சமீப நாட்கள்வரை, முதல்வர் ஸ்டாலினுக்கும் அவரது சகோதரரான மு.க.அழகிரிக்கும் பெரும் உரசல் இருந்தது என்பது ஊரறிந்த ரகசியம்.
இப்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.
ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்க இருந்த நிலையில் திடீரென மு.க.அழகிரி, "முதல்வர் பொறுப்பேற்க இருக்கும் என் தம்பி ஸ்டாலினுக்கு அன்பான வாழ்த்துகள். அவர், நல்லாட்சி தருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது' என்று ஒரு அன்பான அண்ணனாக இருந்து மனம் திறந்தார். அதேபோல், ஸ்டாலினின் பதவி ஏற்பு விழாவுக்குத் தன் மகனான துரை தயாநிதியையும் நேரில் அனுப்பிவைத்து, தி.மு.க. தரப்புக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத் தார். இதைத் தொடர்ந்து மதுரை நகரெங்கும் அழகிரியின் ஆதரவாளர்கள், ஸ்டாலின்-அழகிரி உறவை வாழ்த்தி போஸ்டர் களை ஒட்டி மகிழ்ச்சித் திருவிழா நடத்தினர்.
இந்த மனமாற்றம் எப்படி ஏற்பட்டது?
அதன் சூத்ரதாரி யார்?
அழகிரியின் ஆதரவாளரும் தி.மு.க.வின் சீனியருமான மதுரை இசக்கிமுத்துவிடமே விசாரித்தோம். நெகிழ்ச்சியோடு நம்மிடம் பேச ஆரம்பித்த அவர், "கடந்த 5-ஆம் தேதி அழகிரி அண்ணனிடம் நான் பேசிக்கொண்டி ருந்தபோது, தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்று ஆர்வமாக விசாரித் தார். உடனே நான், "தி.மு.க. வெற்றிபெற வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா' என்று கேட்டேன். அதற்கு அவர், "ஆமாம்பா, என்னதான் இருந்தாலும் அப்பாவின் வேர்வையால் வளர்ந்த கட்சி அது. தம்பியும் சரியாத்தான் கொண்டு செல்கிறார். இப்ப ஜெயிக்காவிட்டால் மத்தியில் உள்ளவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்துவிடு வார்கள். தி.மு.க. உணர்வு என் இரத்தத்தில் ஊறியது. ஸ்டாலின் என்னுடன் பேசாவிட்டால் போகட்டும். நான் செத்தால் கருப்பு சிகப்பு கொடியை என்மேல் போத்திடுங்க'ன்னு சொன்னார். உடனே நான், "அண்ணே... தி.மு.க.. கட்டாயம் ஜெயிக்கும்' என்று சொன்னதோடு, அவரது சகோதரியான செல்வி அக்காவிடம் பேசினேன்.
அக்காதான் தொடர்ந்து இதற்காக பாடுபடுபவர். அவரிடம், "அண்ணனையும் தம்பியையும் மீண்டும் ஒன்று சேர்க்க முடியாதா?' என்றதும் செல்வி அக்கா அழுதே விட்டார். "சரி', என்று போனை வைத்துவிட்டார்.
அடுத்தடுத்து தலைவர் குடும்பத்திலிருந்து பேசியிருப் பார்கள் போல. அடுத்து மதுரை செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி நவீன் பாண்டியன், முதல்வரின் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பிதழைக் கொண்டுவந்து கொடுத்தார். சிறிதுநேரத்தில், தொலைபேசியில் அழகிரியைத் தொடர்பு கொண்டு ஸ்டாலினே பேசினார். இதையறிந்து பூரித்துப்போன நான், உடனே செல்வி அக்காவிற்கு நன்றி சொன்னேன். "அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக இருப்பதைப் பார்த்துவிட்டுத்தான் கண்ணை மூடவேண்டும் என்று எண்ணினேன். எனக்கு 76 வயதாகிவிட்டது. அது பலித்துவிட்டது'' என்றார் உணர்ச்சிப்பெருக்கோடு.
விரைவில் கலைஞர் குடும்பத்தின் அபூர்வ சகோதரர் களான ஸ்டாலினும் அழகிரியும் நேரில் சந்திப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
-அண்ணல்