நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக் களிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு நிறைவேற்றிய சட்ட மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்காமல் காலதாமதம் செய்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. இது குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் விவாதிப்பதற்காக அவரை சந்திக்க தமிழக எம்.பி.க்கள் பலமுறை நேரம் கேட்டும் புறக்கணித்தே வருகிறார் அமித்ஷா. இதனை சட்டமன்றத்தில் பதிவு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், "மக்கள் பிரதிநிதிகளை சந்திக்க மறுப்பது ஜனநாயக மாண்புகளல்ல' என்று கண்டித்திருக்கிறார்.
இப்படிப்பட்ட சூழல்களில்தான் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தார் முதல்வர். தலைமைச் செயலத்தில் நடந்த கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மா.சுப்பிரமணியன், அ.தி.மு.க. விஜயபாஸ்கர், காங்கிரஸ் செல்வப்பெருந்தகை, பா.ஜ.க. வானதி சீனிவாசன், பா.ம.க. ஜி.கே.மணி, சி.பி.ஐ. ராமச்சந்திரன், சி.பி.எம். நாகைமாலி, ம.தி.மு.க. சதன் திருமலைக்குமார், ம.ம.க. ஜவாஹிருல்லா, த.வா.க. வேல்முருகன், வி.சி.க. சிந்தனைச்செல்வன், கொ.ம.தே.க. ஈஸ்வரன் புரட்சி பாரதம் ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தை துவங்கிவைத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின்,”"நீட் தேர்வு தேவையில்லை என்பதில் எல்லோரும் ஒருமித்த கருத்துடையவர்கள்தான். மாணவர்களின் பிரச்சினை என்பதால் இதில் நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என்கிற உணர்வுகள் தேவைப்படுகிறது. அனைவருக்கும் சமமான கல்வி கிடைப்பதில் சமத்துவமற்ற நிலை இருப்பதால் தமிழகத்தில் நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால், இந்த கல்வி உரிமையை நீட் தேர்வு பறிக்கிறது.
ப்ளஸ்டூ வரை படித்த கல்வியை விட 2 மணி நேர நுழைவுத் தேர்வு எப்படி மேலானதாக இருக்க முடியும்? அதனால் நீட் தேர்வை சமூக அநீதியாகத்தான் பார்க்க வேண்டியதிருக் கிறது. நீட் தேர்வில் தமிழகத் திற்கு விலக்களிக்க வேண்டும் என பிரதமரை சந்தித்து கோரிக்கை வைத்தேன். நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களும் இதனை வலியுறுத்தினர்.
இதனையடுத்து, இதற்கான சட்டமுன்வடிவை பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றி அதனை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைக்கவில்லை. நேரில் வலியுறுத்தியும் அவர் அனுப்பவில்லை. இதனால் சட்டம் இயற்றும் சட்டப்பேரவையின் அதிகாரம் கேள்விக்குறியாகியிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் உங்களை அழைத்திருக்கிறேன்''” என்று சுட்டிக்காட்டிவிட்டு, ஒவ்வொருவரின் கருத்துக்களை யும் பகிர்ந்துகொள்ளச் சொன்னார் ஸ்டாலின்.
கட்சிப் பிரதிநிதிகள் பேசுவதற்கு முன்பாக, நீட் தேர்வு குறித்து தயாரிக்கப்பட்ட தீர்மானத்தின் வரைவு நகல் அனைவரிடமும் கொடுக்கப்பட்டது. அதன் மீதும் கருத்துக்களைக் கேட்டார் ஸ்டாலின்.
முதலில் பேசிய அமைச்சர் பொன்முடி,”"ஒன்றிய அரசினால் மாநிலங்களுக்குள் திணிக்கப்பட்டிருக்கும் நீட் தேர்வு ஒரு சமூக அநீதி. இதனால், தமிழகத்தில் ஏழை மாணவ மாணவிகளின் மருத்துவ கனவு சிதைந்துகொண்டிருக்கிறது. நீட் தேர்வினால் பள்ளிக் கல்வியின் அமைப்பே கேள்விக் குறியாகியிருக்கிறது. சட்டமன்றம் நிறைவேற்றிய ஒரு மசோதாவை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பாமல் இருப்பது, ஆட்சியின் இறையாண்மைக்கு உகந்தல்ல. நீட் தேர்வினை நீக்க தேவையான சட்டநடவடிக்கைகளை எடுக்க வேண்டும்''’என்று வலியுறுத்தினார்.
