லாரி டிரைவரான கவுண்டமணி யிடம் அதே லாரியில் க்ளீனராக இருக்கும் செந்தில் ""அண்ணே ரோட்டுக்கு அங்கிட்டு கண்ணுக்கெட்டுற தூரம் வரை இருக்கிற வயலு எங்க தாத்தாவோடது, இங்கிட்டு இருக்கிற வாழைத்தோப்பெல்லாம் எங்க அப்போவோடது''ன்னு அடிச்சு விடுவாரு.
பதிலுக்கு கவுண்டமணி, ""தம்பி, பொய் சொல்லலாம் தப்பில்ல… அதுக்காக ஏக்கர் கணக்குல பொய் சொல்லக்கூடாது'' என கவுன்ட்டர் கொடுப்பாரு.
15 லட்சத்திலிருந்து 20 லட்சம் கோடி!
அதுபோலத்தான் நம்ம பிரதமர் மோடியும். ""இந்திய பணமுதலைகள் சுவிஸ் வங்கியில் பதுக்கியிருக்கும் கருப்புப் பணத்தை அலேக்காகத் தூக்கிட்டு வருவேன், ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போடுவேன்'' என 2016-ல் பிரதமர் ஆவதற்காக சர்வ சாதாரணமாக சொன்னார்.
அந்த 15 லட்சம் என் னாச்சுன்னு இதுவரை நாமளும் கேட்கல, நம்ம பிரதமரும் கண்டுக்கல. நிறைவேறாத அந்த 15 லட்சம் கணக்குதான் கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து இந்த 2020-ல் 20 லட்சம் கோடி என்ற பிரம்மாண்ட பொய்யாக உயர்ந்து நிற்கிறது.
ஏப்ரல் 14-வரையிலான இரண்டாம்கட்ட ஊரடங்கை மோடி அறிவித்தபோதே முன் னாள் நிதி அமைச்சர் ப.சிதம் பரம், ""எந்தவித திட்டமிடலும் இல்லாமல் ஊரடங்கை நீட்டிப்பதால் எந்தப் பயனும் இல்லை. ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வங்கிக் கணக்கில் தலா 5,000 போட்டாலே 65 ஆயிரம் கோடிதான் செலவாகும்'' என புள்ளிவிபரத்துடன் சொன்னார்.
""தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரின் வங்கிக் கணக்கிலும் 5,000 போட்டால் அவர்களின் வாழ் வாதாரத்திற்கு உதவியாக இருக்கும்'' என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் எடப்பாடியை வலியுறுத்தினார்.
என் வழி தனி வழி!
இந்தியாவில் யார் என்ன சொன்னாலும் எப்படிச் சொன்னாலும் என் வழி தனி வழி என்பதுதான் மோடியின் பாலிஸி. மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில் மே 12-ஆம் தேதி நாட்டு மக்களுக்கு டி.வி. மூலம் உரை நிகழ்த்தினார் பிரதமர் மோடி.
""ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களை பாதுகாப்பதில் எனது அரசு உறுதியாக இருக்கிறது. 20 லட்சம் கோடிக்கான திட்டங்களை நாளை (மே 13) நிதியமைச்சர் அறிவிப்பார். நாட்டின் ஜி.டி.பி.யில் (மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில்) 10% அளவிற்கு சலுகைகள் இருக்கும்'' என பெருமிதமாகச் சொன்னார் பிரதமர் மோடி.
ஆஹா நாசிக்ல மிஷினை ஸ்டார்ட் பண்ணப் போறாரு. 20 லட்சம் கோடிய அச்சடிச்சு அள்ளி வழங்கப்போறாரு மோடி என மக்களுக்கெல்லாம் (நமக்கும்தான்) மகிழ்ச்சி கரைபுரண்டோடியது.
நாங்க ரெடி! நீங்க ரெடியா?
