"ஹலோ தலைவரே, ஆயுத பூஜை கொண்டாட்டங் கள் தொடங்கியபோதும், கரூர் நிகழ்வுகள் அதன் உற்சாகத்தைப் பரவலாகவே மட்டுப்படுத்தியிருக்கு.''”
"ஆமாம்பா, ’"பண்பெனப்படுவது பாடறிந்தொழுகல்'னு கலித்தொகை, தமிழர்களின் பண்புபற்றிப் பேசுது. அதன்படி, அடுத்தவரின் நிலைமையை உணர்ந்து அதற்கேற்ப நடந்துகொள்வது நம்மவர் இயல்பு. நீ உங்கிட்ட இருக்கும் தகவல்களைச் சொல்லு.''”
"சொல்றேங்க தலைவரே, தி.மு.க. கூட்டணி யில் உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் கள் சிலர்,’"இந்தமுறை கூடுதல் சீட்டு; ஆட்சியில் பங்கு'’ என்று முழக்கம் எழுப்பி தி.மு.க.வுக்கு டார்ச்சரைக் கொடுத்து வருகிறார்கள். இதனால் காங்கிரஸ் மீது தி.மு.க. அதிருப்தியில் இருக்கிறது. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மூலம், அக்கட்சியின் எம்.பி.க் களை 27 ஆம் தேதி, அறிவாலயத்துக்கே அழைத் தார் ஸ்டாலின். அதன்படி காங்கிரஸின் 9 எம்.பி.க் களில் கார்த்தி சிதம்பரம், சசிகாந்த் செந்தில், மாணிக்கம் தாக்கூர் ஆகிய மூவரைத் தவிர விஷ்ணுபிரசாத், ஜோதிமணி, கோபிநாத், விஜய்வசந்த், சுதா, ராபர்ட் புரூஸ் ஆகிய 6 பேர் அறிவாலயம் வந்தனர். அந்த சந்திப்பில் தி.மு.க. எம்.பி. கனிமொழியும் கலந்துகொண்டார். அப்போது காங்கிரஸ் எம்.பி.க்களிடம், ’"உங்கள் வெற்றிக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும், தி.மு.க. நிர்வாகிகளும் கடுமையாக உழைத்தது போல, சட்டமன்றத் தேர்தலில் அவர்களின் வெற்றிக்காக நீங்கள் உழைக்கவேண்டும்'’ என்று கேட்டுக் கொண்டார். இதை காங்கிரஸ் எம்.பி.க்களும் மகிழ்வோடு ஏற்றுக்கொண்டனர்.''”
"இந்தக் கூட்டத்தில் வேறு என்னவெல்லாம் பேசப்பட்டதாம்?''”
"தற்போதையை அரசியல் நிலவரம் பற்றியும், விஜய்யின் அரசியல் பற்றியும், அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி பற்றியும் காங்கிரஸ் எம்.பி.க்களின் கருத்துக்களை ஸ்டாலின் கேட்டறிந்தாராம். பின்னர் காங்கிரஸ் ஜோதிமணி பேசும்போது, ’தி.மு.க.வுடன் நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம். அப்படியிருக்கும்போது கரூரில் காங்கிரஸ் நிர்வாகிகளை தி.மு.க.வில் இணைக்கிறார்கள்’என வருத்தப்பட்டிருக்கிறார். இதைக்கேட்ட ஸ்டாலின் ‘இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது’ என சொல்லியிருக்கிறார். அப்போது, "கூட்டணிக்குள் சிக்கல்களை உருவாக்குவதுபோல, காங்கிரஸ் தலைவர்கள் சமீபகாலமாக பேசிவருவது, நம் கூட் டணிக்கு ஆரோக்கியமானது அல்ல'’ என்று ஸ்டா லின் அழுத்தம் கொடுத்துச் சொல்ல, ’"சம்மந்தப் பட்டவர்களிடம் இதுபற்றிப் பேசுகிறோம். இனி அது போன்ற சர்ச்சைகள் வராமல் பார்த்துக் கொள்கிறோம்'’ என்று செல்வப்பெருந்தகை உறுதியளித்திருக்கிறார். கூட்டத்தின் நிறைவில் "எங்கள் தொகுதிகள் சார்ந்த பல கோரிக்கைகளை வைத்திருக்கிறோம். அதை நிறைவேற்றித் தாருங்கள்'’என்றபடி காங்கிரஸ் எம்.பி.க்கள், கோரிக்கை மனுக்களைக் கொடுக்க,’"நிச்சயம் பரிசீலிக்கிறேன்'’என்று உறுதியளித்திருக்கிறார் முதல்வர். இது காங்கிரஸ் தரப்புக்கு மகிழ்வைத் தந்திருக்கிறதாம்.''”
"இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் டெல்லி சென்று, விஜய்யுடன் கூட்டணி வைக்கவேண்டும் என்று வலியுறுத்தினார் களாமே?''”
"காங்கிரஸ் சீனியர்கள் சிலரும், எம்.எல்.ஏ. சீட் கனவில் இருக்கும் சிலரும் டெல்லிக்குப் படையெடுத்துச் சென்று, காங்கிரசின் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரைச் சந்தித் திருக்கிறார்கள். அப்போது, நடிகர் விஜய்யின் சுற்றுப்பயணம் குறித்தும், அவருக்குக் கூடும் கூட்டம் குறித்தும் சம்மந்தப்பட்ட வீடியோக் களைப் போட்டுக்காட்டி, "நாம் விஜய் கட்சியுடன் கூட்டணி வைத்தால் 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளை வாங்கலாம். கூட் டணி ஆட்சியும் அமையும். துணை முதல்வர் பதவியும் நம் கட்சிக்குக் கிடைக்கும். கடந்த 60 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லாத நம் கட்சிக்கு, இதன் மூலம் அதிகாரமும், செல்வாக்கும் கிடைக் கும்'’ என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறித்த ஒரு அலசல் ரிப்போர்ட்டை யும் அவர்களிடம் கொடுத்திருக்கிறார்கள். இதையெல்லாம் கூர்ந்து கேட்ட கார்கேவும், வேணுவும், "தமிழகத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களுக்கு மேல் இருக்கிறது. எனவே டிசம்பரில் பார்த்துக்கொள்ளலாம், போய் வேலையைப் பாருங்கள்'’என்றபடி அவர் களை அனுப்பி வைத்துவிட்டார்களாம்.''”
"சரிப்பா, நெல்லை கிழக்கு தி.மு.க. மா.செ.வின் பவரைக் குறைத்திருக்கிறதே அறிவாலயம்? எதனால் இந்த அதிரடி?''”
"ஆமாங்க தலைவரே, நெல்லை தி.மு.க. மா.செ. ஆவுடையப்பன் வசம் அம்பை, நாங்குநேரி, ராதாபுரம்னு மூணு தொகுதிகள் இருந்தது. இந்த நிலையில், நாடார் சமூக மக்களைப் பெரும் பான்மையாகக் கொண்ட நாங்குநேரியையும், ராதாபுரத்தையும் பிரிச்சு, நெல்லை கிழக்கு மாவட்டம்னு புதிதாக உருவாக்கி, அதற்கு புதிய மா.செ.வாக, இந்து நாடார் பிரிவைச் சேர்ந்த கிரகாம்பெல்லை நியமிச்சிருக்கு அறிவாலயம். அதேபோல் அம்பை, ஆலங்குளம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட, நெல்லை மேற்கு மாவட்டத்தை உருவாக்கி, அதை ஆவுடையப்பன் வசம் ஒப்படைச்சிருக்காங்க. இதன் மூலம் ஆவுடையப்பனின் அதிகார வரம்பு, இரண்டு தொகுதிகள்னு சுருங்கிவிட்டது. இந்த பவர் குறைப்புக்குக் காரணம், அண்மைக்காலமாக அவர் பெரிய அளவில் கட்சி நிகழ்ச்சிகள் எதையும் நடத்தலையாம். அப்படியே நடத்தப்பட்ட ஒரு சில நிகழ்ச்சிகளின் செலவுகளையும், மற்ற நிர்வாகிகளின் தலையில் அவர் கட்டிட்டாராம். அதேபோல் சீனியர் கட்சிக்காரங்களுக்கு கட்சித் தலைமை கொடுத்த உதவித் தொகையும் அவர்களுக்கு முழுமையாகப் போய்ச் சேரலையாம். அதோட கடந்த 2024 எம்.பி.தேர்தலில் இவர் உள்ளடி வேலைகளில் இறங்கியதாகவும் சர்ச்சைகள் கிளம்புச்சு. இதெல்லாம்தான் அவரது அதிகாரக் குறைப்புக்குக் காரணம்னு சொல்றாங்க.''”
"தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. வால், ஆதவ் அர்ஜுனா குறிவைக்கப்பட்டிருக்கிறார் என்கிறார்களே?''”
"விஜய்யின் த.வெ.க. கட்சிப் பிரமுகரான ஆதவ் அர்ஜுனா, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக, "தமிழகம் மணிப்பூராக மாறும்' என்று சவால்விட்டு டிவிட் போட்டிருந்தார். இதைத் தொடர்ந்து மத்திய அரசின் கண்காணிப்பு வளையத் திற்குள்ளும் அவர் வந்திருக்கிறாராம். எனவே அவரை வெகுவிரைவில் என்.ஐ.ஏ. விசாரிக்கும் என்கிறது டெல்லி தகவல். இதைத் தொடர்ந்து பா.ஜ.க.வின் தலைமையைச் சமாதானப்படுத்த டெல்லி விரைந்திருக்கிறார். இவருக்கு இப்படிப்பட்ட டிவிட்டுக்களை யார் எழுதிக் கொடுக்கிறார்கள் என்று ஆராய்ந்த என்.ஐ.ஏ., ஒரு பத்திரிகையாளர்தான் இதைச் செய்கிறார் என்பதையும் கண்டு பிடித்திருக்கிறதாம்.''”
"அ.தி.மு.க.வில் இப்போதே சீட்டுக்கு பண வசூலை ஆரம்பித்து விட்டார்களே?''”
"உண்மைதாங்க தலைவரே, 2026 தேர்தலில் சீட் தருவதற்கு கட்சிக்காரர்களிடம் இப்போதே பண வசூலை அ.தி.மு.க. தரப்பு ஆரம்பித்துவிட்ட தாம். இந்த வசூல் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், எடப்பாடியின் ’மச்சான்’ வெங்கடேசன், தனது ஆதரவாளரான சங்ககிரி அ.தி.மு.க. ஒ.செ.வான ரத்தினம் மூலம் இந்த வசூலைச் செய்துவருகிறாராம். மேலும் எடப்பாடியுடன் முறுக்கிக்கொண்டிருக்கும் செங் கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டி ருக்கும் நிலையில், அவருக்கு செல்வாக்கான பகுதி களில், அவர் ஆலோசனையின் பேரிலோ, பரிந்துரை யின் பேரிலோ ஒதுக்க வேண்டிய சீட்டுகளையெல் லாம் இந்த டீம், விருப்பம்போல் விற்றுவருகிறதாம். அந்த வகையில், சங்ககிரியில் செங்ஸின் ஆதரவாளரான ராஜாவுக்கு ஒதுக்கப்போவதாகச் சொல்லப்பட்ட சீட்டை, இப்போதே அபூர்வா பட்டு நிறுவன உரிமையாளர் மணிகண்டனுக்குத் தருவதாகச் சொல்லி, கணிசமாக வசூல் செய்திருக்கிறார்களாம். இந்த வசூல் விவகாரம் அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.''”
"இந்த நிலையில் கட்சியின் நிர்வாகக் கட்டமைப்பை, எடப்பாடி மாற்றவிருக்கிறார் என்கிறார்களே?''”
