நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையில் போட்டியிட்ட காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, கொ.ம.தே.க. ஆகிய கட்சிகள் இந்த தேர்தலிலும் தி.மு.க. தலைமையில் கச்சை கட்டுகின்றன. அ.தி.மு.க.வுடனான கூட்டணி முறிந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் பா.ஜ.க. அண்ணாமலை. ஆனால், பா.ஜ.க. முன்னிறுத்திய இடங்களின் எண்ணிக்கையையும், ஒதுக்கீடு செய்ய கேட்ட வார்டுகளையும் கொடுக்க அ.தி.மு.க. தலைவர்கள் சம்மதிக்கவில்லை.
குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் 40 வார்டுகளைக் கேட்டு இறுதியில் 25 வார்டுகளுக்கு இறங்கி வந்தது பா.ஜ.க. ஆனால், 12 வார்டுகளில் தொடங்கி கடைசியில் 18 வார்டுகள் வரை தருவதற்கு சம்மதித்தனர் அ.தி.மு.க. தலைவர்கள். அதில் 6 வார்டுகள் பா.ஜ.க. கேட்கும் வார்டுகளாக இருக்கும் என எடப்பாடி தெரிவித்தார். தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் பா.ஜ.க.வுக்கு மேயர் மற்றும் சேர்மன் பதவிகளும் இல்லை என அழுத்தமாகத் தெரிவித்தது அ.தி.மு.க. இத்தகைய காரணங்களா லேயே அ.தி.மு.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொண்டார் அண்ணாமலை. ஆனால் தேசிய அளவில் அ.தி.மு.க.-பா.ஜ. கூட்டணி தொடரும் என எடப்பாடி பழனிச்சாமியும் அண்ணாமலையும் தெரிவிக்க, அ.தி.மு.க. தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் எடப்பாடியை உடனே தொடர்புகொண்டு, "பா.ஜ.க.வுடன் கூட்டணி வேண்டாம்கிற தொண்டர்களின் முடிவினை நாம் எடுத்திருக்கோம். ஆனா, தேசிய அளவில் கூட்டணி தொடரும்னு சொல்லியிருக்கீங்களே''’எனச் சொல்ல... "மத்தியில் பா.ஜ.க. ஆட்சி இன்னும் 2 வருசம் இருக்கு. அதுவரை நமக்கு சில விசயங்களில் பிடிமானம் வேண்டாமா?''’என்று எடப்பாடி சொல்ல... "இந்த தேர்தலில் சிறுபான்மை வாக்குகளை பெற வேண்டுமாயின் பா.ஜ.க.வுடன் உறவு இல்லைங்கிறதில் நாம் அழுத்தமாக இருப்பதை உறுதி செய்யவேண்டும்'' என வலியுறுத்தினர். இதனையடுத்து, "தேசிய அளவில் கூட்டணி என்பதை அப்போதைய சூழல்கள்தான் முடிவு செய்யும்'' எனச் சொன்னார் எடப்பாடி பழனிச்சாமி.
இது ஒருபுறமிருக்க, அ.தி.மு.க.வின் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் எடப்பாடி பழனிச்சாமியை மிகக்கடுமையாக மிரட்டியிருக் கிறார்கள் அ.தி.மு.க. மா.செ.க்கள். இது குறித்து நம்மிடம் பேசிய எடப்பாடியோடு தொடர்புடைய அ.தி.மு.க. நிர்வாகிகள்,”"சென்னை பெருநகர மாநகராட்சியை கைப்பற்றும் நோக்கத்தில், வெற்றி வாய்ப் புள்ள நபர்களுக்குத்தான் சீட் கொடுக்க வேண்டும்'' என சென்னை மா.செ.க் களுக்கு இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் உத்தரவிட்டிருந்தனர். இதற்காக தேர்தல் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட, தென்சென்னை வைத்தி லிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும் பல்வேறு ஆலோசனை களை நடத்தி மா.செ.க்கள் கொடுத்த பட்டியலையும் சீர்தூக்கி இறுதி யாக ஒரு பட்டியலை தயாரித்திருந்தார். அதில் 139-வது வார்டுக்கு தென்சென்னை தெற்கு மாவட்ட துணைச் செயலாளரான கடும்பாடி தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே சுயேட்சையாக இந்த வார்டில் ஜெயித்தவர். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், வளர் மதி என பலரும் ஒருங்கிணைந்து கடும்பாடியை தேர்வு செய்தனர்.
