"ஹலோ தலைவரே, அ.தி.மு.க.வின் தொகுதிப் பங்கீட்டை அமித் ஷாவே முடிவு செய்ததாக டெல்லித் தகவல் சொல்கிறது.''”

Advertisment

"ஆமாம்பா, இதனால் எடப்பாடி அப் செட்டில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறதே?''” 

Advertisment

"உண்மைதாங்க தலைவரே, அ.தி.மு.க.வில், தான் சொல்கிறபடிதான் தொகுதிப் பங்கீட்டை நடத்தவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா அதிரடி காட்டி யிருக்கிறாராம். முன்னதாக டி.டி.வி.தினகரனை அழைத்து, எடப்பாடியுடன் ஒத்துப் போகவேண்டும் என்று அவர் சொல்ல, "அதெல்லாம் சரிப்பட்டு வராது' என்றாராம் தினகரன். அமித்ஷாவோ, "திகார் சிறைக்குப் போகவேண்டுமா? இல்லை தமிழகத்தில் எடப்பாடி அணியில் இருக்கவேண்டுமா? என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள்' என்று கறாராகச் சொன்னாராம். அதனால் தினகரன் அவரை எதிர்த்துப் பேசாமல், ஓ.பி.எஸ்.ஸிடம் கலந்து ஆலோசித்துவிட்டு, அமித்ஷாவிடம், "அ.தி.மு.க. கூட்டணியில் எங்களுக்கு மரியாதை கிடைக்கிற மாதிரி செய்யுங்கள்' என்று கேட்டுக்கொண் டாராம்.''”

"அப்புறம்?''”

"இதைத்தொடர்ந்து சசிகலாவிடமும் அமித்ஷா பேச... சசிகலா, "நாங்கள் கேட்கிற சீட்டுகளை எடப்பாடி எங்களுக்கு ஒதுக்க வேண்டும்' என்று சொல்ல, "இப்போதுதான்  உங்கள் சொத்துக்களை விடுவித்திருக்கிறோம். மீண்டும் சிக்கலை உண்டாக்கிக்கொள்ளாதீர்கள்' என்றாராம். இதைத் தொடர்ந்து அவரும் சைலண்டாகிவிட்டாராம். நிறைவாக எடப்பாடியிடம் பேசிய அமித்ஷா, "அ.தி.மு.க.வுக்கு 140-ல் இருந்து 150 தொகுதிகள், பா.ஜ.க.விற்கு 30-ல் இருந்து 40 தொகுதிகள், அன்புமணியின் பா.ம.க.வுக்கு 15 தொகுதிகள், தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகளுடன் ஒரு ராஜ்யசபா,  தினகரனின் அ.ம.மு.க.வுக்கு  10 தொகுதிகள், ஓ.பி.எஸ்.ஸுக்கு 10 தொகுதிகள், சசிகலாவுக்கு 2 தொகுதிகள், அவருடனேயே சுற்றிக்கொண்டிருக்கும் நரசிம்மனுக்கு ஒரு தொகுதி,  தொழிற்சங்கத் தலைவர் சின்னசாமிக்கு ஒரு தொகுதி, இது தவிர ஜான்பாண்டியன், ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட உதிரிக் கட்சிகளுக்கும் ஓரிரண்டு என தொகுதிகளைப் பகிர்ந்துகொள்ளலாம்' என்று அமித்ஷா அழுத்தமாகச் சொல்லிவிட்டாராம். எல்லாவற் றையும் கேட்டுக்கொண்ட எடப்பாடி, தங்கள்   கட்சி சீனியர்களிடம், "டெல்லியில் இப்படிச் சொல்கிறார்கள், நாம் தேர்தல் நெருக்கத்தில் பார்த்துக்கொள்ளலாம்' என்று மழுப்பலாகச் சொன்னதாகவும் சொல்கிறார்கள், என்றாலும் அமித்ஷாவால் எடப்பாடி அப்செட்டிலிருக்கிறார் என்கிறார்கள்.''”

Advertisment

"மாஜி பா.ஜ.க. தமிழகத் தலைவருக்கு, தமிழகம் வந்த பிரதமர் மோடி எச்சரிக்கை சிக்னல் தந்திருக்கிறார் என்று ஒரு பேச்சு சிறகடிக்கிறதே?''”

"தமிழகம் வந்த பிரதமர் மோடி, தமிழக பா.ஜ.க. மாஜி தலைவரை தோளில் தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றார். இதைப்பார்த்த அவரது ஆதரவாளர்கள், அந்த மாஜிக்கு மோடி உரிய பதவியைப் போட்டுத் தரவிருக்கிறார், அதன் அடையாளம்தான் இது என்று பூரிப்பாய் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவருக்கு எதிர் தரப்போ, "நீ ஜாக்கிரதையாக இரு. இல்லையென்றால் விரைவில் ஜெயிலுக்குப் போவாய்' என்று, மோடி அவர் தோளைத் தட்டி எச்சரித்துவிட்டுச் சென்றிருக்கிறார் என்கிறது.''”