பிரதமர் மோடி சொன்னபடியே மே 13-ஆம் தேதி மீடியாக்களைச் சந்தித்தனர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இணையமைச்சர் அனுராக் தாக்கூரும்.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு எந்தவித ஜாமீனும் இல்லாமல் கடன் வழங்கப்படும். இதற்கான சிறப்பு தொகுப்பாக 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும். சிறு-குறு தொழில்களுக்கான வரம்பு உயர்ந்தப்படும். 12 மாதங்கள் கழித்து கடன் தவணை கட்டினால் போதும் என்பதுதான் அன்றைய அவரது அறிவிப்பின் ஹைலைட். அடுத்தடுத்த நாட்களும் அதிரடி அறிவிப்புகள் தொடர்ந்தன.
மே-14 : விவசாயிகளுக்கு 2 லட்சம் கோடி, சாலையோர வியாபாரிகளுக்கு கடன், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 2 மாதம் இலவச உணவுப் பொருட்கள்.
மே-15 : மீனவர்கள் நலன், வேளாண் உள் கட்டமைப்பை மேம்படுத்த மொத்தம் 1 லட்சம் கோடி, மாநிலங்களுக்கு கடன் வரம்பு உயர்வு என பலவகை செலவினங்களையும் சேர்த்து மொத்தம் 20 லட்சம் கோடிக்கு கணக்கு காட்டிவிட்டார் நிர்மலா சீதாராமன்.
ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சமாக ரயில்வே துறையில் தனியார் முதலாளிகள் நுழைந் தனர். ஒட்டுமொத்த விமானத் துறையையும் விற்றுவிட்டனர். அதன்பின், மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யை கூறுபோட்டு விற்க முடிவு செய்தது மோடி சர்க்கார்.
இப்போது நாடே ஊரடங்கால் நடுநடுங்கிக்கொண் டிருக்கும்போது, பாதுகாப்பு, அணுசக்தி, விண்வெளி, நிலக்கரி, மின்சாரம் போன்ற அனைத்துத் துறைகளிலும் தனியார் முதலீடுகள் ஈர்க்கப்படும் என மே 16-ல் உற்சாகமாக அறிவித்துவிட்டார் நிர்மலா சீதாராமன். அதாவது, ஆகாயத்திலிருந்து பாதாளம் வரைக்கும் எல்லாவற்றையும் விற்க நாங்க ரெடி, வாங்குறதுக்கு நீங்க ரெடியா? என்ற மோடி சர்க்காரின் பாலிஸியைப் பார்த்து அனைத்து மக்களும் அதிர்ச்சியாகினர்.
கோவிட்-19, இந்தியா கோவிந்தா
""அடப்பாவிகளா… கொஞ்சம் கூட கூச்சம் நாச்சம் இல்லாம 20 லட்சம் கோடி உதவின்னு உதார் விடுறாங்களே!…இதே நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் சொன்னதில் பாதியை இப்போது புதுசாக சொல்வதுபோல் சொல்லியிருக்கிறார். அதைவிடக் கொடுமை மறைந்த நிதியமைச் சர் அருண்ஜெட்லி 2014-ல் தாக்கல் செய்த பட் ஜெட்டில் சொன்னதையும் சேர்த்துச் சொல்லி, அதனை கொரோனா பேரிடர் கால சிறப்புத் தொகுப்புன்னு அள்ளிவிட்டிருக்கிறார் நிர்மலா சீதாராமன்.
“20 லட்சம் கோடி சிறப்புத் தொகுப்பை அறிவிக்க வேண்டும் என முதல் ஊரடங்கு அறிவிப்பின்போதே வலியுறுத்தினேன். 50 நாட் கள் கழித்து பிரதமர் அறிவித்தபோது, நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், இந்த அறிவிப்புகளுக்குப் பின், இவர்களின் கணக்குப்படி பார்த்தால் இன்னும் 25 லட்சம் கோடி கடன் வாங்கியே ஆகவேண்டும். உலகம் இப்ப இருக்கிற நிலையில் இந்தியாவுக்கு எந்த நாடும் கடன் கொடுக்காது'' என்கிறார் தமிழகத்தின் பிரபல பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்.