இதனையறிந்து டென்சனானார் மாவட்ட செயலாளர் விருகை ரவி. தனது நண்பர்களான மாவட்ட செயலாளர்கள் தி.நகர் சத்யா, பாலகங்கா, வெங்கடேஷ்பாபு, ராஜேஷ் ஆகிய நால்வரையும் அழைத்துக் கொண்டு எடப்பாடியைச் சந்தித்த விருகை ரவி, "கடும்பாடியை எப்படி நீங்கள் தேர்வு செய்யலாம்? அவருக்கு சீட் தரக்கூடாது' எனச் சொல்ல, "உங்களின் தனிப்பட்ட விரோதங்களை வேட்பாளர் தேர்வில் காட்டாதீர்கள். வெற்றிபெற வாய்ப்புள்ளவர்களுக்குத்தான் சீட் கொடுக்க வேண்டும். எனக்கு கிடைத்த எல்லா ரிப்போர்ட்டுகளும் கடும்பாடிக்கு ஆதரவாக இருக்கிறது' என எடப்பாடி எகிறியிருக்கிறார்.
இதனை ஏற்காத விருகைரவி, "மாவட்டத்தில் கட்சி நடத்தணும்னா பகுதிச் செயலாளர்களையும் வட்டச் செயலாளர்களையும் விட்டுவிட முடியாது. மாவட்ட செயலாளர்கள் சொல்றதைத்தான் நீங்க கேட்கணும். மீறி கடும்பாடிக்கு கொடுத்தால் சென்னையில் அ.தி.மு.க.வினரை ஜெயிக்க வைக்கமாட்டோம்'’ என மிரட்டினார். விருகை ரவிக்கு ஆதர வாக மற்ற 4 மா.செ.க்களும் மிரட்டும் தொனியில் குரலை உயர்த்தினர்.
ஒரு கட்டத்தில் அவர்களின் மிரட்டலுக்கு பணிந்த எடப்பாடி பழனிச்சாமி, பட்டியலிலிருந்து கடும்பாடியை நீக்கி விட்டு, விருகை ரவியின் ஆதரவாளரான சுகுமாரை பட்டியலில் சேர்த்தார். இவர் மீது கிரிமினல் புகார்கள் இருக் கின்றன. சென்னை யைப் பொறுத்த வரை அ.தி.மு.க.வின் தலைவர்களாக மா.செ.க் கள்தான் கொடிகட்டிப் பறக்கிறார்கள்'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள் சீனியர் ர.ர.க்கள்.
கடும்பாடியைப் போலவே அ.தி.மு.க. வின் மூத்த நிர்வாகிகள் விருகம்பாக்கம் மலைராஜன், செந்தில்பாண்டி, வேளச்சேரி மூர்த்தி, ஆயிரம் விளக்கு சிவராஜ் போன்ற பலருக்கும் விருகை ரவியும் தி.நகர் சத்யாவும் சீட் தரவில்லை. இவர்கள் தங்கள் மாவட் டத்தில் பணவசதி படைத்த பலருக்கும் சீட்டுகளை தாரை வார்த்துள்ளனர். தி.நகர் சத்யா தனது மாவட்டத்தில் ஆறுமுகம் என்பவருக்கு சீட் தர... அவரது மகனுக்கு தனது மாவட்டத்தில் சீட் தருகிறார் விருகை ரவி. இதன் பின்னணியில் வைட்டமின் ப, பல லகரங்களில் பாய்ந்துள்ளது. அதேபோல, ஜெயலலிதாவின் நன்மதிப்பைப் பெற்றவர் நீலாங்கரை முனுசாமி. சசிகலா ஆதரவாள ராக தினகரன் கட்சியிலிருந்த அவர், அங்கி ருந்து விலகிவிட்டார். அ.தி.மு.க.விலிருந்து விலகியவர்களை கட்சிக்குள் இணைக்கும் பொருட்டு நீலாங்கரை முனுசாமியை கடந்த வாரம் அ.தி.மு.க.வில் சேர்த்தார் எடப்பாடி. மறுநாளே அ.தி.மு.க.விலிருந்து விலகி, பா.ஜ.க.வில் இணைந்தார் முனுசாமி.
