தனக்கு செல்ஃப் எடுக்கவில்லையென்பதற்காக, த.வெ.க. வண்டியில் வாண்டடாக ஏறியிருக்கின்றார் பாரம்பரியமிக்க அ.தி.மு.க.வின் தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. அவரின் "அடச்சீ' செயல்பாடுகள் சொந்தக் கட்சியினராலேயே வெறுக்கப்படுவதுதான் அரசியலின் தற்போதைய நிலவரம்.
தன்னுடைய சினிமா படப்பிடிப்பிற்காக 41 உயிர்களை களப்பலி கொடுத்தது நடிகர் விஜய்யின் த.வெ.க. இது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நேரத்தில், சினிமாத்தனமாக களப்பலிக்கு அஞ்சலி செலுத்தி மீண்டும் மக்களின் வெறுப்பிற்கு உள்ளானார் நடிகர் விஜய். கையறு நிலையில் அடங்கி ஒடுங்கி பனையூரில் அமைதிகாத்த வேளையில், சினிமா நடிகர் நம்முடன் இருந் தால் வாக்குகளை அறுவடை செய்துவிடலாம் என பா.ஜ.க. கணக்கிட, நாங்களும் உங்க ளுடன், உங்களுக்கு உதவத்தான் இருக்கின் றோம் என்பதுபோல், தன்னுடைய கட்சிப் பாரம்பரியத்தை மறந்து அருவருப்பான வேலை யில் இறங்கியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. அதற்கு அத்தாட்சி, கரூர் துயரத்தில் உறவினர் களைப் பறிகொடுத்த நபர்களிடம், காரணத் தைக் கூறாமலேயே வெற்று பேப்பரில் கையெ ழுத்து வாங்கி, "41 உயிர்கள் பலியில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும்' என உச்சநீதிமன்றத் துக்கு மனுவினை அனுப்பியுள்ளது அ.தி.மு.க.
ஏமூரைச் சேர்ந்த செல்வராஜின் மனைவி சந்திரா, தன்னுடைய மகனுடன் நடிகர் விஜய்யைப் பார்க்கச் சென்றிருந்த நிலையில், கூட்ட நெரிசலால் அவர் உயிரிழந்தார். தமிழ்நாடு அரசு தொடங்கி அனைவரும் நிதியை அறிவித்து களப்பலி கொடுக்கப்பட்டோருக்கு உறுதுணையாக இருந்தனர். இந்த வேளையில் "41 உயிர் கள் பலியானதில் என்னு டைய மனைவி சந்திராவும் ஒருவர். ஆதலால் இந்த சம்பவத்தில் உண்மையான காரணமறிய சி.பி.ஐ. விசாரணை வேண்டும்' என உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் ஏமூர் செல்வராஜ்.
இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது, "சார், சத்தியமாக சி.பி.ஐ. விசாரணை வேண்டுமென்ற மனுவை நான் தாக்கல் செய்யவில்லை. இரட்டை இலை கட்சியைச் சேர்ந்த எங்கள் ஊரின் முன்னாள் ஊராட்சித் தலைவர் பாலகிருஷ்ணன் என்னை அணுகி, "உன்னுடைய மகனுக்கு அரசு வேலை யும், கூடுதலாக நிவாரண நிதியும் வாங்கித் தருகிறேன், கையெழுத்து போடு' என்றார். அதனை நம்பி நானும் என் கையெழுத்து இருந்த ஆதார் ஜெராக்ஸ் காப்பியை கொடுத்து விட்டேன். அதை வைச்சு இப்படி செய்வார்னு தெரியலை. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் என் வீட்டுக்கு, அவுங்க கட்சிக்காரங்களோட துக்கம் விசாரிக்க வந்தார் அவ்வளவுதான். எனக்கு எதுக்கு சார் அந்த விசாரணை?'' என நம்மிடம் அப்பாவியாகக் கேட்டார் ஏமூர் செல்வராஜ்.
"எவ்வளவு பெரிய பாரம்பரியமிக்க கட்சி அ.தி.மு.க. அதனை நம்பாமல் நேற்று வந்த நடிகரை நம்பி இந்தளவிற்கு கீழ்த்தரமான வேலைகளில் இறங்கியுள்ளார் அ.தி.மு.க.வின் தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. அவரின் இந்தச் செயலை ஜெயலலிதா வின் ஆன்மாகூட மன்னிக் காது. ஏன், அ.தி.மு.க. கடைசித் தொண்டனும் மதிக்கமாட்டான்'' என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். பழனிச்சாமிக்கு இது தேவையா?
கரூரில் 41 பேர் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ள பன்னீர்செல்வம் பிச்சைமுத்து என்பவர், இறந்த குழந்தையின் தாய்க்கே தெரியாமல் மனு செய்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக ப்ரதீக்கின் தாயார் ஷர்மிளாவிடம், "உங்க கணவர், உங்க பையன் ப்ரதீக் மரணம் தொடர்பா சி.பி.ஐ. விசாரணை கேட்டு உச்சநீதிமன்றத்துல வழக்குப் போட்டி ருக்கிறது உங்களுக்குத் தெரியுமா?'' எனக் கேட்டபோது...
"கேஸ் போட்டது எனக்குத் தெரியாது. சி.ஐ.டி. போலீஸ் ஒருத்தர் விசாரணைக்கு வந்திருக்கிறப்ப விவரம் சொல்லித்தான் தெரியும். என் கணவர் குழந்தை பிறந்து கொஞ்ச காலத்துக்கெல்லாம் பிரிந்துபோய் விட்டார். எட்டு ஆண்டுகளா அவர் எங்களோடு தொடர்பில் இல்லை. இடையில் அவர் வந்து பார்க்கவே இல்லை. மறுபடி மகன் இறந்தபோது மட்டும்தான் சுடுகாட்டில் வந்து பார்த்தார். ஒரு சொட்டுக் கண்ணீர்கூட விடலை. ஏழரை வருடமா அவரைப் பையன் பார்த்ததே இல்லை. இப்ப எதுக்கு சி.பி.ஐ. விசாரணை கேட்டு மனு செய்திருக்கிறார்னு தெரியலை. பணத்துக்காகத்தான்னு நினைக் கிறேன். இறந்தவர்களுக்காக த.வெ.க. அளிக்கும் நிவாரணத்தைப் பெறுவதற்காக மனு செய்திருக்கலாம்னு நினைக்கிறேன்'' என்றுள்ளார்
இந்நிலையில் "என் மகன் வேலை விஷயமாக எனக் கூறி என்னிடம் கையெழுத்து வாங்கினார்கள். சி.பி.ஐ. வழக்கு விசாரணைக்கு அல்ல' என உச்ச நீதிமன்றத்தில் வழக்கை ரத்து செய்யுமாறு 13ஆம் தேதி திங்கள்கிழமை செல்வராஜ் மனு தாக்கல் செய் துள்ளார்.