தி.மு.க.வில் நிலவும் கோஹ்டி பூசல்களால் 2026 சட்டமன்றத் தேர்தலில், சேலம் மாவட்டத்தில் தி.மு.க. வெற்றிவாகை சூடுவது கடும் சவாலாக இருக்கும் என்கிறார்கள் உடன்பிறப்புகள். தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஒருபுறம் நங்கூரமாய் இருக்க, மறுபுறம் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உருவானதி லிருந்து, தமிழகத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
கடந்த 2011, 2016, 2021 ஆகிய மூன்று சட்டமன்றத் தேர்தல்களில், 2021ல் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. எனினும், அந்தத் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணியால் எந்தத் தாக்கத்தை யும் ஏற்படுத்த முடியவில்லை.
சேலத்து சிங்கம் என்றழைக்கப்படும் வீரபாண்டி ஆறுமுகம் இருந்தபோதே, 2011 சட்ட மன்றத் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் அனைத் துத் தொகுதிகளிலும் தி.மு.க. மண்ணைக் கவ்வியது. 2016, 2021 தேர்தல்களில், தி.மு.க.வால் 11 தொகுதி களில் ஒன்றில் மட்டுமே வெல்ல முடிந்தது. தி.மு.க. வில் நிலவும் உச்சகட்ட கோஷ்டிப் பூசல்களால்தான், சேலத்தில் அக்கட்சியால் கரைசேர முடியவில்லை என்கிறார்கள் மூத்த உடன்பிறப்புக்கள்.
இது தொடர்பாக சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சீனியர்களிடம் விசாரித்தோம். ''பெண்களுக்கு கட்டணமில்லாப் பேருந்து பயணம், மகளிர் உரிமைத்தொகை, மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதையெல்லாம் கடந்து, தேர்தல் காலத்தில் செய்யவேண்டிய சில வேலைகளைச் செய்தால்தான் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வருவார்கள். அதைச் செய்வது கட்சி நிர்வாகிகள்தான். இன்றைய நிலையில் கட்சி நிர்வாகிகள் மனமுவந்து தேர்தல் வேலைகளைச் செய்வார்களா என்பது கேள்விக்குறிதான்.
அ.தி.மு.க. பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்த போதும், இப்போது கழகம் ஆட்சிக்கு வந்த பிறகும் கூட தி.மு.க.வின் கடைநிலை நிர்வாகிகள் கையில் பணம் புரளவில்லை. மா.செ., மற்றும் அமைச்சர்கள் மட்டுமே கல்லா கட்டுகின்றனர். மா.செ.க்களும், அமைச்சர்களும் கீழ்நிலை நிர்வாகிகளை மதிப்பதேயில்லை. சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரான அமைச்சர் ராஜேந்திரனின் கட்டுப் பாட்டில் சேலம் தெற்கு, சேலம் வடக்கு, சேலம் மேற்கு, ஓமலூர் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன. தி.மு.க. ஆட்சிக்கு வரும்வரை அவருடன் நெருக்கமாக இருந்த மாநகர செயலாளர் ஜெயக்குமார், சூரமங்கலம் ப.செ. சக்கரை சரவணன் ஆகியோரை கட்சியைவிட்டே கட்டம்கட்ட வைத்தார். அவைத் தலைவர் எஸ்.டி.கலையமுதன், அஸ்தம்பட்டி மண்டலக்குழு தலைவர் உமாராணி ஆகியோரை ஓரங்கட்டினார்.
கட்சிக்கு வெறித்தனமாக உழைக்கக்கூடிய கவுன்சிலர் குமரவேலை, அமைச்சர் ராஜேந்திரன் தான் மாநகர துணைச் செயலாளராக்கினார். குமரவேல், தன்னுடைய மகள் திருமணத்திற்கு அமைச்சரால் ஓரங்கட்டப்பட்ட மாஜி எம்.பி., எஸ்.ஆர்.பார்த்திபன், கவுன் சிலர் குணசேகரன் உள்ளிட் டோரை அழைத்தார் என்ப தாலும், வரவேற்பு பேனரில் அமைச்சர் கே.என்.நேருவின் படத்தை பெரிதாகப் போட் டார் என்பதாலும் அவரோடு கட்சிக்காரர்கள் யாரும் அன்னம், தண்ணி புழங்கக்கூடாது என்று உத்தரவு போட்டுவிட்டார்.
கன்னங்குறிச்சி பேரூராட்சித் தலைவர் குபேந்திரன், அமைச்சருடன் நெருக்கமாக இருந்தார். தேர்தல் செலவுக்கெல்லாம்கூட உதவினார். இப்போது இருவருக்கும் ஏழாம் பொருத்தமாகிவிட, இலைக்கட்சியில் சேர நாள் பார்த்துக்கொண்டிருக்கிறார் குபேந்திரன். இப்போதைய நிலையில் அமைச்சர் ராஜேந்திரன், மீண்டும் சேலம் வடக்கில் போட்டியிட்டால், அவர் கரை சேர்வதே கடினம்தான். காண்டிராக்டர்கள் காமராஜ், ஆண்டியப்பன் மேஸ்திரி ஆகியோரை மட்டும்தான் அவர் பக்கத்தில் வைத்திருக்கிறார். மாநகரில் எந்த வளர்ச்சிப் பணிகளும் நடக்காததால் மக்களிடமும் அதிருப்தி நிலவுகிறது.
இவை ஒருபுறமிருக்க, சேலத்திலுள்ள பிரபல தனியார் கல்லூரியில் மாணவர்களிடையே கஞ்சா சப்ளை செய்வதில் ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு தொடர்பிருக்கிறது. அதை மா.செ. கண்டுகொள் வதே இல்லை. இப்படி நிர்வாகிகளுக்கு அமைச்சர் மீது ஏகப்பட்ட அதிருப்தி. எனவே களத்திலிறங்கி, வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துவரும் பணிகளைச் செய்ய மாட்டார்கள். சேலம் மத்திய மாவட்டத்தின் கீழுள்ள நான்கு தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டுமானால் மாவட்டத் தலைமையை மாற்ற வேண்டும், அல்லது 2 தொகுதிக்கு ஒரு மா.செ. திட்டத்தை விரைவாக அமல்படுத்த வேண்டும்'' என்கிறார்கள் மூத்த உடன்பிறப்புகள்.
சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளோ, "வீர பாண்டியார் மறைவுக்குப் பிறகு அவருடைய ஆதரவாளர்களை யும், தொண்டர்களையும் ஒருங்கிணைத்துச் சென்றார், சேலம் கிழக்கு மா.செ.வான எஸ்.ஆர்.சிவலிங்கம். ஆனால், கடந்த முறை நடந்த அமைப் புத் தேர்தலில் எல்லா நிய மனங்களிலும் நன்றாகக் கல்லா கட்டினார். கடந்த நாடாளு மன்றத் தேர்தலில் கள்ளக் குறிச்சியில் எம்.பி., சீட் எதிர்பார்த்தும் கட்சி காலை வாரியதில் கிழக்கு மா.செ. ரொம்பவே அப்செட். அதேவேளை, பணம் பண்ணுவதில் மட்டும் சுறுசுறுப்பாக இருக்கிறார். அண்மையில்கூட ஏற்காட்டில் சொகுசு பங்களா ஒன்றை வாங்கினார். தவிர, 4 பேருந்துகள், பெட்ரோல் பங்க், பல ஏக்கரில் பாக்கு தோப்பு, அரியானூர், உடையாப்பட்டியில் பல ஏக்கர் நிலங்கள் என ஏகப்பட்ட சொத்துக்களை குவித்துள்ளார்.
ரேஷன் கடை சேல்ஸ்மேன், கூட்டுறவு வங்கி உதவியாளர், கிராம உதவியாளர் பணி நியமனங் களில் மொத்த வசூலையும் அவரே எடுத்துக்கொண்டார். ஆனால், கட்சி செலவுகளுக்கு மட்டும் பணத்தை அவிழ்க்க மாட்டேன்கிறார். அவர்மீது ஆத்தூர், கெங்கவல்லி, வீரபாண்டி, ஏற்காடு சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட ஒ.செ.க்கள், கிளை நிர்வாகி கள் செம காண்டில் இருக்கிறார்கள்.
வீரபாண்டி தொகுதியில் கிழக்கு மாவட்ட து.செ., பாரப்பட்டி சுரேஷ்குமார் அல்லது வீரபாண்டி ஒ.செ., வெண்ணிலா சேகர் அல்லது வீரபாண்டியார் மகன் பிரபு ஆகியோரில் ஒருவருக்கு சீட் தரலாம் எனப் பேச்சு அடிபடுகிறது. ஆத்தூர் அல்லது கெங்கவல்லியில் மீண்டும் ரேகா பிரியதர்ஷினிக்கு வாய்ப்பு வழங்கினால் கட்சியினரே திட்டமிட்டு தோற்கடிப்பார்கள். தொகுதிக்கு சம்பந்தமேயில்லாத அவர்மீது உள்ளூர் மக்களும் அதிருப்தியில் இருக்கிறார்கள். ஏற்காட்டில் அமைப்புரீதியாக தி.மு.க. வலுவாக இல்லை. அ.தி.மு.க. பிரமுகர் "நிழல்' இளங்கோவனுடன் கட்சியின் மா.செ.,வும், சில ஒ.செ.க்களும் நெருக்க மாக இருப்பதும், நிர்வாகிகளிடம் கொதிநிலையை ஏற்படுத்தியுள்ளது.'' என்கிறார்கள் மூத்த நிர்வாகிகள்.
