உள்ளாட்சித் தேர்தலுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில் தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கத் துவங்கியிருக்கிறது! மனுதாக்கலுக்கு 16-ந்தேதி கடைசி நாள் என்பதால் அ.தி.மு.க.விலும் தி.மு.க.விலும் கூட்டணிக் கட்சிகளுக்கான இடஒதுக்கீடு பஞ்சாயத்து வேகமெடுத்துள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி. மு.க. தலைமையில் உருவான பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. கூட் டணியை உள்ளாட்சித் தேர்தலிலும் நகர்த்திச் செல்கிறார் எடப்பாடி பழனிச் சாமி. மாநகராட்சி, நகராட்சி, பேரூ ராட்சிகளை தவிர்த்து ஊரக உள்ளாட்சி களுக்கு மட்டுமே தற்போது தேர்தல் நடப்பதால் எண்ணிக்கை அடிப் படையில் பேச்சுவார்த்தையை துவக்குவதற்கு பதிலாக சதவீத அடிப்படையில் இடஒதுக்கீடுகளைப் பெற வேண்டும் என அ.தி.மு.க. தோழமைக் கட்சிகள் கங்கணம் கட்டியிருந்தன.
இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை கடந்த வாரம் அ.தி.மு.க. தலைமையகத்தில் நடந்தது. பொன்.ராதா கிருஷ்ணன் தலைமையில் பா.ஜ.க.வினரும், ஜி.கே.மணி தலைமையில் பா.ம.க.வும், பார்த்தசாரதி தலைமையில் தே.மு.தி.க.வினரும், ஞானதேசிகன் தலைமையில் த.மா.கா.வினரும் கலந்துகொண்டனர். அவர்களி டம் அ.தி.மு.க. தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ்., கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். தோழமைக்கட்சி தலைவர்களுடன் தனித் தனியாக விவாதித்த எடப் பாடி, அவர்களிடம் ஏகத்துக் கும் கறாராக நடந்து கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து நாம் விசாரித்தபோது, ""பா.ஜ.க., பா.ம.க. தலா 30 சதவீதமும், தே.மு.தி.க., த.மா.கா. தலா 25 சதவீத இடங் களையும் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தன. ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு துவக் கத்திலேயே முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் பேசிய எடப்பாடி, உள்ளாட்சித் தேர்தலில் 80 சதவீத இடங்களில் அ.தி. மு.க. போட்டி யிட வேண்டு மென பொதுக் குழு செயற் குழு உறுப் பினர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள். அதனால், மாநகராட்சி, நகராட்சி தேர்தலின் போது திருப்திகரமாக உங்களுக்கு சீட் ஒதுக்கப்படும். இப்போது 20 சதவீத இடங்களை கூட்டணி கட்சிகள் பகிர்ந்துகொள்ள சம்மதிக்க வேண்டும்'' என கறாராக சொல்ல, அதிர்ச்சியடைந்தன தோழமைக்கட்சிகள்.
அப்போது தங்களது அதிருப்தியை அவர்கள் வெளிப் படுத்திய நிலையில் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், 80 சதவீதத்தை 70 சதவீதமாக குறைத்துக்கொண்டது அ.தி. மு.க. அதேசமயம், பா.ம.க.வுக்கு 15, தே.மு.தி.க.வுக்கு 10, பா.ஜ. க.வுக்கு 5 சதவீதம் என்கிற அளவில் இடங்களை பகிர்ந்து கொள்வது என தீர்மானித்தன. பா.ம.க.வுக்கு தமிழகம் முழு வதும் செல்வாக்கு இல்லை என்பதால் தென் மாவட்டங் களில் பா.ஜ.க.வுக்கு 15 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் முடிவெடுத்தனர்.
