திண்டுக்கல் சீனி வாசனும், நத்தம் விசுவ நாதனும் உடல் நிலையைக் காரணம் காட்டி ஒதுங்கிக் கொள்ள... யாரை வைத்து கூட்டம் கூட்டுவது? என திண்டுக்கல் மாவட்ட சுற்றுப்பயணத்தையே ஒத்திப்போட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
திண்டுக்கல் மாவட்டத்தினைப் பொறுத்தவரை திண்டுக்கல், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், நத்தம், நிலக்கோட்டை, ஆத்தூர் மற்றும் பழனி என 7 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் திண்டுக்கல், நத்தம் மற்றும் நிலக்கோட்டை உள்ளிட்ட மூன்று சட்டமன்றத் தொகுதிகள் அ.தி.மு.க. வசம் உள்ளது. அ.தி.மு.க.வோ, நிர்வாக ரீதியாக கட்சியினை நத்தம், நிலக்கோட்டை, ஆத்தூர், பழனி உள்ளிட்ட நான்கு சட்டமன்றத் தொகுதிகளை கிழக்கு மாவட்டமாகவும், திண்டுக்கல், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட மூன்று சட்டமன்றத் தொகுதி களை மேற்கு மாவட்ட மாகவும் பிரித் துள்ளது. கிழக்கு மாவட்டத்தின் மா.செ.வாக அ.தி. மு.க. துணைப் பொதுச்செயலாளரான நத்தம் விசுவநாதனும், மேற்கு மாவட்டத்தின் மா.செ.வாக கட்சியின் மாநிலப் பொருளாளரான திண்டுக்கல் சீனிவாசனும் உள்ளனர்.
"திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. என்றாலே சீனி வாசனும், விசுவநாதனும்தான் என்கின்ற அளவிற்கு கட்சி உள்ளது. இவர்கள் இல்லை யெனில் கட்சி இல்லை என்ற சூழலை இருவரும் உருவாக்கியுள்ளனர். ஒருவருக் கொருவர் எதிரி என்றாலும் தங்களுக்கு எதிராக யார் கட்சிக்குள் வந்தாலும் அவர்களைக் கட்டம் கட்டுவதில் இவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். மா.செ. என்பதனைத் தாண்டி மாநில பொறுப்பில் இருப்பதால் இவர்களைத் தாண்டி யாரும் கட்சிக்குள் நுழைய முடியாது. அதுவே கட்சிக்குப் பேரிழப்பு. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க. கட்சி என்பதே கிடையாது. முன்பெல்லாம் ஜெயலலிதா காலத்தில் ஒருவருக்கு ஒரு பதவி என்பதும், கட்சியில் செயல்படாத மா.செ.க் களை தயவுதாட்சண்யம் இல்லாமல் மாற்றி விடுவதும் உண்டு. ஆனால் இப்பொழுது அப்படியில்லை.
தற்பொழுதுகூட "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தேர்தல் சுற்றுப் பயணத்தில் விருதுநகர் மாவட்டம் முடித்தவுடன் தொடர்ச்சியாக திண் டுக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற் கொள்ளலாம் என தலைமை கூறியது. ஆனால் எங்கள் இருவருக்குமே உடல்நிலை சரியில்லை என ஒதுங்கிக்கொள்ள சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இல்லை யென்றால் அ.தி.மு.க. இல்லையா? இப்பொழுதே இந்த நிலைமை என்றால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் இவர்கள் எப்படி வேலை செய்வார்கள்? அ.தி.மு.க. எவ்வாறு ஜெயிக்கும்'' என கேள்வி எழுப்புகின்றார் திண்டுக்கல் மாநகரத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர்.
