மிழறிஞர் மு.வரதராசன் கூறுவார், "மூளையர் சிலரும் முரடரில் பலரும் நிறைந்த குருட்டுக் கும்பல், தமிழர் கூட்டம். மூளையரை விலை கொடுத்து வாங்கிவிடலாம், முரடர்களை அரட்டி, மிரட்டி அதிகாரத்தால் அடக்கிவிடலாம் என்பதுதான் தமிழர்களைப் பற்றிய பிற இனத்தவர்களின் கணிப்பாக உள்ளது'' என்றார் டாக்டர் மு.வ. தமிழகத்தில் நடைபெற்றுவரும் "அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்' என்ற தமிழக முதல்வரின் செயற்பாட்டு பணி ஆணையை 28 இளைஞர்களுக்கு பல்வேறு சாதியினருக்கு, அர்ச்சகராகும் தகுதியை 14-08-2021 அன்று ஏற்படுத்திக் கொடுத்ததன்விளைவாக, வாதி பிரதிவாதங்களை ஆதிக்கச் சாதியினர் தூக்கிக்கொண்டு வலம் வருவதை மு.வ. அவர்களின் கூற்றோடு உற்று நோக்கவேண்டும்.

தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற பாரம்பரியத்தை அன்னியர்கள் தங்கள் மொழியாலும், அதிகாரத் தாலும், பண்பாட்டாலும் அழிக்க முற்படும்போது அதை எதிர்த்து நம் நாட்டின் பாரம்பரியத்தை காப்பாற்றத் தவறினால், அது தமிழனின் அறிவீன மாகும்.

d

பெரியாரும் கலைஞரும்

Advertisment

தந்தை பெரியார் 1970-ல் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக லாம் என்பதை நிறை வேற்றினால்தான், தன் நெஞ்சில் தைத்த முள் நீங்கும்' என்றார். இதை நிறைவேற்றவே கலைஞர் 02-12-1970-ல் தமிழக சட்டப்பேரவையில் (இரண்டு அவைகளிலும்) அர்ச்சகர் மசோதாவை ஏகமனதாக நிறைவேற்றினார். என்றாலும், இதை சனாதானிகள் கடுமையாக எதிர்த்தனர். நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

1. குடந்தை அர்ச்சகர் கூட்டமைப்பின் பொறுப்பாளர் இரா.பாயசடாச்சரம் என்பவர், "இந்த ஆணையைத் தமிழக அரசு திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் திராவிட பாரம்பரியத்தைச் சார்ந்தவர்கள்'' என்று அறிக்கை விட்டார்.

அவர் மேலும் கூறியதாவது: "சாதி வித்தியாசம் கருதி நாங்கள் அமைச்சரவையின் முடிவை எதிர்க்கவில்லை. கோயில்களில் ஆகம விதிமுறைக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. முன்னோர் வகுத்த ஆகம மரபுகள், பழக்கவழக்கங்களை மாற்றக்கூடாது என்பதே எங்களின் முக்கிய நோக்கம். இதுவே, எங்கள் எதிர்ப்புக்கு காரணமாகும்'' என்றார். இவர் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

சனாதன (துக்ளக்) சோ, இராமசாமியின் வாதம்: இவர் இரண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை எடுத்துக் கையாள்கிறார். 1972, 2002 இவ்விரு ஆண்டுகளில் இரண்டு வகையான தீர்ப்புகளை அளித்துள்ளது.

1972-ல் உச்சநீதிமன்றம் சாதியைப் பற்றி குறிப்பிடாமல் விட்டுவிட்டது. இதனால், அர்ச்சகரின் சாதி முன்னின்றது. 2002-ல் வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பில் அனைத் துச் சாதியின ருக்கும் அர்ச்சக ராக உரிமையுண்டு என்று கூறிவிட் டது என்றாலும், "சோ' அவர்கள் கொடுத்த விளக் கம் வேறு மாதிரியாக இருந் தது.