"தேர்தலுக்கு முன்னதாக, முதலில் அங்கே மா.செ.க்கள் பலரையும் மாற்ற முடிவெடுத் திருக்கிறாராம் எடப்பாடி. அதேபோல் தனக்கு அதிக விசுவாசம் காட்டிவரும் மாஜி மந்திரி சி.வி.சண்முகத்துக்குக் கட்சியில் பதவிஉயர்வு கொடுக்கும் திட்டமும் அவரிடம் இருக்கிறதாம். அதேபோல் தனக்கு எதிராகக் கட்சியில் குழிவெட் டும் சிலரை, ஓரம்கட்டும் நடவடிக்கையிலும் அவர் அதிரடியாக இறங்கவிருக்கிறார் என்கிறார்கள் அ.தி.மு.க. சீனியர்கள். அதனால் மா.செ.க்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும், எந்த நேரத்தில் எடப்பாடி என்ன செய்வாரோ என்கிற குழப்பத்திலேயே இருக்காங்களாம்.''”
"பா.ஜ.க. பிரமுகரை, எடப்பாடி அ.தி.மு.க.வில் சேர்த்தது, அங்கே சர்ச்சையை ஏற்படுத்திவருகிறதே?''”
"அ.தி.மு.க.வைச் சேர்ந்த, சென்னை காரப்பாக்கம் லியோசுந்தரம், ஒரு காலத்தில் ஜெ.வின் நம்பிக்கையைப் பெற்றவர். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் இவருக்கு போட்டியிட எடப்பாடி வாய்ப்பைத் தரவில்லை. இதனால் சென்னை மாநகராட்சியின் 198ஆவது வார்டில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார் லியோ. இவர் ஒருகட்டத்தில் பா.ஜ.க.வில் இணைந்தார். அங்கே ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவின் மாநில துணைத் தலைவர் பதவி இவருக்கு கொடுக்கப்பட்டது. சில வருடங்களாக பா.ஜ.க.வில் இருந்த லியோ சுந்தரம், சமீபத்தில் சேலத்தில் எடப்பாடியை சந்தித்து, அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந் திருக்கிறார்.’"எப்போதும்போல கட்சியில் சிறப்பாகப் பணியாற்றுங்கள். உங்களுக்கான அங்கீகாரம் உரிய நேரத்தில் கிடைக்கும்'’என்று அவரை வாழ்த்தி இருக்கிறார் எடப்பாடி. அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணியில் இருக்கும்போது, "பா.ஜ.க.வைச் சேர்ந்தவரை எப்படி அ.தி.மு.க.வில் எடப்பாடியே சேர்த்துக்கொள்ளலாம்? இதுதான் கூட்டணி தர்மமா?' என்று, பா.ஜ.க.வினர் சர்ச்சையைக் கிளப்பி வருகின்றனர். இது தொடர்பான புகாரும் பா.ஜ.க. தலைமைக்குச் சென்றுகொண்டிருக்கிறதாம்.''”
"பா.ம.க.வுக்கு புதிய இளைஞரணி தலைவரை ராமதாஸ் நியமித்திருக்கிறாரே?''”
"பா.ம.க.வில் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரனை இளைஞரணி தலைவராக ஆக்கியுள்ளாராம் ராமதாஸ். ஏற்கனவே அவரை அதே இளைஞரணிப் பதவியில் ராமதாஸ் அமர்த்தியபோது அன்புமணி அதனை ஏற்காமல் நிராகரித்தார். இப்போது அந்த விருப்பத்தை நிறைவேற்றியிருக்கிறார் தைலாபுரத்துக்காரர். "இனி இதுபோன்ற அன்புமணியால் நிராகரிக்கப்பட்ட நியமனங்கள் எல்லாம் இடைஞ்சல் இல்லாமல் தெம்பாக நடக்கும்' என்கிறார்கள் ராமதாஸ் தரப்பினர்.''”
"கரூர் எஸ்.பி. இன்னும் மாற்றப்பட வில்லையே?''”
