கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு எப்படி வரும் என்கிற எதிர்பார்ப்பில் காத் திருந்தார் நடிகர் விஜய். அவரது எதிர்பார்ப் பிற்கேற்ப சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள் ளது உச்ச நீதி மன்றம். அதே சமயம் பா.ஜ.க., அ.தி.மு.க. தரப்பிலிருந்து கொடுக்கப்படும் நெருக்கடிகளால், அக்கட்சிகளுடன் கூட்டணி வைப்பதன் மூலம் பலியாகிக் கொண்டிருக்கும் சூழலில்... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முடிவை எடுக்கும் குழப்ப மனநிலையில் தத்தளிக்கிறார் விஜய் என்கிறார்கள்.
கரூர் சம்பவத் துக்கு முன்புவரை அ.தி. மு.க. -பா.ஜ.க. கட்சி களுக்கு விஜய் தேவைப் பட்டார். ஆனால், கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய்க்குத்தான் அந்த கட்சிகள் தேவைப்படுகின்றன என்கிற நெருக்கடி அவருக்கு உருவானது. இதனையடுத்து, பா.ஜ.க.வும் அ.தி.முக.வும் அவரவர்கள் பாணியில் விஜய்யிடம் ரகசியப் பேச்சு வார்த்தை நடத்த, கூட் டணிக்கு ஓ.கே. சொன்னார் விஜய்.
அதேசமயம், "கூட்டணிக்கு வரு வதை இப்போது வெளிப்படையாகச் சொல்ல முடியாது; தேர்தல் நெருக் கத்தில் அறிவிக் கிறேன்'’என்றும் அக்கட்சிகளின் தலைமைகளிடம் உறுதி தந்தார் விஜய். ஆனால், நேரத்திற்கு நேரம் தனது பேச்சை மாற்றிக்கொண்டே யிருக்கிறார் என்று அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகள் அதிருப்தி யடைகின்றன.
இது குறித்து இரு கட்சிகளின் மேலிடத் தொடர்பாளர்களிடம் விசாரித்தபோது, "தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் விஜய் யை யார் அழைத்து வருவது என்கிற போட்டி பா.ஜ.க. -அ.தி.மு.க.வுக்கு இருக்கிறது. அதனால்தான், அமித்ஷாவின் ஏற்பாட்டில் உருவாக்கப்பட்ட குழுவினர் மூன்று முறை விஜய்யிடம் பேசினர். அதில், கூட்டணிக்கு ஓ.கே. சொன்னார். அமித்ஷா அனுப்பிய மேலிடத் தூதரிடமும் உறுதிப்படுத்தினார்.
அதேபோல, விஜய்யிடம் எடப்பாடி தனிப்பட்ட முறையில் பேசியபோதும் ஓ.கே. சொல்லியிருக்கிறார் விஜய். அப்போது, "உங்களின் லீகல் டீம் ரொம்ப வீக்காக இருக்கிறது' என்பதைச் சொல்லி, உச்சநீதி மன்றத்தில் விஜய்க்கு சட்டரீதியாக உதவ, சீனியர் வழக்கறிஞர்கள் சிலரின் தொடர்புகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
அதாவது, விஜய் தரப்பில் வலிமையான சட்ட நிபுணர்கள் குழு இல்லை. காரணம், நாம் அகில இந்திய அளவில் மிகப்பெரிய ஆளுமைமிக்க ஸ்டார். நமக்கு ஒரு பிரச்சினை எனில், மூத்த வழக்கறிஞர்கள் ஓடிவருவார்கள் என மனக்கணக்குப் போட்டார். ஆனால், கரூர் சம்பவத்தில் விஜய்க்கு உதவி செய்ய எந்த ஒரு சட்ட நிபுணர்களும் ஓடிவரவில்லை. இதனை உணர்ந்துதான், உச்சநீதிமன்றத்தில் சீனியர் வழக்கறிஞர்களை விஜய் தரப்புக்கு ஏற்பாடு செய்து கொடுத்தது அ.தி.மு.க.
பா.ஜ.க.வை பொறுத்தவரை, விஜய்யை நம் கைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்; நாம் சொல்கிற அரசியலைத்தான் அவர் முன்னெடுக்க வேண்டும் என்கிற அரசியல் கண்ணோட்டத்தில் காய்களை நகர்த்துகிறது. எடப்பாடியும், பா.ஜ.க. கொடுக்கும் நெருக்கடிகளில் விஜய் அந்த பக்கம் சாய்ந்துவிடக்கூடாது; அ.தி.மு.க.வுடன் தான் அவர் நேரடித்தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும் என வலைவீசினார். வீசிக்கொண் டும் இருக்கிறார். ஆக, தே.ஜ. கூட்டணிக்குள் தங்களால் தான் விஜய் வருகிறார் என்கிற இமேஜை உருவாக்க பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் ஏகத்துக்கும் முட்டி மோதுகின்றன.
