என்னதான் இலங்கைப் பொருளாதாரமே திவால் நிலைக்குத் தள்ளப்பட்டாலும், தமிழக கடல் பகுதி வழியாக இலங்கைக்கு நடக்கும் கடத்தல் மட்டும் குறையவே இல்லை’ என குரலெழுப்புகிறார்கள் மண்டபம், ராமேஸ்வரம் பகுதிகளைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள்.
தமிழகத்தில், திருவள்ளூர் -கன்னியாகுமரி வரையுள்ள 14 மாவட்டங்களுக்கு உட்பட்ட சுமார் 1,076 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரைப் பகுதிகளில் 12 நாட்டிக்கல் மைல் தூரம் வரை பாதுகாக்கும் பணியைக் கவனித்து வருகிறது தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம். இந்த எல்லைக்கு அடுத்துள்ள பகுதியை கடலோர காவல் படையினரும், இந்திய கடற்படையினரும் பாதுகாத்து வருகின்றனர். அதில் மிகவும் சென்ஸிட்டிவான பகுதியாகக் கருதப்படுவது இலங்கைக்கு மிக அருகிலுள்ள வேதாரண்யம், தனுஷ்கோடி, மண்டபம் பகுதிகள்தான். காரணம், இங்கிருந்துதான் மருந்து, போதைப் பொருட்கள், கஞ்சா, கடல் அட்டைகள், பீடி இலைகள் மற்றும் விரலி மஞ்சள் போன்றவற்றை இலங்கைக்குக் கடத்துகின்றனர் கடத்தல் மாஃபியாக்கள்.
இலங்கையில், ‘ஹை டிமாண்டாக உள்ள பொருட்களை கடல் வழியாக அங்கு கடத்தும் அவர்கள், அதற்கு மாற்றாக அங்கிருந்து தங்கத்தை அதே கடல்வழியாகக் கடத்திவந்து இங்கு விற்று கொள்ளை லாபம் ஈட்டுகிறார்கள். பெரும்பாலும் இரவு நேரங்களில் அதிவேக ஃபைபர் படகுகள் மூலம் நடக்கும் இந்தக் கடத்தலானது, கடலோர பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், லோக்கல் உளவுத்துறைக்கும் தெரிந்தே நடப்பதாகவும், அவ்வப் போது ‘சரக்குகள்’ பிடிபடுவ தெல்லாம் கண்துடைப்பு நாடகம் எனவும் புகார் கூறிவருகிறார்கள் இப்பகுதி சமூக ஆர்வலர்கள்.
பொருளா தார நெருக்கடி காரணமாக இலங்கையில் நடக்கும் போராட்டத்தைப் பயன்படுத்தி அங்குள்ள சிறையிலிருந்து தப்பிய சுமார் 50 குற்றவாளிகள் இந்தியாவிற்குள் நுழைய வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு அரசும், ‘விடுதலைப் புலிகள் மீண்டும் ஒருங்கிணைந்து இலங்கையில் தாக்குதல் நடத்த வாய்ப் பிருப்பதால், இலங்கையை ஒட்டிய தமிழக கடல் பகுதிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும்’ என நமது நாட்டு உளவுப் பிரிவும் இந்திய கடலோர காவல் படைக்கு எச்சரிக்கை அனுப்பியும்கூட கடலோர பாதுகாப்பில் மெத்தனம் காட்டுவதாகக் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன.
இதுகுறித்து, நம்மிடம் பெயர் மற்றும் அடையாளம் மறைத்துப் பேசிய சில சமூக ஆர்வலர்கள், கடத்தல் புள்ளிகளின் ‘ஹாட் ஸ்பாட்டாக’ இருப்பது இராமநாதபுரம் மாவட்டம்தான். இலங்கையில், எப்போ தெல்லாம் எதற்கெல்லாம் அதிக டிமாண்ட் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் அந்தப் பொருட்களை கடல் வழியாக கடத்திச் சென்று கச்சிதமாக ஒப்படைப்பார்கள். அதற்குப் பதிலாக சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் தங்கத்தை கடல் வழியாகவே பெற்றுக்கொள்வார்கள். இதுபோன்ற கடத்தலின் போது, இலங்கையில் இருந்து வரும் தங்கக் கட்டிகளை பாலிதீன் பைகளில் சுற்றி, அதனோடு ஸ்பாஞ்ச் பொருட்களை கயிற்றில் கட்டி கடலின் குறிப்பிட்ட பகுதியில் இறக்கிவிட்டு அந்த லொகேசனை இங்குள்ள கடத்தல் புள்ளிகளுக்குத் தெரிவிப்பது வழக்கம்.
தற்போது, இலங்கையில் பிரச்சனை நிலவுவதால் அதன் கடற்பகுதி பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அதைப் பயன்படுத்தி போதைப் பொருட்களும், கடல் அட்டை, கடல் குதிரை போன்ற பொருட்களும் மண்டபம், ராமேஸ்வரம் கடல்பகுதிகள் வழியாக கடத்தப்படுவது தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டுபேர் கேரளாவி-ருந்து கடத்தப்பட்ட 450 கிலோ கஞ்சாவுடன் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக்குச் செல்லும் அந்த பொருட்கள் சிங்கப்பூர், சைனா, தைவான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஈசியாக கடத்தப்பட்டு விடுகின்றன. இருவாரங்களுக்கு முன்புகூட, அதுபோன்ற கடத்தல் சம்பவத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் நடுக்கடலில் விடப்பட்டிருக்கிறது. அதுகுறித்து கடலோர காவல்படைக்குத் தகவல் தெரிந்தும், அதைத் தேடி வருவதாக நாடகம் ஆடுகிறார்களே தவிர, பெயரளவிற்குக்கூட யாரிடமும் விசாரணை நடத்தவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தை அடுத்த சேராங்கொட்டை பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக 17 மூட்டை கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் சிலர் தகவல் கூறிய பிறகும் அவற்றைக் கைப்பற்றிய கடலோர காவல் படையினர், அதில் தொடர்புடைய கடத்தல் புள்ளிகள் குறித்து தகவல் தெரிந்தும் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. ‘இந்த மாஃபியாக்கள் யார் யார்?’ என்பது இங்கு சுமார் 13 ஆண்டுகளுக்கும் மேலாக பணி யாற்றும் உளவுப்பிரிவு அதிகாரிகளுக்கும், கஸ்டம்ஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கும் நன்றாகவே தெரியும். விலைபோகும் சில அதிகாரிகளால், இங்கிருந்து இலங்கைக்கும், இலங்கையிலிருந்து இங்கும் எதையும் கொண்டுவரும் சாதுர்யமிக்க கடத்தல் மாஃபியாக்கள் மூலம் கிரிமினல்கள் உட்பட யார் வேண்டுமானாலும் அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவி இலங்கையிலிருந்து நமது தமிழக கடற்கரையில் கால்வைக்க வாய்ப்பிருக்கிறது” என எச்சரிக்கை மணியடித்தனர்.