மக்கள் பணத்தை சுருட்டும் அரசியல்வாதி களின் கதைகளையே கேட்டு அலுத்துப்போன நமக்கு, ஒரு அமைச்சரைப் பற்றி அணிவகுத்து வரும் செய்திகள் ஆச்சரியத்தைத் தருகின்றன.
யார் அந்த அமைச்சர்?
தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரிய சாமிதான் அந்த ஆச்சரிய நாயகர்.
பொதுவாகவே, "நம்ம ஐ.பி.'’என்று திண்டுக்கல் மக்களால் உரிமையுடன் அழைக்கப்படும் அமைச்சர் ஐ.பி., தொகுதி மக்கள் நலனுக்காக தொகுதி நிதி யோடு தனது சொந்தப் பணத்தையும் செலவு செய்து, தனக்கென்று ஒரு இமேஜை உருவாக்கி வருகிறவர்.
இந்த இமேஜ்தான், கடந்த சட்டமன்றத் தேர் தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ம.க. வேட் பாளர் திலகபாமா உட்பட அத்தனை வேட்பாளர் களையும் டெபாசிட் இழக்கச் செய்தது. சட்டமன்ற வரலாற்றிலேயே தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட எந்த ஒரு வேட்பாளரும் டெபாசிட் பெறாத அளவிற்கு, 1 லட்சத்து 43ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் 6-வது முறையாக வெற்றி பெற்றார் ஐ.பி. அதைக்கண்டு முதல்வர் ஸ்டாலினும் கூட அவரை வெகுவாகப் பாராட்டினார்.
இது குறித்து தி.மு.க. பிரமுகர்கள் நம்மிடம் பேசும்போது, "ஐ.பி.யின் மகத்தான வெற்றிக்கு பரிசாக, அவருக்கு முதல்வர் ஸ்டாலினும், பவர்ஃபுல் துறையைக் கொடுப்பார் என தொகுதி மக்களும், எங்கள் கட்சிப் பொறுப்பாளர்களும் எதிர்பார்த்தோம். ஆனால் அவருக்கு கூட்டுறவுத் துறை ஒதுக்கப்பட்டதைக் கண்டு மனம் வருந்தினோம். இதில் ஐ.பி.க்கும் மன வருத்தம் உண்டு. ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட கூட்டுறவுத் துறையை சிறந்த துறையாகக் கொண்டுவருவேன் என்று அவர் அதிரடியாகக் களமிறங்கியதால், 500 கோடிக்கு மேல் கூட்டுறவுத்துறையில் நடந்த முறைகேடுகளையும், ஊழல்களையும் அவர் கண்டுபிடித்திருக்கிறார்.
அதோடு, விவசாயிகளுக்குப் பயிர்க்கடனை எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனால் தொகுதி மக்கள் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் பலகோடி ரூபாய் அளவிற்கு, பயிர்க் கடன் பெற்று விவசாயத்தில் கவலையின்றி இறங்கியிருக்கிறார்கள். இதன்மூலம் சிறந்த துறையாக தனது துறை யை அவர் உருவாக்கி வருகிறார். தொகுதி மக்களுக்காக ஏற்கனவே அண்ணா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியை கொண்டு வந்த அவரிடம், ஒரு கலைக் கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கையை தொகுதி மக்கள் தேர்தலின்போது வைத்தார்கள். தி.மு.க. ஆட்சி வந்ததும் இந்த கோரிக்கையை, அவர் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றதால், கடந்த சட்டமன்றக் கூட் டத் தொடரின்போது பத்து கல்லூரிகளை அறிவித்தார் முதல்வர். அந்தப் பட்டி யலில், "ஆத்தூர் தொகுதி யில் கூட்டுறவுத்துறை சார்பில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும்' என முதல்வர் அறிவித்தார். இப்படி தொகுதி மக்களை எல்லா வகையிலும், பூரிக்க வைத்துவருகிறார் ஐ.பி.''’என்றார்கள் மகிழ்ச்சியோடு.
இன்னொரு தி.மு.க. மாவட்ட நிர்வாகியோ, "முதல்வர் ஆத்தூரில் கல்லூரி அமைக்கப்படும்னு அறிவித்த உடனே எங்கள் ஐ.பி., கல்லூரிக்கான இடத்தைத் தேடினார். அரசு நிலம் எதுவும் சரியான இடத்தில் கிடைக்கவில்லை. அதனால் வக்கம்பட்டி அருகே விவசாய மக்கள் விற்க முன்வந்த எட்டு ஏக்கர் நிலத்தை 3 கோடி ரூபாய்க்கு தன் சொந்த பணத்தைக் கொடுத்து அமைச்சர் ஐ.பி. கல்லூரிக்காக வாங்கியிருக்கிறார். இப்படி ஒரு மனம் யாருக்கு வரும்?'' இப்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுவதற்கான பணிகளும் ஆத்தூரில் தொடங்கி விட்டன.
இதுகுறித்து மக்களிடம் பேசிய ஐ.பி., "விவசாய மக்கள் மற்றும் ஏழைபாளைகளின் பிள்ளைகள் படிப்பதற்காகவே முதன்முதலில் கூட்டுறவுத்துறை மூலம் இந்த கல்லூரியைக் கட்டுகிறோம். அதுவும் 100 கோடி செலவில் இது மிக பிரம்மாண்டமாக, தனியார் கல்லூரிகளை மிஞ்சும் அளவிற்கு சகல வசதிகளோடும் அமையும்'' என்றார்.
இதேபோல், "தனது சொந்த பணம் ரூ.1 கோடியை செலவு செய்து ஆத்தூர் நீர்த்தேக்கம் முதல் பாலம் ராஜக்காபட்டி வரை உள்ள 27 கி.மீட்டர் தூரத்துக்கு கொடகனாறு ஆற்றை தூர்வாரிக் கொடுத்திருக் கிறார். இதனால் விவசாயி களின் இதயத்தைக் கொள்ளையடித்திருக்கிறார். மேலும், தொகுதி மக்களின் வளர்ச்சிக்காக 200 கோடிக்கு மேல் பல திட் டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார். அதுபோல் கல்வி, வேலை வாய்ப்பு என தொகுதி மக்கள் மட்டுமல்லா மல் மாவட்ட அளவில் இருக்கக் கூடிய மக்களும் வீடு தேடி வந்து அமைச்சரிடம் குறைகளையும், கோரிக்கைகளையும் வைக்கிறார்கள். அதை உடனடியாக அதிகாரிகளிடம் பேசி நிறைவேற்றிக் கொடுக்கிறார். அதோடு, ஏழை மாணவ, மாணவி களின் படிப்பு செலவிற்கும் பண உதவிகளை தன்னால் முடிந்த அளவிற்கு செய்து வரு கிறார்''’என்றதோடு அமைச்சரின் பல்வேறு நலப்பணிகளையும் பட்டியலிட்டு மகிழ்ந்தார்.
கலைஞரால் பெரிதும் பாராட்டப்பட்ட ஐ.பி.க்கு, இன்னும் முதல்வர் ஸ்டாலின் பவர்ஃபுல் துறையை வழங்கவில்லையே என்ற ஆதங்கம் தொகுதி முழுக்க விரவி நிற்கிறது. எனினும், ஐ.பி., மக்கள் மத்தியில் பெரும் மதிப்பைப் பெற்று வருகிறார். மற்றவர்களும் இவரைப் பின்பற்று வார்களா?
-சக்தி