அதேபோல, த.மா.கா. எதிர்பார்க்கும் முக்கிய மாவட் டங்களில் பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க.விடமிருந்து ஒவ் வொரு சதவீதம் குறைத்து த.மா.கா.வுக்கு ஒதுக்குவது எனவும் தீர்மானிக்கப் பட்டது. அதாவது, கூட்டணிக் கட்சிகளில் எந்த மாவட்டத்தில் எந்த கட்சிக்கு செல்வாக்கு இருக்கிறதோ அந்த கட்சிக்கு கூடுதல் சதவீதமும், மற்ற கட்சிகளுக்கு சமமாகவும் பிரித்து தரப்படும். எந்த சூழலிலும் 30 சதவீதத்தை தாண்டி கூட் டணிக் கட்சிகளுக்கு தரமுடியாது என உறுதியாக இருந்தது அ.தி.மு.க. வேறுவழியில்லாமல் இதனை தோழமைக் கட்சிகள் ஏற்றுக்கொண்ட நிலையில், மாவட்ட அளவில் குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி போட்டியிடும் இடங்களை தீர்மானித்துக் கொள்ளுங்கள்' என தெரிவித்தார் எடப்பாடி'' என்கிறார்கள் தலைமைக்கு நெருக்கமானவர்கள்.
அதன்படி, மா.செ.க்கள் தலைமையில் மாவட் டக் குழுவை அ.தி.மு.க. அமைக்க, தோழமைக்கட்சி களும் குழுவை அமைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இதில் வட தமிழகத்தில் கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், அரியலூர் மாவட்டங்களில் பா.ம.க.வும் தே.மு.தி.க.வும் ஒரே இடங்களை குறிவைப்பதால் வார்டுகளை ஒதுக்குவதில் திணறி வருகின்றனர் அ.தி.மு.க. மா.செ.க்கள். இதனால் பல இடங்களில் மோதல் அதிகரித்துள்ளது.
அதேபோல, தென்மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும் பா.ஜ.க. எதிர்பார்க்கும் இடங்களை அ.தி.மு.க. ஒதுக்க மறுக்கிறது. தி.மு.க.வுக்கு செல்வாக்காக இருக்கும் வார்டுகளை பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. தள்ளிவிடுவதால் அதிருப்தியடைந்திருக் கிறது பா.ஜ.க.! மேலும், சதவீத கணக்குப் படி சீட் எண்ணிக்கை ஒதுக்க தோழமைக் கட்சிகள் வலியுறுத்தியபோது, அதிலும் முரண்டுபிடித்திருக் கிறது அ.தி.மு.க.! பேச்சுவார்த்தை நடத்திய தோழமைக் கட்சிகளிடம், "உங்களுக்கும் எங்க தலைமைக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் என்ன முடிவு எடுக்கப்பட்டதென்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. தலைமையிடமிருந்து (எடப்பாடி) எங்களுக்கு சில கட்டளைகள் வந்திருக்கின்றன. அதன்படிதான் நாங்கள் வார்டுகளை ஒதுக்க முடியும்' என அ.தி.மு.க. மா.செ.க்கள் பிடிவாதம் காட்டியுள்ளனர். இதனால் பல மாவட்டங்களில் எடப்பாடிக்கு எதிரான அதிருப்திகள் வெடித்திருக் கின்றன.
அ.தி.மு.க.வின் மூத்த தலைவர் ஒருவரிடம் நாம் பேசியபோது, ‘""ஆட்சியின் ஆயுள் காலம் இன்னும் ஒரு வருசம் மட்டுமே இருக்கும் நிலையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டாம் என எடப்பாடியும் அமைச்சர்களும் நினைத்தனர். தி.மு.க.வை வீழ்த்துவதும் கூட்டணிக் கட்சிகளை சமாளிப்பதும் கடினம் என்பதால் தேர்தல் வேண்டாம் என நினைத்தனர். ஆனால், அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதான் "ஊராட்சிகள், பேரூராட்சி கள், நகராட்சிகள், மாநகராட்சிகள் என உள்ளாட்சி அமைப்புகளை உடைத்து தேர்தல் நடத்தினால் தி.மு.க.வை வீழ்த்திட முடியும்' என யோசனை சொன்னார்.
அதேபோல, "மேயர் மற்றும் நகராட்சி தலைவர் பதவிகளை கூட்டணிக் கட்சிகள் குறிவைப்பதுதானே நமக்கு பிரச்சனை? அதனை தவிர்க்க நேரடி தேர்தலை ரத்து செய் யுங்கள் எனவும் ஐடியா தந்தார் வேலுமணி. இந்த யோசனைகள் சரியாக வரும் என இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். உள்ளிட்டவர்கள் ஆலோசிக்க, அதன்பிறகே தேர்தலை நடத்தும் மூடுக்கு வந்தனர். உடனே, தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் எடப்பாடி விவாதித்தார். ஆணையத்துக்கும் அரசுக்கும் எழுதப்படாத ஒரு மறைமுக ஒப்பந்தம் உருவானது. அதன்படி, தி.மு.க.வுக்கு எதிராக என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து வருகிறது ஆணையம். தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பல அதிர்ச்சிகளை எதிர்க்கட்சிகளுக்கு கொடுக்கவிருக்கிறார்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகள்'' என சில ரகசியங்களை போட்டுடைத்தார்.