"சட்டம் -ஒழுங்கு தொடர்பான சம்பவங்கள் நடந்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட காவல்துறை உயரதிகாரிகளை மாற்றுவது வழக்கம். அதன்படி, கரூர் அசம்பாவிதத்திற்குப் பிறகு அங்குள்ள காவல்துறை எஸ்.பி. ஜோஸ் தங்கையாவை மாற்றவேண்டும் என்ற ஆலோசனையை காவல்துறை அதிகாரிகள் முன்வைத்தார்களாம். காரணம், சம்பவம் நடந்தபோது அங்கு ஸ்பாட்டுக்கு அவர் செல்லவில்லையாம். இவர் சட்டம் -ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசிர்வாதத்தின் நெருங்கிய உறவினராம். இப்போது அவரை மாற்றினால் அது விஜய்யின் குற்றச்சாட்டுக்கு இசைவளிப்பதுபோல் ஆகிவிடும் என்று மாஜி தி.மு.க. அமைச்சர் செந்தில்பாலாஜி சொன்னதால், மாற்றத்தை அரசின் மேல்மட்டம் ஏற்கவில்லையாம். கரூர் சம்பவத்துக்குப் பின் பிரச்சார டூருக்குத் திட்டமிட்டிருந்த தே.மு.தி.க. பிரேமலதாவும், பா.ஜ.க. நயினாரும் தங்கள் நிகழ்ச்சிகளை ரத்து செய்திருக்கிறார்கள். கூட் டத்தைக் கண்டாலே தமிழக அரசியல் கட்சி களுக்கு பயம் வரும்படி செய்திருக்கிறது கரூர்.''”
"தமிழக டி.ஜி.பி. நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கு டார்ச்சர் கொடுத்துவருகிறதே டெல்லி?''”
"ஆமாங்க தலைவரே, தமிழகத்துக்கான புதிய டி.ஜி.பி. நியமனம் தொடர்பாக, கடந்த 26 ஆம் தேதி டெல்லி சென்ற உள்துறைச் செயலர் தலை மையிலான டீமிடம், மூன்றுபேர் கொண்ட பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் உள்ள வர்களில் ஒருவரைத்தான் தமிழக டி.ஜி.பி.யாக நியமிக்க முடியும். ஆனால் டெல்லி கொடுத்த இந்த மூவர் பட்டியலில், தமிழக டி.ஜி.பி.யாக இங்குள்ள தி.மு.க. அரசு நியமிக்க விரும்பிய அதிகாரிகளின் பெயர்கள் இல்லாமல் செய்திருக்கிறது டெல்லி. அதாவது அரசின் புகார்களையும் அதிருப்தியை யும் சம்பாதித்திருக்கும் சீமா அகர்வால், ராஜீவ், சந்தீப்ராய் ரத்தோர் ஆகிய மூவரின் பெயர்கள் மட்டுமே அதில் இருந்திருக்கிறது. குறிப்பாக டி.ஜி.பி.யாக தமிழக அரசு நியமிக்க விரும்பிய தற்போதைய பொறுப்பு டி.ஜி.பி. வெங்கட்ராமனின் பெயர் இல்லை. அதனால் இதுகுறித்து அடுத்த வாரம் விவாதிக்கலாம் என்று சொல்லிவிட்டு தமிழக டீம் திரும்பியிருக்கிறது. இது மத்திய, மாநில அரசுகளுக்கிடையிலான உரசலாக மாறிவருகிறது.''”
"நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன், புற்றுநோயால் அண்மையில் காலமானார். அவரது மரணம், அதிகாரிகள் மத்தியில் மிகுந்த சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியது. பீலா காலமாகும்போது, எரிசக்தித் துறையின் முதன்மைச் செயலாளராக இருந்தார். அவரது நாற்காலி இப்போது காலியாக இருப்பதால், அதைப் பிடிக்க அந்தத் துறையில் பிரின்சிபல் செக்ரட்டரி அந்தஸ்தில் இருக்கும் அதிகாரிகள் சிலர் முயற்சித்து வருகின்றனர். அதனால், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் விரைவில் வர இருக்கிறது என்கிறார்கள். சில அதிகாரிகளிடம் கூடுதல் பொறுப்பாக சில துறைகள் தற்போது இருக்கின்றன. ஐ.ஏ.எஸ். மாற்றத்தின்போது, இப்படி கூடுதல் பொறுப்பாக இருக்கும் துறைகளுக்கு முழுநேர அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்கிற கோரிக் கையும் இப்போது அதி காரிகள் தரப்பில் வலுத்து வருகிறது.''”