உட்கட்சிப் பிரச்சனையால் சிதறிக் கிடக்கும் அ.தி.மு.க., இதுவரை கூட்டணி வலைக்குள் கிடந்து தற்போது, ‘தனித்துப் போட்டி’ என முழக்கமிடும் பி.ஜே.பி., எப்போதும்போல ‘சைலன்ட்மோடில்’ இருக்கும் காங்கிரஸ், ‘நம்பர் ஒன் இடத்தை நோக்கி தமிழகம்’ என்ற சூளுரையோடு தி.மு.க. என அரசியல் கட்சிகள் பலவும் ஆளுக்கொரு திசையில் பயணிக்கும் சூழலில், ‘நாடாளுமன்றத்தோடு சேர்த்து சட்டமன்றத்திற்கும் தேர்தல்’ என தேர்தல் ஆணையம் தயாராகிவருவதால் இதுவரை இல்லாத அளவிற்கு அரசியல் கட்சிகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் ஆண்டாக 2023 இருக்கும்.
தமிழக அரசியல் க்ளைமேட் பற்றி நன்கறிந்த சிலரிடம் பேசினோம்.
"பொதுவாக அரசியல் கட்சிகளின் எதிர்காலத்தை தீர்மானிப்பது மக்களாக இருந்தாலும், ஜெயலலிதாவிற்குப் பிறகான அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை, ஆக்கல், காத்தல், அழித்தல்’ பணியை செவ்வனே செய்துவருவது பி.ஜே.பி.யின் டெல்லி தலைமைதான்.
இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியாகச் செயல்பட்டு வரும் நிலையில், 2021- 2022 ஆம் ஆண்டிற்கான அ.தி.மு.க. வரவு செலவு கணக்குகளை ‘அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளர்’ என குறிப்பிட்டு கடந்த நவம்பர் 29-ஆம் தேதியே தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த வரவு செலவு கணக்கு களை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளதோடு, எடப்பாடி பழனிசாமி தாக்கல்செய்த அந்த விவரங்களை தங்கள் இணையதளத்திலும் பதிவேற்றியது தேர்தல் ஆணையம்.
அதேபோல, ஒரே நாடு ஒரே தேர்தல்‘ தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள ‘அ.தி.மு.க.வின் இடைக்காலப் பொதுச்செயலாளர்’ எனக் குறிப்பிட்டு கடந்த வாரம் எடப்பாடிக்கு கடிதம் அனுப்பியது மத்திய அரசு. இதை ஒரு சிக்னலாகவே எடுத்துக்கொள்ளலாம்.
இதை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பினர் கடிதம் அனுப்பியபிறகுதான், ரிமோட் வாக்குப்பதிவுமுறை தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டத்திற்கும், ஜனவரி 16-ம் தேதி நடக்கவிருக்கும் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த செயல்முறை விளக்கத்தில் கலந்து கொள்ளவும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு கடிதம் அனுப்பியது தமிழக தேர்தல் ஆணையம்.
தற்போதைய சூழலில், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என உச்ச நீதிமன்றமே கூறினாலும்கூட, வெகு விரைவில் அடுத்த கூட்டத்தைக் கூட்டி தான் நினைத்ததை எடப்பாடி பழனிச்சாமி சாதித்துவிடுவார் என்பது பா.ஜ.க. தலைமைக்கு நன்கு தெரியும். அதேநேரத்தில், எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.வானது, இதற்கு முன்பு இருந்ததுபோல டெல்லியிலிருந்து வீசும் காற்றுக்கு ஏற்ப அசைந்து கொடுக்காது என்பதையும் அவர்கள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர். அதன் வெளிப்பாடாகத்தான், ‘ஒன்று பி.ஜே.பி. தலைமையில் கூட்டணி அல்லது தனித்துப் போட்டி’ என சமீப காலமாகவே சத்தமாக பேசிவருகிறார் அதன் தமிழக தலைவரான அண்ணாமலை. 25 சீட்டுகள் ஜெயிப்பதெல்லாம் கனவிலும் கைகூடாத காரியம் என அவர்களுக்கே நன்றாகத் தெரிந்தாலும், எதிரிக்கு எதிரி நண்பன் என்பதுபோல, எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக உள்ள ஓ.பி.எஸ்.ஸின் மறைமுக ஆதரவைப் பெற்று, ஓ.பி.எஸ். அணியின் வாக்கு வங்கியை தனக்கு சாதகமாக்கிக்கொள்வதுதான் தற்போது பி.ஜே.பி.யின் ‘மெகா பொலிட்டிகல் ஸ்ட்ரேட்டஜி.
அப்படியென்றால் ஓ.பி.எஸ்.ஸின் எதிர்காலம்? கடந்த நவம்பர் மாதம் 12-ஆம் தேதி அமித்ஷா சென்னை வந்தபோது இந்த கேள்விக்கான பதிலானது ஓ.பி.எஸ்.ஸிற்கு நேரடியாகவே கூறப்பட்டுவிட்டது. அமித்ஷா ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகியோரைச் சந்திக்க வில்லை என கூறப்பட்டாலும், லீலா பேலஸ் ஹோட்டலில் வைத்து அமித்ஷாவை ரகசியமாகச் சந்தித்திருக்கிறார் ஓ.பி.எஸ். அங்கு சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக நடந்த சந்திப்பின்போது, அவரது மகனும் தேனி எம்.பி.யுமான ரவீந்திரநாத்குமாருக்கு மந்திரிசபையில் பதவியும், ஓ.பி.எஸ்.ஸுக்கு மிகப்பெரிய அரசு பதவியும் அவர் வாக்குறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.
அடுத்தகட்டமாக எடப்பாடி அணியிலும் பிளவை உண்டாக்க தெளிவான திட்டத்தை வைத்திருக்கிறது பா.ஜ.க. சி.வி. சண்முகத்திற்கு மறைமுக மாக சில நெருக்கடிகளும், அவருக்கு மிக நெருக்கமான ஒருவர் மூலம் சில வாக் குறுதிகளும் தரப்பட்டதாக தகவல்கள் கசிகின்றன. தற் போது, இலைமறைவு காயாக இருக்கும் அந்த விவகாரம், இந்த 2023-ஆம் ஆண்டு இறுதிக்குள் வெளிவரும். அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியை மட்டுமே குறிவைத்து நடத்தப்படும் இந்த அரசியல் சதுரங்க ஆட்டத்தின் மூலமாக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் தனக்கான இடத்தைக்கூட தீர்மானம் செய்துவிட்டார் அண்ணாமலை.
கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ், பா.ம.க., வி.சி.க., அ.ம.மு.க., தே.மு.தி.க. போன்றவை எப்போதும்போல சிறிய அளவிலான ஏற்ற இறக்கங்களோடு தங்கள் பயணத்தைத் தொடர்ந்துகொண்டே இருக்கும்'' என ஆணித்தரமாக அடித்துக் கூறுகிறார்கள் இந்த பொலிடிகல் சிந்தாந்தவாதிகள்.
மொத்தத்தில், 2023ஆம் ஆண்டின் அரசியல் க்ளைமேட் தி.மு.க.வுக்கு படுசாதக மாக இருக்கிறது என்பதே உண்மை.