இந்த நிலையில், தேர்தல் நடக்கும் 27 மாவட் டங்களுக்குமான தேர்தல் செலவையும் வாக்குகளை பர்ச்சேஸ் செய்வதற்கான பட்ஜெட்டையும் அந்தந்த மாவட்ட அமைச்சர்களே பொறுப் பேற்றுக்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அமைச்சர்கள் பலரும் கரன்சிகளை அவிழ்ப்பதில் சுணக்கம் காட்டுகின்றனர். இதனால் அமைச்சர்கள் அல்லாத மா.செ.க்கள் பலரும், "எங்களிடம்தான் பணத்தை ஒப்படைக்க வேண்டும். நாங்கள்தான் விநியோகிக்கும் முறையை முடிவு செய்வோம்' என மல்லுக்கட்டுகிறார்கள். இதே பிரச்சனையை ஒன்றிய செயலாளர்களும் கையி லெடுக்க ஏகத்துக்கும் அதிருப்திகள் அதிகரித்தபடி இருக்கின்றன. தவிர, அ.தி.மு.க. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., மாவட்ட அமைச்சர், மா.செ., எம்.எல்.ஏ.க்கள் என நான்கு முனை தாக்குதல் நடப்பதால் ஒவ்வொரு பகுதி யிலும் மோதல்கள் வெடிக்க, உள்கட்சி பூசலும் உள்ளடிகளும் வேகமெடுத்துள்ளன.
இப்படிப்பட்ட சூழலில், தமிழகத்திலுள்ள 15 மாநக ராட்சிகளின் மேயர் பதவிகளுக் கான இடஒதுக்கீட்டை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம். அதில், எஸ்.சி. பிரிவினருக்காக தூத்துக்குடி மாநக ராட்சியை ஒதுக்கி யுள்ளனர். இந்த ஒதுக்கீடு நாடார் சமூக அமைப்பு களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ் நாடு நாடார் மஹாஜன சபை தலைவர் கார்த்தி கேயன், ""தூத்துக்குடியில் நாடார் சமூகம்தான் மெஜாரிட்டி. இங்கு எஸ்.சி.க்கள் 10 சத வீதத்திற்கும் குறைவாகத் தான் இருக்கிறார்கள். ஆனால், சென்னையில் 35 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறார் கள். சென்னையை எஸ்.சி.க்களுக்கு ஒதுக் காமல் நாடார்கள் பெரும்பான்மையாக உள்ள தூத்துக்குடியை எஸ்.சி. பிரிவினருக்கு ஒதுக்கியது சமூக துரோ கம்.
தூத்துக்குடியை பொதுப் பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும் என ஏற்கனவே எடப்பாடிக் கும் தேர்தல் ஆணையத் துக்கும் நாங்கள் கோரிக்கை வைத்தோம். அந்த கோரிக்கையை தற்போது புறக்கணித்துள்ள னர். ஏற்கனவே அமைச்சரவையில் நாடார்களுக் கான போதிய பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், தற்போது உள்ளாட்சித் தேர்தலையொட்டிய எங்கள் கோரிக்கையும் புறம்தள்ளப்பட்டிருப்பதால் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் அ.தி.மு.க.வை தோற்கடித்து எடப்பாடிக்கு பாடம் புகட்ட நாடார் சமூகத்தை ஓரணியில் திரட்டிக்கொண்டிருக்கிறோம்'' என்கிறார் ஆவேசமாக. எதிர்ப்புகளும் அதிருப்தி யும் பலமாக உள்ள நிலையில், கூட்டணிக் கட்சியினர் தங்களுக்கு அல்வா கொடுக்கப் பட்டிருப்பதாக ஏமாற்றத்தில் உள்ளனர். அ.தி.மு.க. தலைமையைப் பொறுத்தவரை தேர்தல் களத் தில் வேகமாக இருக்கிறது. கடைசி நேரத்தில், களத்தில் குவிக்கப்படும் கரன்சியுடன் எல்லா வற்றையும் எதிர்கொண்டு ஜெயிக்கலாம் என நினைக்கிறது.
