அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அதிரடியால் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பின்னடைவை சரிக்கட்ட, வெளியுறவுக் கொள்கையில் பல்வேறு மாறுதல்களை மோடி முன்னெடுத்து வருகிறார்.
ரஷ்ய -உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா செயல்படுவதாகவும், ரஷ்ய கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்வதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதையடுத்து, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 50% வரிவிதித்து பெருத்த அதிர்ச்சியளித்தது அமெரிக்கா. அபரிமித வரிவிதிப்பு காரணமாக, நஷ்டத்தை தவிர்க்கும்நோக்கில், அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களின் அளவு கணிசமாகக் குறைந்தது. இதன் விளைவாக, கடந்த அக்டோபரில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக் கான ஏற்றுமதி, 11.8 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. சுமார் 2 லட்சத்து 87 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி குறைந்திருக்கிறது. இதன்மூலம் வர்த்தகப் பற்றாக்குறை (Trade Deficit) 3 லட்சத்து 47 ஆயிரம் கோடி என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தில் ஆக்கிரமிப்பு, இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல், எல்லையில் படைகள் குவிப்பு உள்ளிட்ட பல்வேறு எல்லைப்பிரச்சனைகளால், சீனப் பொருட்களை வாங்கக்கூடாதென்றும், சீன ஆப்புகளை தடை செய்வதென்று சீனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்துவந்தது. இச்சூழலில், அமெரிக்க அதிபரால் அதிரடியால் ஏற்பட்ட திடீர் பொருளாதாரப் பின்னடைவை எதிர்கொள்ள, எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கொள்கையை இந்தியா கையிலெடுத்துள்ளது. இதேபோல் சீனாவுக்கும் அமெரிக்காவின் அதிரடி வரிவிதிப்புகளால் பொருளாதாரத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. சீன இறக்குமதியாளர்கள் அமெரிக்காவை பெரிதும் நம்பியிருந்த சூழலில், சீனாவுக்கு 10 சதவீத லிபரேஷன் டே வரி, 25 சதவீத பரஸ்பர வரி மற்றும் ரஷ்ய எண்ணெயை வாங்கியதன் காரண மாக 25 சதவீத அபராதம் விதித்ததால், சீனாவின் ஏற்றுமதியும் பெருமளவு பாதிப்பை எதிர்கொண்டது. எனவே இதை சமாளிக்க, இந்தியாவோடான வர்த்தகத்தை மேம்படுத்த சீன அதிபர் ஜி ஜின்பிங் முடிவெடுத்தார்.
சீனாவுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி விகிதம், கடந்த ஆகஸ்ட்டை விட 33% அதிகரித்துள்ளது. இதுவே கடந்த அக்டோபரில் 42% அளவுக்கு அதிகரித்தது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு $1.46 பில்லியனாக உயர்ந்துள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தோடு ஒப்பிடும்போது, $1.09 பில்லியனாக இருந்தது. ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான 7 மாதங்களில், $10 பில்லியன் டாலர் அளவுக்கு சீனாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது இது 25 சதவீதம் அதிகமாகும். இப்படியாக, அமெரிக்காவால் ஏற்பட்ட இழப்பை சீனாவின்மூலம் ஈடுகட்ட முயன்று வருகிறது இந்தியா!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/24/indo-china-2025-11-24-16-45-51.jpg)