சிரித்த முகத்தோடு பசும்பொன் வந்து ஏற்கனவே கல்லெறி, களிமண் வீச்சு என கருத்த முகத்தோடு வெளியேறிய எடப்பாடி பழனிச்சாமியின் முகத்தில் இம்முறை, யாருமே எதிர்பாராதவிதமாக மடாரென ‘அரசியல் பஞ்ச்’ கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள் அ.தி.மு.க.வின் முன்னாள் முக்கியப் புள்ளிகள்.
அதேநேரத்தில், முதல்வர் வேட்பாளர் தொடர்பாக டெல்லி மேலிடம் நடத்திய ரகசிய மந்திராலோசனை குறித்த தகவல்களும் அவரது காதுகளை எட்டவே படு அப்செட்டில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, ‘இனியும் பா.ஜ.க.வுடன் கூட்டணி தேவையா?’ என்ற தீவிர சிந்தனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நடந்த கூவத்தூர் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி. இதனை எதிர்த்து தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ்.ஸையும், எடப் பாடியாரையும் எப்போது சமாதானம் செய்து சேர்த்துவைத்ததோ, அப்போதே அ.தி.மு.க.வை சுக்குநூறாக உடைக்கும் உளியையும் தயார் செய்துவிட்டது டெல்லி மேலிடம்.
அதற்கேற்றாற்போல, 2017-ல் சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரை கட்சியைவிட்டு நீக்கிய எடப்பாடி பழனிச்சாமி, தனது ஒற்றைத் தலைமைக்கு எதிராக குரலெழுப்பிய அனைவரையும் தொடர்ச்சியாக நீக்கிவந்தார். 2018-ல் கே.சி.பழனிசாமி, பெங்களூர் புகழேந்தி, 2022-ஆம் ஆண்டு அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் களான வைத்தியலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன், பின்னர், ஓ.பி.எஸ்.ஸின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத், திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச் சர் வெல்லமண்டி நட ராஜன் ஆகியோர் நீக்கப்பட்டனர்.
இப்படி, அ.தி. மு.க.வின் முக்கிய நிர்வாகிகளாக இருந்த பலரையும் கட்சியைவிட்டு நீக்கிய எடப்பாடி பழனிச்சாமி இவ்வாண்டு மருது அழகுராஜ், அன்வர் ராஜா ஆகியோரை நீக்கிய பிறகு இறுதியாக, அ.தி.மு.க.வின் நிறுவனரான எம்.ஜி.ஆரின் காலம் தொட்டு கட்சியில் பயணித்த மூத்த தலைவரான கே.ஏ.செங்கோட்டையனையும் கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி கட்சியைவிட்டு நீக்கியுள்ளார்.
இதில், தானாகவே விலகிய அன்வர்ராஜாவும், மருது அழகுராஜும் சூட்டோடு சூடாக தி.மு.க.வில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்ட நிலையில்தான், அ.தி.மு.க.வினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனக் கூறிவந்த ஓ.பி.எஸ்., டி.டி.வி., செங்கோட்டையன் ஆகிய மூவரும் தேவர் ஜெயந்தியன்று பசும்பொன்னில் ஒன்றாக இணைந்து, ‘"எங்களின் ஒரே எதிரி எடப்பாடி பழனிச்சாமிதான். அவரை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம்' என கர்ஜனை செய்திருப்பது, எடப்பாடி பழனிச்சாமியை மட்டுமல்லாமல் அவரோடு பயணிக்கும் அனைவரையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமீபகாலமாக அமைதியாக இருந்த கே.ஏ. செங்கோட்டையன் திடீரென டி.டி.வி., ஓ.பி.எஸ். ஆகியோரோடு இணைந்து இப்படி எதிர்ப்புக் குரல் கொடுப்பார் என்பதை சற்றும் எதிர்பார்க்காத எடப்பாடி பழனிச்சாமியின் முகம் ஆயிரம் வாட்ஸ் மின்சாரக் கம்பியை மிதித்ததுபோல அரண்டு போன நிலையில்தான் இருந்தது. இதற்குப் பின்னணியில் பா.ஜ.க. இருப்பதாகவும் பரவ லாகப் பேசப்படுகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/04/amit-eps1-2025-11-04-11-34-47.jpg)
ஆனால், இதுவரை தனது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு கூட்டணிக்காக தனது கட்சியின் தமிழகத் தலைமையை மாற்றியதோடு, தன்னுடைய விருப்பப்படியே ஓ.பி.எஸ்.ஸை ஒதுக்கிவைத்து, டி.டி.வி.தினகரனையும் ஓரங்கட்டிய பா.ஜ.க. இதையெல்லாம் ஏன் செய்யவேண்டும்? என்ற கேள்வி எடப்பாடி பழனிச்சாமியின் மூளையில் ரன்னிங் ரேஸ் நடத்திக்கொண்டிருக்கிறது. அப்போது, அமித்ஷாவிடமிருந்து வந்த தகவல் அவரை மேலும் அப்செட் ஆக்கியதாகக் கூறப்படுகிறது.
