டிகர் விஜய் ஒரு முடிவை எடுத்திருக்கிறார். அது தமிழக அரசியலில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை எந்த முக்கிய முடிவும் எடுக்காமல் போராட்டங்கள் நடத்தாமல் சைலன்ட்டாக இருந்த விஜய், கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பை தனது பனையூர் அலுவலகத்தில் அதை வெளியிட்டவருடன் அமர்ந்து, ‘ப்ரொஜெக்டர்’ வழியாக மூன்று மணி நேரம் பார்த்துள்ளார்.

அதில் த.வெ.க. நிறைய ஓட்டு வாங்கும். ஆனால், தனித்துப் போட்டியிட்டால் அது தி.மு.க. ஆட்சியை மறுபடியும் கொண்டுவந்துவிடும் எனக் கூறப்பட்டிருந்தது. பா.ஜ.க. ஆதரவு சேனல் அந்த கருத்துக் கணிப்பை எடுத்திருந்தது. அதில் உள்ள விவரங்களை நுணுக்கமாக ஆராய்ந்த விஜய் அந்த சேனல் உரிமையாளருடன் மிக நீண்ட விவாதத்திற்கு சென்றார். ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியம் ஆகியோர் உடனிருந்தார்கள். அவர்களும் நிறைய கேள்விகள் கேட்டார்கள்.  

ஏற்கெனவே ஜான்ஆரோக்கியம், பா.ம.க. அன்புமணி, சீமானின் நாம் தமிழர், த.வெ.க. ஆகியோரோடு இணைந்து ஒரு கூட்டணி அமைக்கலாம் என யோசனை தெரிவித்திருந்தார். அதனால்தான் சீமான் தந்தை பெரியாரை எதிர்த்து பேசியதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் விஜய் மௌனம் காத்தார். இந்த உதிரிக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மக்கள்நலக் கூட்டணி போல் ஒரு புதிய கூட்டணியை உருவாக்கினால் என்ன என ஒரு யோசனை விஜய்க்கு இருந்தது. ஆனால், அப்படி ஒரு கூட்டணியை உருவாக்கினால் அது தி.மு.க. மறுபடியும் வெற்றி பெறுவதற்கு சாதகமாக அமையும் என விஜய்யிடம், கருத்துக்கணிப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தார்கள். 

Advertisment

அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணிக்கு சென்றால் என்ன நடக்கும் என ஒரு விவாதம் நடந்தது. அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் 50 சீட்டுகள் விஜய் கேட்கும் நிலையில், 40 சீட்டுகளுக்கு குறையாமல் பா.ஜ.க. கேட்கும். 15 சீட்டுகள் பா.ம.க.விற்கு செல்லும். அத்துடன் தே.மு.தி.க. மற்றும் உதிரிக்கட்சிகள் என சீட்டுகளை பங்கிட்டுக் கொடுத்தால் அ.தி.மு.க. 100 சீட்டுகளுக்கு குறைவாகத்தான் போட்டியிட வேண்டிவரும். அ.தி.மு.க. தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக் கும் என எடப்பாடி கூறிவரும் சூழ்நிலையில், இந்தக் கூட்டணி எப்படி பரிணமிக்கும் என சந்தேகம் கிளப்பினார்கள் விவாதத்தில் கலந்து கொண்டவர்கள். விஜய்யுடன் பா.ம.க., தே.மு.தி.க., நா.த.க., வி.சி.க. அடங்கிய கூட்டணியை அமைத்தால் வெற்றியை நோக்கி செல்லலாம் என ஒரு யோசனை முன்வைக்கப்பட்டது. ஒரு வேளை பா.ஜ.க. அணியில் விஜய் கட்சி இணைந்தால் அதை எப்படி நியாயப்படுத்துவது என்கிற விவாதமும் எழுந்தது. 

சமீபத்தில் நடைபெற்ற முருகன் மாநாட்டில் அண்ணா -பெரியார் பற்றி கேவலமாக சித்தரித்து ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதைப்பற்றி விஜய் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. அது இந்துத்வா விசயத்தில் விஜய், தந்தை பெரியாரின் புகழையே காவு கொடுக்கத் தயாராகி விட்டார் என்பதை வெளிக்காட்டியது. அதுபோல பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தால் அதைச் சமாளிக்க, ‘தி.மு.க. முன்பு எப்படி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததோ அது போலத்தான் நாங்களும் கூட்டணி வைத்தோம்’ என நியாயப்படுத்திக் கொள்ளலாம். தி.மு.க. மறுபடியும் ஆட்சிக்கு வருவதை எப்பாடு பட்டாவது நாம் தடுக்க வேண்டும் என்பதே த.வெ.க.வின் நிலை என விளக்கமளிக்கலாம். பா.ஜ.க. இல்லாமல் த.வெ.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க முடியாதா         என விவாதிக்கப்பட்டது. அ.தி.மு.க., த.வெ.க., தி.மு.க. கூட்டணியில் உள்ள மார்ச்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் இணைத்து தனி கூட்டணி அமைக்க முடியாதா என்பதும் விவாதத்துக்கு உள்ளானது. பா.ஜ.க.வை விட்டு அ.தி.மு.க. வருமா? அதற்கான வாய்ப்பு இருக்கிறதா எனக் கேட்கப்பட்டதற்கு ‘வாய்ப்பிருக்கிறது’ என்பதே பதிலாக வந்தது. 

தற்பொழுது அ.தி.மு.க.விற்கும், பா.ஜ.க. விற்கும் இடையே கூட்டணி ஆட்சி என்கிற விசயத்தில் ஒரு பெரிய விவாதம் நடந்து வருகிறது. அமித்ஷா தனது பேட்டியில் கூட்டணி ஆட்சி என்பதை உறுதியாகச் சொல்லி வருகிறார். எடப்பாடியோ கூட்டணி ஆட்சி என்பது இல்லை என அமித்ஷாவுக்கு எதிராகப் பேசிவருகிறார். அமித்ஷா, வேலுமணி மூலமாக அ.தி.மு.க.வை உடைக்க முயற்சி செய்துவருகிறார். பா.ஜ.க. கூட்டணியை விட்டு அ.தி.மு.க. போகும் என முடிவெடுத் தால் அ.தி.மு.க. துண்டு துண்டாக உடையும். இதில் நாம் அ.தி.மு.க. கூட்டணிக்குள் செல்வது பொருத்தமாக இருக்குமா என விவாதிக்கப்பட்டது. நாம் தனித்துப் போட்டியிடு வோம் என்கிற குரல்தான் அதிகமாக ஒலித்தது. அனைத்தையும் கேட்டுக் கொண்ட விஜய், நேரடி யாக எடப்பாடிக்கு போன் போட்டு நீண்ட நேரம் பேசியிருக்கிறார் என்கிறது த.வெ.க. வட்டாரங்கள். 

Advertisment