2021 சட்டமன்றத் தேர்தலில் பத்தாண்டு அ.தி.மு.க. ஆட்சி தூக்கியெறியப்பட்டு, தனிப்பெரும்பான்மையுடன் தி.மு.க. ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில், எம்.ஜி.ஆருடன் சேர்ந்து அ.தி.மு.க.வைநிறுவிய 12 பேரில் ஒருவரான திருச்சி கே.சௌந்திரராஜன் நம்மிடம் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

தமிழக அரசியலில் 50 ஆண்டு காலமாக அ.தி.மு.க. இருக்கிறது. எம்.ஜி.ஆர். ஆரம்பிக்கும்போது இருந்த அ.தி.மு.க.வையும், எடப்பாடி பழனிசாமி தற்போது வழி நடத்துவதையும் எப்படி பார்க்கிறீர்கள்?

tr

எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை சரி யில்லாதபோதே அ.தி.மு.க. தொடர்ந்து இயங்குமா என்ற சந்தேகம் அவருக்கு வந்துவிட்டது. உயில் எழுதும்போது சொல்கிறார், தொடர்ந்து கட்சி நடத்த முடிந்தால் நடத்துங்கள், இல்லையென்றால் உயிலில் உள்ள சொத்துக்கள் மூலம் வரு மானத்தை ராமாவரம் பள்ளி யிடம் சேர்த்துவிடுங்கள் என்று கூறியுள்ளார். அப்போதே எம்.ஜி.ஆருக்கு நம்பிக்கை இல்லை. தற்போது இரட்டை இலை, அ.தி.மு.க. என்ற பெயரை வைத்து எடப் பாடி கட்சியை நடத்தி வரு கிறார். ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். மீது கட்சியினர் யாருக்கும் நம்பிக்கை கிடையாது.

தி.மு.க., அ.தி.மு.க.வைத் தாண்டி சம்பந்தமே இல்லாத பா.ஜ.க. வரப்பார்க்கிறது... அதற்கு அ.தி.மு.க. பலிகடா ஆவதாக எல்லோருமே சொன்னார்கள்... நீங்களும் சொன்னீர்கள்... நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியை தோல்வியடையச் செய்திருக் கிறார்கள் மக்கள். சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிக்கு தேவையான சீட்டுக்களை அ.தி.மு.க.வுக்கு கொடுத்திருப்பதைப்போல, பா.ஜ.க.வுக்கும் சேர்த்துதானே ஓட்டுப்போட் டார்கள். அப்போது அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்... என்றுதானே அர்த்தம்.

நாடாளுமன்றத் தேர்தல் வேறு, சட்டமன்றத் தேர்தல் வேறு. பாராளுமன்றத் தேர்தலில் தெளிவாக மக்கள் வாக்களித்தார்கள். சட்டமன்றத் தேர்தலில் இப்போது உள்ள பவரில் பணம் கொடுத்ததால் வந்த ஓட்டுகள். உண்மையான எம்.ஜி.ஆர். தொண்டர்கள் பா.ஜ.க.வுக்கு வாக் களிக்கவில்லை. தவிரவும் அதில் பெரும்பாலானவை அ.தி.மு.க.வுக்கு விழுந்த ஓட்டுக்கள்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைப் போல் இல்லாவிட்டாலும் ஒரு வலுவான எதிர்க் கட்சியாக அ.தி.மு.க.வை கொண்டுவந்துள்ளார் எடப்பாடி... இனி அ.தி.மு.க. எதிர்காலம் எப்படியிருக்கும்?

