இந்தியா மீதான அமெரிக்காவின் டேரிஃப் விவகாரம் இந்தியாவில் கொந்தளிப்பான விவகாரமாக மாறியிருக்கிறது. இந்தியா அடிப்படையில் அதிகளவு இறக்குமதியும், குறைந்தளவு ஏற்றுமதியும் செய்யும் நாடு. இந்திய ஏற்றுமதியின் மதிப்பு 37 லட்சம் கோடி ரூபாய். மாறாக இறக்குமதியின் மதிப்பு 60.89 லட்சம் கோடி ரூபாய். இதில் அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி மட்டும் 3.83 லட்சம் கோடி ரூபாய்.
ஆட்சிக்கு வந்தவுடன் உலக நாடுகள் அனைத்தின் மீதும் டேரிஃப் போரை தொடங்கிய ட்ரம்ப், இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. அமெரிக்கா இந்தியாவின் மீது டேரிஃப்பாக 25 சதவிகிதமும், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான அபராதமாக 25 சதவிகிதமும் என 50% வரி விதித்துள்ளது. இதனால் இந்தியாவின் டெக்ஸ்டைல், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், ஆபரண ஏற்றுமதி, இறால் மற்றும் கடல் உணவு, ரசாயனங்கள் மற்றும் கரிம சேர்மங்கள் போன்றவற்றின் ஏற்றுமதி பாதிக்கும். ஏற்கெனவே தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏ.ஐ. வரவால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சேவை வழங்கும் இந்திய ஐ.டி. நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கூடவே மருந்துக் கம்பெனிகளுக்கான டேரிஃப் குறித்து அறிவிக்கும்போது, அதற்கும் ட்ரம்ப் கூடுதல் வரிவிதித்தால் அவையும் பாதிக்கப்படும்.
இந்நிலையில், இந்தியா இந்த இக்கட்டைச் சமாளிக்க அமெரிக்கா தவிர்த்த பிற நாடுகளில் ஏற்று மதி வாய்ப்பை நோக்கி தன் பார்வையைத் திருப்பி யுள்ளது. ஆனால் அமெரிக்கா அளவுக்கு பெருந் தொகையில் இறக்குமதி செய்யும் நாடுகள் குறைவு. அப்படியே இருந்தாலும், அந்நாடுகளுக்கு தற்போது ஏற்றுமதி செய்யும் நாடுகளைவிட குறைந்த விலை யிலோ, சலுகையிலோ இந்தியா ஏற்றுமதி செய் தால்தான் அந்நாடுகளின் சந்தையைப் பிடிக்கமுடியும்.
ஒரு புதிய நாட்டுடன் இன்று போய் பேசி, நாளை ஏற்றுமதி செய்துவிடமுடியாது. அந்நாடு களுடன் பேசி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, ஏற்றுமதியாக சில மாதங்கள் பிடிக்கும். அதுவரை இந்தியாவுக்கும் இந்திய நிறுவனங்களுக்கும் இழப்பு இழப்புதான்.
இது ஒருபுறமிருக்க, டேரிஃப் விவகாரத்தில் பா.ஜ.க. அரசை விமர்சிப்பவர்கள், "ரஷ்யாவிலிருந்து இறக்குமதி யாகும் ஒட்டுமொத்த கச்சா எண்ணெயில் வெறும் 15% கச்சா எண்ணெய் மட்டுமே இந்திய ஆயில் நிறுவனங் களுக்குக் கிடைத்துள்ளன. மிச்சமுள்ள 85% கச்சா எண் ணெயை ரிலையன்ஸ் நிறுவனமும், விற்பனைக்கு வந்த நயாரா எண்ணெய் நிறுவனத்தை வாங்கிய ரஷ்ய நிறு வனமுமே வாங்கிச் சுத்திகரித்து, அவற்றை வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்து கொள்ளை லாபம் பார்த்துள்ளன.
இன்னொரு வேடிக்கையும் இதில் அடங்கியுள்ளது. உக்ரைன் மீதான போரால்தான் ரஷ்யா கச்சா எண்ணெய் வியாபாரத்துக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. இதனால் ஐரோப்பிய நாடுகளோடு உக்ரைனும் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டுக்கு ஆளானது. அப்படி பாதிப்புக்குள்ளான உக்ரைன், அந்நாட்டின் தேவையில் 15.5 சதவிகிதம் டீசலை இந்தியாவிடமிருந்து ஜூலை மாதம் பெற்றுள்ளது. அதாவது, ரஷ்யாவிடம் குறைந்த விலையில் வாங்கி சுத்திகரித்ததை, உக்ரைனிடம் கொள்ளை லாபத்துக்கு இந்திய கம்பெனியொன்று விற்றுள்ளது.
கடைசியில் இந்திய பொதுமக்களைத் தவிர, ரஷ்யா விற்ற மலிவு விலை கச்சா எண்ணெயில் அனைவரும் லாபம் பார்த்துள்ளனர். ரஷ்ய கச்சா எண்ணெய் வியாபாரத்துக்காக அமெரிக்காவை இந்தியா பகைத்ததால் என்ன லாபம்? அதற்கு அமெரிக்காவுடன் இணக்கமாகப் போய் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினாலே 25% அபராத டேரிஃபை அமெரிக்கா நீக்கத் தயாராயிருக்கும்போது, ஏன் 140 கோடி இந்தியர்களுக்குப் பாதகமாக இந்திய அரசு சிந்திக்கவேண்டும்?' என கேள்வியெழுப்புகிறார்கள்.