"அ.தி.மு.க. பொதுக்குழுவை எடப்பாடி டிசம்பரில் கூட்ட திட்டமிருக்கிறாரே?”

"ஆமாங்க தலைவரே, டிசம்பரில்  கூட்டப்படவிருக்கும் பொதுக்குழுவில் இம்முறை தேர்தலை எதிர்கொள்வது குறித்த விவாதங்களை நடத்தவிருக்கிறாராம் எடப்பாடி. அதனால் இந்த பொதுக்குழுவை ஆர்வமாக எதிர்பார்க்கும் அ.தி.மு.க. சீனியர்கள், "நாம் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால், அ.தி.மு.க.விலிருந்து நீக்கப் பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண் டும். அல்லது நடிகர் விஜய்யின் த.வெ.க.வுடன் கூட்டணி வைக்கவேண்டும். இந்த ரெண்டில் ஒன்றுகூட நடக்கவில்லை என்றால், நாங்கள் தேர்தலில் நிற்க விரும்பவில்லை. ஏனென்றால் வெற்றிபெற வாய்ப்பில்லாமல், தேர்தலில் நாங்கள் எதற்கு நிற்கவேண்டும். சீட் கேட்பவர்களுக்கு கொடுங்கள்' என்றெல்லாம் எடப்பாடியிடம் நிர்பந்திக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம். அதனால் எடப்பாடி கூட்டும் பொதுக்குழு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள்.''”

"தி.மு.க. அமைச்சரை குறிவைத்து அமலாக் கத்துறை ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, அண்மையில் சென்னையில் அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்களைக் குறிவைத்து அமலாக்கத்துறை 12 இடங்களில் ரெய்டுகளை நடத்தியது.  கூடவே நகைக்கடை அதிபர்களையும் குறிவைத்து இந்த ஆபரேசனை நடத்தியது. ஒப்பந்ததாரர்கள் சம்பாதித்ததையெல்லாம் நகைகளாக மாற்றி வைத்ததால்தான் நகைக் கடைகளையும் ரெய்டு செய்தோம் என்று சொல்கிறார்களாம் அமலாக்க அதிகாரிகள்.''”

"சரிப்பா, தனது ஜாமீன் நிபந்தனைகளைத் தளர்த்துமாறு செந்தில்பாலாஜி, உச்சநீதிமன்றத்தை அணுகியிருக்கிறாரே?”

rang1

"தி.மு.க. மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், சில நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த நிபந்தனைகளை முறையாக அவர் கடைப்பிடித்து வருகிறார். தற்போது  சட்டமன்றத் தேர்தல் வர சில மாதங்களே இருப்பதால், கரூர் மற்றும் கோவை மாவட்ட தி.மு.க.  பொறுப்பாளர் என்கிற முறையில் தேர்தல் பணிகள் அவருக்கு இருக்கிறது. எனவே அவரது நிபந்தனைகளைத் தளர்த்துமாறு உச்ச நீதிமன்றத்தில்  அவர் சார்பில்  அவர் வழக் கறிஞர் ராம்சங்கர் தாக்கல் செய்திருக் கிறார். இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இதற்கு பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு உத்தர விட்டுள்ளது. செந்தில்பாலாஜியின் நிபந்தனைகள் தளர்த்தப்படும் என்பதால், தி.மு.க.வின் தேர்தல் பணிகள், அவர் பகுதியில் இனி டாப் கியரில் இருக்கும் என்று  உடன்பிறப்புகள் மகிழ்வோடு காத்திருக்கிறார்கள்.''”

"தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்களை மக்களுக்கு வழங்குவதில் 98 சதவீதத்தை  நிறைவேற்றியிருக்கிறோம் என்று தேர்தல் ஆணையம் சொல்லிவருகிறதே?”

"ஆமாங்க தலைவரே, அப்படியொரு புள்ளிவிபரத்தை கடந்த வாரம் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஆனால், தமிழகத்தில் 50 சதவீத மக்களுக்குக்கூட இந்த படிவங்கள் போய்ச் சேரவில்லை. ஒவ்வொரு வீட்டிற்கும்  பி.எல்.ஓ.க்கள் நேரடியாகச் சென்று இந்தப் படிவங்களை வழங்குவார்கள் என சொல்லப்பட்டது. இந்த பி.எல்.ஓ.க்கள் 10 சதவீத படிவங்களைக் கூட வழங்கவில்லை. அதேசமயம் சில அரசியல் கட்சிகள், தங்கள் வாக்காளர்களைத் தக்க வைத்துக்கொள்ளப் படிவங்களை வாங்கிச்சென்று விநியோகிக்கின்றன. அதிலும் குறிப்பாக   தி.மு.க.வினர்தான் இதில் ஸ்கோர் பண்ணியுள்ளனர். எஸ்.ஐ.ஆரை தி.மு.க. கடுமையாக எதிர்த்தாலும், பி.எல்.ஏ.1 மற்றும் பி.எல்.ஏ.2 என இரண்டு கேட்டகிரியில் ஏரியாவாரியாக உடன்பிறப்புகளை நியமித்து, அவர்கள் மூலம் படிவங்களை விநியோகித்துவருகின்றனர்.''”

