"கடும் அதிருப்தி யோடு தேசிய ஜன நாயக கூட்டணியி லிருந்து விலகிய ஓ.பி.எஸ்.ஸை சமா தானப்படுத்தி மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவர "ஜாக்பாட்' வாக்குறுதிக்கு பா.ஜ.க. தலைமை தயாராகி விட்டது' என்பதுதான்  தமிழக அரசியல் வட் டாரத்தில் தற்போதைய ஹாட் டாபிக்!

Advertisment

பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி அமைந்த நாள் முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முக்கியத்துவம் இழந்த ஓ.பி.எஸ்., கடந்த ஜூலை 31ஆம் தேதி, அக்கூட்டணியிலிருந்து வெளியேறியதோடு, பா.ஜ.க.வுக்கு எதிரான நிலைப்பாட்டையும் எடுத்து வருகிறார். இந்நிலையில், இம்மாத இறுதியில் மோடி மீண்டும் தமிழகம் வருவதற்குள் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் பா.ஜ.க. இறங்கியிருக்கிறது.

இதுகுறித்து பா.ஜ.க.வுக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தபோது, "தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டது முதல், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்த ஓ.பி.எஸ்.ஸுக்கான  முக்கியத்துவம் குறைந்ததற்கு எடப்பாடி பழனிச்சாமி தான் காரணமென்று பலரும் கூறிவந்தாலும், உண்மை அதுமட்டுமல்ல. ஒரே ஜாதியை சேர்ந்த நயினார் நாகேந்திரன், ஓ.பி.எஸ். இடையிலான பனிப்போரும் காரணமென்கிறார்கள் விவரமறிந்தவர்கள். அதன் காரணமாகவே அமித்ஷாவும், மோடியும் தமிழகம் வந்தபோது அவர்களை சந்திக்க ஓ.பி.எஸ்.ஸுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து, கூட் டணியிலிருந்து விலகுவதாக அறிவித்த ஓ.பி.எஸ்., தன் மகனோடு சேர்ந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிறகுதான் பிரச்சனையே பூதாகரமானது.

தற்போது, பா.ஜ.க.வின் மீது ஓ.பி.எஸ். கடுங்கோபத்திலிருந்தாலும், தி.மு.க.விலோ, த.வெ.க.விலோ கூட்டணியில் சேரும் வாய்ப்பு துளியும் கிடையாது.  காரணம்,  அ.தி.மு.க.வை எடப்பாடியின் பிடியிலிருந்து மீட்பதற்காகவும், அ.தி.மு.க.வை ஒன்றிணைப்பதற்காகவும், உரிமை மீட்புக்குழு என்ற பெயரில் தனித்தியங்கும் ஓ.பி.எஸ்., அதை கலைத்துவிட்டு வேறெந்த கட்சியில் இணைந்தாலும் அ.தி.மு.க.வை எடப்பாடியிடமிருந்து மீட்கவே முடியாதென்பதை நன்றாகவே உணர்ந்துள்ளார். ஆகவே, அவர் மீண்டும் பி.ஜே.பி.க்குதான் வருவாரென்று பா.ஜ.க. தலைமை உறுதியாக நம்புகிறது. இந்நிலையில், ஓ.பி.எஸ்.ஸை சமாதானப்படுத்த முக்கியமான வாக்குறுதியை வழங்கத் தயாராகிவிட்டது பா.ஜ.க. தலைமை.

Advertisment

இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்திலோ, சிதம்பரம் நடராஜர் கோவில், திருவண்ணாமலை ஆகிய ஆன்மிகத்தலங்களுக்கு மோடி வரவிருப்பது, ஓ.பி.எஸ்.ஸை சமாதானப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும். அதற்குள் பா.ஜ.க. அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்ட மேல்மட்ட நிர்வாகிகள், ஓ.பி.எஸ்.ஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள். பின்னர், மோடியை ஓ.பி.எஸ். சந்திக்கும்போது, முக்கியமான ஜாக்பாட் வாக்குறுதியை அவர் தருவாரென்றும், அதன்பின், தனது ஒருங்கிணைப்புக்குழுவை கலைத்துவிட்டு அ.தி.மு.க.வில் ஐக்கியமாவார். இந்த ஆண்டு இறுதிக்குள் இது கண்டிப்பாக நடக்கும்'' என்று சூசகமாக நம்மிடம் கூறினர். தற்போது, ஓ.பி.எஸ்.ஸுக்கு வழங்கப்படும் ஜாக்பாட் பரிசு என்னவாக இருக்கும்? என்ற கேள்விதான் பா.ஜ.க., அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது!