சென்னை ஏர் ஷோ நிகழ்வில் நடந்த துயர சம்பவம் தி.மு.க. ஆட்சியில் ஒரு கரும்புள்ளியாக விழுந்துள்ளது. இதனை ஜீரணிக்க முடியாமல் தவித்த முதல்வர் ஸ்டாலின், பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடிகள் நடந்ததா? என உயரதிகாரிகளிடம் விசாரணை நடத்தியிருக்கும் சூழலில், ஏர் ஷோவில் நடந்தது குறித்து தமிழக கவர்னரிடம் அறிக்கை கேட்டுள்ளது மத்திய அரசு.
இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு விழாவை நினைவுகூரும் வகையில், மெரினா கடற்கரையில் கடந்த 6-ந் தேதி நடந்த விமானப் படையினரின் ஏர் ஷோ சாகசங்கள் பிரமிக்க வைத்தன. இதனை காண்பதற்காக 15 லட்சம் பேர் திரண்டிருந்தனர். இதனால் காம ராஜர் சாலையே நெருக்கடியில் தத்தளித்தது. கொளுத்தும் வெயிலின் கோரத்தை தாங்க முடியாமலும், குடிநீர் கிடைக்காததாலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். கூட்ட நெரிசல், கடும் வெப்பம், நீர்சத்து குறைவு ஆகிய கார ணங்களால் 5 பேர் மரண மடைந்துள்ள னர். மரண மடைந்தவர்களின் குடும்பங்கள் நிலை குலைந்து நிற்கின் றன. இந்த துயர சம்பவம் முதல்வர் ஸ்டாலினை கவலையடைய வைத் துள்ள நிலையில், தி.மு.க. அரசின் நிர்வாகக் குளறுபடிகளும், நிர்வாகத் திறமையின்மையும்தான் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதனைத் தொடர்ந்து, உயரதிகாரிகளுடன் அவசர விசாரணை நடத்தியிருக்கிறார் ஸ்டாலின்.
அந்த விசாரணை குறித்து விசாரித்த போது, "சென்னை மற்றும் புறநகர் மாவட்டங் களிலிருந்து காலை முதலே மக்கள் மெரினா வுக்கு வரத் தொடங்கிவிட்டனர். ஞாயிற்றுக் கிழமை என்பதால் மெரினாவுக்கு வழக்கமாக வரும் கூட்டமும் சாகச நிகழ்ச்சியை பார்க்க அப்படியே கடற்கரையில் இருந் துள்ளது.
15 லட்சம் பேர் திரளுவார்கள் என யாருமே எதிர்பார்க்கவில்லை. கிட்டத்தட்ட 5 மணி நேரம் கூடிய மக்களின் கூட்டம், ஒரே சமயத்தில் வெளியேற முயற்சித்தபோது, கடுமையான நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை வெயிலின் தாக்கம் 35 டிகிரியாக இருந்துள்ளது. இது, வழக்கத்தை விட 1.5 டிகிரி கூடுதல். அதனால், வெப் பத்தின் கொடூர தாக்கம், ஒரே சமயத்தில் ஏற்பட்ட நெரிசல், குடிநீர் கிடைக் காதது ஆகியவை தான் துயர சம்பவங்களை ஏற்படுத்தி யிருக்கிறது என்று அதி காரிகள் தரப்பில் விளக்கமளித்துள்ளனர்.
விளக்கத்தைப் புரிந்துகொண்டாலும் அதில் திருப்தியடையாத முதல்வர் ஸ்டாலின், பாதுகாப்புக் குளறுபடிகள் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு அதிகாரிகளோ, தேவையான பாதுகாப்பு, குடிநீர் வசதிகள், ஆம்புலன்ஸ் ஏற்பாடுகள் என அனைத்தும் முறைப்படி செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்பு குறைபாடுகளால் இத்தகைய துயர சம்பவங்கள் நடக்கவில்லை என தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும், அதிகாரிகளின் விளக்கங்களில் முதல்வருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை''’என்று தெரிவிக்கிறது உளவு வட்டாரங்கள்.
