ஒரு மனிதன், தனக்கும், தன் குடும்பத்திற்கும் மட்டுமே வாழ்வதற்காகப் படைக்கப்பட்டவன் அல்ல, பிறருக்கும் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வதற்காகப் படைக்கப்பட்டவன் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருபவர் அகர்சந்த் என்னும் அற்புத மனிதர். விருத்தாசலம் நகரில் ஜெயின் ஜுவல்லரி நகைக்கடையின் உரிமையாளரான இவர் செய்துவரும் அறப்பணிகள் கணக்கிலடங்காதவை.
அவர் சம்பாதிக்கும் பணத்தில், ஏழை எளியோருக்கு பல்வேறு உதவிகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார். விருத்தாசலத்தின் பழமைவாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோவி லுக்கு இவரது சீரிய முயற்சியால் இரண்டு முறை குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில், சிதில மடைந்த கோவில்களுக்கும் திருப்பணி களை செய்து, 'திருப்பணி செம்மல்' என்றே பெயர்பெற்றார். மதங்கடந்து தேவாலயங் கள், மசூதிகளுக்கும் தன்னால் இயன்ற உதவிகளை அளித்துவருகிறார்.
இன்னொரு பக்கம், கடவுள் மறுப் பாளர்களாலும் போற்றப்படுகிறார் அகர் சந்த். திராவிடர் கழக பொதுச்செயலாளர் கி.வீரமணியின் நெருங்கிய நண்பர்களில் இவரும் ஒருவர். திராவிடர் கழகத்தின் சார்பாக எட்டு நகரங்களில் செயல்படும் மருத்துவமனைகளுக்கு தந்தை பெரியார் மருத்துவமனை என்றுதான் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால் ஜெயங் கொண்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு அகர் சந்த் மருத்துவமனை என்று பெயர் வைத்திருக் கிறார்கள். அகர்சந்த்தின் கொடையுள்ளத்தை கவு ரவப்படுத்தும் விதமாக அவரை வைத்தே அந்த மருத்துவமனையை திறக்கச் செய்தார் வீரமணி.
மேலும், லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் மூலமாகவும் எண்ணற்ற ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்துவருகிறார். கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து சிறப்பு குழந்தைகளுக்காக ரிஷப் ஜெயின் என்ற சிறப்புப் பள்ளியை நடத்தி வருகிறார். ஆட்டிசம், தண்டுவட பாதிப்பு, முடக்குவாதத்தால் பாதிக் கப்பட்ட குழந்தைகள் இங்கே படிக்கிறார்கள் தேர்ந்த ஆசிரியர்கள், வாகன வசதி, ஊட் டச்சத்துமிக்க உணவு, தேவையான உபகரணங் களோடு சிறப்பாக இயங்கி வருகிறது. மாணவர் களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கவில்லை.
இது மட்டுமல்ல, நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சொந்த செலவில் அப்பல்லோ மருத்துவமனையில் இதய அறுவைச் சிகிச்சை செய்துள்ளார். இவரிடம் உதவிபெற்ற மாண வர்கள், புகழ்பெற்ற மருத்துவர்களாக, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக வளர்ந்துள்ளனர். சுமார் 50,000 பேருக்கு கண் அறுவைச் சிகிச்சை, 500க்கும் மேற்பட்டவர்களுக்கு இருதய அறுவைச் சிகிச்சை, கை, கால்களை இழந்த 3,000 பேருக்கு செயற்கை கை, கால்களையும் வழங்கியுள்ளார். 2004 சுனாமியின் போது பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட கடலோர கிராமங்களுக்கு தனது குழுவினருடன் சென்று, நூற்றுக்கும் மேற்பட்ட சடலங்களை அப்புறப் படுத்தி, இறுதிக் காரியங்கள் செய்துள்ளார்.
விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு மின் வசதி, குடிநீர் வசதி செய்துதந்துள்ளார். விருத்தாசலம் பகுதியில் நீர் நிலைகளை தூர்வாரிப் பராமரிக்க உதவியுள்ளார். ஏகநாயகர் கோயில் பகுதியில் கோசாலை அமைத்துள்ளார். விருத்தாசலம் அருகேயுள்ள கொடுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஸ்ரீதர் -ராஜலட்சுமி தம்பதிகள். இவர்களுடைய 4 வயது ஆண் குழந்தை நித்தீஷ் கல்லீரலில் அடைப்புள்ளதால், மாற்றுக் கல்லீரல் பொருத்த வேண்டிய கட் டாயம். சென்னை குரோம்பேட்டையிலுள்ள ரேலா மருத்துவமனையிலுள்ள முகமது ரேலா என்ற மருத்துவர் இந்த சிகிச்சையில் உலகளவில் கைதேர்ந்தவர் எனத் தெரியவந்தது. இந்த அறுவைச் சிகிச்சைக்கு 30 லட்சம் வரை செலவாகுமென்றதும் மலைத்துப்போனார்கள். ஸ்ரீதர், மின்சார வாரியத்தில் ஒரு கடைநிலை ஊழியர். அவ்வளவு பணத்துக்கு என்ன செய்வதென்று கையறு நிலையிலிருந்தபோது, அகர்சந்த்தை சந்தித்து உதவி கேட்கும்படி சிலர் ஆலோசனை கூறியுள்ளனர். அவரை சந்தித்து குழந்தையின் நிலையை எடுத்துக் கூறியதுமே, "குழந்தையைக் காப்பாற்றுவது என் கடமை... கவலைப்பட வேண்டாம்'' என்று ஆறுதல் சொல்லி நம்பிக்கையளித்ததோடு, மருத்துவ மனையை தொடர்புகொண்டு சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்யும்படி கூறினார். நண்பர்கள், உறவினர்கள் அளித்த சிறு தொகை தவிர மற்ற செலவுகளை அமர்சந்தே ஏற்றுக்கொண்டார். எனது உடலிலிருந்து எடுக்கப்பட்ட கல்லீரல் மூலம் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது குழந்தையின் உடல் நிலை நல்ல முன்னேற்றம் அடைந் துள்ளது. குழந்தையுடன் சென்று ஐயாவுக்கு நன்றி சொன்னோம்'' என நெகிழ்ச்சியுடன் கூறினார் ஸ்ரீதர்.
இந்த சிகிச்சைக்கு வழிகாட்டியாக இருந் தது அகர்சந்த்தின் மகன் தீபக். இதுகுறித்து அவர் கூறும்போது, "நம் உடலின் உள்உறுப்புகளில் கல்லீரல் மட்டுமே வளரும் தன்மைகொண்டது. அந்த கல்லீரலில் ஸ்ரீதரின் குழந்தைக்கு அடைப்பு ஏற்பட்டிருந்தது. அதை மாற்ற, ஸ்ரீதரின் உடலிலிருந்த 65 சதவீத கல்லீரல், அறுவைச் சிகிச்சையால் எடுக்கப்பட்டு, அவரது குழந்தைக்கு பொருத்தப்பட்டுள்ளது. ஸ்ரீதர் உடலில் மிச்சம் இருக்கும் 35% கல்லீரல் 95% வரை வளரும். அதேபோல் குழந்தையின் கல்லீரலும் வளரும். இந்த நவீன அறுவைச் சிகிச்சை சென்னை ரேலா மருத்துவமனையில் மிகச்சிறப்பாக நடைபெற்று, குழந்தையும், தந்தையும் நலமாக இருக்கிறார்கள்'' என்றார். தந்தையைப்போலவே இவரும் கருணை உள்ளத்தோடிருக்கிறார். மனித நேயத்தால் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ள அகர்சந்த், எந்த பாராட்டையும் விரும்புவதில்லை. காப்பாற்றப் பட்ட குழந்தைகளின் புன்னகைதான் விருது களுக்கெல்லாம் பெரிய விருது என்பார்.