ஒருபக்கம் கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க.வின் முன்னாள் தமிழக தலைவர் ஒருவரே எடப்பாடிக்கு எதிராக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தனது ஆதரவாளர்களை கொம்பு சீவி விட்டுக் கொண்டிருக்க, மறுபுறம் அதே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. முக்கிய நிர்வாகியான செங் கோட்டையனும் எதிரிகளுடன் இணைந்ததால் இதுகுறித்து பா.ஜ.க. மேலிடத்தோடு ஆலோசனை செய்யும் முடிவில் இருந்தாராம் எடப்பாடியார். ஆனால், அதற்கு முன்னதாகவே எடப்பாடிக்கு எதிராக டெல்லி மேலிடம் கடந்த வாரம் முக்கிய மந்திராலோசனையில் ஈடுபட்ட தாகவும், அதன் தொடர்ச்சியாகத்தான் அமித்ஷாவிடமிருந்து எடப்பாடிக்கு அந்த தகவல் வந்ததாகவும் கூறுகிறார்கள் பா.ஜ.க.வின் தேசியத் தலைமையோடு மிக நெருக்கத்தில் இருக்கும் சிலர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர்கள், "டெல்லி மேலிடத்தைப் பொறுத்தவரை இந்தியாவெங்கும் ஒரே ஃபார்முலாதான். அதைத்தான் தமிழகத்திலும் பயன்படுத்த முடிவெடுத்துவிட்டது. தற்போதைய அ.தி.மு.க. நிலவரப்படி ஏற்கனவே ஓ.பி.எஸ்., டிடிவி, சசிகலா என தனித்தனி அணியாக இருந்தவர்கள் செங்கோட்டையனின் முடிவிற்குப் பிறகு ஒரே அணியாக மாறிவிட்டனர். அதாவது, வெர்டிகில் ஸ்பிளிட் என்பதுபோல. ஒருபக்கம் எடப்பாடியார் தலைமையில் அ.தி.மு.க., மறுபுறம் அவரால் விலக்கப்பட்ட முக்கிய தலைவர்கள் என கிட்டத்தட்ட இரண்டாக உடைந்துள்ளது அ.தி.மு.க..
அந்த புதிய அ.தி.மு.க. அணியினர் ஒருவேளை விஜய்யின் த.வெ.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் மீண்டும் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பிருக்கிறது. அதைத் தவிர்க்கவேண்டுமானால், எப்பாடுபட்டாவது த.வெ.க.வை தங்களின் கூட் டணிக்குள் கொண்டுவர வேண்டும் எனத் திட்டமிட் டுள்ள பா.ஜ.க. தலைமை, அந்தப் பொறுப்பை எடப் பாடியாரிடம் ஒப்படைக்க முடிவுசெய்துள்ளதாம். அதைச் செய்யுமாறுதான், பா.ஜ.க. தலைவர் நயினார் மூலமாக 31-ஆம் தேதி தகவல் தெரிவித்தாராம் அமித்ஷா. இதிலென்ன பிரச்சனை என்கிறீர்களா? அங்குதான் இருக்கிறது ட்விஸ்ட்''’என்ற அவர்கள்...
