்கி, அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாராம். இந்த நில மோசடியால் 90 கோடி ரூபாய்வரை அரசுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்பு என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். இந்த மெகா மோசடிக்கு மணிவண்ணன் என்கிற எஸ்.பி. துணையாக இருந்திருக்கிறார். இவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலதில் மதுரையில் பணியாற்றியபோது, எம்.எல்.ஏ.வாக இருந்த மூர்த்தியுடனும் நட்பாக இருந்தாராம். அந்தப் பழக்கத்தை வைத்து, அமைச்சரிடம் நான் பேசிக்கொள்கிறேன் என்று மாவட்டப் பதிவாளரை இந்த மோசடிக்கு இணங்க வைத்திருக்கிறார் எஸ்.பி. அமைச்சரின் அதிரடியால் இப்போது மோசடி அதிகாரிகள் சிக்கியிருக்கிறார்கள்.''”

"மற்றொரு நில அபகரிப்புப் புகாரில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வின் சகோதரர் கைதாகியிருக்கிறாரே?''”

"சென்னையில் நில அபகரிப்பு புகார்கள் ஏகத்துக்கும் குவிந்துவருகின்றன. குறிப்பாக, சென்னையிலுள்ள அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. விருகை ரவியின் சகோதரர் விருகை கண்ணன், நில அபகரிப்புப் புகாரில் கைது செய்யப் பட்டிருக்கிறார். மதுரவாயலைச் சேர்ந்த குமரேசன் என்பவரின் கோடிக்கணக்கான மதிப்புடைய நிலத்தை, ரவுடிகள் மற்றும் அதிகாரிகளின் துணையுடன் கண்ணன் அபகரிக்க முயன்றதாக, கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப் பட்டிருக்கிறார். இந்திய ரியல் எஸ்டேட் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வருபவர் கண்ணன். இவரது சகோதரரின் அரசியல் செல்வாக்கை வைத் துக்கொண்டு கடந்த எடப்பாடி ஆட்சியில் அவர் ரியல் எஸ்டேட் பிசினஸில் புகுந்து விளையாடி னார். இவரை கைது செய்து மதுரவாயல் போலீ சார் அழைத்துச் சென்றபோது, விருகை ரவியின் ஆதரவாளர்கள் போலீஸ் வாகனத்தை மறித்துத் தகராறு செய்தனர். இந்த சம்பவம், அ.தி.மு.க. விலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.''

ss

"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். சீமான் மீது நடிகை விஜயலட்சுமி எழுப்பிய பாலியல் புகாரை, மீண்டும் விசாரிக்கிறது வளசரவாக்கம் போலீஸ். இரண்டாண்டுகளுக்கு முன்பு சீமான் மீது பாலியல் புகார் கூறிய விஜயலட்சுமி, சென்னை உயர்நீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்கைத் தொடர்ந்தார். நிலுவையில் இருந்த இந்த வழக்கை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சமீபத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதனால், பெங்களூருவில் உள்ள விஜயலட்சுமியிடம் கடந்த 26ஆம் தேதி 3 மணி நேரத்திற்கும் மேலாக நேரடியாக விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அப்போது, சீமானின் டார்ச்சர் குறித்து தன்னிடமிருந்த அனைத்து ஆதாரங்களையும் போலீசாரிடம் கொடுத்துள்ளாராம் நடிகை. அதில், பல வீடியோ மற்றும் ஆடியோ க்ளிப்ஸும் இருக்கிறதாம். எனவே அடுத்து, சீமானிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே 27ம் தேதி விஜயலட்சுமி வழக்கில் விசாரணைக்கு ஆஜராக, சீமானின் வீட்டில் வளசரவாக்கம் போலீஸாரால் ஒட்டப்பட்ட சம்மனை, சீமான் ஆட்கள் கிழித்தெறிந்தனர்.''”