-இரா.இளையசெல்வன்
படங்கள்: ஸ்டாலின் & அசோக்
___________
தி.மு.க. வியூகம்!
ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியும், தலைவர் பதவிகளுக்கான இடஒதுக்கீட்டை 1991 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியும் தேர்தல் நடத்துவதை எதிர்த்து வழக்குப் போட்டிருந்த தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அனைத்து பதவிகளுக்குமான இடஒதுக்கீட்டை யும் வார்டு வரையறைகளையும் முடித்து தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். அதன்படி, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே தேர்தலை நடத்துவதாக உறுதிகொடுத்துள்ள தேர்தல் ஆணையம், அதன்படி நடத்தாமல் தில்லுமுல்லு தேர்தலை நடத்துகிறது. இதனால் மீண்டும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பொதுநல வழக்குகள் போடு வதற்கு சமூக ஆர்வலர்கள் தயாராகியுள்ளனர். இந்த நிலையில், தேர்தலை எதிர்கொள்ள கூட்டணிக் கட்சிகளிடம் தீவிர பேச்சுவார்த்தையை தி.மு.க. துவக்கியிருக்கிறது. அதன் தோழமைக்கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வை முழுமையாக நம்பியிருப்பதால் தங்களுக்கு திருப்தியான இடங்கள் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் தேர்தலுக்கு தயாராகியுள்ளன! உள்ளாட்சித் தேர்த லில் ஆளுங்கட்சி ஜெயிக்கும் என்ற நிலையை மாற்றி, ஊராட்சிகள் தோறும் வேட்பாளர் தேர்வில் தொடங்கி வாக்குகளைப் பெறுவது வரை முழுமையா கவனம் செலுத்தி 60% அளவிற்கு தி.மு.க. அணி வெற்றி பெற்றாலே ஆளுந்தரப்பு ஷாக்காகி விடும் என்பது அறிவாலயத்தின் வியூகம்.
______________
இறுதிச் சுற்று
ஆபாச வீடியோக்கள்! சிக்கிய மெக்கானிக்!
திருச்சி பாலக்கரை காஜாபேட்டையைச் சேர்ந்த அல்போன்ஸ்ராஜ் என்பவரை திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் டிசம்பர் 12 ஆம் தேதி கைதுசெய்தது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற நடவடிக்கைகளைத் தடுக்க, கூடுதல் டிஜி.பி. ரவி தலைமையில் குற்றத் தடுப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் குழந்தைகள் தொடர்பான பாலியல் வீடியோக்களைப் பகிர்பவர்கள் கைதுசெய்யப்படுவர் என இவர் எச்சரித்திருந்தார். அதையடுத்து இத்தகைய வீடியோக்களைப் பகிர்பவர் களைப் பற்றிய பட்டியலும் எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அல்போன்ஸ்ராஜ் கைதுசெய்யப்பட்டார். ஏ.சி. மெக்கானிக்காகப் பணியாற்றி வரும் இவர், நிலவன், ஆதவன் என்கிற போலிக் கணக்குகளிலிருந்து குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்து, பகிர்ந்து வந்ததற்காக கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இவர் மீது போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க திருச்சி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழந்தைகள் பாலியல் வீடியோ பார்த்தவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்களே அதிகம் என்ற தகவலையும் காவல்துறை வெளிப்படுத்தியுள்ளது.
நிர்பயா வழக்கு: தூக்கு எப்போது?
நிர்பயா குற்ற வழக்கில் குற்றவாளி அக்சய்சிங்கின் சீராய்வு மனுமீதான விசாரணை டிசம்பர் 17-ல் நடைபெறுமென உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. டெல்லியில் ஓடும்பேருந்தில் பாலியல் மீறலுக்கு உட்படுத்தப்பட்டு, கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட வழக்கில் 6 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இதில் ஒருவர் இளம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, சிறார் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டார். ஐவரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். குற்றவாளிகள் நால்வரின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில் தூக்கிலிடுவதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான அக்சய்சிங், தூக்குத் தண்டனைக்கு எதிராக சீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். ஆனாலும் தண்டனை நிறைவேற்ற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
-க.சுப்பிரமணியன்