பூமியின் நுரையீரலே கெட்டு அழியப் போகிறது என்று தெரிந்தால் எப்படி பதறித் துடிக்கவேண்டும். அப்படித்தான் பதறித்துடிக்கிறார்கள் சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், விஞ்ஞானிகளும்.
இருபது சதவிகித ஆக்சிஜனை பூமிக்கு உற்பத்தி செய்து தருவதால் பூமியின் நுரை யீரலாக கருதப்படும் அமேசான் காடுகள் கடந்த எட்டு மாதங் களாக எரிந்து புகைவதால்தான் இத்தகைய பதற்றம். காடுகளை அதிகப்படுத்தினால்தான் ஓரளவிற்காவது புவி வெப்ப மயமாதலை தடுக்க முடியும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து வரும் நிலையில்... பூமியின் முக்கிய காடுகளான அமேசான் காடுகள் பற்றி எரிவது அதிர்ச்சி யளிக்கிறது.
இந்த காட்டுத்தீயானது இயற்கையானது அல்ல. திட்ட மிட்ட செயலாகவே இருப்பது தான் வேதனை. அமேசான் காடுகள் அழிப்பு என்பது மீட்டெடுக்க முடியாத நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறது. பிரேசில் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற அமேசான் காடுகள் அழிப்பை விட இந்தக் கோடையில் நடைபெற்ற அழிப்பு அதிகமாக வுள்ளது.
அமேசான் காடுகள் அழிப்பு கடந்த பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. இது உச்சத்திற்கு சென்று 1995-ஆம் ஆண்டு சுமார் 29,500 சதுர கி.மீ. அளவிற்கு அழிக்கப்பட்டது. அது படிப் படியாக குறைந்து 2012-ஆம் ஆண்டு குறைவான காடுகளே அழிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. 2012-ஆம் ஆண்டிற்குப் பிறகு இது அதிகரிக்கத் துவங்கிவிட்டது.
பிரேசில், பெரு, கொலம்பியா, வெனிசுலா, ஈகுவடார், பொலிவியா, கயானா, சுரினாம், பிரெஞ்சு கயானா ஆகிய 9 நாடுகளில் அமேசான் காடுகள் பரந்து விரிந்திருந்தாலும், பிரேசில் நாட்டில்தான் 58.4 சதவீதம் அமேசான் காடுகள் அமைந்துள்ளன. "அமேசான் காடுகளை அழித்து பொருளாதார வளர்ச்சி பெருக்குதல்' என்ற முழக்கத்தை முன்வைத்து, அந்த ஒற்றை முழக்கத்திற்காகவே பிரேசில் அதிபர் தேர்தலிலும் வெற்றிபெற்றார் சயீர் போல்சனார். அவர் அதிபர் ஆனதிலிருந்து அமேசான் காடுகள் அழிப்பு இரட்டிப்பாக இருக்கிறதாம்.
""வலதுசாரி சிந்தனை கொண்ட அரசுகள் எங்கே ஆட்சிக்கு வந்தாலும் அங்கே அழிவுதான் என்பதற்கு சரியான உதாரணமாக இருப்பது போல்சனராவின் பிரேசில் அரசாங்கமும், அமேசான் காடுகள் அழிப்பும்''’’என்கிறார் சூழல் செயல்பாட்டாளர் சுந்தர்ராஜன். அவர் மேலும், ""காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அமேசான் காடுகளை காப்பது முக்கியத்துவம் பெறுகிறது. காடுகள் அழிக்கப்படுவது அல்லது தீக்கிரையாவதன் மூலம் அந்த காடுகள் தேக்கிவைத்துள்ள கார்பன் வெளியேறுவதுடன், உலகம் வெளியிடும் கார்பனை உள்வாங்கும் சக்தியும் குறைந்து, காலநிலை மாற்றத்தை யும் துரிதப்படுத்தும். அமேசான் காடுகளுக்கு இழைக்கப்படும் தீங்கு இப்பூமிக்கு எதிரான குற்றம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மானுடத்திற்கும் எதிரான குற்றமும் கூட''’’என்கிறார்.
நீர்வளம் அதிகமுள்ள பிரேசில் தனது மின் தேவையில் 80 சதவிகிதத்தை அனல்மின் நிலையங்கள் வாயிலாகவே பூர்த்திசெய்து வருகிறது. மேலும் புதிய அனல்மின்நிலையங்கள் அமைக்கவும், அவற்றை தனியார் வசம் ஒப்படைக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டதால் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளை சேர்ந்த முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. அமேசான் காடுகளில் உள்ள நதிகளில் அணைகள் ஏற்படுத்தி நீரை தேக்கிவைத்து மின் உற்பத்தி செய்வதே திட்டத்தின் நோக்கம். இதனால் கடந்த 6 ஆண்டுகளாக காடுகள் அழிக்கப்பட்டு 40-க்கும் மேற்பட்ட அணைகள் கட்டும் பணி நடந்துள்ளது. உலகத்தின் நன்னீரில் 20 சதவிகிதத்தை கொண்டுள்ளதால் அமேசானில் பல உணவு தயாரிப்பு நிறுவனங்களும், கார் நிறுவனங்களும் தங்களது தொழிற்சாலைகளை அமைக்க விரும்புகின்றன. இத்தகைய காரணங்களுக்காக அமேசான் காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டு வருகின்றன.
""அமேசான் காடுகள் தீ விபத்தினால் பாதிக் கப்பட்ட அனைத்து நாடுகளுக்கும் உதவி செய்ய உலகத் தலைவர்கள் முன்வந்துள்ளனர்''’’என்று ஜி7 மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்துள்ளார். அமேசான் காடுகளை பாதுகாக்க ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டி காப்ரியோ தலைமையில் "எர்த் அலையன்ஸ்' எனும் அமைப்பும் தொடங்கப்பட்டுள்ளது. அமேசான் காடுகளை காக்க இந்த அமைப்பின் மூலம் நிதியும் திரட்டப்பட்டு வருகிறது.
""ஒரு காடு அழியும்போது மரங்கள், தாவரங் கள், மூலிகைகள், பறவைகள், பூச்சிகள், விலங்குகள், புழுக்கள், நுண்ணுயிர்கள் அழிந்து அளவிட முடியாத நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன. காடுகள் அழிவதால் நேரடி பாதிப்புக்கு உள்ளாவது விலங்கு கள்தான். இதனால்தான் அவை தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் ஊருக்குள் வந்துவிடுவதால் விலங்குகள், மனித மோதல் அதிகரிக்கிறது'' என்கிறார் வன அலுவலர் டி.வெங்கடேஷ்.
""நமக்குத் தேவையற்ற கார்பன்-டை- ஆக்சைடை உள்வாங்கிக்கொண்டு நமக்கு தேவையான ஆக்சிஜனை அளிக்கின்றன காடுகள். ஆக்சிஜனை நாம் செயற்கையாக உற்பத்தி செய்ய முடியாது. ஒரு மரம் ஓராண்டுக்கு 40 மனிதர்கள் சுவாசிக்க தேவையான ஆக்சிஜனை தருகிறது. காடுகள் நமது கவசம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்''’என்கிறார் அவர்.
பிரேசில் அதிபர் சயீர் போல்சனராருக்கு புத்தி வந்தால் அமேசான் காடுகள் பற்றி எரியாதிருக்கும். கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், சாமியார்களுக்கும் புத்தி வந்தால் இந்தியக் காடுகளும் தப்பிக்கும்.
-தொகுப்பு: கதிரவன்