டிப்ளமோ முடித்த, ஒருவர் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி யில் தற்காலிக முதல்வர் மற்றும் இயக்குநர், இணை இயக்குநர், துறைத்தலைவர் என அனைத்தையும் தன்வசம் வைத்துக் கொண்டு, அரசை ஏமாற்றி ஊதியம் பெற்றுவரும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சர்ச்சைக்குரிய நபரை இப்பதவிகளுக்குக் கொண்டு வந்தவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கர். இவரது கண் பார்வைக்கு நம்பகத்தன்மையானவராக இருந்தால் உடனே அவர்களுக்கு பதவிகளை வழங்கி உச்சத்திற்கே கொண்டுசென்று, அடுத்து தேர்தலுக்கு அவர் களைத் தனக்கு ஆதரவாகப் பயன்படுத்துவாராம். தற்போது ஸ்டான்லி மருத்துவமனை டீனான பாலாஜியின் நியமனம் குறித்து ஏற்கெனவே நமது நக்கீரனில் குறிப்பிட்டிருக்கிறோம்.. ஒருவர் மருத்துவமனை டீன் பதவிக்கான தகுதி வரம்புகளான 10 ஆண்டு காலப்பணி, துறைத் தலைவராகப் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற விதிமுறைகளைத் தாண்டி, விஜயபாஸ்கரின் விசுவாசி என்பதால் இந்த பாலாஜிக்காக லேப்ராஸ்கோப் எனும் துறையை புதிதாக உருவாக்கி, அத்துறைக்குத் தலைவராக் கப்பட்டு உடனடியாக செங்கல்பட்டு டீனாக பதவி உயர்த்தப்பட்டார். அங்கிருந்து கொரோனா காலத்தில், ஸ்டான்லியிலிருந்த டீனை மாற்றி விட்டு, பாலாஜியை கொண்டு வந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/medicalcollege_0.jpg)
இதேபோல இன்னொரு விசு வாசிக்கு செய்த விதிமீறலும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. விஜயபாஸ் கரின் விசுவாசியான மணவாளன், 1997-ல் ஆந்திராவில் டிப்ளமோ முடித்துவிட்டு சென்னை சித்த மருத்துவமனையில் மருத்துவ அலுவலராக பணியில் சேர்ந்தவர். அதன்பிறகு அவருடைய கல்வித்தகுதி, மருத்துவ அலுவலர் என்ற பதவிக்குப் பொருத்தமற்றது எனக் கூறி உதவி மருத்துவ அலுவலராகத் தொகுப்பு ஊதியத்தில் பணியில் சேர்க்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து 2000-ல், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி தமிழக அரசால் தொடங்கப்பட்டது. அதில் தற்காலிக உதவி விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். அப்படியே தொடர்ந்து பணியாற்றிவந்த இவர், அமைச்சர் விஜயபாஸ்கரை மசாஜ் மூலமாகப் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு, விஜயபாஸ்கரின் தீவிர விசுவாசியானார். அதன் விளைவாக, தற்காலிக மருத்துவர்களை கால முறை ஊதியத்தில் பணியமர்த்த ஒவ்வொரு மருத்துவரிடமும் 5 லட்சம் ரூபாய் வீதம் தமிழ்நாடு முழுவதும் வசூல் செய்து பல கோடிகளை ஒப்படைத்திருக்கிறார். அதற்கு பிரதிபலனாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவோ, அல்லது அரசு மருத்துவ தேர்வு வாரியம் மூலமாகவோ, பணி நியமனம் செய்யப்படாமல், விதிமுறைக்கு முரணாக, 2018ஆம் ஆண்டு மீண்டும் உதவி விரிவுரையாளராகப் பணி நிரந்தரம் செய்யப் பட்டார். அக்கல்லூரிக்கு முதல்வர் இல்லாத சூழலில் இவரே முதல்வராகவும் செயல்பட்டு வந்தார். அதன்பின்னர், எந்தவிதமான உட் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதியும் இல்லாத, தகுதிவாய்ந்த பேராசிரியர்கள் இல்லாத நிலையில், ஒரு கல்லூரிக்கு 6 கோடி ரூபாய் வீதம் பெற்றுக்கொண்டு, 13 யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதாம். இதில் கூடுதலாக அமைச்சரின் அண்ணன் உதயகுமார் பெயரில் மதர் தெரசா கல்லூரிக்கும் ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/medicalcollege1.jpg)
இப்படி தனிக்காட்டு ராஜாவாக வலம்வந்த இவரிடம், 2021ஆம் ஆண்டு துறைரீதியாக தணிக்கைக்குழு நடத்திய விசாரணையின்போது, "முதல்வராக நீங்கள் எந்த விதிப்படி வந்தீங்க? என்று கேட்டபோது, "சென்ட்ரல் கவுன்சில் ரிசர்ச் ஃபார் யோகா நேச்சுரல்பதியின் கீழ் நியமிக்கப்பட்டேன்'' என்று தெரிவித் திருக்கிறார். இதுகுறித்து, தகவல் உரிமை சட்டத்தின்படி அந்த அமைப்பிடம் கேட்டபோது, "நாங்கள் வெறுமனே ரிசர்ச் மட்டும்தான் செய்கிறோமே தவிர பணி நியமனத்துக்கு எந்தவிதமான சட்ட விதிகளும் யாருக்கும் வழங்கப்படவில்லை'' என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சிக்கலில் மாட்டிக்கொண்டார். பின்னர் இவ்விவகாரத்தில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டு, அதனை உறுதிசெய்வதற்காக மாநில கணக்குத் தணிக்கை குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த விசாரணையில், மணவாளன் உட்பட 10 பேர், 2.5 கோடி ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளது தெரியவந்தது. இதுதொடர்பாக, 12-12-2022 அன்று, 700 பக்கங்களில் ஆதாரங்களுடன் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளருக்கு இத்துறை இயக்குனர் மூலமாக அனுப்பப்பட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நிலுவையில் உள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/medicalcollege2.jpg)
இது குறித்து இத்துறை மாணவர்கள், டாக்டர்களி டம் கேட்டபோது, "தமிழக மெடிக்கல் கவுன்சில் போர்டு இருப்பதைப் போன்று யோகா மற்றும் இயற்கை கல்லூரிக்கு என மாநில அல்லது மத்திய கவுன்சில் வேண்டும். கவுன்சில் இல்லையென்றாலும், பல்கலைக்கழக மாநிலக்குழுவின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும். இல்லையென்றால் 2000 மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். தமிழக அரசு உரிய விதிமுறைகளுடன் செயல்பட பல்கலைக்கழகம் கண்காணிக்க வேண்டும். டிப்ளமோ தகுதி உடையவர்களை முதுநிலை வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக நியமிப்பதைத் தடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்தனர்.
குற்றச்சாட்டு குறித்து மணவாளனிடம் கேட்டபோது, "இத்துறையை வளர்த்ததில் முழுப்பங்கு எனக்குண்டு. இவர்கள் என் மேல் வீண் பழி போடுகிறார்கள். அதனை எங்கு நிரூபிக்க வேண்டுமோ அங்கு நிரூபிப்பேன்'' என்றார்.
அரசு சுகாதாரத்துறை செயலாளர் செந்தில் குமாரிடம் கேட்டபோது, "நிச்சயம் இதுகுறித்து விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-02/medicalcollege-t.jpg)