2002-ல் உச்சநீதிமன்ற தீர்ப்பு கேரளாவில் உள்ள கோயிலானது, ஆகம அடிப்படையில் செயல் படும் கோயில் அன்று. எனவே, இந்தத் தீர்ப்பு "ஆகம முறைப்படி சாமி பிரதிஷ்டை செய்யப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்பட்டு, பூசை நடைபெறும் கோயில்களுக்குப் பொருந்தாது' என்று வாதிட்டார்.

திரு. ப.சிதம்பரம் பிள்ளையின் கூற்று: இவர் நீதிக்கட்சியின் கொள்கையை ஏற்றுக்கொண்டவர். இவர் வரலாற்றின் அடிப்படையிலும், பல்வேறு நீதிமன்றங்களின் தீர்ப்புகளின் அடிப்படையிலும் தனது "கோயில் நுழைவு உரிமை' (தண்ஞ்ட்ற் ற்ர் பங்ம்ல்ப்ங் ஊய்ற்ழ்ஹ்) நூலில், வர்ணாசிரமக் கொள்கைதான் பஞ்சமர்களை கோயிலுக்குள் நுழையக்கூடாது என்று கூறுகிறது. சைவமும், வைணவமும் பறையர்கள் உள்பட அனைவரையும் கோயிலுக்குள் அனுமதிக்கிறது என்று பிள்ளை கூறுகிறார்.

hindu

ஆகமமா, வர்ணாசிரமமா? எது தடை?

கலைஞர் 13-05-2006-ல் புத்த பூர்ணிமா அன்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் முதல்வர் பதவியை ஏற்றார். அடுத்து பத்துநாளில் பெரியார் சீடர் என்பதை மறக்காமல் 23-05-2006-ல் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற ஆணையைப் பிறப்பித்தார்.

1972, 2002, 2005, 2015 ஆகிய ஆண்டுகளில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணைகளில் 16-12-2015ல் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில், அர்ச்சகர்கள் நியமனம் 1) சாதி அடிப்படையிலோ, 2) பிறப்பின் அடிப்படையிலோ செய்யக்கூடாது என்று தெளிவுப்படுத்திவிட்டது. இந்தத் தீர்ப்பு சாதிக்கும், தீண்டாமைக்கும் கொடுத்த மரண அடியாகும். என்றாலும், "ஆகமம்' என்ற வாதத்தை முன்னிறுத்தி, "சாதி'வாதத்தை அதற்குள் புதைத்துவிட்டது.

இதுகுறித்து நான் எழுதிய "கலைஞரின் கலாச்சார புரட்சி! அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்' என்ற தலைப்பிட்ட நூலை 06-12-2006-ல் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட, தொல்.திருமாவளவன் பெற்றுக்கொண் டார். இதைத் தொடர்ந்து 07-01-2016-ல் "அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதற்குத் தடையாக இருப்பது ஆகமமா, வர்ணாசிரமமா?' என்ற தலைப்பில் பெரியார் திடலில் பெரியார் மணியம்மை வாசகர் வட்டத்தில் பேசியது, பின்னர் அதே தலைப்பில் நூலாக ம.க.இ.க. வெளியிட்டது.

இதன் முடிவில் நான் ஆய்வாகக் கூறியது, தடையாக இருப்பது வர்ணாசிரம சாதியே ஆகும். ஆகமம் இல்லை என்பதே அடிப்படை உண்மையாகும்.

பிராமணர் அல்லாதார் அர்ச்சகர் ஆகக்கூடாது

ss

இதை வெளிப்படையாக குடந்தை இராம சுப்ரமணியமும், டாக்டர் சுப்ரமணியசாமியும் வவியுறுத்தி கண்டித்து விமர்சித்துப் பேசினர். "பிராமணர்கள் அல்லாதார் அர்ச்சகராக முடியாது. பிராமணர்கள் அர்ச்சகராக இல்லாமல் எதையும் செய்ய முடியாது' என்று சூளுரைத்தனர்.