அதிகாரிகளுடனான விசாரணையையடுத்து அறிக்கை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்,”"இனி இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும்'”என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து மேலும் நாம் விசாரித்த போது, "எதிர்பாராத அளவுக்கு மக்களின் கூட்டம் அதிகரித்ததும், ஒரே சமயத்தில் அவர்கள் வெளியேற முயற்சித்ததும், கடும் வெப்பமும்தான் துயர சம்பவத்திற்கு காரணம் என முதல்வரிடம் அதிகாரிகள் விளக்கமளிக் கிறார்கள். ஆனால், உண்மை என்ன? இந்த சாகச நிகழ்ச்சிக்காக கடந்த 3-ந் தேதி பொதுப்பணித்துறை சார்பில் மெரினாவில் நடந்துகொண்டிருந்த பணிகளை ஆய்வுசெய்த அமைச்சர் எ.வ. வேலு, 15 லட்சம் பேர் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது எனச் சொன்னார். அத்துடன், இதனை தனது சோசியல் மீடியா பக்கத்திலும் பதிவு செய்திருக்கிறார் வேலு.
ஆக, மிக அதிகமான எண்ணிக்கையில் மக்கள் கூடுவார்கள் என அரசாங் கத்துக்கு தெரிந்திருக்கிறது. அப்படியானால் அதற்குத் தகுந்த மாதிரி போதிய பாதுகாப்பு ஏற்பாடு களை திட்டமிட்டு அதிகாரிகள் செய் திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவுமே இங்கு நடக்கவில்லை.
அதாவது, வான் நிகழ்ச்சி நடத்தவிருக் கிறோம் என இந்திய விமானப்படை தரப்பிலிருந்து தலைமைச் செயலாளர் முருகானந்தத்துக்கு கடிதம் வந்திருக்கிறது. இதனை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்ற நிலையில், பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரிஸ் தாக்கருக்கு அனுப்பி தேவையான ஏற்பாடுகளை கவனியுங்கள் எனவும் அறிவுறுத்தியிருக்கிறார்.
பொதுத்துறைச் செயலாளர் என்ன செய்திருக்க வேண்டும்? காவல்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை, போக்குவரத்துத்துறை, சென்னை மாநகர காவல்துறை, சென்னை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் உளவுத்துறை ஆகிய துறைகளின் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்க வேண்டும்.
ஒவ்வொரு பணியையும் திட்டமிட்டு பிரித்துக் கொடுத்து அவற்றை ஒருங்கிணைந்து செயல்படுத்த உத்தரவுகளை பிறப்பித்திருக்க வேண்டும். உத்தரவுக்குப் பிறகு, பாதுகாப்பு ஏற்பாடுகளும் மக்களுக்கு போதிய வசதிகளும், லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால் நிகழ்ச்சி முடிந்து ஒரேசமயத்தில் வெளியேறும் சூழல் இருப்பதைக் கணித்து, அவர்கள் நெரிசல் இல்லாமல் வெளி யேறுவதற்கான வழிகளையும் பொதுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்திருக்க வேண்டும். இதுதான் பொதுத்துறையின் கடமை. ஆனால், அப்படிப்பட்ட ஆலோசனையோ, திட்டமிடலோ, ஒருங்கிணைப்போ பொதுத்துறை அதிகாரிகள் தரப்பில் செய்யப்படவே இல்லை.
குறிப்பாக, 15 லட்சம் பேர் வருவார்கள் என அரசுக்கு தெரிந்திருக்கும் நிலையில், அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதிகளையும், கழிவறை வசதிகளையும் சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் செய்து தந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை மேயர் ப்ரியா, துணை மேயர் மகேஷ் ஆகியோர் ஆய்வு செய்திருக்க வேண்டும். ஆனால், குமரகுருபரன் இதில் கவனம் செலுத்தவில்லை. குடிநீர் தொட்டிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந் தாலும் இவ்வளவு பேர் திரளும் கூட்டத்துக்கு அது போதுமானதாக இருக்கவில்லை.
காவல்துறையும், உளவுத்துறையும், மக்கள் வெளியேற போதுமான வசதிகள் இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்யவில்லை. நிகழ்ச்சி முடிந்ததும், முதல்வர், அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆகியோரை பாதுகாப்பாக அனுப்பி வைத்ததும் தங்கள் கடமை முடிந்துவிட்டது என ஸ்பாட்டிலிருந்து காவல்துறை உயரதிகாரிகள் கிளம்பிவிட்டனர்.