"இதேபோல், விஜய் தரப்பும் எஸ்.ஐ.ஆரில் களமிறங்கி மல்லுக்கட்டி வருகிறதே?''”

"நடிகர் விஜய் எஸ்.ஐ.ஆர். பதிவுக்கு ஜென் இசட் என்ற பெயரில் இளைஞர்கள் டீமை களமிறக்கியிருக்கிறார். அவர்கள் அனைவரும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து வருகிறார்களாம். தொகுதிக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை புதிய உறுப்பினர்களைத் தங்கள் சார்பில் சேர்க்கவேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டிருக்கிறாராம். புதிய உறுப்பினர்களை அவர்தரப்பு எங்கே போய் தேடிப்பிடிப்பது என்று புலம்புகிறதாம். இது ஒரு பக்கமென்றால், இவர்கள் கொடுக்கும் விண் ணப்பங்களைப் பார்த்து தேர்தல் ஆணைய அதிகாரிகளே குழம்பிப்போயிருக்கிறார்களாம்.''  ”

"சரிப்பா, ஐயப்ப பக்தர்கள் மோடியின் மத்திய அரசு மீது எரிச்சலில் இருக்கிறார்களே?''”

"வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்துவரும் ஐயப்ப பக்தர்கள், சென்னை வந்து அங்கிருந்து கேரளாவுக்கு ப்ளைட் பிடித்துச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அப்படி வரும் பக்தர்களை இருமுடியுடன் கேரளாவுக்கு விமானப் பாதுகாப்புப் படை இதுவரை அனுதித்துவந்தது. இந்தமுறை   ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில், ஐயப்ப பக்தர்களை இருமுடியுடன் கேரளா செல்ல விமான பாதுகாப்புப் படையினர் அனுமதிக்க மறுத்துவிட்டனர். பக்தர்கள் வலியுறுத்திக் கேட்டும், இப்படி உங்களை அனுமதிக்கச் சொல்லி, மத்திய அரசிடமிருந்து எங்களுக்கு உத்தரவு வரவில்லை என்று கறாராகச்  சொல்லிவிட்டனர். இதனால்  மனம் வருந்திய அப்படிப்பட்ட ஐயப்ப பக்தர்கள் ‘நாங்கள்  இருமுடி கட்டுவது என்பது மத்திய அரசுக்கு வெடிகுண்டு போல தெரிகிறதா?’ என விமர்சித்தபடியே, சென்னையில் இருந்து வாடகை டாக்சிகளில் ஐயப்பன் மலைக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.''”

"நக்கீரன் அம்பலப்படுத்திய செய்தி அ.தி.மு.க.வில் பெரிய அளவில் வெடித் திருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, நியூஸ் ஜெ. தொலைக்காட்சியில் தலைமையானவர் எடப்பாடி சுற்றுப்பயணத்தின்போது, அ.தி.மு.க. மா.செ.க் களிடம் அடாவடியாக வசூல் செய்ததையும், அதை வைத்து திருவண்ணாமலையில் தனது அக்கா மகன் பெயரில் ரூ.1.25 கோடி மதிப்பிலான இடம் வாங்கியதையும் அண்மையில்  நாம், நமது உரையாடலின் மூலம் அம்பலப் படுத்தியிருந்தோம். இந்தச் செய்தி வெளியான அன்றே, அ.தி.மு.க. மா.செ.க்கள் கூட்டத்தில், இதை திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட சில மாவட்ட செயலாளர்கள் கையிலெடுத் துக் குரல் கொடுத்திருக்கிறார்கள். இதனால், சேனலை கவனிக்கும் சி.வி.சண்முகத்தின் சகோதரர் ராதாகிருஷ்ணனிடம், "இனி  அந்த ஆள் சேனலில் இருக்கக்கூடாது என்று, எடப் பாடி கடுமை காட்டியிருக்கிறார். ஆனால் ராதாகிருஷ்ணனோ, சம்மந்தப்பட்ட  நபரை அழைத்து, ஒரு வாரம் மட்டும் விடுப்பில் அனுப்பி வைத்துவிட்டு, பிரச்சினையை நான் சமாளிச்சுக்கிறேன் என்று சொல்லிவருகிறார். இதனால்,  வசூலில் இவருக்கும் பங்கு போகிறதோ என சேனல் ஊழியர்கள் தங்களுக்குள் கிசுகிசுகிறார்கள்.''”