இப்படி இவர் கூறியதற்கு சான்றுகள்:

1. மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரிடம் அமைச்சராக இருந்த இராமப்பையன் என்ற பிராமணர் பழனி முருகன் கோயிலுக்கு வந்தபொழுது, அங்கு தமிழ்ப் பண்டாரம் அர்ச்சகராக இருப் பதை ஏற்றுக்கொள்ளாத அமைச்சர், சூத்திரரான பண்டாரத்தை மாற்றிவிட்டு, பிராமணரை நியமித்தார் என்பது வரலாறு.

தமிழனை நீக்கிவிட்டு பிராமணனை அர்ச்சக ராக நியமித்தது எந்த வகையில் நியாயமானது?

முருகன் தமிழ்க் கடவுள். ஆகமக் கோயில் இல்லை. திருவானைக்காவல் கோயில், திருச்செந்தூர் போன்ற பல கோயில்கள் ஆகமப்படி இல்லாத கோயில்கள். அப்படியிருக்கையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் எப்படி பண்டாரங்கள் இல்லாமல் கேரள நம்பூதிரிப் பார்ப்பனர்கள் அர்ச்சகர் களாகப் பணிபுரிகிறார்கள்.

sekarbabu

இங்கு சாதியா? ஆகமமா?

1) முக்கிய சாதியே அடிப்படை

2) ஓர் எடுத்துக்காட்டு

திருவண்ணா மலைக்கு அருகில் வேட்டவலம் பகுதியில் சதுப்பேரி என்ற கிராமம் உள்ளது. அக்கிராமத்தில் விசுவகர்மா சாதியைச் சார்ந்த மார்க்க சகாய வாத்தியார் என்பவர் பல குடும்பங்களுக்கு திரு மணம் நடத்தும் புரோகித ராக இருந்தார். ஒரு திருமணத்திற்கு பந்தலில் மந்திரம் ஓதி முகூர்த்தக் கால்கோள் விழா நடத்தினார். இதை அறிந்த அவ்வூர் பஞ்சாங்க குண்டய்யன் என்பவர், சில அடியாட்களை அழைத்துக்கொண்டு வந்து, பந்தலைப் பிய்த்தெறிந்தார்.

அதுமட்டுமல்ல, "பிராமணர் இல்லாதவன் திருமணம் நடத்தி வைக்கக்கூடாது' என்றும் அப்படிச் செய்து வைக்கப்பட்ட திருமணங்கள் செல்லாது என்றும் ஊரார் முன்னிலையில் அறிவித்தார்.

இதை விசாரிக்க அவ்வூர் பஞ்சாயத்து கூடிற்று. அனைத்து சாதி தலைவர்களும் கூடினர். மார்க்க சகாய வாத்தியாரும், பஞ்சாங்க குண்டை யனும் தங்களுடைய வாதங்களை அவையோர் முன் வைத்தனர். இறுதியில் பஞ்சாயத்தார்கள் மார்க்க சகாய வாத்தியார் செய்யும் திருமணங்கள் செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.

இத்தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமல், பஞ்சாங்கக்குண்டய்யன் சித்தூர் அதலத் கோர்ட் டில் வழக்கு தொடர்ந்தார். பிராமணர்கள் அல்லா தோர் நடத்தி வைக்கும் திருமணங்கள் செல்லாது. மார்க்க சகாய வாத்தியார் பிராமணர் இல்லை. எனவே, அவர் திருமணங்கள் செய்வதற்குத் தகுதியற்றவர் என்று வழக்கைத் தொடுத்தார். இவ்வழக்கு 1814 முதல் 1818 வரை நடைபெற்றது.

ssamy

இறுதியாக அந்த நீதிமன்றத்தின் நீதிபதி டெக்கர் (Tecker)என்ற ஆங்கிலேயர் மார்க்க சகாய வாத்தியார் வேத சாஸ்திரம் அறிந்தவர். அவர் திருமணம் செய்துவைக்கத் தகுதியானவர் என்று 15-12-1818-ல் தீர்ப்பு வழங்கிற்று. இது "சித்தூர் தீர்ப்பு' என்று பெயர் பெற்றது. பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர்களாகவும், புரோகிதர்களாகவும் இருக்க வேண்டும் என்ற சானாதனிகளின் வாதத்தை சித்தூர் தீர்ப்பு தவிடுபொடியாக்கிவிட்டது.

