பா.ஜ.க.வுக்கு செல்வாக்குள்ள மாவட்டங்களில் ஒன்றான குமரி மாவட்டத்தில், மொத்தமுள்ள 6 தொகுதிகளில் 4 தொகுதியைப் பெறும் முனைப்பில் பா.ஜ.க. காய் நகர்த்தி வருவது, குமரி அ.தி.மு.க. வினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கன்னியாகுமரி சிட்டிங் எம்.எல்.ஏ. அ.தி.மு.க. தளவாய்சுந்தரத்துக்குதான் தொகுதி மீண்டுமென்று உறுதியாகியிருக்கும் நிலையில், அந்த தொகுதியை பா.ஜ.க. மாஜி கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் மற்றும் 2016-ல் போட்டியிட்டு நான்காமிடத்துக்கு தள்ளப்பட்ட மீனாதேவ் ஆகியோர் கண்வைக்க, தமிழிசை தரப்பு ஒவ்வொரு ஏரியாவாக சர்வே எடுத்துவருகிறார்கள். இதில் தமிழிசையின் சொந்தஊரான அகஸ்தீஸ்வரத்தில், இது அண்ணன் தளவாய்சுந்தரத்தின் கோட்டை, அக்காவுக்கு வேற தொகுதி பாருங்கன்னு சொல்லிவிட்டார்களாம் அ.தி.மு.க.வினர்.

Advertisment

அடுத்ததாக பா.ஜ.க. லிஸ்ட்டிலிருக்கும் நாகர் கோவிலின் சிட்டிங் எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி மீது கடும் அதிருப்தி யிருப்பதால் அவரை மாற்ற நினைக்கிறது பா.ஜ.க. தலைமை. அவ ரோ, திருமணம் செய்யாமல் அர்ப்பணிப்போடு, இந்த 82 வயதிலும் கட்சிக்காக உழைக்கிறேனென்று சென்டிமெண்ட் சீன் போட்டு, கடைசியா ஒருமுறை சீட் கொடுங்கன்னு கெஞ்சுறாராம்! அ..மலையின் தீவிர ஆதரவாளரான கவுன்சிலர் ஜவான் அய்யப்பன், பொன் ராதாகிருஷ்ணன், மகளிரணி மாநில செயலாளர் உமாரதி, மாநகராட்சி கவுன்சில் மண்டல தலைவர் முத்துராமன் போன்றோர் நம்பிக்கையோடிருக்க, புதியவருக்கே வாய்ப்பென்கிறார்கள் பா.ஜ.க. வினர்.

Advertisment

கடந்த 2011-ல் அ.தி.மு.க. சார்பில் நாகர்கோவிலில் நாஞ்சில் முருகேசன் வெற்றிபெற்றார். 2016-ல் குறைந்த வாக்குகளில் தி.மு.க.விடம் தோற்க, 2021-ல் கூட்டணியி லிருந்த பா.ஜ.க.வுக்கு கொடுக்கப்பட்டது. இம்முறை அ.தி.மு.க.வே நிற்க வேண்டுமென்று எடப்பாடியிடம் முறையிட்டுள்ளனர். இதையடுத்து மாநகராட்சியின் கவுன்சில் மண்டல தலைவரும் நாஞ்சில் முருகேசனின் மகளுமான ஸ்ரீலிஜாவை தேர்தல் வேலையை பார்க்கும்படி தலைமை சொல்ல, வார்டு வார்டாக மக்களை சந்திக்கத் தொடங்கி விட்டார். இதன் காரணமாக பா.ஜ.க., அ.தி.மு.க. இடையே இத்தொகுதியில் முட்டல் மோதலாகியிருக்கிறது.

இதேபோல் குளச்சல் தொகுதியில் மூன்றுமுறை தொடர்ந்து காங்கிரஸ் பிரின்ஸிடம் தோற்றுள்ள பா.ஜ.க., இம்முறை பா.ஜ.க. பொதுச்செயலாளர் ப.ரமேஷுக்கு மீண்டும் சீட் கொடுப்பதற்கு கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இங்கே, மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் து.தலைவர் வழக்கறிஞர் சிவகுமார், ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், மாவட்ட தலைவர் கோபகுமார், முன்னாள் மா.தலைவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடும் முனைப்பிலிருக்கிறார்கள். இங்கு அ.தி.மு.க.வில் மாஜி பச்சைமால் விருப்பமனு கொடுத்துள்ளார். எனவே பச்சைமாலுக் குத்தான் இத்தொகுதியென்றும், பா.ஜ.க.வுக்கு இம்முறை வாய்ப்பில்லையென்றும் ர.ர.க்கள் கூறுகின்றனர்.

Advertisment

விளவங்கோடு தொகுதியில் 2024 இடைத்தேர்தலில் காங்கிரஸிடம் டெபா சிட்டை இழந்தது பா.ஜ.க. தற்போது காங்கிரஸிலிருந்து விஜயதாரணி பா.ஜ.க.வுக்கு வந்திருப்பதால், அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாமா என மேலிடம் யோசிக்க, இடைத்தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ.க. நந்தினி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்ணாமலை மூலமாக தலைமையிடம்         மூவ் பண்ணுகிறாராம்.