டேரிஃப் விவகாரத்தில் எக்கச்சக்கமாகச் சிக்கியுள்ள பா.ஜ. அரசு, சர்வதேச விவகாரங்களை இந்திய அரசுக்கு சமாளிக்கத் தெரியவில்லை என்ற கெட்ட பெயரை நீக்க தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துவருகிறது. தனது சமூக வலைத்தளங்கள், ஆதரவு ஊடகங்கள் மூலம் இந்த டேரிஃப் விவகாரத்தால் அமெரிக்காவுக்கு பெரும் பாதிப்பு என்றும், டேரிஃப் போட்டுவிட்டு என்ன செய்வதெனத் தெரியாமல் இந்தியப் பிரதமருடன் பேசமுயன்ற ட்ரம்ப்பின் போன் அழைப்பை மோடி தொடவே இல்லையென்றும் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது.
இது போதாமல் யூ டியூபிலும் கைவரிசை காட்டிவருகின்றனர். அமெரிக்க டாக் ஷோ பிரபலங்கள் ஓபரா வின்ஃப்ரே, ஸ்டீவ் ஹார்வி, சீன தொழிலதிபரான அலிபாபா ஜாக் மா, பொருளாதார அறிஞர் பியர்ஸ் மோர்கன், அமெரிக்காவில் செட்டிலான பிரியங்கா சோப்ரா போன்ற சர்வ தேச பிரபலங்கள் பலரும் "அமெரிக்கா ஏன் இந்தியாவைக் கண்டு அஞ்சுகிறது? காரணமென்ன?' என்ற பெயரில் அவர்களது புகைப் படங்களுடனான வீடியோக்கள் யூ டியூபில் தட்டுப்படுகின்றன.
அந்த வீடியோக்களில் சம்பந்தப்பட்ட பிரபலங்கள் பேசுவதில்லை. மாறாக, சம்பந்தப்பட்ட பிரபலங்களின் ஏ.ஐ. குரல்கள் இந்தியாவின் அருமை பெருமைகளையும், இந்தியாவின் வளர்ச்சி குறித்த பிரமிப்புகளையும் இந்திய வளர்ச்சி குறித்த அமெரிக்காவின் பொறாமை மனப்பான்மையையும் குறித்து நீண்ட உரை ஆற்றுகின்றன. அமெரிக்காவின் சிலிக்கான்வேலி, தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் பல அமைந்துள்ள நகரமாகும். அதற்கிணையான நகரமாக பெங்களூருவைச் சுட்டுகிறது. அமெரிக்காவின் விஞ்ஞான வளர்ச்சியை வியக்கிறது, பொருளாதார வளர்ச்சியை பிரமிக்கிறது இந்த வீடியோ.
இதில் ஆச்சரியம் என்னவெனில், ஓபரா வின்ப்ரே என்ன பேசுகிறாரோ…அதையேதான் வார்த்தை மாறாமல் ஸ்டீவ்ஹார்வி யும் பேசுகிறார். ஜாக் மாவும் பேசுகிறார். பிரியங்காவும் பேசுகிறார். பியர்ஸ் மோர்கனும் பேசுகிறார். மாறியிருப்பது சம்பந்தப்பட்ட வர்களின் புகைப்படமும், அவர்களது குரலைப் போன்ற ஏ.ஐ. குரலும் மட்டும்தான்.
"இந்தியாவின் ஒன்றரை பில்லியன் மக்கள் மேல்நோக்கி நகர்ந்து, வாங்கி, கட்டமைத்து, நுகர்ந்து, புதுமைகளை உருவாக்கி வருகின்றனர். அது அமெரிக்காவால் கட்டுப்படுத்தமுடியாத ஒரு சந்தை. பல தசாப்தங்களாக, அமெரிக்க நிறுவனங்கள் நாடுகளை, அவர்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்களாகப் பார்த்தன. ஆனால் இந்தியா கதையை மாற்றியது. இந்தியா, இங்கே முதலீடு செய்யுங்கள் என்று சொன்னது. இப்போது அமெரிக்கா தனது ஆதிக்கம் சரிவதைக் காண்கிறது''”-இதுபோல் கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்கு இந்தியாவைப் புகழ்ந்துதள் ளும் ஒரு உரை. முன்பு வாட்ஸ் அப், இந்துத்துவ, ஆர்.எஸ்.எஸ். தரப்பினரின் வதந்தி பரப்பும் தளமாகவும், குஜராத் மாடல் அரசு, உ.பி. மாடல் அரசென பா.ஜ.க. அரசுகளின் இல்லாத பெருமை யைப் பேசும் மையமாகவும் திகழ்ந்துவந்தது. இப்போது வாட்ஸ் அப் மட்டும் போதாது என்று யூ டியூப்புக்கு வந்துவிட்டார்கள்போல.
அரைகுறை உண்மைகளையும், முழுப் பொய்களையும் மக்கள் தலையில் கட்ட ஆரம்பித்துவிட்டார்கள் என ஒரு தரப்பும், இது வெறுமனே வதந்தி பரப்புவது மட்டுமல்ல,… அதற்கும் மேலான ஒரு நோக்கம் இதைப் பரப்புபவர்களுக்கு இருக்கவேண்டும். இதுகுறித்து இந்தியர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என ஒரு தரப்பும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
"கண்ணாடியைத் திருப்பினா ஆட்டோ எப்படி ஓடும்?' என கேட்பதுபோல், யூ டியூபில் வீடியோ போட்டால், டேரிஃப் விவகாரம் எப்படி சரியாகும் என இந்தியா முழுவதும் பரவலான ஆட்சேபக் குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன.