சிட்கோ மூலமாக செயல்படும் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்களின் பராமரிப்புப் பணிகளை அந்தந்த அசோசியேஷன் செய்துவந்த நிலையில், தற்போது அதனை மாற்றி அந்தப் பணியை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கவுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சென்னையிலுள்ள அம்பத்தூர், வில்லிவாக்கம், கிண்டி, பெருங்குடி போன்ற இடங்களில் சிட்கோ மூலமாக இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்கள், ஆரம்ப காலகட்டங்களில் அதற்கான கட்டமைப்பு வசதிகளுக்காக ஒன்றிய அரசு 75 சதவிகிதமும், அசோசியேஷன் 15 சதவிதமும், தமிழக அரசு 10 சதவிகிதமும் நிதிப் பகிர்வு செய்து கட்டமைப்பு வசதிகளை மேற்கொண்டுவந்தனர். பிறகு எஸ்டேட்களில் இயங்கிவரும் நிறுவனங்களிடமே பணம் வசூல்செய்து மிகச்சிறப்பாக பராமரிப்பு பணிகளைச் சீரமைத்துவந்தனர்.
சென்னை பெருங்குடியிலுள்ள சிட்கோவில் முதல்முறையாக அசோசியேஷன் வசமிருந்த பராமரிப்பை சென்னை மாநகராட்சி தன்வசம் எடுத்துக்கொண்டது. பிறகு பல இடங்களிலும் சென்னை மாநகராட்சியின்கீழ் கொண்டுவரப்பட்டு பராமரிப்பு செய்யப்பட்டு வந்துள்ளது. ஆனால் மாநகராட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு பராமரிப்பு சரிவர இல்லாத காரணத்தால் பல நிறுவனங்கள் மூடப்பட்டு, பின்பு வேறுவழியில்லாமல் மீண்டும் அசோசியேஷனே பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவிலே மிக முக்கியமான 47 இன்டஸ் ட்ரியல் எஸ்டேட்களில் 12 எஸ்டேட்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவற்றில் அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டும் ஒன்றாகத் திகழ்கிறது. அப்படிப்பட்ட இந்த அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் 1,450 ஏக்கர் பரப்பளவில் 1,600 நிறுவனங்கள், அதில் பணிபுரியும் 3 லட்சம் பணியாளர்கள் எனச் சிறப்பாக இயங்கிவருகிறது. இந்த 3 லட்சம் பணியாளர்களில், 1 லட்சம் பேர் பெண்கள்.
1964-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், சாலை வசதி போன்ற எந்த அடிப்படை வசதிகளும் பாதுகாப்பும் இல்லாத பகுதியாக இருந்தது. அதனைத் தொடர்ந்து திருமழிசை, திருமுடிவாக்கம், அம்பத்தூர் அசோசியேஷனாக உருவெடுத்தது. ஒன்றிய அரசு கொண்டுவந்த திட்டத்தின் மூலமாக 2004-ஆம் ஆண்டு ஒன்றிய அரசு 75 சதவிகிதம் நிதியும், மாநில அரசு 10 சதவிகிதமும், அசோசியேஷன் 15 சதவிகிதம் நிதியும் என 65 கோடி நிதியின் மூலமாக, சாலை தொடங்கி சி.சி.டி.வி. கேமரா பாதுகாப்பு வரை அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையாக எல்லோரும் பாராட்டும் வகையில் செய்து முடிக்கப்பட்டது.
அடுத்தடுத்த ஆண்டுகளில் பராமரிப்புப் பணிகளுக்காக ஒரு ஏக்கருக்கு 15 ஆயிரம் என வசூலித்து அய்மாவே பராமரிப்பு வசதிகளைச் செய்து வந்துள்ளனர். பிறகு ஏக்கருக்கு 15 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் வரை உயர்த்தி 2024 வரை நடைமுறைப்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், அம்பத்தூர் எஸ்டேட்டில் குப்பை எடுக்கும் பணிக்கான டெண்டரை முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் கேட்டு கிடைக்காத காரணத்தால் அவர் கடுப்பில் இருந்ததாகவும் தெரிகிறது. இந்த சூழ்நிலையில்தான் 2024 செப்டம்பர் மாதம் சிட்கோ ஒரு தீர்மானம் நிறைவேற்றி, அதனை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க முடிவெடுத்தது, இதனால் சர்ச்சையும் பெரிதாக கிளம்பியுள்ளது.
நிர்வாகப் பணியை மாநகராட்சி பார்த்துக் கொண்டால், நல்லதுதானே என கேட்கலாம். நிச்சயம் மாநகராட்சி நிர்வாகம் இன்டஸ்ட்ரியல் நிர்வாகத்தை சரிவரப் பார்க்காது என்பதே தொழிற்பேட்டையில் அங்கம் வகிக்கும் அனைவரின் அபிப்ராயமாக உள்ளது. அதற்கு உதாரணமாக ஏற்கனவே கிண்டி, பெருங்குடி போன்ற பல பகுதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்களில் சரிவர பராமரிப்பு செய்யாத காரணத்தால் பல நிறுவனங்கள் வெளியேறியுள்ளன. இதுநாள்வரையிலும் பாடி இண்டஸ்ட்ரியில் எஸ்டேட் பகுதியிலுள்ள நிறுவனங் கள் சாலை அமைக்கச்சொல்லி பல முறை முறையிட்டும் அரசு அமைத்துத் தரவில்லை. இதனால் அந் நிறுவனத்திற்கு ஆர்டர் கொடுக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், உட்கட்டமைப்பு சரியில்லையென்று ஆர்டர் தர மறுக்கின்றன. இப்படி ஒவ்வொரு முறையும் அரசிடம் அந்தப் பகுதி நிறுவனங் கள் முறையிட்டும் செய்யாமல் நாட்களைக் கடத்தும். இதையெல்லாம் முன்கூட்டியே சிந்தித்துதான், எங்கள் பணியை எங்களிடமே விட்டுவிடுங்கள் என்கிறோம்.
மழை, வெள்ளம் வரும்போது மாநகராட்சி நிர்வாகம் எஸ்டேட்டிலுள்ள எந்திரங்கள் நீரில் மூழ்கியபிறகே வருவார்கள். அதுவே எங்களிடம் நிர்வாகம் இருந்தால் நாங்களே முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கமுடியும். மாநகராட்சியிடம் நிர்வாகத்தை ஒப்படைத்தால், ஒரு பிரச்சனையுமில்லை என்பதுபோலத் தெரியும். நிர்வாகம் மாறும்போதுதான் பிரச்சனைகள் புரியும். நாங்களே பராமரிப்புப் பணிகளைப் பார்த்துக்கொள்வதே எங்களுக்குச் சிறந்தது''” என அய்மா அசோசியேஷனைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதுகுறித்து தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசனிடம் கேட்டபோது, "சிட்கோ பணி பராமரிப்பு சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதியும் 40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. நிச்சயம் மாநகராட்சி சிறப்பாகச் செய்யும். இதற்கு முன்பு அய்மாவும் நிறுவனங்களிடமிருந்து பணம் வசூல்செய்துதான் பராமரித்து வந்தனர். அதனை அரசு செய்தால் அவர்களுக்கு என்ன சிக்கல் வரப்போகிறது? அவர்களுக்கு இதனால் பணிச்சுமைதானே குறையும். இன்னும் சிறப்பாக அவர்களின் பணியில் கவனம்செலுத்த இது உதவியாகத்தானே இருக் கும்''’என்கிறார்.
-சே
படங்கள்: ஸ்டாலின்