அதேபோல் மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயசீலன், பொன் ராதாகிருஷ்ணனை நம்பியிருக்கிறார். அ.தி.மு.க.விலோ முன்னாள் மேற்கு மா.செ. ஜான்தங்கம் மற்றும் மீனவரணி நிர்வாகி பிராங்க்ளின் ஆகியோர், தொகுதியை பா.ஜ.க.வுக்கு தரக்கூடாதென்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். இப்படி பா.ஜ.க. ஒரே மாவட்டத்தில் 4 தொகுதிகளை குறிவைத் திருப்பது குறித்து நம்மிடம் பேசிய அக்கட்சியினர், "குமரி மாவட்டத்தில் அ.தி.மு.க.வைவிட அதிக ஓட்டுக்கள் பா.ஜ.க.வுக்கு உள்ளது. அதேபோல் காங்கிரசுக்கும் உள்ளது. இங்கு தி.மு.க.வுக்கு எப்படி காங்கிரஸ் பின்புலமாக இருக்கிறதோ, அதேபோல் அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. இருக்கிறது. தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணியில் இங்கு தொடர்சியாக சரிசமமான தொகுதிகளில் இரு கட்சிகளும் போட்டி யிடுகின்றன. அதை பின்பற்றித்தான் நாங்கள் ஒரு தொகுதி கூடுதலாகக் கேட்கிறோம். 

kumari1

மேலும், குமரி மாவட்டத்தில் எங்கள் ஓட்டு பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் அ.தி. மு.க.வுக்கு இருக்கிற கொஞ்ச ஓட்டும் சிதறிக்கிடக்கிறது. அதனால் இங்கு நாங்கதான் கூட்டணிக்குத் தலைமை. பா.ஜ.க.வுக்கு 1996-ல் முதல் எம்.எல்.ஏ. தந்த தொகுதியும், 1984-ல், இந்து முன்னணி வெற்றிபெற்ற ஒரே தொகுதியுமான பத்மனாபபுரமும், அதேபோல், மீனவர்களும், கிறிஸ்தவர்களும் அதிகமுள்ள கிள்ளியூர் தொகுதியும் அ.தி.மு.க.வுக்கு சாதகமாக இருக்கிறது. அதனால் அந்த இரண்டு தொகுதிகளை அவர்களுக்கு கொடுக்கிறோம். இதில் கன்னியாகுமரி தொகுதியை தளவாய்சுந்தரம் விட்டுக்கொடுக்கவில்லை யென்றால் பத்மநாபபுரம் தொகுதி யைக் கேட்டு, நான்கு தொகுதியில் போட்டியிடுவது உறுதி'' என்றனர்.

அ.தி.மு.க.வினரிடம் கேட்ட போது, "குமரி மாவட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு எத்தனை தொகுதி, யாருக்கு சீட் என்பதை முடிவு செய்வது தளவாய்சுந்தரம்தான். தற்போது அவருக்கான தொகுதிக்கும் பா.ஜ.க. நெருக்கடி கொடுப்பதால் அந்த தொகுதியை தளவாய்சுந்தரம் தக்கவைத்துக்கொள்ள, பா.ஜ.க.வினரிடம் சரண்டராகிவிடுவார். 

அப்படித்தான் கடந்த தேர்தலில் பச்சைமால் கேட்ட குளச்சல் மற்றும் நாகர்கோவிலை அவருக்கு கொடுக்கக் கூடாதென்று பா.ஜ.க.வுக்கு கொடுத்தார். விளவங்கோடு தொகுதியில் நிற்கவேண்டிய ஜான்தங்கத்தை பத்மநாபபுரத்தில் நிறுத்தி, விளவங்கோடு தொகுதியை பா.ஜ.க.வுக்கு கொடுத்தார். ஏனென்றால் குமரி அ.தி.மு.க.வில் அவர் மட்டும்தான் ஜெயிக்க வேண்டுமென்ற மனநிலையில் இருப்பதால், அதை உணர்ந்துகொண்ட பா.ஜ.க.வினர், இப்படி நான்கு தொகுதிகளைக் கேட்கிறார்கள்''’என்றனர்.

இதுகுறித்து அரசியல் நோக்கர்கள் கூறும்போது, "கிராமங்களில் ஒன்று சொல்வார்கள், மகன் செத்தாலும் பரவாயில்லை, மருமகள் தாலி அறுக்கணும் என்று. அதேபோல், அ.தி.மு.க. ஜெயிப்பதைவிட, தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என நினைக்கும் எடப்பாடி பழனிச்சாமி, பா.ஜ.க.வை நம்பி அவர்கள் பீகார் ஃபார்முலாவை தமிழகத்திலும் நடைமுறைப் படுத்த என்ன தேவையோ, அதைச் செய்யத் தயாராகயிருக் கிறார். அதற்காக அவர் எந்தத் தொகுதியையும் பா.ஜ.க.வுக்கு விட்டுக்கொடுக்கத் தயாராகவும், தயங்காமலும் இருக்கிறார். இதனால் கன்னியாகுமரியில் நான்கு தொகுதி இல்லை, ஆறு தொகுதியையும்கூட பா.ஜ.க.வுக்கு எடப்பாடி கொடுப்பார். இதை அம்மாவட்ட அ.தி.மு.க.வினர் எதிர்ப்பதில் எந்த பயனும் இல்லை''”என்கின்றனர்.