மூன்று லட்சத்து 47 ஆயிரத்து 209 வாக்குகள் வித்தியாசத்தில் தூத்துக்குடி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது தி.மு.க.
அதன்பிறகு...?
தூத்துக்குடியை உள்ளடக்கிய நெல்லை ஆவின் பாலகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு விட்டது. ஆவின் பாலகப் பொறுப்பு அ.தி.மு.க.வின் வடக்கு மா.செ. கடம்பூர் ராஜுவுக்கும், சுமார் நானூறு கோடி பணப்புழக்கம் கொண்ட தூத்துக்குடி மத்தியக் கூட்டுறவு வங்கியின் பொறுப்புகள்... அ.தி.மு.க.வின் தெற்கு மா.செ. சண்முகநாதனுக்கும் சுமுகமான புரிதல் அடிப்படையில் மோதலின்றி ஒப்பந்தமாகியிருக்கிறது. தூத்துக்குடி ஆவின் பாலக சேர்மனாக அமைச்சர் கடம்பூர்ராஜுவின் ஆதரவாளரான சின்னத்துரையே நீடிக்கிறார்.
தூத்துக்குடி மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவர் மற்றும் டைரக்டர் கள் அதன் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவதுதான் நடைமுறை விதி. தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு 21 டைரக்டர்களின் மெஜாரிட்டி தேவை. அவர்கள் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் தலைவர் பதவியைப் பிடிப்பது சுலபம். தான் நினைத்தவரை டைரக் டர்களின் மெஜாரிட்டி ஆதரவோடு தலைவராக்கி விடலாம் என்பது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான சண்முகநாதனின் வல்லிய திட்டம். "இதற்குத் தோதாகத் தேர்தல் நடத்தப்படவும் கூடாது. போட்டியும் இருக்கக்கூடாது' என வியூகங்களைக் கணக்கிட்ட சண்முக நாதன், முதலில் தன் மனைவியைத் தலைவராக்க முயற்சித்தார். அது சர்ச்சையைக் கிளப்பும் என்பதால், தன் கண் அசைவுக் கேற்பச் செயல்படுகிற மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளரான பொன்.முருகேசன் பெயர் பரிசீலிக்கப்பட் டது. அதன்பிறகு, அந்த முடிவும் மாறி, மீளவிட்டான் கூட்டுறவு வங்கியில் அரசுப் பணியாளராகப் பணிபுரிகிற சுதாகரனைத் தலைவராக்குவது என்று முடிவு செய்த சண்முகநாதன், அதற் கேற்ப தேர்தல் நடத்தாம லிருப்பதற்காக ஏற்பாடுகளை வளைத்திருக்கிறார். அத்துடன், கட்சியில் தனக்கு வேண்டப்பட்ட 21 பேர்களை டைரக்டர்களாக்குவதற்காக செலக்ட் செய்திருக்கிறார்.
வலுவான கூட்டுறவு வங்கியில் தி.மு.க.வினரும் உறுப்பினர்களாக இருப்பதால் அவர்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்தால் தேர்தல் நடத்த டிக்ளரேஷன் ஆகிவிடும். அதைத் தவிர்ப்பதற்காக மா.செ. தரப்பில், தி.மு.க. தரப்பினரோடு காம்ப்ரமைஸ் பேசப்பட்டதாம். இதனை தி.மு.க.வின் வடக்கு மா.செ.வும், தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான கீதாஜீவன் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்கிறார்கள் உ.பி.க்கள். அதனால் வேறு யாரும் வேட்பு மனுத்தாக் கல் செய்யாதவாறு பார்த்துக்கொண்டு, கடந்த 19-ம் தேதி அதிவிரைவாக, மா.செ.சண்முகநாதனுக்கு வேண்டப்பட்ட, அவரால் செலக்ட் செய்யப்பட்ட 21 பேர் போட்டியின்றி டைரக்டர்களாக தேர்வுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, சண்முகநாதனின் ஆதரவாளர் சுதாகரன் தலைவராகவும் அறிவிக்கப்பட்டுவிட்டார்.
""பல கோடிகள் பணப்புழக்கம் சரளமாக உள்ள இந்த வங்கி, ஏழை மக்கள் தொட்டு எல்லோருக்கும் வீடு கட்ட, இதர வகைக்கான லோன்கள் என லட்சக்கணக்கில் வழங்கும் நகரின் முக்கியமானதாகும். 1989-ல் தி.மு.க.வின் மா.செ.வான "முரட்டு பக்தன்' பெரியசாமி தலைவராக இருந்து வளர்ச்சியடைய செய்தவர். தி.மு.க. எதிர்க் கட்சியாக இருந்த சமயத்தில் கூட பெரியசாமி, கட்சியை விட்டுக் கொடுக்காமல் கட்சிக்காரர்களை நிற்க வைத்துப் போட்டியை உருவாக்கிவிடுவார். எதிரணியினர் சமரசத்திற்கு வந்தாலும், தன் கட்சிக்கு அதில் இத்தனை டைரக்டர்கள் வேண்டும் என்று கட்சிக்காரர்களை டைரக்ட ராக்கியதும் உண்டு. அப்படிப் பட்ட போர்க்குணம் கொண்ட பெரியசாமியின் மகள் கீதாஜீவன், இதில் ஏன் போட்டிக்கு ஏற்பாடு செய்யவில்லை? இப்படிப் பம்மினால், மாவட்டத்தில் கட்சியை எப்படி வளர்க்க முடியும். இது பற்றிய புகார்கள் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி யும் எந்த நடவடிக்கையுமில்லை... சலித்துப் போய்விட்டோம்'' என்கிறார்கள் உ.பி.க்கள்.
இதுகுறித்து எம்.எல்.ஏ.வும், மா.செ.வுமான கீதாஜீவனை தொடர்புகொண்டு பேசினோம். ""கட்சியில் தகுதியுள்ள எந்த உறுப்பினரும் போட்டிக்கு என்று வராதபோது, நான் என்ன செய்ய முடியும். அவர்கள் அவசர அவசரமாகத் தேர்தல் அறிவிப்பு செய்து வாய்ப்புத்தராமல் முடித்து விட்டார்களே... ஆளும் கட்சியினர் நடந்துகொண்ட முறையினால் நாங்கள் மார்க் கெட்டிங் சொசைட்டி தேர்த லைக்கூட வழக்கின்மூலம் நிறுத்தி யுள்ளோம். புதூர், குறுக்குச் சாலை வேடநத்தம் போன்ற சொசைட்டிகளிலும் கூட எங்கள் கட்சியினர் டைரக்டர்களாகி யுள்ளனர். எந்த வகையிலும் காம்ப்ரமைஸ் செய்ததில்லை'' என்கிறார் உறுதியாக.
தூத்துக்குடி தி.மு.க. உ.பி.க்கள் செய்வதறியாது புலம்புகிறார்கள்.
-பரமசிவன்
படங்கள் : ப.இராம்குமார்