“மோடி சொன்ன ஜி.டி.பி.யில் 10% என்பது சுத்த ஹம்பக். வெறும் 0.91% என்பதுதான் உண்மை. அதன்படி இப்போது அறிவித்திருப்பது 20 லட்சம் கோடி அல்ல, 1 லட்சத்து 86 ஆயிரம் கோடிதான்’ என ஆணித்தரமாக விளக்குகிறார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம். முன்னாள் தொழில்துறை அமைச்சரான காங்கிரசின் ஆனந்த் சர்மாவும் ரிசர்வ் பேங்க் முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜனும் இதே கருத்தைத்தான் சொல்கிறார்கள்.
பல்வேறு புள்ளிவிபர நிறு வனங்கள் வங்கிகளின் நிதிநிலையை கண்காணித்துவரும் பொருளாதார நிபுணர்கள் அனைவரும் சொல்வது ஜி.டி.பி.யில் 1.2% அளவிற்கே சிறப்புத் தொகுப்பு அறிவிப்புகள் உள்ளன என்பதுதான். மொத்தத்தில்… இந்திய பொருளாதாரம் படுமோசமாக வீழ்ச்சியடையும் என்பதே வல்லுநர் களின் ஒருமித்த குரலாக இருக்கிறது.
மாநிலங்களை சீண்டிய நிபந்தனைகள்
“ப.சிதம்பரமும் ஆனந்த் சர்மாவும் காங்கிரஸை சேர்ந்தவர்கள். புள்ளிவிபர நிறுவனங்கள் மோடிக்கு ஆகாதவை. அதனால் குறை சொல்லத்தான் செய்வார்கள்’என தேசப் பற்றாளர்கள் துள்ளிக் குதிப்பார்கள்.
ஆனால் மோடியின் தற்சார்பு அணியில் (தற்சார்பு பொருளாதாரம் என்ற வார்த்தையைக் கண்டுபிடித்ததும் மோடிதான்) இருக்கும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவோ, ""நிர்மலா அறிவித்த பொருளாதாரர சிறப்பு திட்டங்கள் வெறும் ஏமாற்று வேலை, துரோகம், சர்வாதிகார மனப்பான்மை, மாநிலங்களை மத்திய அரசு பிச்சைக் காரர்களைப் போல் நடத்துகிறது'' என சீறித் தள்ளிவிட்டார்.
அதுபோல் "எதுக்கும் அசர மாட்டான் இந்த ஏகாம்பரம்' என வடிவேலு பாணியில் இருக்கும் நம்ம முதல்வர் எடப்பாடியையே மோடி டென்ஷனாக்கிவிட்டார்.
""சீர்திருத்த நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தும் முன்பு மாநில அரசுகளுடன் ஆலோசித்திருக்க வேண்டும். இப்போது மாநில அரசு கூடுதலாக கடன்பெற வேண்டுமானால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தை ரத்து செய்யவேண்டும் என்பதை தமிழக அரசால் ஏற்றுக் கொள்ள முடியாது'' என எகிறி அடித்திருக்கிறார் எடப்பாடி.
"அடப்பாவிகளா கல்லு மாதிரி இருந்த மனுஷனையே கலங்கடிச்சிட்டீங்களேய்யா' என அ.தி.மு.க.வின் தொண்டர்கள் வாய்விட்டு சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். மம்தா, சரத்பவார் எனப் பல தலைவர்களும், கொரோனா பேரிடரைக் காரணமாக்கி மோடி அரசு மேற்கொள்ளும் மாநில உரிமைகள் பறிப்பைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.
20 லட்சம் கோடியா? அப்படியா?
விவசாயிகளுக்கு 2 லட்சம் கோடி அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர். உங்களுக்கு கிடைக்குமா? என வறட்சி மாவட்டமான இராமநாதபுரம், சாயல்குடியைச் சேர்ந்த நாகேந் திரனிடம் கேட்டோம்.