அ.தி.மு.க. சார்பில் பேசிய விஜயபாஸ்கர், "எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியின்போது நீட் தேர்வுக்கு எதிரான எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை சுட்டிக்காட்டிவிட்டு, அட்டர்னி ஜெனரலிடம் அப்ரூவல் பெற்றுதான் அ.தி.மு.க. ஆட்சியில் நீட்டுக்கு எதிரான அத்தனை நடவடிக்கைகளையும் எடுத்தோம். இருந்தும் அவர்கள் (ஒன்றிய அரசு) ஏனோ இதில் சாதகமான முடிவைச் சொல்லவில்லை. உள்துறை அமைச்சரை (அமித்ஷா) சந்திக்க மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யணும். நீட் தேர்வுக்கு எதிராக இந்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அ.தி.மு.க. ஒத்துழைக்கும்''’என்றார் அழுத்தமாக.
காங்கிரஸ் செல்வப்பெருந்தகை, "கவர்னரின் செயல் அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது. ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவேண்டிய வேலையை அவர் செய்யவேண்டும். ஜனாதிபதி அதற்கு ஒப்புதல் அளிக்கலாம் அல்லது திருப்பி அனுப்பலாம். ஆனால், அனுப்பி வைக்காமல் இருப்பது ஏற்கத்தக்கத்தல்ல''’என்று பதிவு செய்தார்.
இதனையடுத்துப் பேசிய பா.ஜ.க. வானதி சீனிவாசன், "நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானதல்ல. இந்த தேர்வு அமல்படுத்தப்பட்டப் பிறகு கிராமப்புற ஏழை மாணவர்கள் நிறைய எண்ணிக்கையில் மருத்துவ கல்விக்குச் சென்றுள்ளதாக பல புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அதனால் நீட் தேர்வு வேண்டும் என்பதுதான் எங்க ளுடைய பாலிசி. இந்த தீர்மானத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை. அதனால் கூட்டத்திலிருந்து நான் வெளியேற அனுமதிக்க வேண்டும்''’என்று நாகரிகமாக தெரிவித்தார் வானதி.
அப்போது,’"நீட்டுக்கு எதிராகத்தான் தீர்மானம் வரவிருக்கிறது. அதில், உடன்பாடில்லைங்கிறதுதான் உங்களின் விருப்பமாக இருந்தால் அது பற்றி நாங்கள் ஒன்றும் சொல்வதற்கில்லை''’என்று முதல்வர் ஸ்டாலின் சொல்ல, அழைத்ததற்கு நன்றி தெரிவித்துவிட்டு கூட்டத்திலிருந்து வெளியேறினார் வானதி சீனிவாசன்.
ம.ம.க. சார்பில் பேசிய பேராசிரியர் ஜவாஹிருல்லா,”"தமிழக எம்.பி.க்களை உள்துறை அமைச்சர் சந்திக்க மறுப்பது ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும்தான் நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என சொல்கிறோம். நிர்வாக ஒதுக்கீட்டுக்கு நாம் கேட்கவே இல்லை. நீட் தேர்வு விலக்குப் பெறுவதில் நம்மை பணிய வைக்க நினைக்கிறது ஒன்றிய அரசு. அதற்கு ஒரு பாடத்தைப் புகட்டும் வகையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சட்டரீதியான போராட்டங்களை நாம் முன்னெடுத்தாலும் ஒன்றிய அரசின் முகத்தை மக்களிடம் கொண்டு செல்ல வீதிரீதியிலான போராட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும். முன்னாள் முதல்வர் கலைஞரே இப்படிப்பட்ட போராட்டங்களை நடத்தியிருக்கிறார். தமிழகமே நீட்டுக்கு எதிராக இருப்பதை ஒன்றிய அரசுக்கு உணர்த்தும் வகையில் தமிழகம் தழுவிய ஒரு போராட்டத்தை நாம் நடத்த வேண்டும்'' என்றார் அழுத்தமாக.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன் பேசும்போது,’"நீட் தேர்வு இருப்பதால் மருத்துவப் படிப்புகளுக்கு லட்சக்கணக்கில் பணம் செலவு செய்ய வேண்டியதில்லை என பரப்புகிறார்கள். ஆனால், அது உண்மையில்லை. நீட் தேர்வில் பாஸ் செய்தாலும் லட்சக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டியதிருக்கிறது. அதனால், நீட் தேர்வினால் ஏழைகள் பலனடைகிறார்கள் என்பது பொய். மாநில அரசு நிறைவேற்றும் சட்ட முன்வடிவை ஏற்காமல் கவர்னர் அலட்சியமாக இருப்பது மாநி லத்தின் சட்ட உரிமைகளை பறிக்கும் செயல். நம் உரிமை களை நிலைநிறுத்த நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும்''’என்றார் உறுதியாக.
