டந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை தமிழக அரசிய-ல் முக்கியத்துவத்தைப் பெற்றுவந்த பல கட்சிகள், ஒட்டுமொத்தமாக துடைத்தெறியப்பட்டுள்ளன.

புதிய தமிழகம் கட்சி, தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்தது. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியுடன் பேச்சுவார்த்தை சரியாக அமையவில்லை. அடுத்து அ.ம.மு.க.வுடன் கூட்டணி பேசினார். அதுவும் சரியாக அமையவில்லை. தனித்துப் போட்டி என அறிவித்தார். அவர் தொடர்ந்து களம் காண்கிற ஒட்டப்பிடாரம் தொகுதியில் 6544 வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கிறார். மற்ற எந்தத் தொகுதி யிலும் இதைவிட அதிகமாக புதிய தமிழகம் வாங்க வில்லை. அதேபோல் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி போன்றவை, கமலின் மக்கள் நீதி மய்யத்துடன் சேர்ந்து போட்டியிட்டன. "அவை எந்தத் தொகுதியிலும் தென்படவேயில்லை' என்கிறார்கள் தமிழகத் தேர்தலை உற்று நோக்குபவர்கள்.

sasi

அதேநேரத்தில், கமலின் ம.நீ.ம. நகர்ப் புறங்களில் மட்டும் நன்றாக வாக்குகளைப் பெற்றிருக்கிறது. சென்னை நகரில் 12 இடங்களில் மூன்றாவது இடம். அதில், பொன்ராஜ், பழ.கருப்பையா, சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ். போன்றோர் பத்து சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அசத்தியிருக்கிறார்கள். நாம் தமிழர் சீமான் திருவொற்றியூரில் 48,000 வாக்குகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்தார். 60 தென் மாவட்ட தொகுதிகளில் அ.ம.மு.க.வை விட அதிக வாக்குகள் பெற்று நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது என்கிறார்கள் தேர்தல் பார்வையாளர்கள்.

Advertisment

அ.ம.மு.க.வைப் பொறுத்தவரை ஓரிடம்கூட வெற்றிபெறாவிட்டாலும், 21 தொகுதிகளில் அ.தி.மு.கவை வீழ்த்துகிற அளவில் வாக்குகளைப் பெற்றுள்ளது. திருவாடானை, ஆண்டிப்பட்டி, பாபநாசம், சாத்தூர், தென்காசி, உத்திரமேரூர், ராஜபாளையம், காரைக்குடி ஆகிய தொகுதிகள் முக்கியமானவை. காரைக்குடியில் எச்.ராஜா 21,589 வாக்குகளில் காங்கிரசிடம் தோற்க, தேர்போகி பாண்டி என்கிற அ.ம.மு.க. வேட்பாளர் 44,864 வாக்குகளை அள்ளிக்கொண்டு சென்று விட்டார். சாத்தூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.கே. ரவிச்சந்திரன் 11,179 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்க, அ.ம.முக.வில் போட்டியிட்ட ராஜவர்மன் என்கிற முன்னாள் எம்.எல்.ஏ. 32,916 வாக்குகளைப் பெற்று மிரட்டியுள்ளார்.

கந்தர்வக்கோட்டை தொகுதியில் சி.பி.எம். வேட்பாளர் 12,721 வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க.வை ஜெயிக்க அங்கே அ.ம.மு.க. 12,661 வாக்குகளைப் பெற்று அ.தி.மு.க. வாக்குகளை கபளீகரம் செய்துள் ளது. பாபநாசம் தொகுதியில் ம.ம.க. தலைவ ரான ஜவாஹிருல்லா 16,273 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளரைத் தோற்கடிக்க, அங்கே 19,778 வாக்குகளை அ.ம.மு.க. சைலண்டாக பெற்று அ.தி.மு.க.வை கதிகலங்க வைத்துள்ளது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வாக்குகளில் 21 லட்சம் வாக்குகளை அ.ம.மு.க. பிரித்தது. அது இந்த தேர்தலில் பாதியாகி வெறும் 10.57 லட்சமாக சுருங்கிப்போனது என்றாலும் ம.நீ.ம., நாம் தமிழர் போன்ற கட்சிகளை விட மிகப்பெரும்பான்மையான அ.தி.மு.க. வாக்குகளை அ.ம.மு.க. பிரித்து, குழி பறித்துள்ளது என வருத்தப்படுகிறார்கள் அ.தி.மு.க.வினர்.

Advertisment

"இது அ.ம.மு.கவுக்கு என்ன பலன் தரும்? அ.தி.மு.க.வை வசப்படுத்தும் முயற்சிக்கு உதவுமா?'' என கேட்டபோது, "அ.ம.மு.க.வை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என அமித்ஷா சொன்னதையே எடப்பாடி மதிக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலைவிட குறைவான வாக்குகளைப் பெற்று, 21 தொகுதிகளில் அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பை தடுத்திருக்கும் அ.ம.மு.கவை, தி.மு.க.வை போல தனக்கு எதிரான கட்சியாகத்தான் அ.தி.மு.க. கணக்கிடும்'' என்கிறார் சசிகலா ஆதரவாளர் ஒருவர்.

அ.ம.மு.க. இரண்டாவது இடம் அ.தி.மு.க.வுக்கு டெபாசிட் காலி என வந்திருந்தால் அ.தி.மு.க. தொண்டர்கள் அ.ம.மு.க.வைப் பார்த்து பயந்திருப்பார்கள். நாம் தமிழர் கட்சியைவிட மிகக்குறைந்த அதிர்வைத் தந்திருக்கும் அ.ம.மு.க.வை, அ.தி.மு.க. தலைமை மதிக்காது என்கிறார்கள் அ.தி.மு.க. தலைவர்கள்.

ttv

ஆனால் சசிகலா இந்தத் தோல்வியை சாதாரணமாக விட்டுவிடமாட்டார். பா.ஜ.க. மூலம் அ.தி.மு.க.வை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிப்பார். அவர் அந்தப் போராட்டத்தில் தினகரனை ஒரு பொருட்டாகக் கணக்கிடமாட்டார். மறுபடியும் பா.ஜ.க. மூலம் ஓ.பி.எஸ்.ஸை ஆட்டுவிப்பார். அதன்மூலம் எடப்பாடியை அசைப்பார். எடப்பாடி எதிர்க்கட்சி தலைவரா? என்பதை பா.ஜ.க. முடிவுசெய்யும் என வானதி சீனிவாசன் பேசுவது அதற்கான சிக்னல்தான் என்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள்.

சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற கே.பி.முனுசாமியும் வைத்தியலிங்கமும்தான் எடப்பாடியை எதிர்த்துப் பேசக்கூடியவர்கள். மற்றவர்கள் எடப்பாடி சொன்னால் கேட்பவர்கள். தேவைப்பட்டால் சசிகலா ஆதரவாளர்கள் எல்லோரையும் எடப்பாடி களை எடுப்பார். கட்சியைத் தனது முழுக் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவார் என்கிறார்கள் எடப்பாடி ஆதரவாளர்கள்.

எடப்பாடி, வேலுமணி, ஓ.பி.எஸ்., காமராஜ், விஜயபாஸ்கர் என முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக தி.மு.க அரசு பாயத் தயாராகும்போதுதான் அவர்களை எடப்பாடியும் மோடியும் எப்படி காப்பாற்றுவார்கள் என்பதைப் பொறுத்தே அ.தி.மு.க.வின் நிலையும், அ.ம.மு.கவின் எதிர்காலமும் தெரியவரும் என்கிறார்கள் நீண்டகால அ.தி.மு.க.வினர்.