Advertisment

t

அ.தி.மு.க. அழிவை நோக்கிச் செல்லும். வேறு வழியில்லை. அஸ்திவாரங்கள் சிதைக்கப்பட்டு ஆட்டம் கண்டுவிட்டது. தொண்டர்களுக்கு இவர்கள் மீது நம்பிக்கை இல்லை. தொண்டர்களைக் கட்டுப்படுத்து வதற்கான வசீகரமும் இல்லை, நியாயங்களும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இவர்கள் சொன்னது இந்த தேர்தலில் நாம் ஜெயிக்கவில்லை என்றால் ஜெயிலுக்குப் போக வேண்டியிருக்கும், ஆகையால் கஷ்டப்பட்டு வேலை செய்யுங்கள் என்றார்கள். அதன்படி இவர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து பார்த்தார்கள். தேறவில்லை. இனியும் தேறுமா? 66 சீட்டுகள் என்பது வளருவதற்கான வாய்ப்புகள் கிடையாது.

தமிழகத்தின் மேற்கு பகுதியில் மட்டும் அ.தி.மு.க. தனது செல்வாக்கைக் காட்டியிருக்கிறதே...?

சாதிய ஓட்டுக்களை வாங்கியுள்ளனர். வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு என வாக்குகளை வாங்கியுள்ளனர். இவையெல்லாம் கட்சி மீதான பற்று மூலம் வந்ததல்ல.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு தேர்தலில் வெற்றி பெற வைக்கும் அளவுக்கு ஜாதிப் பின்புலம் கிடையாது... ஆனால் எடப்பாடி தனது சமுதாயத்தை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தது சரியான அணுகுமுறையா?

எம்.ஜி.ஆர். எல்லோருக்குமான தலைவராக, எல்லோருடைய நம்பிக்கையையும் பெற்றவராக இருந்தார். அதனால்தான் திண்டுக்கல் தேர்தலில் முதன்முதலில் வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆர். செல்வாக்கு சாதிச் செல்வாக்கு அல்ல. மக்கள் மீது அவர் ஏற்படுத்திய நம்பிக்கையில் வெற்றி பெற்றார். கட்சிக்காரர்களுக்கும் அவர் மீது நம்பிக்கை இருந்தது. கீழ் மட்டத்தில் அவருக்கு நிறைய செல்வாக்கு இருந்தது. அதுதான் வெற்றிக்கு உதவியது.

இரட்டைத் தலைமை அ.தி.மு.க.வை நல்ல முறையில் வழிநடத்துமா? ஆரோக்கியமானதா நீங்கள் இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?

எம்.ஜி.ஆருக்கு பிறகு அ.தி.மு.க. கட்சியாக வளர்க்கப்படவில்லை. அ.தி.மு.க. ஒரு கம்பெனியாக வளர்க்கப்பட்டது. இரட்டைத் தலைமை எந்தக் காலத்திலேயும் உருப்பட்டது இல்லை. அதிகாரம் இருந்தபோது தாளம் போட்டார்கள். இனி இருவரும் தங்களது பலத்தைக் காட்டி கட்சியை நாசப்படுத்துவார்கள்.

எம்.ஜி.ஆர் இறந்ததும் ஜெ.வின் தோழியாக வந்த சசிகலா யார் யார் எம்.எல்.ஏ.க்களாக வரவேண்டுமென்பதைத் தேர்வுசெய்தார். லட்சம், கோடியென காசு தந்தவர்களை எம்.எல்.ஏ.க்களாகத் தேர்வுசெய்யும் போக்கு உருவாக ஆரம்பிச்சுடுச்சு. கட்சி அவர்களை அரசியல்வாதிகளாகவே உருவாக்கவில்லை. அரசியலுக்கு சம்பாதிக்க வரக்கூடாது. இயக்கம் கெட்டு கொள்ளைக் கூட்டமாக ஆகிவிட்டது. இருவரில் யார் உண்மையான அ.தி.மு.க? இவர்கள் பா.ஜ.க.வுக்கு எவ்வளவு பயந்துகொண்டிருந்தார்கள். இரட்டைத் தலைமை எப்போதும் உருப்படாது.

இப்போதிருக்கும் நிலையில் கட்சியை, பழைய இரும்பை உருக்கி வார்ப்பதுபோல மறுவார்ப்பு செய்யவேண்டும். அப்போதுதான் ஏதாவது பயனிருக்கும்.

-சந்திப்பு: கே.ராஜவேல்