"தானே முதல்வர் கனவுடன் இருக்கும் விஜய், எடப்பாடியாரை முதல்வராக்க ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார், அந்த நேரத்தில், தேசியக் கட்சியான பா.ஜ.க.வி லிருந்து தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமனை முதல்வராகவும், விஜய் மற்றும் எடப்பாடியார் இருவரையும் துணை முதல்வராக ஆக்குவ தாகவும் உறுதியளித்து, தேர்தலுக்குப் பிறகு அதை அறிவிப்போம் என்ற வாக்குறுதியை விஜய்க்கு வழங்கினால் அவர் ஏற்றுக்கொள்வார் எனவும் நம்புகிறது பா.ஜ.க. தலைமை. அந்த ரகசிய முடிவை எடுத்தபிறகுதான், த.வெ.க.வை கூட்டணிக்கு கொண்டுவரும் பொறுப்பை எடப்பாடியார் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற தகவலானது எடப்பாடியாருக்குக் கூறப்பட்டிருக்கிறது''’எனக் கூறினார்கள் அவர்கள்.
ஆனால், பா.ஜ.க.வின் அந்த ரகசிய திட்டத்தை ‘ஸ்மெல்’ செய்துவிட்ட எடப்பாடியார் பா.ஜ.க.வை பகைத்துக்கொள்ள முடியாமலும், அவர்களது முடிவை ஏற்கமுடியாமலும் திண்டாடி வருவதுதான் அவரது அப்செட்டிற்கு காரணம் எனக் கூறு கிறார்கள் அவருக்கு மிக நெருக்கமான கொங்கு மண்டலப் புள்ளிகள்.
____________
கொடநாடு கொலை வழக்கு!
ஆ1 எடப்பாடி!
-செங்கோட்டையன்
அ.தி.மு.க.விலிருந்து என்னை நீக்கியது வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு முன்னரே கட்சியில் முக்கிய பொறுப்புகளை வகித்தவன் என்ற அடிப்படையிலாவது எனக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியிருக்கலாம் என அ.தி.மு.க. முன் னாள் அமைச்சர் செங்கோட்டையன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப் பாடியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, “"நேற்றைய முன்தினம் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்தேன். அப்போது இந்த இயக்கத்தை ஒன்றிணைக்க வேண்டும், வலிமையாக இருப்பதற்கு நம்முடைய ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்ற நோக்கத்துடன் தான் விழாவில் பங்கேற்றேன். தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்று பூஜையில் பங்கேற்றதற்கு எனக்குக் கிடைத்த பரிசுதான் இயக்கத்தி லிருந்து என்னை நீக்கியது. எனக்கு வந்த 2 வாய்ப்புகளை விட்டுக் கொடுத்தேன். இந்நிலையில் என்னை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவாக இருப்பதாகவும் தி.மு.க.வின் பி டீம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் எடப்பாடி. கொடநாடு கொலை வழக்கில் அவர்தான் ஆ1ஆக உள்ளார். தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஐந்தாண்டு களை நெருங்கிவிட்டது. இன்று வரை திராவிட முன்னேற்றக் கழகம் அவர் மீது என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பது சட்ட மன்றக் குழுவினருக்கு நன்றாகத் தெரியும். இந்நிலையில் தற்போது என்னை இயக்கத்திலிருந்து நீக்கியிருக்கிறார். இந்த இயக்கத்திற் காக 53 ஆண்டுகள் அரும்பாடு பட்டிருக்கிறேன். அவருடைய இந்த அறிவிப்பால் இரவுமுழுவதும் நான் தூங்காமல் மன வேதனையுடன் இருந்தேன்''’என்று குறிப்பிட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/04/amit-eps-2025-11-04-11-34-16.jpg)