""அட ஏங்க நீங்க வேற வயித்தெரிச்சலை கிளப்புறீங்க. தினக்கூலிகள், ஏழை விவசாயிகள் அப்படிங்கிற ஒரு இனம் இருப்பது மோடிக்கும் நிர்மலா சீதாராமனுக்கும் தெரியல போல. இங்க எடப்பாடியும் ஏகப்பட்ட வளர்ச்சி நிதிகளை அறிவிக்கிறாரு. ஆனா லோக்கல் வி.ஏ.ஓ.க்களிடம் கேட்டா அப்படி எதுவும் வரலையேங்கிறாங்க. மொத் தத்துல ஏழைகள் பாடு ததிகினத் தோம்தான்'' என்கிறார்
அதே மாவட்டத்தின் கடல்கிராமம் ரோச்மாநகர் மீனவர் ஆர்.சூசையோ, ""20 லட்சம் கோடியா... அப்படியா? ஏதோ டி.வி.யில பார்த்தோம். பேப்பர்லயும் போட்டுருந்தாய்ங்க, அம்புட்டுத்தான். மத்தபடி பூரா பணத்தையும் பெரிய பெரிய திமிங்கலங்கள் முழுங்கிரும். எங்கள மாதிரி அடிமட்ட மீனவர்களுக்கு அயிரைமீன்கூட கிடைக்காதுங்க'' என்றார் விரக்தியுடன்.
ஸ்ரீ இன்ஜினியரிங் என்ற கட்டு மான நிறுவனத்தின் உரிமையாளரான மதுரை சீனிவாசன் நம்மிடம் பேசும்போது, ""ஏற்கனவே பல ஆயிரம் கோடியை கடன் வாங்கி ஆட்டையைப் போட்டுவிட்டு நாட்டுவிட்டே ஓடினவனெல்லாம் பினாமி கம்பெனிகளை ஆரம்பிப்பான். சில லட்சம் கோடிகளை சுருட்டுவான், கம்பி நீட்டுவான். இதுதான் நடக்கப்போகுது'' என்கிறார் டென்ஷனாக.
மோடியின் உளவியல் டெக்னிக்!
“ஊரடங்கிலிருந்து மீள வழி தெரியாத தால் நாடு தத்தளிக்கும்போது வேலை யில்லாத் திண்டாட்டம் விஸ்வரூபமெடுக் கப்போகிறது’’என்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி. “மக்களிடம் நேரடியாக பணப்புழக்கம் இல்லாதவரை எந்த ஒரு சிறப்புத் திட்டத்தாலும் பலன் இல்லை’என்கிறார் மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி.
“மோடி எப்போதுமே தன்னிச்சையாக முடிவெடுப்பார். அதைச் செயல்படுத்த நீங்கள்தான் உதவவேண்டும் என மக்களின் உதவியை நாடுவார். பிரதமரே நம்மிடம் உதவி கேட்கிறார் என பவர்ஃபுல்லாக ஸ்ட்ராங்காக உணர்வார்கள். பிரதமருக்கு நாம உதவியே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு வருவார்கள். இப்படி மோடி அமல்படுத்தியதுதான் பண மதிப்பிழப்பு. ஸ்வச் பாரத் வரி (தூய்மை இந்தியா) ஜி.எஸ்.டி. வரி, ஏழைகளுக்கான க்யாஸ் மானியம் ரத்து எல்லாமே. மக்களின் இந்த உளவியல் சிக்கலை உடைப்பது சிரமம்'' என்கிறார் அரசியல் விமர்சகர் டான் அசோக்.
தற்சார்பு இந்தியா என மோடி முழங் கிய நிலையில், அவரது நிதியமைச்சர் அறிவித்த 20லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு என்பது மக்களுக்கு அல்வாவாகவும், மாநில உரிமைகளுக்கு ஆப்பாகவும், கார்ப்பரேட்டுகளுக்கு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. இது தற்சார்பல்ல, தனியார் சார்பு என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
-ஈ.பா.பரமேஷ்வரன்