நீலாங்கரை முனுசாமியை தொடர்பு கொண்டு பேசியபோது, "உள்ளாட்சித் தேர்தலில் உங்களுக்கு வாய்ப்பு தரப்படும். அதற்கு நான் கேரண்டி என சொல்லி அ.தி.மு.க.வுக்கு அழைத்தார் எடப்பாடி. நானும் சேர்ந்தேன். நீலாங்கரை வார்டு எனக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், மாவட்ட செயலாளரான கே.பி.கந்தன், எனக்கு கொடுக்கக்கூடாது என எடப்பாடியிடம் மல்லுக்கட்டி னார். அவரது மிரட்டலுக்கு பயந்து, கொடுக்கப்பட்ட வாய்ப்பினை என்னிடமிருந்து பறித்தார் எடப்பாடி. இதனால் வெறுத்துப்போய்தான் பா.ஜ.க.வில் இணைந் தேன். இங்கு எனக்கான அனைத்து மரியாதையும் முக்கியத்துவத்தையும் தருகிறார் தலைவர் அண்ணா மலை. அ.தி.மு.க.வின் மூத்த உறுப்பினர்கள், உழைப்பாளி கள், விசுவாசிகள் பலருக்கும் சீட் தராமல் ஓரங்கட்டிவிட் டார் கே.பி.கந்தன். இதனால் அ.தி.மு.க.வில் அதிருப்தி அதிகரித்துள்ளது. எடப்பாடி, பன்னீர் கைகளில் கட்சி இல்லை'' என்கிறார் முனுசாமி. சென்னையில் மட்டுமல்ல; பல மாவட்டங்களில் அ.தி.மு.க.வில் இதே நிலைதான்.
அ.தி.மு.க.வின் வேட்பாளர் பட்டியல் இப்படி இருக்க... தி.மு.க.விலும் பல சர்ச்சைகள் எதிரொலிக்கின் றன. கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் ஒதுக்குவதில் ஏகத்துக் கும் திணறியிருக்கிறது தி.மு.க. தலைமை. குறிப்பாக, காங்கிரசுக்கு இடங்களைப் பகிர்வதில் ஏக நெருக்கடி. சென்னை மாநகராட்சி எல்லையில் 21 சட்டமன்ற தொகுதிகள் வருகிறது. தொகுதிக்கு 2 சீட் என 42 சீட்டுகளை கேட்டது காங்கிரஸ். ஆனால், சென்னையில் காங்கிரசுக்கு 7 மாவட்டம் இருக்கிறது. தலா 1 என 7 சீட் தருகிறோம் என ஆரம்பித்தது தி.மு.க. இதனால் கடைசிவரை இழுபறிதான். இறுதியில் 14 சீட்டுகளுக்கு தி.மு.க. ஓ.கே. சொல்ல, அதனை 20 ஆக அதிகரிக்க மல்லுக்கட்டினார் கே.எஸ்.அழகிரி. 17-வரை தருவதற்கு தி.மு.க. சம்மதித்தது. இதனால்தான் மனு தாக்கலுக்கு முதல்நாள் வரை தி.மு.க.-காங்கிரசில் சிக்கல் நீடித்தது.
இந்த நிலையில், கேரளாவின் மூத்த தலைவரான ரமேஷ்சென்னிதாலாவை சென்னைக்கு அனுப்பி வைத்தார் சோனியாகாந்தி. தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர் அனுப்பி வைக்கப்பட்டார் என தகவல் பரவியது. ஆனால், "தி.மு.க.விடம் வாங்கப்படும் சீட்டுகள் நேர்மையான வகையில் கட்சிக்காரர்களுக்கு கொடுக்கப்படுகிறதா? அல்லது சீட்டுகள் விற்கப்படு கின்றனவா? என்பதை கண்காணிக்கவே ரமேஷ் சென்னிதாலாவை சோனியா அனுப்பி வைத்தார்' என்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.
ஒருவழியாக கூட்டணிக் கட்சிகளுக்கு சீட்டுகளை பகிர்ந்தளித்துக்கொண்டே தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியலை ரிலீஸ் செய்தபடி இருந்தது அறிவாலயம். சென்னை மாவட்ட வேட்பாளர்களை அறிவிப்பதில்தான் ஏக பஞ்சாயத்துகள் அறிவாலயத்தில் நடந்தன. காரணம், கட்சியின் அதிகார மையமாக செயல்படுபவர்களின் சிபாரிசுகள், மா.செ.க்களின் சிபாரிசுகள், உளவுத்துறையின் ரிப்போர்ட் ஆகியவைகள்தான்.
இரு கழகங்களின் வேட்பாளர் பட்டியல்களிலும் சர்ச்சைகளுக்கும் அதிருப்திகளுக்கும் பஞ்சமில்லை.