தேனி மாவட்ட அ.தி.மு.க.வில், மா.செ.வுக்கான மல்லுக்கட்டு உச்சத்தை அடைந்திருக்கிறது.
ஓ.பி.எஸ்.ஸின் சொந்த மாவட்டமான இங்கு, அதி.மு.க. மா.செ.வாக ஓ.பி.எஸ்.ஸின் ஆதரவாளரான சையதுகானே இப்போதும் இருந்து வருகிறார். ஆனால், இங்கே உள்ள கம்பம். பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள பெரும் பாலான கட்சிப் பொறுப்பாளர்களும் தொண்டர் களும் தற்போது எடப்பாடி பக்கம் தாவிவிட்டனர். அத னால், விரைவில் அங்கே தன் ஆதரவாளர் ஒரு வரை மா.செ.வாக நியமிக்க வேண்டியவ ராக இருக்கிறார் எடப்பாடி. இதை யறிந்த அ.தி.மு.க.வினருக்குள் இப்போதே மா.செ. பதவியைக் குறிவைத்து காய் நகர்த்தல்கள் தொடங்கிவிட்டன.
இந்த நேரம்பார்த்து, அங்கே அடுத்த மா.செ.வாக முன்னாள் எம்.எல்.ஏ. ஜக்கையன் நியமிக்கப்படலாம் என்று காற்றுவாக்கில் செய்தி பரவ, அவருக்கு எதிராக குபீர் சூறாவளி ஒன்றும் சுழன்றடிக்கிறது.
இது குறித்து அங்குள்ள அ.தி.மு.க. பிரமுகர்களிடம் நாம் கேட்டபோது “"எங்கள் தேனி மாவட்டத்தை பொறுத்தவரை முக்குலத்தோர் சமூகத்தினர்தான் அதிகம். அதற்கு அடுத்தபடியாக பட்டியலினத்தோர், நாயக்கர், கவுண்டர், முஸ்லிம், நாடார், செட்டியார் என பல சமூக மக்கள் வசித்து வருகிறார்கள். அதனால் எல்லா அரசியல் கட்சிகளுமே பெரும்பான்மைச் சமூகமான முக்குலத்தோரில் இருந்தே மா.செ.க்களை நியமித்து இருக்கின்றன.
எங்கள் அ.தி.மு.க.விலும் அதே நிலைதான் இருந்துவந்தது. ஆனால் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த தங்க.தமிழ் செல்வன் கட்சியிலிருந்து போன பிறகு, தனது ஆதரவாளரான முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சையதுகானை மா.செ.வாக ஓ.பி.எஸ். நியமித்தார் அதனாலயே முக்கு லத்தோர் மட்டு மல்ல மற்ற சமூ கத்தைச் சேர்ந்த கட்சி பொறுப் பாளர்களும் தொண்டர்களும் கூட ஓ.பி.எஸ். மேல் அதிருப்தியில்தான் இருந்தனர். அதோடு கட்சிக்காரர்களுக்கும் அஞ்சு காசுகூட ஓ.பி.எஸ். உதவி செய்ததில்லை. அதனால்தான் மாவட் டத்தில் உள்ள பெரும் பாலான கட்சிப்பொறுப் பாளர்களும் தொண்டர் களும் எடப்பாடிப் பக்கம் சாய்ந்திருக் கிறார்கள். இப்போது பதவிப் போட்டியும் இங்கே அதிகரித் திருக்கிறது''’ என்றவர்கள்....
"அதே சமயம், ஆளுங்கட்சியான தி.மு.க.வில் வடக்கு, தெற்கு என இரண்டு மாவட்டமாக பிரித்து, வடக்கு மா.செ.வாக முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த தங்க.தமிழ்செல்வனையும். தெற்கு மா.செ.வாக கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணனை யும் நியமித்திருக்கிறார்கள். அதுபோல் அ.தி.மு.க.வையும் இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதிக்கு கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த எக்ஸ். எம்.எல்.ஏ. கம்பம் ஜக்கையனை நியமிக்கச் சொல்லி சிலர் கோரிக்கை வைக்கிறார்கள். அதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். 25 வருடமாக மதுரையில் இருந்த ஜக்கையனுக்கு கடந்த 2016-ல் எங்கள் தலைவி சீட் கொடுத்ததால், கம்பம் தொகுதியில் வெற்றிபெற்ற அவர், இங்கே கட்சியை வளர்க்க ஆர்வம் காட்டாமல் தன்னை மட்டும் வளர்த்துக்கொண்டார். அதன்பின் கடந்த முறை அவருக்கு யாரும் பரிந்துரை செய்யாததால் அவர் மதுரைப் பக்கமே போய்விட்டார். அப்படி இருந்தும் அந்த ஜக்கையனுக்கு அமைப்புச் செயலாளர் பதவியை எடப்பாடி கொடுத்தார். இருந்தும் தொண்டர்கள் யாரும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.
அதனால் சில மாதங்களுக்கு முன்பு ஆளுங்கட்சியைக் கண்டித்து தேனியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்க இருந்த ஜக்கையனைப் புறக்கணித்துவிட்டு, முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் அந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. எந்த செயல் பாடும் இல்லாத ஜக்கையனை அமைப்புச் செயலர் பதவியிலிருந்து தூக்கிவிட்டு, எப்பொழுதும் போல் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளரை நியமிக்க வேண்டும் என்பது எல்லோரின் விருப்பம். முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட துணை செயலாளர் முறுக்கோடை ராமரும், முன்னாள் எம்.பி. பார்ததிபனும், தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமாரும் மா.செ. பதவிக்குப் போட்டி போடுகிறார்கள். அவர்களில் ஒருவரை நியமித்தால்தான் தேனி மாவட்டத்தில் கட்சி வளர்க்க முடியும். ஓ.பி.எஸ். தரப்பையும் ஒட்டுமொத்தமாக ஓரங்கட்ட முடியும். அதை விட்டுவிட்டு, ஜக்கையனை நியமித்தால் கட்சியின் நிலைமை மோசமாகிவிடும்''’என்றார்கள் கோரசாக.
ஜக்கையன் ஆதரவாளர்களோ, "கட்சியை எடப்பாடிதான் வழிநடத்த வேண்டும் என்று கடந்த சில வருடங்களுக்கு முன்பே முதன்முதலாக ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிராக வரிந்துகட்டியவர் எங்கள் ஜக்கையன்தான். அந்த அளவுக்கு ஓ.பி.எஸ்.ஸை எதிர்த்து மாவட்டத்தில் அரசியல் செய்திருக்கிறார். எனவே அவருக்கு மா.செ. பதவி விரைவில் கிடைக்கும். அதேபோல் முக்குலத்தோர் சமூகத்தினருக்குத்தான் மா.செ. பதவியைக் கொடுக்கவேண்டும் என்ற அவசியமும் இப்போது இல்லை. கவுண்டர்களுக்கும் கொடுக்கலாம்'' ’என்றார்கள் அழுத்தமாக.
ஆக, சாதிரீதியாக தேனி அ.தி.மு.க.வினர் மா.செ. பதவியைக் குறிவைத்து புழுதி கிளப்பி வருகிறார்கள். இதை எப்படி எடப்பாடி மேனேஜ் செய்யப்போகிறார் என்பதே இப்போது எழுந்திருக்கும் மெகா கேள்வி.