இவர்களின் நெருக்கடிகளில் பலியாகிக் கொண்டிருக்கும் விஜய்யும் சாதாரண மானவரில்லை. செம கில்லாடியாக இருக்கிறார். பா.ஜ.க. பேசும்போது அக்கட்சிக்கு தலையை யும், அ.தி.மு.க.வுக்கு வாலையும் ஆட்டு கிறார். எடப்பாடி பேசும்போது அவருக்கு தலையையும், பா.ஜ.க.வுக்கு வாலையும் ஆட்டுகிறார். இப்படி டபுள் ரோல் பண்ணிக் கொண்டிருக்கும் விஜய், தற்போது இரவில் ஒரு முடிவை எடுத்தால், மறுநாள் காலையில் அதற்கு நேர்மாறாக வேறு ஒரு முடிவை எடுக்கிறார். அவரது அரசியலில் தெளிவில்லை. மொத்தத்தில் பித்துப்பிடித்தது போலிருக்கும் அவர், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொறுத்து இறுதி முடிவைச் சொல்கிறேன் எனச் சொல்வதாக பா.ஜ.க. தலைமைக்கு தகவல் தரப்பட்டுள் ளது''’என்று விவரிக்கிறார்கள்.
இதுகுறித்து மேலும் விசாரித்தபோது, "பா.ஜ.க.வுக்காக அமித்ஷா அமைத்துள்ள குழுவினர், விஜய்யிடம் பேசிக்கொண்டிருக்கும் சூழலில்... ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணும் விஜய்யிடம் விவாதித்துள்ளார். அதாவது, பவன்கல்யாணையும் களத்தில் இறக்கியிருக்கிறது பா.ஜ.க. காரணம், விஜய்யை சுற்றியுள்ள சிலர் அவர் எடுத்த முடிவுக்கு மாறாக குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதனை அவருக்கு தெளிவுபடுத்துங்கள் என்பதற்காகத்தான். அந்த வகையில், இரண்டு நாளுக்கு முன்பு விஜய்யை தொடர்புகொண்ட பவன்கல்யாண், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் வரவேண்டும் என்பதற்கான காரண காரியத்தை விஜய்யிடம் விரிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
குறிப்பாக, "மீண்டும் தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் அமைந்தால், உங்களின் அரசியல் அவ்வளவு தான். அடுத்த ஆறு மாதத்தில் உங்கள் கட்சி தமிழகத்தில் காணாமல் போகும். தி.மு.க.விடம் அரசியல் செய்து உங்களையும், உங்க கட்சியையும் காப்பாற்றிக்கொள்வது இம்பாசிபிள். உங்களின் சினிமா பேக்ரவுண்ட் மட்டுமே மக்களிடம் உங்களை உயர்த்திக் காட்டுகிறது. அந்த இமேஜ், கூட்டத்தைக்கூட்ட உதவும்; வெற்றி பெறுவதற்கும் தி.மு.க.வை வீழ்த்துவதற்கும் உதவாது. உங்களை விட்டால் உங்கள் கட்சியில் பிரபலமானவர்கள், அரசியல் அனுபவம் மிக்கவர்கள், தேர்தல் அரசியலில் கோலோச்சியவர்கள் என யாருமே இல்லை. அப்படியிருக்கும் சூழலில், அசகாய சூரனான தி.மு.க.வை எப்படி ஜெயிக்க முடியும்? அதனால், தே.ஜ. கூட்டணிக்கு வருவதை தவிர்க்க நினைக்காதீர்கள்' என பவன்கல்யாண் சொல்லியிருக்கிறார்.