"த.வெ.க. கட்சி நிர்வாகி ஒருவரும் வசூல்மேளா நடத்துகிறாராமே?''”

"மதுரையில் உள்ள த.வெ.க. கட்சியின் தங்கமான பெயர்கொண்ட மாவட்ட செயலாளர், கட்சியில் பதவி நியமனத்திற்கு. அவர்களின் தகுதிக்கேற்ப தன்னுடைய காருக்கு இ.எம்.ஐ. கட்டச் சொல்கிறார் எனவும், மாநில பதவி கேட்பவர்களிடம் ஆறு மாதத்திற்கு தன்னுடைய கட்சி அலுவலக வாடகை யை முன்கூட்டியே  வாங்குவதாகவும் குற்றச் சாட்டுகள் எழுந்துவருகின்றன. இது குறித்து அந்த தங்க மானவர் பேசிய ஆடியோ, மதுரையில் உள்ள த.வெ. க.வினர் மத்தியில் பரவிப் பரபரப்பூட்டி வருகிறது.  இது குறித்து மாநில நிர்வாகி நிர்மல்குமாருக்கு கட்சியினர் புகார் அனுப்பியும், அது கண்டுகொள்ளப்படவில் லையாம். இந்த நிலையில், அந்த த.வெ.க. பிரமுகர், "தேர்தல் நேரத்தில் உங்களுக்கு அனுசரணையாக நடந்துக் கிறோம்' என்றபடி, மதுரை யின் பவர்ஃபுல்லான அமைச் சரிடம் டீலிங் பேசி பெரும் தொகையை அட்வான்ஸாக வாங்கிவிட்டாராம்.  மேலும் போக்குவரத்து நகரில் இடங் களை தேர்வுசெய்து தேர்தல் சமயத்தில் பத்திரம் போட லாம் என்றும்  அவருடன் ரகசிய உடன்படிக்கையும் செய்துகொண்டிருக்கிறாராம்.''”

"என் காதுக்கு வந்த ஒரு தகவலை நானும் பகிர்ந்துக்கறேன். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அண்மையில் டெல்லிக்குச் சென்று தங்கள் கட்சித் தலைவர்களை சந்தித்துவிட்டு வந்தார். உடனே நடிகர் விஜய், ராகுலுடன் பேசத்தொடங்கியிருப்பதால், செல்வப்பெருந்தகை டெல்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார் என்று தமிழகத்தில் செய்தி பரவியது.  உடனே செல்வப் பெருந்தகை தரப் பினரே, இந்த செய்தியை மறுத்துவருகின்றனர்.''


______________
இறுதிச் சுற்று! 

ஆளுநருக்கு அதிகாரமில்லை! உச்ச நீதிமன்றம் அதிரடி!

rangbox

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் கவர்னர் காலதாமதம் செய்வதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருந்தது தி.மு.க. அரசு. இதில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஜனாதிபதிக்கும் ஆளுநருக்கும் கெடு விதித்தது. இதனை எதிர்க்கும் விதத்தில் உச்ச நீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பியிருந்தார் ஜனாதிபதி முர்மு. இந்த மனு மீது வியாழக்கிழமை (20-ந்தேதி ) தீர்ப்பளித்த உச்சநீதிமன் றம், "மசோதாக்களை ஆளுநர் நீண்டகாலம், உரிய காரணங்களைத் தெரிவிக்காமல் நிறுத்திவைப்பது கூட்டாட்சிக்கு எதிரானது. நிதி மசோதாவை தவிர இதர மசோதாக்களை நிறுத்தி வைக்காமல் சட்டப் பேரவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் அல்லது மசோதா வுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது ஜனாதிபதிக்கு அனுப்பலாம் என்பதுதான் ஆளுநரின் அதிகாரம்.

ஆனால் காரணம் எதுவுமில்லாமல் மசோதாக்களை நிறுத்திவைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. மாநில அமைச்சரவை முடிவின்படிதான் ஆளுநர் என்பவர் செயல்பட வேண்டும். ஒரு மாநிலத்தில் 2 நிர்வாக அதிகார மையங்கள் இருக்கக்கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் உண்டு. அமைச்சரவையின் முடிவுப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும். செயல் படாமல் இருந்தால் அரசியலமைப்பும், நீதிமன்றமும் ஆய்வு செய்யும். தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே அளித்த தீர்ப்பில் உறுதியாக இருக்கிறோம்'' என்று கருத்து தெரிவித்துள்ளது.

-இளையர்