கட்சியின் மூத்த முன்னோடி, முன்னாள் உப்பு வாரியத்தலைவர், முன்னாள் மேயர் மற்றும் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் பொறுப்பாளர் என பணியாற்றிய மருதராஜ் மட்டும் தானும் அ.தி.மு.க.வில் இருக்கிறேன் என்கிற பெயரில் திண்டுக்கல் மாநகரை மட்டும் சுற்றிவருகிறார். ஆனால் சொந்தக் கட்சிக் காரர்களே அவரைக் கண்டுகொள்வதில்லை என்பதே உண்மை. சீனிவாசன், விசுவநாதன் ஆகிய இருவரும் தங்களுக்கு எதிராக கட்சியில் யாரும் எளிதில் வளர்ந்துவிடக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கின்றனர். அ.தி.மு.க. கட்சியின் திண்டுக்கல் மேற்கு ஒன்றியச் செயலாளரான ராஜசேகர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு உடன்பிறந்த தம்பி மகன் என்றாலும், தனக்கு எதிராக, தனது குடும்பத் திற்கு எதிராக எவரும் வளர்ந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக நின்று... திண்டுக்கல் மேற்கு ஒன்றியத்தையே இரண்டாகப் பிரித்து தாமரைப்பாடி, சீலப்பாடி ஆகிய பகுதிகளை வடக்கு ஒன்றியமாக்கி தம்பி மகனுக்கு 'செக்'வைத்தார் சீனிவாசன். இன்னொரு பக்கம் தனது மைத்துனரான கண்ணனுக்கு எதிராக யாரும் களத்தில் இருக்கக்கூடாது என்பதற்காக, "எதுவாக இருந்தாலும் கண்ணனைப் பாருங்கள்' என தலைப்பாகை கட்டியுள்ளார் நத்தம் விசுவநாதன். இதனால் கட்சியினர் கொந் தளிப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட பிரதிநிதி ஒருவரோ, "உண் மையில் இருவருக்கும் உடல்நிலை சரியில்லை. இவர்களை வைத்து எப்படி சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது.? இருப்பினும் தன்னுடைய இடத்தை விட்டுக்கொடுக்க இருவருக்கும் மனமில்லை. "நத்தத்தில் மீண்டும் போட்டியிடுவேன்' என விசுவநாதன் கூறினாலும்... தொடர்ச்சியாக நிற்பதும், நடப்பதும் இயலாத ஒன்று. தன்னுடைய வாரிசான அமர்நாத்தின் கவனம் முழுக்க வியாபாரத்தில் மட்டுமே இருக்க, தனக்குப் பதிலாக மாநில இளைஞர் இளம்பெண் பாசறையின் துணைச் செயலாளராக இருக்கும் மைத்துனன் 'கண்ணனை' கைகாட்டி யிருக்கின்றார் விசுவநாதன்.
இதேவேளையில் தன்னுடைய வாரிசான ராஜ்மோகனை திண்டுக்கல் மாநகராட்சியின் எதிர்க் கட்சித் தலைவராக அமர வைத்த சீனிவாசன் தன்னு டைய அடுத்த வாரிசாக இன்னொரு மகனான சதீஷை களமிறக்கி யுள்ளார். அப்படியென் றால்... தேர்தல் பிரச்சாரத் திற்கு வரமாட்டேன். தேர்தலில் வாரிசினை களமிறக்குவேன் என்பது எவ்விதத்தில் நியாயம்? உண்மையான கட்சித் தொண்டர்களின் நிலை யை தலைமை புரிந்து கொள்ளுமா?
ஒத்திவைக்கப்பட்ட சுற்றுப்பயணத்தால் தலைமை புரிந்துகொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அவர்கள் இருவரைத் தவிர அ.தி.மு.க.வில் யாரும் இல்லையா? இதனால் இருக்கின்ற மூன்று சட்டமன்றத் தொகுதிகளையும் அ.தி.மு.க. இழக்கும் என்பதே உண்மை. இப்போதாவது விழித்துக்கொண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் கட்சியை சீரமைக்க வேண்டுமென்பதே அனைவரின் விருப்பம்'' என்கிறார் அவர்.
திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றுமா அ.தி.மு.க. தலைமை?
-நா.ஆதித்யா