"சேலம் மேற்கு மா.செ.வாக டி.எம்.செல்வகணபதி நியமிக்கப்பட்டதி லிருந்தே, அவர் வீரபாண்டியாரின் ஆதரவாளர்களை ஓரங்கட்டத் தொடங்கிவிட்டார். 2021 சட்டமன்றத் தேர்தலில், எடப்படி பழனிசாமிக்கு எதிராகக் கட்சியில் அறிமுகமேயில்லாத சம்பத்குமாரை களமிறக்கினார். அதனால் எடப்பாடி பழனிசாமி 94 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அடுத்து நடந்த நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில், தொகுதியில் இரண்டாவது பெரும்பான்மையாக உள்ள மீனவர் சமூகத்தைச் சேர்ந்த தங்கவேலுவை நகர்மன்றத் தலைவராக்குவதாக உறுதியளித்தார். ஆனால், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பாஷாவை தலைவராக்கினார். இதனால் மீனவர் சமூகத்தினர் அதிருப்தியில் உள்ளனர். பாஷாவின் மகன் யூனஸூக்கு சுற்றுச்சூழல் அணியிலும், அவருடைய உறவினர் முபாரக்கிற்கு சிறுபான்மை பிரிவிலும் போஸ்டிங் போட்டுள்ளதையும் கட்சியினர் ரசிக்கவில்லை.
எடப்பாடியில் தி.மு.க.வின் முரட்டு பக்தரான ஜெயபூபதியின் மறைவுக்குப் பிறகு அவருடைய குடும்பத்தை கழகம் கண்டுகொள்ளவில்லை. இந்த அதிருப்தியில் ஜெயபூபதியின் மனைவி சுந்தராம்பாள் அ.தி.மு.க.வில் இணைந்து போட்டியிட்டு கவுன்சிலர் ஆனார். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரவிக்கு, வெள்ளாண்டிவலசு சுற்றுவட்டாரத்தில் நல்ல செல்வாக்குள்ளது. அவர் தி.மு.க.வில் இணைந்து, கவுன்சிலராக வெற்றிபெற்றார். ஆனார் நகர்மன்றச் செயலாளர் ஓரங்கட்டியதால் அ.தி.மு.க.வுக்கு சென்றுவிட்டார்.
ஜலகண்டாபுரம் காசி, நங்கவள்ளி ரவிச்சந்திரன் ஆகி யோரும் புறக்கணிக்கப்படுவதால் அவர்களும் செல்வகண பதிக்கு எதிராக நிற்கிறார்கள். உள்ளூர் செல்வாக்குள்ள ஜலகண்டாபுரம் காசி எம்.எல்.ஏ. சீட் கேட்பாரென்பதால் மா.செ. ஓரங்கட்டுகிறார். வன்னியர், மீனவர், நாடார்கள் ஆதிக்கமுள்ள எடப்பாடியில் தி.மு.க.வுக்கு சுத்தமாக செல்வாக்கில்லை. இங்கேயே இப்படியென்றால் கவுண்டர்கள் ஆதிக்கமுள்ள சங்ககிரி தொகுதியில் தி.மு.க. நிலை மிகவும் பரிதாபம்.
வன்னியர்கள் கோட்டையான மேட்டூர் தொகுதியில், வீரபாண்டியார் ஆதரவாளரான மாஜி எம்.எல்.ஏ. கோபாலை மா.செ. ஓரங்கட்டிவிட்டார். மேட்டூர் நகரச் செயலாளராக இருக்கும் காசி விஸ்வநாதன், டி.எம்.செல்வகணபதிக்கு நெருங்கிய உறவுக்காரர். கடந்த தேர்தலில் பா.ம.க., நீட்டிய 'வெள்ளையப்பனுக்கு' காசி விஸ்வநாதன் பணிந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
கொளத்தூர் ஒ.செ., தவசிராஜாவுக்கு நல்ல செல்வாக்குண்டு. அவரை தூக்கிவிட்டு தனக்கு வேண்டிய மிதுனை நியமித்தார் டி.எம்.எஸ். அதை விமர்சித்த 5வது வார்டு செயலாளர் அப்துல்சலாமை கட்டம்கட்டினார். அவர் சேலம் மேற்கு மா.செ.வானதிலிருந்தே கட்சி தொடர்ந்து சரிவைத்தான் சந்தித்துக்கொண்டிருக்கிறது. அவர்குறித்த புகார்களை மேலிடம் கண்டுகொள்வதில்லை'' என்றும் குமுறுகிறார்கள் உடன்பிறப்புகள். அதிருப்தியாளர்களை அழைத்துப்பேசி அரவணைத்துச் செல்லாதவரை சேலத்தில் தி.மு.க. தேறுவது கடினமென்கிறார்கள் மூத்த உ.பி.க்கள்!