கூட்டத்தில் கலந்து கொண்ட மற்றவர்களும் இதே ரீதியிலேயே நீட்டுக்கு எதிரான கருத்துக்களை எடுத்துரைத்தனர். இறுதியில், "கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், ‘’உள்துறை அமைச்சரிடம் வைக்கப்பட்ட கோரிக்கை மீது ஆலோசிக்க அவரிடமிருந்து அழைப்பு வந்தால் அனைத்துக் கட்சிகளின் சார்பில் அவரை சந்திக்கலாம். நீட் தேர்வினை முழுமையாக நீக்க மூத்த சட்ட வல்லுநர்களிடம் கலந்தாலோசித்து தேவையான சட்ட நடவடிக்கைகளை அனைத்துக் கட்சிகளோடு ஒன்றிணைந்து மேற்கொள்ளப்படும். நீட் தேர்வின் பாதகங்களை மற்ற மாநிலங்களும் உணரும் வகையில் ஒருமித்த கருத்தை உருவாக்கும் முயற்சிகளும் எடுக்கப்படும்'’என்கிற ஒற்றைத் தீர்மானத்தை நிறைவேற்றினார் முதல்வர் ஸ்டாலின்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் என்ன தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்பதை உன்னிப்பாக கவனித்தபடி இருந்தது ஒன்றிய அரசு. நீட் தேர்வுக்கு விலக்குக் கோரிதான் தீர்மானம் நிறைவேற்றுவார்கள் என்பதை ஒன்றிய அரசு உணர்ந்தே இருந்தாலும், தீர்மானத்தின் வரிகள் எப்படி இருக்கப்போகிறது என்பதில் கவனம் செலுத்தியது உள்துறை என்கின்றன டெல்லி சோர்ஸ்கள்.
"முதல்வர் ஸ்டாலினின் பேச்சும், நிறைவேற்றப் பட்ட தீர்மானமும் கவர்னருக்கு எதிராகவும் உள்துறை அமைச்சருக்கு எதிராகவும் இருக்கும் நிலையில், "சட்டப்பேரவையின் அதிகாரத்தை கேள்விக்குறியாக் கும் கவர்னரின் செயல்பாடுகளில் எங்களுக்கு உடன் பாடில்லை; அவரது செயல்களை கண்டிக்கிறோம்; சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்த கவர்னரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்கிற வகையில் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்க வேண்டும். அப்படியில்லாததால் தீர்மானத்தில் வலிமை இல்லை. அதனாலேயே எந்த தாக்கமும் ஏற்படவில்லை'' என்கிறார்கள் டெல்லியிலுள்ள தமிழக அதிகாரிகள்.
27% இடஒதுக்கீடு போல சட்டரீதியான வெற்றியால் நீட் குறித்த ஒன்றிய அரசின் முடிவை மாற்றுவது என்பதே ஸ்டாலின் வியூகமாக இருக்கிறது. நீட் யுத்தம் இப்போதைக்கு முடிவதாக இல்லை.
-இரா.இளையசெல்வன்
படங்கள் : ஸ்டாலின்