இடைத்தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் ரெடியாங்கிற நிலையில், மத்திய-மாநில அரசுகள் ரொம்பவே பம்முகின்றன.
ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம், தெலுங் கானா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேர்தலை எதிர்கொள்கிறது பா.ஜ.க. இதில் ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. ஆளும் கட்சியாக இருக்கிறது. ஆனால், அந்தந்த மாநிலங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் பா.ஜ.க.வுக்கு சாதகமாக இல்லை. ராஜஸ்தானில் படு வீக். மத்திய பிரதேசத்தில் கடும் இழுபறி. சட்டீஸ்கரில் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை என்றாலும் பா.ஜ.க. அந்த ஒற்றுமையின்மையை பயன்படுத்திக் கொள்ளும் நிலைமை இல்லை. மிசோராமில் குழப்பம்.
தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னேறுகிறது.
""2019 தேர்தலுக்கான அரை இறுதி போட்டியாக பார்க்கப்படும் இந்த ஐந்து மாநில தேர்தல் வடஇந்திய மாநிலங்களில் பா.ஜ.க.விற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் பா.ஜ.க.வின் கவனம் தென் மாநிலங்களை நோக்கி திரும்பி யுள்ளது. சபரிமலை விவகாரத்திற்காக அமித் ஷா கேரள முதல்வர் பினராயி விஜயனுடைய சொந்த ஊரான கண்ணனூருக்குச் சென்று "கேரள அரசை கலைப்பேன்' என சவால் விட்டார். பட்டேலின் பிறந்த நாளுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச் சர் நிர்மலா சென்னைக்கு வந்து ஓட்டப்பந்தயத்தை தொடங்கி வைத்தார்'' என சுட்டிக் காட்டுகிறார்கள் டெல்லியிலுள்ள பா.ஜ.க. தலைமையகத்தை சேர்ந்தவர்கள்.
தமிழகத்தில் ரஜினியை ரொம்பவும் எதிர்பார்க்கிறது பா.ஜ.க. ஆனால் பா.ஜ.க.வுடன் சேர்வதில் ரஜினிக்கு தயக்கம் இருக்கிறது. குருமூர்த்தியின் பார்முலாவான ரஜினி + பா.ஜ.க. + அ.தி.மு.க. என்பதில் முதல்வர் யார் என்பதில் தொடங்கி ஏகப்பட்ட பிரச்சினை இருக்கிறது. அதனால் டெல்லி பா.ஜ.க. தலைவர்கள் ஒரு மாற்று யோசனையை முன்வைத்திருக்கிறார்கள். ரஜினி வராவிட்டால், அ.தி.மு.க.வை ஒற்றுமைப்படுத்தி அ.தி.மு.க. + பா.ஜ.க. அல்லது தே.மு.தி.க. என ஒரு கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்திக்கலாம் என்பது மோடி-அமித் ஷா கணக்கு.
சமீபத்தில் சேலத்தில் நடந்த விழாவில் எடப்பாடியை சந்தித்த கேரள கவர்னர் சதாசிவம் இதுபற்றி ஒன்றரை மணி நேரம் தனியாக அமர்ந்து விவாதித்துள்ளார். சென்னை தி.நகரில் தங்கி, உடல்நலக் குறைவால் இராமச்சந்திரா மருத்துவ மனையில் அவதிப்படும் சகோதரரை பார்க்க பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து பரோலில் வந்துள்ள இளவரசியும் இந்த விவாதங்களில் பங்கெடுத்துள்ளார். இள வரசியிடம் அ.தி.மு.க. ஒற்றுமை பற்றி நேரடியாக எடப்பாடி பேசியுள்ளார். இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியாவுடன் எடப்பாடி மனைவி பேசி வந்ததன் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தைகள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட அ.தி.மு.க.வினர் அதிகமாக கலந்து கொண்ட எடப்பாடி தலைமையிலான திருப்பூர் திருமண விழாவில் விவாதிக்கப்பட்டுள்ளன.
தினகரன் மட்டும் தனி ரூட்டில் செல்கிறார். ""ஒவ்வொரு கிராமத்திலும் அ.தி.மு.க.விற்கு போட்டியாக அ.ம.மு.க. கிளை அமைத்து கட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். எடப்பாடியை முதல்வராகவும் ஓ.பி.எஸ்.சை துணை முதல்வராகவும் ஏற்றுக் கொள்ள முடியாது'' என எகிறுகிறார் தினகரன். அதே நேரத்தில் தினகரனுடன் இருக்கும் 18 (மாஜி) எம்.எல்.ஏ.க்களிடம் பென்ஷன் உள்ளிட்ட பலன்களை நினைவூட்டி தூண்டில் போடுகிறாராம் எடப்பாடி.
""ஓ.பி.எஸ்.சுக்கு நெருக்கமான 11 எம்.எல். ஏ.க்கள் ஆட்சிக்கு எதிராக ஓட்டுப் போட்டார்கள். அவர்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு எதிராக போட்ட வழக்கே கடந்த ஒன்றரை வருடங்களாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் அப்பீலுக்கு போகாதீர்கள்.
எஸ்.டி.கே.ஜக்கையன் போல சபாநாயகரை சந்தித்து உங்களுக்கு எதிரான தகுதி இழப்பு உத்தரவை திரும்பப் பெற கோரிக்கை வையுங்கள்'' என எடப்பாடி போட்ட தூண்டில் வலுவாக வேலை செய்கிறது.
பா.ஜ.க. மேலிடமோ "எந்தப் பசை போட் டாவது அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும்' என சிறையில் உள்ள சசிகலா வரை பேசியுள்ளது. இதில் ஒரு முடிவு வராமல் தமிழகத்தில் இடைத்தேர்தல் பற்றி எந்த அறிவிப்பும் வராது என அடித்துச் சொல்கிறார்கள் அ.தி.மு.க.வினரும் பா.ஜ.க.வினரும் அதிக நம்பிக்கையோடு.
-தாமோதரன் பிரகாஷ்