ஸ்பாட்டிலிருந்து உயரதிகாரிகள் கிளம்பியதைப் பார்த்ததும், கடும் வெயிலை சமாளிக்க முடியாமல் தவித்த காவல் துறையினரும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள நிழலைத் தேடிப்போய்விட்டனர். இதனால் மக்கள் தங்கள் வாகனம் நிறுத்திய இடத்தை நோக்கியும், பஸ் ஸ்டேண்ட் மற்றும் ரயில்வே ஸ்டேசன் நோக்கியும் நடந்து செல்லும்போது ஏற்பட்ட நெரிசலை ஒழுங்குப்படுத்த போதிய கவனம் காவல்துறையில் இல்லை.
இப்படி ஒவ்வொரு துறையிலும் அலட்சியம் இருந்துள்ளது. அதிகாரிகள் தரப்பில் மக்களின் பாதுகாப்பில் அக்கறை காட்டவில்லை. எல்லாம் தானாக நடக்கும்; சூழல்களை மக்களே கையாள்வார்கள் என்ற அலட்சியப் போக்கு அதிகாரிகளிடம் இருந்திருக்கிறது. இப்படிப்பட்ட பொது நிகழ்வில், தவறுகள் ஏற்பட்டால், தவறுக்கு காரணமானவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். அப்படி தண்டிக்கப்படாததால்தான் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துவிடுகின்றன. நடந்து முடிந்த துயரம்போல் ஜெயலலிதா ஆட்சியில் நடந்திருந்தால் அரசு நிர்வாகத்தில் நடந்திருப்பதே வேறு! அப்படிப்பட்ட ஆக்ஷன்கள் இப்போது இல்லை''’என்று விரிவாக விவரிக்கிறார்கள் அரசு அதிகாரிகள்.
ஏர் ஷோ நிகழ்வில் நடந்த ஒரு முக்கிய சம்பவம், இப்போதும் அதிகாரிகள் தரப்பில் விவாதப் பொருளாகியிருக்கிறது. அதாவது, முதல்வர் ஸ்டாலினின் முதன்மைச் செயலாளர் உமாநாத் ஐ.ஏ.எஸ்., தனது குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர்களின் குழந்தைகளுக்கு வான் நிகழ்ச்சி சரியாகத் தெரியவில்லை. இதனால், அவர்களுக் காக மொபைல் போனிலிருந்து பார்க்கும்படி உளவுத்துறை அதிகாரி ஒருவர், உதவி செய்துகொண்டேயிருந்தார். அவர்களுக்காக போட்டோ எடுத்துக் கொடுத்தார்.
நிகழ்ச்சியை கவனிப்பதைக் காட்டிலும் உமாநாத்துக்கும் அவரது குழந்தைகளுக்கும் போட்டோ எடுத்துக் கொடுப்பதில்தான் அதீத கவனமும் அக்கறையும் காட்டினார் அந்த உளவுத்துறை அதிகாரி. இப்படித்தான் நிறைய அதிகாரிகள் இருந்தனர். உளவுத்துறை அதிகாரி, உமாநாத்தின் குழந்தைகளை கவனித்துக் கொண்ட சம்பவம்தான் இப்போதும் கோட்டை அதிகாரிகளிடம் பேசுபொருளாக இருந்துகொண்டிருக்கிறது.
இந்திய வான்படையினரின் வான் சாகச நிகழ்வில் ஏற்பட்ட பாதுகாப்புக் குளறுபடி களால் மக்கள் பட்ட அவஸ்தைகளையும், மர ணங்களையும் மத்திய உளவுத்துறை தங்களின் டெல்லி மேலிடத்துக்கு கனமான ரிப்போர்ட் டை அனுப்பி வைத்துள்ளது. அதனை வைத்து தமிழக கவர்னரிடம் ஒரு அறிக்கை கேட்டுள் ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!
இந்த நிலையில், பல்வேறு தரப்புகளிடம் தனது பாணியில் விசாரித்து வருகிறார் கவர்னர் ரவி. அவரது அறிக்கை டெல்லிக்குச் சென்றதும் அதனையொட்டி, தமிழக அரசிடம் விளக்கம் கேட்க மத்திய உள் துறை அமைச்சகம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.