ஆனால், "பா.ஜ.க.வை கொள்கை எதிரி என உரத்து சொல்லிவிட்டேன். அதிலிருந்து எப்படி பின்வாங்குவது?' என மீண்டும் முருங்கை மரம் ஏறியிருக்கிறார் விஜய். அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடந்த சில சம்பவங் களைச் சுட்டிக்காட்டி, விஜய்க்கு தெளிவு படுத்தியிருக்கிறார் பவன்கல்யாண். அதனை ஒப்புக்கொள்வது போல விஜய் பேசினாலும், தனித்துப் போட்டியிட்டு தி.மு.க.வை என்னால் ஜெயிக்க முடியும்; அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கரூர் சம்பவத்தில் என்ன ஆகிவிடும் ? மீறி மீறிப் போனால், அதிகபட்சம் என்னை கைது செய்வார்கள். அவ்வளவுதானே? கைது செய்துகொள்ளட்டும். அது, எனக்குத்தான் அனுதாபமாக மாறும். கைதுக்கு நான் பயப் படவில்லை. கைது செய்து சிறையிலேயே என் னை எத்தனை நாட்களுக்கு வைத்திருக்க முடி யும்? சிறையில் இருக்கும் ஒவ்வொரு நாளும் எனக்கு அனுகூலம்தான் கூடும். உங்கள் முதல்வர் (சந்திரபாபு நாயுடு) சிறைக்குப் போய்விட்டு வந்த பிறகுதானே ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்தார்' என வாதிட்டுள்ளார் விஜய்.
அப்போது, "ஆந்திர அரசியல் வேற; தமிழக அரசியல் வேற! அது நடந்த காலக் கட்டங்களும், சூழ்நிலைகளும் வேறு! அதனால் ஆந்திர அரசியலை வைத்து குழப்பிக் கொள்ளா தீர்கள். நேரத்துக்கு நேரம் முடிவை மாற்றாதீர் கள். அரசியலில் கமெண்டிங் ஆர்டர் ஒரு தலைவருக்கு தேவை. எல்லோரிடமும் ஆலோசி யுங்கள். ஆனால், முடிவை நீங்கள்தான் எடுக்க வேண்டும். அதற்கு மாறாக, ஆலோசனையில் சொல்லப்படுவதையே உங்கள் முடிவாக தீர்மானித்தால் உங்களின் அரசியல் எதிர்காலம் உங்கள் கையில் இருக்காது' என்றெல்லாம் பவன்கல் யாண் அட்வைஸ் செய்ய, "கோர்ட் தீர்ப்பு வரட்டும். இறுதியான உறுதியான முடிவைச் சொல் கிறேன்' என சொல்லி யுள்ளார் விஜய். ஆக, தம்மிடம் யார், யார் விவா திக்கிறார்களோ அவர்களின் மனநிலைக்கேற்ப தனது முடிவைச் சொல்லிக்கொண்டிருக்கிறார் விஜய்''’என்று விவரிக்கிறார்கள் பா.ஜ.க.வினர்.
சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகுதான் விஜய் கட்சி காணாமல்போகும் என்கிற கருத்தோட்டம் அரசியல் விமர்சகர்களி டம் பரவியுள்ள நிலையில், தேர்தலுக்கு முன்பாகவே அந்தச்சூழல் உருவானாலும் ஆச்சரியமில்லை என்கிற கருத்தும் தமிழக அரசியலில் பரவி வருகிறது.
அதாவது, "தமிழக வெற்றிக் கழகம் தனித் துப் போட்டியிடும் பட்சத்தில், 234 தொகுதி களுக்கும் வேட்பாளர்களை அறிவிப்பார் விஜய் (அத்தனை வேட்பாளர்கள் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை). அவர்களும் மனுத்தாக்கல் செய்வார்கள். ஆனால், மனுவை வாபஸ் பெறும் இறுதிநாளில் பலபேர் தங்கள் மனுவை திரும் பப் பெற்றுக்கொண்டு தி.மு.க.வில் இணைந்து விடுவார்கள். மாற்று வேட்பாளர்களாக போடப்படுபவர்களும் விலை பேசப்படுவர். பல இடங்களில் இந்த சம்பவம் நடக்கும். இதனால் பல தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட முடியாத சூழலும் உருவாகலாம். தேர்தல் நேரத்திலேயே விஜய் கட்சி காணாமல் போகும்'’என்கிற விமர்சனங்களை முன்வைக் கிறார்கள் அ.தி.மு.க. -பா.ஜ.க. பெருந்தலைகள்.
இந்த நிலையில், கரூர் சம்பவத்தை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சி.ஐ.டி. விசாரணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள் ளது உச்ச நீதிமன்றம். மேலும், சி.பி.ஐ. விசா ரணையை கண்காணிக்க அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவையும் அமைத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் நடத்திய விசாரணையையும் கண்டித் துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால், மனம் மகிழ்ந்துள்ள விஜய், பா.ஜ.க. வீசும் வலையில் பலியாகிவருகிறார் என்ற கருத்து அரசியல் வட்டாரங்களில் எதிரொலிக்கிறது.