"கொங்கு மண்டலத்தில் குறிப்பிட்ட சமூகத்திற்கென தனியாக கூட்டமைப்பு ('ஃபோரம்') இருப்பதால், அந்த சமூகத்திற்கே கட்சிப் பதவிகளை வாரி வழங்கி வருகின்றார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிச்சாமி. நம்முடைய வாக்குகளால் குளிர் காய்ந்து, எவ்வித பதவியையும் கொடுக்காமல் நம்மை அடிமைத்தனமாகவே நடத்தும் அ.தி.மு.க.வை புறக்கணிக்கலாமே?'' என கூட்டமைப்பாக  உருவெடுத்து விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர் தென்மாவட்ட தேவேந்திர குல வேளாளர் மக்கள்.

தமிழக அரசியலில் தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்கென தனியாக வாக்கு வங்கி கணிசமாக உள்ளது. ஒவ்வொரு தேர்தலின்போதும் தேவேந்திர குல வேளாளர் மக்களின் வாக்குகளைக் கவர ஒவ்வொரு கட்சியும் முயற்சி செய்யும். தமிழக அரசியல் வரலாற்றை பார்த்தால் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் முதலில் ஆதரித்தது காங்கிரஸ் கட்சியை மட்டுமே. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட பரமக்குடி இமானுவேல் சேகரன், 1957 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கொலை செய்யப்பட்டார். அதன் எதிரொலியாக 1962 தேர்தலில் கூடுதலாக 6 தொகுதிகளில் வென்றது காங்கிரஸ். அதன்பின் காங்கிரஸ் தனித்து நின்ற 1989-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கூட தேவேந்திர குல வேளாளர் மக்களின் வாக்குகளால் 4 தொகுதிகளை அறுவடை செய்தது. அதன்பின் தமிழக காங்கிரஸ், தேவேந்திர குல மக்களை கண்டுகொள்ளவில்லை. 1972ல் அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தோற்றுவித்து கட்சியின் பொருளாளராக திருச்சி சௌந்தரபாண்டியனை நியமனம் செய்தார். இதனால் காங்கிரஸ் மட்டுமே அறுவடை செய்த தேவேந்திர குல வேளாளர் மக்களின் வாக்குகளை அ.தி.மு.க.வும் அறுவடை செய்தது என்கின்றது அரசியல் வரலாறு.

"தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 44 தனித்தொகுதிகள் உள்ளன. பல மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளர்களின் வாக்கு வங்கி, ஆட்சியை அமைக்க உறுதுணையாக இருப்பதை அரசியல் கட்சிகளே ஒத்துக்கொள்கின்றன. குறிப் பாக, திருச்சியிலிருந்து தென்காசி வரை மட்டுமே  துறையூர், திருவிடைமருதூர், கந்தர்வக்கோட்டை, மானாமதுரை, சோழவந்தான், பெரியகுளம், திருவில்லிபுத்தூர், பரமக்குடி, ஒட்டப்பிடாரம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், நிலக்கோட்டை உள்ளிட்ட தனித்தொகுதிகளில் நாம் தான் வெற்றிக்கு ஆதாரமாக இருக்கின்றோம். ஆனால் என்ன பிரயோசனம்? 1996ஆம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் நிறைகுளத்தானும், 2010-ஆம் ஆண்டு தி.மு.க. சார்பில் தங்கவேலும் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்கள் கட்சி கூறுவதை மட்டுமே செய்து கொண்டிருந்தார்கள். என்ன தான் எம்.பி.யாக இருந்தாலும் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே கட்சிப் பதவியில் இருந்ததால் அவர்களுக்கு அடிமை நிலை தான்! இதனால் நம்முடைய சமூகத்திற்கு என்ன கிடைத்தது? கட்சிப்பதவி மட்டுமே நம் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினை வளர்ச்சியடைய செய்யும். அதற்கு உடன்படும் கட்சிக்கே நம்முடைய வாக்கு. நாம் கூட்டமைப்பாக உருவெடுத்தால் மட்டுமே இது சாத்தியம்'' என "தேவேந்திரர் கூட்டமைப்பாக' உருவெடுத்துள்ளனர் தென்மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள்.

Advertisment

dmk1

தேவேந்திரர் கூட்டமைப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவரோ, "கிளைச்செயலாளர், கிளைத்தலைவர், ஒன்றியச்செயலாளர், ஒன்றியத் தலைவர், மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர், மாநிலப் பொறுப்பு என்று அரசியல் அங்கீகாரப் பதவிகளை பெறுவதன் மூலமாக மட்டுமே தேவேந்திரர் சமூகம் அரசியல் அதிகாரத்தை நோக்கி நகர முடியும். எங்களது வாக்குகளை வாங்கி, பல இடங்களை தக்கவைத்த அ.தி.மு.க.வில் ஒரு மா.செ.கூட தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் இல்லை. காங்கிரஸ் கட்சியில் மாவட்ட தலைவர் பதவியில் ஒரு தேவேந்திரரும் இல்லை.  இதே நிலை தொடருமாயின் அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளை புறந்தள்ளி வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. 

பா.ஜ.க. கூட தென்காசி ஆனந்தன், திருநெல்வேலி முத்துபலவேசம் ஆகிய இருவரை மாவட்டத் தலைவர்களாக நியமித்துள்ளது. நேற்று வந்த த.வெ.க. கூட 7 மா.செ.க்களை தேவேந்திர குல சமூகத்திற்கென ஒதுக்கியுள்ளது. பட்டியலின சமூகத்திலுள்ள இன்னொரு சமூகம், மூன்று மாநகராட்சி மேயர் பதவிகளை வகித்துவருகிறது. ஒரு மாவட்ட செயலாளர் பதவியை வகித்து வருகிறது. அந்த சமூகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு தி.மு.க. தலைமை அளிக்கவில்லை என்கிற வருத்தம் எங்களுக்கு உண்டு. இருப்பினும் எங்களது சமூகத்தின் தியாகி இமானுவேலனாருக்கு மணிமண்டபம் கட்டி மரியாதையும், மாவீரர் வெண்ணிக்காலாடிக்கு வெண்கல சிலை அமைத்தும் கொடுத்திருக்கின்றது. கடந்த இரண்டு வருடங் களாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இமானுவேல் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவருகிறார். தி.மு.க. எங்களுக்கான அங்கீகாரத்தை அளிக்கும் என்கின்ற நம்பிக்கை இருக்கின்றது'' என கூறினார். இதன்மூலம், தி.மு.க.வை நோக்கி நகர்கிறது தேவந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு. அவர்களது கோரிக்கை வெல்லுமா என்பது அரசியல் கட்சிகளின் அடுத்த நகர்வைப் பொறுத்தே தெரியும் என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.

Advertisment

-ராவணன்