3) மு.வ. கூறியதைப்போல், சூத்திரங்களும், பஞ்சமர்களும் தங்களது உரிமைகளைப் பாதுகாக்கப் போராடவில்லை.

1967-ல் பெரியார் வழிவந்த அறிஞர் அண்ணா, தமிழக முதல்வராக வந்த பின்னர் 1968-ல் புரோகிதர் இல்லாத சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று சட்டம் கொண்டு வந்தார்.

அறிஞர் அண்ணா 1814-1818ல் நடைபெற்ற சித்தூர் வழக்கில் பஞ்சாங்கம் குண்டய்யர் முன்வைத்த பிராமண புரோகிதரே இருக்க வேண்டும் என்ற வர்ணாசிரம சாதி அடிப்படை வாதத்தை அண்ணா முறியடித்தார்.

4) கடல் கடந்து இந்துக்கள் செல்லக்கூடாது. அப்படிச் சென்றால், இந்துக்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் என்றனர். அதன் அடிப்படையில் கணிதமேதை இராமானுஜன் லண்டன் சென்றதால், கும்பகோணத்தில் அவரது இறுதிச்சடங்கிற்கு எந்த ஒரு பட்டாச்சாரியார்களும் வரவில்லை. அதே சனாதன விதிப்படி சிறை சென்ற சங்கராச்சாரியார் சீனா செல்லக்கூடாது என்று கொலை செய்யப்பட்ட சங்கரராமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருந்தார் என்பது வரலாறு.

5) அயல்நாட்டிலுள்ள கோயிலுக்கு ஆகமம் எங்கே? தற்சமயம் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பல நூறு கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றிற்கு இந்தியா, தமிழ்நாட்டிலிருந்து பலநூறு பிராமணப் புரோகிதர்கள் சென்றுள்ளனர்.

இதுபற்றி இரு வினாக்கள்:

1. கடல் கடந்து சென்ற இந்துக்கள் இந்துக்களா? பிராமணர்கள் பிராமணர்களா?

2. கடல் கடந்து கட்டப்பட்ட கோயில்களுக்கு எந்த ஆகம விதிகள் கடைபிடிக்கப்படுகின்றன? இதற்குப் பதில் என்ன?

டாக்டர் சுவாமியை சிக்க வைத்த ஸ்டாலின்

இராம.சுப்ரமணியனை ஒட்டி, டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி "அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்' என்ற பணி நியமன ஆணையை 14-08-2021-ல் 28 நபர்களுக்கு அர்ச்சகராக பதவி உத்தரவு வழங்கியதை எதிர்த்து, கலைஞரைப்போல் தேவையற்றதை அர்ச்சகர் நியமனத்தில் செய்வதாகக் கூறி சுவாமி பயமுறுத்தினார்.

இந்து சமய அறக்கட்டளை நிர்வாகத்துறை அமைச்சர் சேகர்பாபு, இந்த அரசு அவரது கூற்றுக் கெல்லாம் பயப்படாது என்று எதிர்வினையாற்றி னார். அதன் பின்னர், தனது நேர்காணல் ஒன்றில்... "இந்து மதத்திற்கும் பிற மதத்திற்கும் இடையே விவாதம் இருக்க வேண்டுமேயல்லாமல், இந்து மதத்திற்குள்ளேயே பிராமணர், பிராமணர் அல்லாதோர் என்ற பாகுபாட்டின் அடிப்படையில் பிரிவினை தோன்றக்கூடாது' என்று ஒரு சமாதான உரையை வெளியிட்டார்.

ஆக, நீதிக்கட்சியின் நூற்றாண்டில், ஸ்டாலினின் 100-வது தி.மு.க ஆட்சி நாளில், வரலாற்று சிறப்புமிக்க 14-08-2021-ல் "அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்' என்ற பெரியாரின் -கலைஞரின் கனவை நனவாக்கிவிட்டார்.

உண்மையில் ஸ்டாலின் நீதிக்கட்சியின் தொடர்ச்சி... அவர், திராவிட இனத்தைச் சார்ந்தவர்.